Published:Updated:

ரிஸ்ட் ஸ்பின்னர்கள் காட்டில் மழை... சாஹல் - குல்தீப் ஜோடியின் சக்சஸ் தியரி! #SAvsIND

ரிஸ்ட் ஸ்பின்னர்கள் காட்டில் மழை... சாஹல் - குல்தீப் ஜோடியின் சக்சஸ் தியரி! #SAvsIND

ரிஸ்ட் ஸ்பின்னர்கள் காட்டில் மழை... சாஹல் - குல்தீப் ஜோடியின் சக்சஸ் தியரி! #SAvsIND

Published:Updated:

ரிஸ்ட் ஸ்பின்னர்கள் காட்டில் மழை... சாஹல் - குல்தீப் ஜோடியின் சக்சஸ் தியரி! #SAvsIND

ரிஸ்ட் ஸ்பின்னர்கள் காட்டில் மழை... சாஹல் - குல்தீப் ஜோடியின் சக்சஸ் தியரி! #SAvsIND

ரிஸ்ட் ஸ்பின்னர்கள் காட்டில் மழை... சாஹல் - குல்தீப் ஜோடியின் சக்சஸ் தியரி! #SAvsIND

இந்த நேரத்தில் ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக குல்தீப் யாதவ் வந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. குல்தீப் வந்தார். சாஹலுடன் ஜோடி சேர்ந்தார். விக்கெட்டுகளை அள்ளினார். ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள். அதுவும் அவரது முதல் ஓவரில்… ‘இது போதும்டா… இனி நீ பந்தே போடத் தேவையில்லை’ என்பதுபோல நிறைவாக இருந்தது அந்த ஓவர். ஆம், மார்க்ரம், டேவிட் மில்லர் என இரு முக்கிய பேட்ஸ்மேன்கள் அவுட். அதற்கு முன்பே சாஹல், தென்னாப்பிரிக்க அணியின் அஸ்திவாரத்தை அசைத்திருந்தார். SAvsIND

சாஹல் பந்தில் புல் ஷாட் அடிக்க முயன்று டீப் மிட் விக்கெட் திசையில் இருந்த ஹர்டிக் பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்தார் டி காக். ‘ஹெல்மெட் இல்லாம போறவங்களை மடக்குறாங்க பாஸ்’ என எச்சரித்தாலும் வீம்பு பிடித்து மாட்டிக்கொள்வார்களே… மார்க்ரம் அந்த ரகம். முந்தைய பந்தில் ரிஸ்ட் ஸ்பின்னருக்கு எதிராக ஃபுல் ஷாட் ஆடி, டி காக் எப்படி அவுட்டானாரோ, அதே மாதிரி குல்தீப் பந்தில் ஃபுல் ஷாட் அடித்தார். அதே டீப் மிட் விக்கெட் ஏரியாவில் புவனேஷ்வர் குமார் கையில் கேட்ச் கொடுத்தார் மார்க்ரம். கேப்டனாக முதல் போட்டியில் அட்டகாசமான இன்னிங்ஸ் ஆடி, lead from the front எனப் பெயரெடுத்திருக்கலாம். ஆனால், அதற்கு அவர் சரிப்பட்டு வரவில்லை.

மார்க்ரமை மட்டுமல்ல டேவிட் மில்லரை வெளியேற்றவும் குல்தீப் ரொம்பவும் மெனக்கிடவில்லை. பேட்ஸ்மேன் டிரைவ் செய்வதற்கு ஏதுவான இடத்தில் பந்தை பிட்ச் செய்தார். மில்லரும் டிரைவ் செய்தார். அது எட்ஜாகி விக்கெட் கீப்பர் தோனியின் கிளவுஸில் பட்டு எகிற, அதை முதல் ஸ்லிப்பில் இருந்த ரஹானே கச்சிதமாகப் பிடித்தார். லவ்லி கேட்ச். சபாஷ் ரகானே. பக்கா பிளானிங். வெல்டன் குல்தீப். டைமிங் மிஸ். ஸாரி மில்லர்…!

அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப் லைனில் பேட்ஸ்மேனுக்கு மிக அருகில் பந்தை பிட்ச் செய்வது சாஹலின் பியூட்டி. அல்வா மாதிரி வரும் பந்து. அதை அப்டியே ஓர் இழுப்பு இழுத்தால் பந்து சிக்ஸருக்குச் செல்லும். ஒருவேளை எட்ஜானால்…?! உள்வட்டத்திலேயே கேட்ச் ஆகலாம். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா, இந்தியா வந்தபோது மேக்ஸ்வெல்லை இப்படித்தான் டெம்ப்ட் ஏற்றி, டெம்ப்ட் ஏற்றி அவுட்டாக்கினார் சாஹல். நேற்றைய போட்டியில் சாஹல் விரித்த வலையில் சிக்கியது ஜோண்டோ. ரன்ரேட் கம்மி, பந்தும் ஏதுவாக வருகிறது, பறக்கவிடலாம் என நினைத்து slog sweep செய்தார். பந்து பேட்டில் அவர் நினைத்த இடத்தில் படவில்லை. எட்ஜ். ஷார்ட் மிட் விக்கெட்டில் இருந்து ஓடிவந்த பாண்டியா ரிவர்ஸ் கேப் போட்டு பந்தைப் பிடிக்க முயன்றார். பந்து கைகளில் பட்டு நழுவியது. நல்லவேளை இடுப்புக்குக் கீழே நழுவும் முன் பிடித்துவிட்டார் பாண்டியா. ஜோண்டோ அவுட். 

எஞ்சியிருந்த தென்னாப்பிரிக்காவின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் டுமினி. அவரும் சாஹலின்  ஸ்லோ பாலில் ஏமாந்தார். ஸ்வீப் செய்ய முயன்று எல்பிடபுள்யு முறையில் அவுட். டுமினி ரிவ்யூ கேட்க நினைத்தார். ஆனால், அம்லா ஏற்கெனவே ரிவ்யூ கோரியதால், டுமினி பேசாமல் பெவிலியன் திரும்ப வேண்டியிருந்தது. அடுத்து மோர்கல், கிறிஸ் மோரிஸ் இருவர் விக்கெட்டை எடுக்க சாஹல் ரொம்பவும் மெனக்கிடவில்லை. ஒரே ஃபார்முலா. அடிக்கவிட்டு அவுட்டாக்குவது... ஆக, முதன்முறையாக ஒருநாள் அரங்கில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமை பெற்றார் சாஹல். தென்னாப்பிரிக்காவின் வீழ்ச்சியில் குல்தீப் பங்கும் அளப்பரியது.  6 ஓவரில் 3 விக்கெட்டுகள். 

`எங்களுக்கு ஸ்பின் ஆட வராது’ என மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள். `அதுவும்... ரிஸ்ட் ஸ்பின்னா... சுத்தமா வராது’ எனச் சொல்லாமல் சொல்லிவிட்டனர். ஆம், செஞ்சுரியனில் நடந்த இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஹஷிம் அம்லா, இம்ரான் தாஹிர் தவிர்த்து, மற்றவர்களை வீழ்த்தியது சாஹல் - குல்தீப் ஜோடி. அதுமட்டுமல்ல, முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு மட்டுமல்ல என்பது கூடுதல் சுவாரஸ்யம். 

இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபியில் ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து எடுத்த விக்கெட்டுகள் 5. விட்டுக்கொடுத்த ரன்கள் 416. இது சரிப்பட்டு வராது. 2019 உலகக் கோப்பையும் இங்கிலாந்தில்தான் நடக்கப் போகிறது. அஷ்வின் - ஜடேஜா ஜோடியை நம்பிக்கொண்டிருக்காமல், மாற்று ஜோடி தேட வேண்டியது அவசியம் என யோசித்தது பி.சி.சி.ஐ. அஷ்வின், ஜடேஜாவை மறைமுகமாக லிமிட்டெட் ஓவர் கிரிக்கெட்டிலிருந்து ஓரங்கட்டிவிட்டு, ரிஸ்ட் ஸ்பின்னர்கள் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஜோடியைக் களமறக்கியது. அதற்குக் கைமேல் பலனும் கிடைத்தது. 

கடந்த ஆறு மாதங்களில் சாஹல் - குல்தீப் ஜோடி வெஸ்ட் இண்டீஸ், இலங்கை (இருமுறை), ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து என எல்லா அணிகளையும் ஒரு கை பார்த்தது. இருவரும் இணைந்து 19 ஒருநாள் போட்டிகளில் 43 விக்கெட்டுகளை அள்ளினர்.  `ரிஸ்ட் ஸ்பின் வொர்க் அவுட் ஆகுதுப்பா...!’ எனத்  தென்னாப்பிரிக்காவுக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் இந்த ஜோடிக்கு வார்ம் வெல்கம்! முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் இருவரும் இணைந்து எடுத்த விக்கெட்டுகள் 13. 2013 சுற்றுப் பயணத்தில் அஷ்வின், ஜடேஜா இருவரும் இணைந்து மூன்று போட்டிகளில் எடுத்த விக்கெட்டுகள் இரண்டு. ஆக, அஷ்வின், ஜடேஜாவுக்கு குட்பை சொன்னதற்கு பக்காவாக நியாயம் கற்பித்துவிட்டது சாஹல் - குல்தீப் ஜோடி. இப்போது, `ரிஸ்ட் ஸ்பின் பக்காவாக எடுபடுகிறது’ என  அஷ்வினே ஒப்புக்கொண்டுவிட்டார்

விக்கெட் எடுப்பதில் மட்டுமல்ல, மிடில் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்துவதிலும் சாஹல் - குல்தீப் ஜோடி பக்கா. டர்பனில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க பெளலர்கள் மிடில் ஓவரில் ரன்களைக் கட்டுப்படுத்தத் தவறியதும், இந்த ஜோடி அந்த இடத்தில் ரன்களை விட்டுக்கொடுக்காததுமே, இந்தியாவின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

இரண்டாவது ஒருநாள் போட்டி முடிந்தபின், பிரஸ் மீட்டில் தென்னாப்பிரிக்க பேட்டிங் பயிற்சியாளர் பேசியது கவனிக்கத்தக்கது. ``எப்படி இவர்களால் இவ்வளவு மெதுவாக பெளலிங் போட முடிகிறது?!’’ என வியந்தார் டேல் பென்கீன்ஸ்டீன். சாஹல், குல்தீப் இருவரும் 90 கி.மீ வேகத்துக்கு மேல் பந்துவீசவில்லை. இம்ரான் தாஹிர் 100 கி.மீ-க்கும் குறைவாகப் பந்துவீசவில்லை. இந்த இடத்தில்தான் தென்னாப்பிரிக்க ஸ்பின்னர்களிடம் இருந்து  இந்திய ஸ்பின்னர்கள் வேறுபடுகிறார்கள். 

``நீங்கள் ரிஸ்ட் ஸ்பின்னர் எனும்போது, ஸ்லோவாகப் பந்துவீசலாம். எந்த பிட்ச்சிலும் டர்ன் செய்யலாம். அதேநேரத்தில் பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்கவும் அதிக வாய்ப்புள்ளது. ஆனால், இவர்கள் விக்கெட் எடுக்கிறார்கள். எப்படி...?’’ எனக் கேள்வி எழுப்பிய பென்கீன்ஸ்டீன், அதற்கான பதிலையும் கண்டுபிடித்துவிட்டார். ``எங்கள் ஸ்பின்னர்கள் வேகமாக வீசுகிறார்கள். அவர்கள் மெதுவாக வீசுகிறார்கள். எங்கள் ஸ்பின்னர்களால் பந்தைத் திருப்ப முடியவில்லை. ஆக, இதுதான் எங்களுக்குப் பிரச்னை. வேகப்பந்துவீச்சை எதிர்கொள்வதில் எங்கள் பேட்ஸ்மேன்களுக்குப் பிரச்னையில்லை. அன்றாட பிராக்டீஸின்போது ஸ்பின்னை எதிர்கொள்ள தனியாகப்  பயிற்சி எடுக்க வேண்டிய நேரமிது’’ என்றார். பாயின்ட்டைப் பிடித்துவிட்டார். இனி அடுத்த போட்டிகள் சுவாரஸ்யமாக இருக்கும் என நம்புவோம். 

இதையேதான் சாஹலும் வழிமொழிந்தார். ``இதுபோன்ற flat track-களில் வேகத்தை விதவிதமாகப் பயன்படுத்த வேண்டும். ஒரே வேகத்தில் பந்துவீச முடியாது. வேகமாக வீசினால், பேட்ஸ்மேன் உங்களை ஒரு மீடியம் ஃபாஸ்ட் பெளலர் போல பாவிக்க ஆரம்பித்துவிடுவார். இந்த ஆடுகளங்களில் பெளன்ஸும் ஆகிறது. எனவே, வேகமாக வீசினால் உங்களால் பந்தை turn செய்யவும் முடியாது. வேகமாக வீச வேண்டிய சூழலும் இருக்கிறது. அது சூழ்நிலைக்கேற்ப மாறுபடும். இங்குள்ள ஆடுகளங்களில் ஸ்லோவாக வீசினால்தான் எடுபடும். ஏனெனில், இந்த மைதானம் சிறியது. பேட்ஸ்மேன்கள் பவர் ஹிட்டர்கள். அவர்கள் வேகப்பந்தை எளிதாக எதிர்கொள்வார்கள்’’ என்ற சாஹல், ரன்களை விட விக்கெட் எடுப்பதே முக்கியம் என்கிறார். ``ரன் போறதைப் பத்தி கவலைப்படாதிங்க... நமக்கு விக்கெட்தான் முக்கியம்’’ என, குல்தீப், சாஹல் இருவரிடமும் சொல்லி வைத்திருக்கிறது அணி நிர்வாகம். 

``பந்தைப் பறக்கவிட்டு, பேட்ஸ்மேனுக்கு அருகே பிட்ச் செய்தால், அது சிக்ஸராகவும் வாய்ப்பிருக்கிறது என்பது எங்களுக்கும் தெரியும். ரன்கள் விட்டுக்கொடுப்பது பிரச்னையில்லை, விக்கெட்தான் முக்கியம் எனச் சொல்லும்போது நமக்கு என்ன பிரச்னை? `சிக்ஸர் போனாலும் பரவாயில்லை. உன் பலம் எதுவோ அப்படியே செய்...’ என விராட் சொல்வார். கேப்டனே அப்படிச் சொல்லிவிட்ட பிறகு, இரண்டு மூன்று சிக்ஸர்கள் சென்றாலும் கவலைப்படத் தேவையில்லை. நமக்குத் தேவை விக்கெட். இதுதான் என் இயல்பு. ஐ.பி.எல் போட்டிகளிலும்கூட நான்கு ஓவர்களில் 40 ரன்கள் விட்டுக்கொடுத்திருக்கிறேன். அப்போதும்கூட ஒரு சில நல்ல பந்துகளை வீசியிருப்பதாகத் திருப்தி அடைந்துகொள்வேன். அதற்காக, இப்படிச் சொல்லித் தப்பித்துக்கொள்வதாக அர்த்தமில்லை. இதுதான் என் பலம். அதனால்தான் அணியில் இருக்கிறேன்’’ என்றார் சாஹல். குல்தீப் கருத்தும் கிட்டத்தட்ட இதுவே.

வேறென்ன சொல்ல, இப்போதைக்கு குல்தீப் - சாஹல் காட்டில் மழை!