Published:Updated:

கிம்பர்லியில் மின்னிய வைரம்... தென்னாப்பிரிக்காவை மெர்சலாக்கிய மந்தனா! SAWvsINDW

கிம்பர்லியில் மின்னிய வைரம்... தென்னாப்பிரிக்காவை மெர்சலாக்கிய  மந்தனா! SAWvsINDW
கிம்பர்லியில் மின்னிய வைரம்... தென்னாப்பிரிக்காவை மெர்சலாக்கிய மந்தனா! SAWvsINDW

தென்னாப்பிரிக்கத் தலைநகரில் விராட் கோலி வழக்கம்போல் ரன்வேட்டையில் இறங்கியிருந்தார். முதலிரண்டு போட்டிகளைப் போல் இந்தப் போட்டியிலும் இந்திய அணி தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்தது. கேப்டவுனிலிருந்து 1000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிம்பர்லி டயமண்ட் ஓவல் மைதானத்தில், தென்னாப்பிரிக்க பெண்கள் அணியை நையப் புடைத்துக்கொண்டிருந்தது இந்திய மகளிர் அணி. இதுவும் இந்தியா - தென்னாப்பிரிக்கா யுத்தம்தான் என்று அனைவருக்கும் உரக்கச் சொல்லியது 'வுமன் இன் ப்ளூ'. #SAWvINDW

கிம்பர்லி - ஒரு தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயித்ததில் முக்கிய அங்கம் வகித்த நகரம். பிலாடெல்ஃபியாவுக்குப் பிறகு, தென் துருவத்தில் மின்சார தெருவிளக்குகள் அமைத்த நகரம். "இந்த நகரத்தில் பணம் கொழித்துக் கிடக்கிறது. ஒவ்வொரு அடிக்கும் பணக்காரர்கள் நிறைந்திருக்கலாம். இந்த நகரைப் போன்ற வளமான நகரம் உலகிலேயே எதுவும் இல்லை" என்று ஆங்கிலேயர்களைச் சொல்லவைத்த நகரம். ஆங்கிலேயர்கள் தென்னாப்பிரிக்காவை மிக முக்கியக் காலனியாகக் கருதக் காரணமான நகரம் இதுதான். அவர்கள் தங்களின் பொருளாதார வளத்தை அதிகரித்துக்கொள்ளக் காரணமாக இருந்ததும் இந்த நகரம்தான். காரணம் இதற்குள் புதைந்துகிடந்த அந்தப் புதையல். வைரம்! கருப்பர்களின் தேசமாக அடையாளப்பட்டிருந்தபோதும் கிம்பர்லி மின்னிக்கொண்டே இருந்தது.

அந்தக் கிம்பர்லி நேற்றும் மின்னியது. கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் விராட் கோலி, மார்க்ரம் இருவரும் டாஸ் போட வருவதற்கு முன்னமே கிம்பர்லி மின்னியது. ஆனால், அங்கு மின்னிய வைரம் மும்பையில் பிறந்தது. ஸ்ம்ரிதி மந்தனா - தென்னாப்பிரிக்கப் பெண்களின் பந்துவீச்சை சிதறடித்துக்கொண்டிருந்தார். இந்தப் போட்டிக்கு முன்பு அயபோங்கா ககா-வின் ஒருநாள் போட்டி எகானமி 3.97தான். மிகவும் சிக்கனமான பௌலர். மந்தனா அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. ஆட்டத்தின் 43 ஓவரை ககா வீசினார். அதன் முதல் பந்தில் சிங்கிள் எடுத்தார் ஹர்மன்ப்ரீத் கௌர். இரண்டாவது பந்து பௌண்டரி, மூன்றாவது பந்து சிக்ஸர், நான்காவது பந்து பௌண்டரி என மெர்சல் காட்டினார் மந்தனா. மனம் தளார்ந்த ககா, அடுத்த பந்தை வைடாக வீச, அதுவும் பௌண்டரி கோட்டைத் தொட்டது. ஐந்தாவது பந்தை சரியாகத்தான் வீசினார். ஆனால், மந்தனா அதையும் நான்காக்கினார். கடைசிப் பந்திலும் பௌண்டரி அடித்து, அந்த ஓவருக்கு 28 ரன்கள் என அமர்க்களமாக எண்ட் கார்டு போட்டது அந்த 21 வயது சூறாவளி.

அந்த ஓவருக்கு முன்பு வரை மந்தனாவிடம் அப்படியொரு வேகம் இல்லை. ரொம்பவுமே நிதானமாக விளையாடினார். பல சரிவுகள் கண்டவர். கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளிலும் பட்டையைக் கிளப்பி அனைவரின் கவனத்தையும் பெற்ற பிறகு, அடுத்த 7 இன்னிங்ஸ்களில் மொத்தம் 36 ரன்கள் மட்டுமே எடுத்து சறுக்கினார். அந்தச் சரிவை அவர் நிச்சயம் மறந்திருக்க மட்டார். இப்பொழுதும் அதேபோல்தான். முதல் போட்டியிலும் 84 ரன்கள் எடுத்து 'பிளேயர் ஆஃப் தி மேட்ச்' விருது வென்றிருந்தார். அதிரடியைவிட, நிதானமே தன்னை மெருகேற்றும் என்பதை உணர்ந்திருந்தார். 116-வது பந்தில்தான் சதமடித்தார் ஸ்ம்ரிதி. அதில் பௌண்டரிகள் மூலம் வந்தது 36 ரன்கள்தான். அவ்வளவு நிதானம். அவுட்டாகி வெளியேறியபோது 135 ரன்கள் குவித்திருந்தார் மந்தனா. தென்னாப்பிரிக்காவின் எதிர்காலத்தை நிர்ணயித்த நகரில், மிளிர்ந்து வெளியேறியது இந்திய மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலம். 

மந்தனா அவுட்டான பின் ஹர்மன்ப்ரீத் கௌர் - வேதா கிருஷ்ணமூர்த்தி ஜோடி, டாப் கியரில் பயணித்தது. அதுவும் வேதா பௌண்டரிகளால்தான் டீல் செய்துகொண்டிருந்தார். மஸபட்டா கிளாஸ் வீசிய 49-வது ஓவரில் 3 பௌண்டரிகள், ரைசீப் டொசாகே வீசிய கடைசி ஓவரில் ஒரு பௌண்டரி, ஒரு சிக்ஸர் எனப் பறக்கவிட்டு, 32 பந்துகளில் அரைசதம் கடந்ததோடு, இந்திய அணியின் ஸ்கோரையும் முன்னூறைத் தாண்டி எடுத்துச் சென்றார். ஹர்மன்ப்ரீத் கௌர் 55 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்தது. 

பேட்டிங் செய்பவர்கள் சிறப்பாக விளையாடுவதே, பௌலர்கள் மீதான பிரஷரைக் குறைத்துவிடும். இந்திய பௌலர்கள் பிரஷர் இல்லாமல்தான் பந்துவீசினர். ஐந்தாவது ஓவரின் கடைசிப் பந்து... ஜூலன் கோஸ்வாமி பௌலிங்... 18 வயது லாரா வோல்வார்ட் பேட்டிங்... கீப்பர் சுஷ்மா வெர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறுகிறார்... ஆர்ப்பரிக்கிறார் கோஸ்வாமி... இதுவரை மகளிர் கிரிக்கெட்டில் யாரும் செய்திடாத சாதனையை நிகழ்த்துகிறார். ஆம், மகளிர் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீராங்கனை அவர்தான் எனும்போது அந்த ஆர்ப்பரிப்பு அவசியம்தான்.

குல்தீப் - சாஹல் கூட்டணியின் சுழலில் தென்னாப்பிரிக்க ஆண்கள் அணி ஒருபுறம் திண்டாட, இந்தியப் பெண்களின் சுழலில், தென்னாப்பிரிக்க மகளிர் அணியும் திண்டாடியது. பூனம் யாதவ் சுழலை தென்னாப்பிரிக்க வீராங்கனைகளால் கொஞ்சம் கூட சமாளிக்க முடியவில்லை. 7.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசரடித்தார். மறுபுறம் இடதுகை ஸ்பின்னர் ராஜேஷ்வரி கேயக்வாட், தென்னாப்பிரிக்க கேப்டன் வான் நீக்கெர்க், கீப்பர் த்ரிஷா ஷெட்டி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், நிலைத்து நின்று ஆடிய லிஸல் லீ, தீப்தி ஷர்மா வீசிய சுழலில் சிக்கினார். இந்த 20 வயது ஆல்ரவுண்டரும் இரண்டு விக்கெட்டுகளோடு ஆட்டத்தை நிறைவு செய்தார். 

30.5 ஓவர்கள் மட்டுமே தாங்கிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி, 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. பேட்டிங், பௌலிங் இரண்டிலும் அசத்திய இந்தியா 178 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. மகளிர் கிரிக்கெட்டில் முதன்முதலாக 6,000 ரன்கள் எடுத்த மிதாலி ராஜ், முதன்முதலாக 200 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜூலன் கோஸ்வாமி இருவருக்கும் இந்தப் போட்டியில் பெரிய வேலை இல்லை. மந்தனா, வேதா, பூனம் யாதவ், தீப்தி என இளம் படையே இந்தப் போட்டியை வென்று தந்துவிட்டது. இது முற்றிலும் இந்தியாவின் எதிர்கால நாயகிகளுக்கான போட்டி. இது அவர்கள் வென்றுகொடுத்த போட்டி. இது கிம்பர்லி... எதிர்காலம் மின்னும் இடம். இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வைரங்கள் மின்னிவிட்டன. எதிர்காலம் பிரகாசமாய் இருக்கும் என்பதை உணர்த்திவிட்டன. 

கேப்டவுனில் கோலி 160 ரன்கள் குவித்ததை கோடிக்கணக்கான இந்தியர்கள் பார்த்து ரசித்திருப்பார்கள். சோனி டென் 1 தொலைக்காட்சியில் ஆங்கில வர்ணனையுடன் நேரலை, சோனி டென் 3 சேனலில் இந்தி வர்ணனையுடன் நேரலை, போதாக்குறைக்கு சோனி லிவ் (SonyLiv) வலைதளத்திலும் நேரலையில் இந்தப் போட்டி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. இப்படி பல்வேறு தளங்களில் ஒளிபரப்பப்பட்ட போட்டியை கோடிக்கணக்கானவர்கள் பார்த்ததில் ஆச்சர்யம் ஏதுமில்லைதானே. ஆனால், இந்திய மகளிர் அணி விளையாடிய இந்தப் போட்டி எந்த தொலைக்காட்சியிலும் நேரலையில் ஒளிபரப்பப்படவில்லை. 

"இந்தியாவுக்கு வெளியே நடக்கும் போட்டிகளை ஒளிபரப்பும்  உரிமம் எங்களிடமில்லை" என்று கைவிரித்தது பி.சி.சி.ஐ. வெளிநாட்டுத் தொடர்களுக்கான உரிமத்தை சோனிக்கு விற்றுவிட்டதால், இந்தக் காரணத்தைச் சொல்லி தப்பித்துக்கொண்டது. சோனியுடன் போட்ட ஒப்பந்தத்தில் மகளிர் கிரிக்கெட் பற்றிக் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாததே இதன் விளைவு. தனியார் தொலைக்காட்சி சோனியைக் குறைசொல்லிப் பயனில்லை. "அடுத்த போட்டியிலிருந்து நேரலை செய்வோம்" என்று ரசிகர்கள் ட்விட்டரில் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறது அந்த நிறுவனம். அவர்கள் விளையாடும் போட்டியை அவர்கள் குடும்பத்தார் கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால், அதைப்பற்றி அவர்கள் கொஞ்சமும் கவலைப்படவில்லை. போராடினார்கள், வென்றுவிட்டார்கள். இந்த வெற்றியின் மூலம் அவர்கள் உணர்த்தியிருப்பது இதுதான்... "நாங்களும் இந்திய கிரிக்கெட் அணிதான்!"