Published:Updated:

வெல்டன் பாய்ஸ்... ஜூனியர்ஸ் அண்டர் 19 சாம்பியனான கதை! #U19CWC

வெல்டன் பாய்ஸ்... ஜூனியர்ஸ் அண்டர் 19 சாம்பியனான கதை! #U19CWC
வெல்டன் பாய்ஸ்... ஜூனியர்ஸ் அண்டர் 19 சாம்பியனான கதை! #U19CWC

தோல்வியின் விரக்தியில் அத்தனை ரசிகர்களும் மைதானத்தில் அமர்ந்துவிட்டனர். அந்த அணியின் கேப்டன் மட்டும் சிரித்துக்கொண்டே நிற்கிறார். ஒரு கேப்டனால் எப்படி இதுபோன்ற தருணத்தில் சிரிக்க முடிகிறது? தோற்றது கேப்டன் ஜேசன் சங்கா விளையாடும் தேசம் - ஆஸ்திரேலியா. ஆனால், வெற்றி பெற்றது ஜேசன் `ஜாஸ்கிரத் சிங்' சங்காவின் தேசம்... இந்தியா! ஆம், இந்தியா - நான்காவது முறையாக அண்டர் 19 உலகக்கோப்பையை வென்றுவிட்டது. அதுவும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி...! 11 ஆண்டுகளுக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸில் நடந்த உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறிய இந்திய அணியை வழிநடத்திய ராகுல் டிராவிட்... அன்று 100 கோடி இந்தியர்களாலும் வசைபாடப்பட்ட டிராவிட்... இன்று இந்த இளம் படையை வெற்றிபெற வைத்துவிட்டார். 130 கோடி இந்தியர்களும் கொண்டாடுகிறார்கள்... ஓய்வு பெற்று 6 ஆண்டுகள் கழித்து ஹீரோவாகிவிட்டார் டிராவிட். இந்தியாவுக்கு மட்டுமல்ல... மொத்த உலகத்துக்கும் இப்போது அவர்தான் ஹீரோ!

மௌன்ட்   மாங்குனியி (Mount Maunganui) மைதானம் நியூசிலாந்தில்தான் இருக்கிறதா என்று சந்தேகம். தென்னாப்பிரிக்காவில் இருக்கும் விராட் கோலி கவர் டிரைவ் ஆடுவதுபோல் தெரிந்தால் சந்தேகம் வரத்தானே செய்யும். கேப்டன் விராட் கோலியின் கவர் டிரைவ்களில் இருக்கும் அதே டைமிங்... அதே வேகம்... அதே பெர்ஃபெக்ஷன்... ஆஸ்திரேலிய பௌலர் ரியான் ஹாட்லி வீசிய பந்துகளை கவர் திசையில் அடுத்தடுத்து விளாசிக் கொண்டிருந்தார் ப்ரித்வி ஷா - அண்டர் 19 அணியின் கேப்டன். பந்து மிடில் ஸ்டம்ப் லைனில் வந்தாலும். மணிக்கட்டை வளைத்து ஆஃப் சைடில் ஸ்டைலிஷாக ஆடிக்கொண்டிருந்தார். இந்த இளம் வயதில் ஷா அப்படி ஆடுவது கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அதைவிட ஆச்சர்யம் அவரது பொறுமை!

217 ரன்கள்தான் இலக்கு. இந்தத் தொடர் முழுவதுமே நன்றாக ஆடிவரும் ஷா - மஞ்சோத் கல்ரா தொடக்க ஜோடி பேட்டிங். பிரிப்பது கடினம். முதல் 5 ஓவர்களிலேயே நன்றாக செட்டிலாகி விட்டனர். ஆஸ்திரேலியர்களின் ரத்தத்தில் ஊறிப்போன கிரிக்கெட் ஆயுதம் வெளிப்படுகிறது. இந்தத் தொடர் முழுதும் சைலன்ட்டாக இருந்துவிட்டு, ஃபைனலில் 76 ரன்கள் எடுத்துவிட்ட ஜொனாத்தன் மார்லோ, ஷா-வின் அருகில் சென்று ஸ்லெட்ஜிங் செய்யத் தொடங்குகிறார். பந்துவீசிக்கொண்டிருக்கும்போது ஜேக் எவான்ஸ் ஒவ்வொரு பந்துக்கும் வந்து ஏதேதோ சொல்லி வெறுப்பேற்றுகிறார். 18 வயது ஷா பொறுமையிழக்கவில்லை. 

அதுவும் இது இந்தியா - ஆஸ்திரேலியா யுகம் என்றாகிவிட்ட பிறகு, ஸ்மித் - கோலி மோதல் அதை அடுத்துகட்டதுக்கு எடுத்துச்சென்றுவிட்ட பிறகு களத்தில் உணர்வுகள் பெருக்கெடுப்பது சாதாரணம்தான். அதுவும் இது இளரத்தம்... எளிதில் சூடேறிவிடும். இந்த வயதில் கோபம் கொள்ளும்போது, கவனம் முற்றிலுமாக சிதையும். இதைத்தான் ஆஸ்திரேலியர்கள் எதிர்பார்த்தனர். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் அடையாளமான கோலியை ப்ரித்வி பிரதிபலிப்பார் என்று எதிர்பார்த்தனர் கங்காருக்கள். ஆனால், இவரது குரு பெங்களூருக்கே அடையாளம் ஆயிற்றே. பெருஞ்சுவரின் ஆதரவில் நிற்கும் சின்னத் தூண்கள் எளிதில் சரிந்துவிடுமா என்ன? 

4 ஓவர்களின் முடிவிலேயே மழையால் ஆட்டம் தடைபட்டுவிட்டது. அவுட்ஃபீல்டு (Outfield) ஸ்லோவாக இருக்கும். பிட்ச்சின்  தன்மையும் சற்று மாறக்கூடும். மீண்டும் மழைவந்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி டார்கெட் மாறும். ஆட்டத்தின் அணுகுமுறையை மாற்றவேண்டுமோ...? இரண்டாவதாக பேட்டிங் செய்யும் எந்த அணிக்கும் இதுபோன்ற சூழலில் குழப்பம் இருக்கத்தான் செய்யும். இங்கும் ஆச்சர்யம். ப்ரித்வி, மஞ்சோத் இருவரும் அப்படியேதான் ஆடுகிறார்கள். அவசரம் இல்லை... ஆக்ரோஷம் இல்லை... ஆனால், ரன் வருகிறது. காரணம், அவர்கள் ஆடியது டிராவிட் பாணி கிரிக்கெட்!

சதர்லாண்ட் வீசிய லூஸ் பாலில் ப்ரித்வி அவுட். அப்போது ஸ்கோர் 71 ரன்கள். வலது கை ப்ரித்வி, இடது கை மஞ்சோத் என இந்திய அணியின் பழைய left - right காம்பினேஷன் ஓப்பனர்கள் கங்குலி - சச்சின் தொடங்கி இன்றைய ரோஹித் - தவான் கூட்டணி வரை நாஸ்டால்ஜியா நினைவுக்கு அழைத்துச் சென்றது இந்தப் பார்ட்னர்ஷிப். இந்த உலகக்கோப்பையில், 5 போட்டிகளில் இந்த இணை 423 ரன்கள் குவித்திருக்கிறது. இந்தியாவின் துவக்கம், வருங்காலத்திலும் நன்றாகவே இருக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது இந்த ஜோடி. 

அடுத்து களமிறங்கியது சுப்மான் கில். இந்த உலகக்கோப்பையில் ஆடிய நான்கு போட்டிகளிலுமே 50+ ஸ்கோர்கள். செட்டிலாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. வந்ததும் விளாசத் தொடங்கினார். ப்ரித்வியைப் போல் ஆஃப் சைடை மட்டுமே டார்கெட் செய்து ஆடக்கூடியவர் அல்ல. அனைத்து ஏரியாக்களிலும் கலந்துகட்டி அடிக்கக்கூடியவர். ஆனால், இவர் அடித்த 4 பௌண்டரிகளும் கவர் திசையில்தான் அடிக்கப்பட்டது. ஆஸ்திரேலியர்களின் பௌலிங் அப்படி! வேரியேஷன்களே இல்லை. இதைப் பயன்படுத்தி நன்கு வெளுத்த கில் 31 ரன்களில் வெளியேற, கொஞ்சம் பதற்றமாக இருந்தது. இந்தியாவின் மிடில் ஆர்டர் இதுவரை பெரிதாக சோபிக்கவில்லை. இன்னும் 86 ரன்கள் வேண்டும். ஒருவேளை சறுக்கிவிட்டால்...? எதற்கு பயம்? அதுதான் அந்த டெல்லி இளைஞன் ஆஸ்திரேலியர்களைக் கதறவிட்டுக்கொண்டிருக்கிறானே! மஞ்சோத் கல்ரா - ஓவருக்கு ஓவர் அதிரடியைக் கூட்டிக்கொண்டே சென்றார். இந்தியாவை 4-வது உலகக்கோப்பையை நோக்கி அழைத்துச் சென்றார். 

தொடக்கத்தில் ப்ரித்வி மெதுவாகத்தான் இன்னிங்ஸை ஆரம்பித்தார். மஞ்சோத் ஆரம்பத்திலிருந்தே ரன்ரேட்டை சீராக கூட்டிக்கொண்டே இருந்தார். பந்துகளைத் தேர்ந்தெடுத்து 'பளிச்'சென்று வீசினார். எவான்ஸ் ஓவரில் ஒரு ஃப்ரீ ஹிட். மெதுவாக நேரம் எடுத்து பௌலர், ஃபீல்டர் என அனைவரிடமும் ஆலோசித்து ஃபீல்ட் செட் செய்தார் ஆஸி கேப்டன் ஜேசன் சங்கா. ரசிகர்களுக்கு மத்தியில் ராக்கெட் விடுவது என்று பேட்ஸ்மேன் முடிவு செய்துவிட்ட பிறகு, மைதானத்தில் ஃபீல்டர்களை மாற்றி என்ன பயன்? லெக் ஸ்டம்ப் நோக்கி ஃபுல் லெந்த்தில் வீசப்பட்ட பந்து. ஸ்லாக் ஷாட் ஆடுவது கொஞ்சம் சிரமம்தான். ஆனால், முன்னமே ஸ்டம்புகளிலிருந்து விலகி வந்திருந்த கல்ராவுக்கு அது சிரமமாகத் தெரியவில்லை. லாங் ஆன் திசையில் பறந்தது அந்தப் பந்து. நியூசிலாந்து மைதானங்கள் சிறியதுதான். ஆனால், அந்த ஷாட் எந்த மைதானத்திலும் சிக்ஸராகியிருக்கும். ஷாட் அப்படி!

மற்ற பேட்ஸ்மேன்கள் கவர் திசையில் மட்டும் கவனம் கொண்டிருக்க, மற்ற ஃபீல்டர்களுக்கும் வேலை வைக்க எண்ணினார் மஞ்சோத். எக்ஸ்ட்ரா கவர், பேக்வேர்ட் பாயின்ட், மிட் ஆஃப் என எட்வேர்ட்ஸ் வீசிய ஒரே ஓவரில் 3 பௌண்டரிகள். கொஞ்சம் கொஞ்சமாக ஆஸ்திரேலியாவின் பிடி ஆட்டத்திலிருந்து விலகியது. விலக்கினார் கல்ரா. எட்வார்ட்ஸ், எவான்ஸ், ஹார்ட்லி, போப், சதர்லாண்ட்... யார் ஓவரையும் விட்டுவைக்கவில்லை. ஸ்லாக் ஷாட்கள் ஆடும்போதும் அவ்வளவு கவனம். எல்லாம் ஃபீல்டரைத் தாண்டித்தான் விழுகிறது. எந்த ஃபீல்டருக்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அப்படியே சடசடவென சதத்தை நெருங்குவிட்டார். 101 பந்துகளில் சதம்! "Remember the moment Manjot"... வர்ணனையாளரின் வரிகளும் ஞாபகம் கொள்ளவேண்டியவை. இது தன் வாழ்நாளுக்கான தருணம்!

இந்தியாவின் வெற்றி எளிமையாகவும், மஞ்சோத் கல்ரா அதிரடி காட்டவும், ஆஸ்திரேலியர்கள் நன்றாகவே உதவினார்கள். கொஞ்சமும் வேரியேஷன் இல்லாத பந்துவீச்சு. ஓவருக்கு 4 பந்துகளாவது ஃபுல் லெந்த்தில் வீசினர். போதாக்குறைக்கு ஃபீல்டிங் சொதப்பல் வேறு. மிஸ் ஃபீல்ட், கேட்ச் ட்ராப் என ஆட்டம் முழுதும் ஆஸ்திரேலியர்கள் பதற்றத்துடன்தான் விளையாடினார்கள். இந்தப் பதற்றத்தை விதைத்தவர்கள் இந்திய பௌலர்கள்! ஒரு ஃபைனலில் 216 என்ற டார்கெட் எந்த வகையில் போதுமானதாக இருக்கும்? பேட்ஸ்மேன்களின் சொதப்பல், பௌலர்கள் மீதான நெருக்கடியை அதிகரித்தது.

அரையிறுதியைப் போல், தொடக்கத்திலேயே ஆஸி வீரர்களுக்கு கொஞ்சம் ஆட்டம் காட்டினார் இஷான் போரெல். முதல் இரண்டு விக்கெட்டுகளையும் பத்தாவது ஓவருக்குள்ளேயே கைப்பற்றினார். மேற்கொண்டு விக்கெட் வீழாமல் இருக்க பொறுமையாக ஆட முற்பட, ஆஸ்திரேலியவின் ரன்ரேட் 5-க்கும் கீழேயே இருந்தது. மெர்லோ மட்டும் ஒருபுறம் நிலைத்து நிற்க, மற்ற எந்த பேட்ஸ்மேனும் நிலையான ஆட்டத்தை ஆடவில்லை. சுழல், வேகம், ஸ்விங் என அத்தனை ஆயுதங்களையும் காக்டெய்லாகப் பயன்படுத்தினார் ப்ரித்வி. நாகர்கோட்டி, ஷிவா சிங், அனுகுல் ராய். ஷிவம் மாவி என அபிஷேக் தவிர அனைத்து பௌலர்களும் விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

சரியான நேரத்தில் பௌலிங் மாற்றம்... சீரான லைன், லெந்த் என தரமான பௌலிங் யூனிட்டாக செயல்பட்டனர் இந்திய வீரர்கள். அதுவும் டெய்ல் எண்டர்களை டீல் செய்த விதம் அற்புதம். யார்க்கர்களால் நாகர்கோட்டி மிரட்ட, சுழலிலும் ஃபீல்டிங்கிலும் ஷிவா அசத்த, சர்ரென சரிந்தது ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸ். 47.2 ஓவர்களில் எட்டே உதிரிகள். 38.5 ஓவர்களில் ஆஸ்திரேலியர்கள் வீசியதோ 12 உதிரிகள். இந்த வேற்றுமை போதும், இரு அணிகளின் மனநிலையை வேறுபடுத்திக்காட்ட. இதுதான் இந்திய பேட்ஸ்மேன்கள் ஈசியாக ரன் அடிக்க அடித்தளமாக அமைந்தது. கீப்பிங்கில் அசத்திய தேசாய் பேட்டிங்கிலும் அசத்த உதவியது.

38.5 -வது ஓவர்... ஹர்விக் தேசாய் பௌண்டரி அடிக்கிறார். வர்ணனையாளர் ஆர்ப்பரிக்கிறார். நீல உடையணிந்த இளம் வீரர்கள் கைகோத்து ஓடிவருகிறார்கள். நியூசிலாந்து மைதானத்தில் மூவர்ணக் கொடி பறக்கிறது... தி பாய்ஸ் இன் ப்ளூ ராக்ஸ்! இந்தியா சாம்பியன்! டிராவிட் வர்ணனையாளரிடம் பேசிக்கொண்டிருக்கிறார். அவர் வழிநடத்திய இளம் வீரர்கள் பின்னால் வந்து கூச்சலிட்டுக் கொண்டாடுகிறார்கள். அந்தக் கொண்டாட்டத்தை ரசித்துக்கொண்டிருப்பவரிடம் வர்ணனையாளர் கேட்கிறார், "உங்கள் பங்களிப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்....?"

டிராவிட்: "அனைவரின் வெளிச்சமும் என்மீது விழுவதை விரும்பவில்லை. என்னோடு supporting staffs ஏழெட்டுப் பேர் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள்..." ஒரு அணி வெல்வதற்கான காரணம்....ஒரு தலைவனின் இப்படிப்பட்ட ஆட்டிட்யூட்தான்!