Published:Updated:

டிராவிட் படைக்கு நாளை கடைசி யுத்தம்... சாம்பியனாகுமா இந்தியா...?! #U19CWC #BoysInBlue

டிராவிட் படைக்கு நாளை கடைசி யுத்தம்... சாம்பியனாகுமா இந்தியா...?! #U19CWC #BoysInBlue
டிராவிட் படைக்கு நாளை கடைசி யுத்தம்... சாம்பியனாகுமா இந்தியா...?! #U19CWC #BoysInBlue

பாகிஸ்தானைப் பந்தாடி ஃபைனலுக்குள் நுழைந்துவிட்டது இந்தியா. இதுவரை விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி. இப்படித்தான் 2016 ஃபைனலுக்குள்ளும் கம்பீரமாக நுழைந்தது டிராவிட் வழிநடத்தும் இந்த இளம் படை. ஆனால், எதிர்பாராத விதமாக அந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் வீழ்ந்தது.  நாளை நடக்கப்போகும் இறுதிப் போட்டியில் அப்படியேதும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் டிராவிட் நிச்சயம் கவனமாய் இருப்பார். ஏனெனில், நான்காவது முறையாக அண்டர் 19 கோப்பையை வெல்ல இந்தியா எதிர்க்கப்போகும் அணி ஆஸ்திரேலியா... மூன்று முறை சாம்பியன்!  #U19CWC #BoysInBlue 

லீக் சுற்றில் இந்தியா முதலில் எதிர்கொண்டது ஆஸ்திரேலியாவைத்தான். அந்தப் போட்டி இந்திய வீரர்களுக்குப் பெரிய சவாலாக இருக்கவில்லை. கேப்டன் ப்ரித்வி ஷா அதிரடியாக மிரட்ட, 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது. அந்தப் போட்டியில் கொஞ்சம் தடுமாறிய ஆஸ்திரேலியா, அதற்கடுத்த 4 போட்டிகளிலும் வென்றுள்ளது. இந்த இறுதிப்போட்டி எப்படி இருக்கும்? இந்தியா கோப்பையை வெல்வதற்கு இருக்கும் சவால்கள் என்னென்ன?

ப்ரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் பட்டையைக் கிளப்புகிறது. ஓப்பனர்களாக ப்ரித்வி, மஞ்சோத் கல்ரா ஜோடி 4 போட்டிகளில் 352 ரன்கள் குவித்துள்ளனர். அடுத்து வரும் சுப்மான் கில் வேற லெவல் ஃபார்மில் இருக்கிறார். 4 இன்னிங்ஸ்களில் 341 ரன்கள் (சராசரி : 170.50) எடுத்து இந்தியாவின் டாப் ஸ்கோரராக விளங்குகிறார். இரண்டு போட்டிகளை ஓப்பனர்களே வென்று தந்ததால், மிடில் ஆர்டர் இன்னும் தங்களின் பங்களிப்பைக் கொடுக்கவில்லை. ஹர்விக் தேசாய், அபிஷேக் ஷர்மா தவிர்த்து, மற்ற பேட்ஸ்மேன்கள் இன்னும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இந்திய அணிக்குள் இருக்கும் ஒரே பலவீனம் இதுதான். டாப் ஆர்டர் வீரர்களையே கொஞ்சம் அதிகமாக நம்பவேண்டியுள்ளது!

பௌலிங்கைப் பொறுத்தவரை இந்தியா டாப்! 228, 64, 154, 134, 69 என எதிரணிகளை டி-20 ஃபார்மட்டில் அடிக்கக்கூடிய ஸ்கோர்தான் அடிக்கவிட்டுள்ளது இந்திய இளம்படை. 140+ வேகத்தில் தொடர்ச்சியாகப் பந்துவீசும் ஷிவம் மாவி, நாகர்கோட்டி 'ஸ்பீட்' கூட்டணியுடன், பாகிஸ்தானைக் காலி செய்த இஷான் போரெல் இருப்பது இந்தியாவுக்கு நல்ல வெரைட்டியான ஆப்ஷன்கள் கொடுக்கிறது. இந்தத் தொடரில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கும் அனுகுல் ராய்-ன் இடது கை ஸ்பின்னைச் சமாளிக்க எதிரணி பேட்ஸ்மேன்கள் திணறுகிறார்கள். 

இவர்களோடு ரியான் பராக், அபிஷேக் ஷர்மா, ஷிவா சிங் என இந்திய அணிக்கு எக்கச்சக்க பௌலிங் ஆஷன்கள். 5 ஓவர்களுக்கு மேல் பந்துவீசிய இந்திய பௌலர்களில் ஒருவரது எகானமியும் 3.77-க்கு அதிகமாக இல்லை என்பதுதான் கூடுதல் சிறப்பு. இந்த அணியின் ஃபீல்டிங் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அவ்வளவு பக்கா! ராகுல் டிராவிட் என்ற ஆளுமையின் கீழ் துடிப்போடு முதிர்ச்சியும் அடைந்துள்ளனர் இந்திய வீரர்கள்.

இந்திய வீரர்களுக்கு ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் பெரிய பிரச்னையாக இருக்காது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சேஸிங்கின்போது கொஞ்சம் சொதப்பக்கூடியவர்களே. இந்திய அணி ஃபைனலில் முதலில் பேட்டிங் செய்தால் வெற்றி நிச்சயம். பேட்டிங்கில் பெரிய முன்னேற்றம் இல்லையென்றாலும், அந்த அணியின் பந்துவீச்சு முன்னேறியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியைத் தவிர்த்து, மற்ற 4  போட்டிகளிலும் எதிரணியை 200 ரன்னுக்குள் ஆல் அவுட் செய்துள்ளனர். 

இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதியில், 35 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகள் வீழ்த்தி, அண்டர் 19 உலகக்கோப்பையின் சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார் லாய்ட் போப். ஜொனாத்தன் மார்லோ, ஜேக் எவான்ஸ் ஆகியோரும் இந்திய பேட்டிங்குக்குச் சவால் தரலாம். பப்புவா நியூ கினியா அணியுடனான போட்டியில் 7 விக்கெட்டுகள் வீழ்த்திய ஜேசன் ரால்டன் காயம் காரணமாக உலகக் கோப்பையிலிருந்து விலகியுள்ளது சற்றுப் பின்னடைவு.

இந்தப் போட்டியின் இன்னொரு சுவாரஸ்யம் என்னவெனில், இந்த ஆஸ்திரேலிய அணியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 வீரர்கள் விளையாடுகிறார்கள். பேட்ஸ்மேன் பாரம் உப்பல், சண்டிகரில் பிறந்தவர். இன்னொருவர் கேப்டன் ஜேசன் சங்கா. 2016 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியிலேயே இடம்பிடித்திருந்தார் அப்போது 16 வயதாகியிருந்த சங்கா. பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தத் தொடரிலிருந்து ஆஸ்திரேலியா வெளியேறியதால் அவரால் விளையாட முடியாமல் போனது. அந்த ஆதங்கத்தைத் தீர்த்துக்கொள்ள இந்தக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். 

டிராவிட் பயிற்சியில் இந்திய அணி கடந்த முறை கோப்பையை தவறவிட்டது. இப்போது இந்தத் தொடர் முடிவதற்கு முன்பாகவே, ஐ.பி.எல் ஏலம் மூலம் வீரர்களுக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதைத் தக்கவைத்துக்கொள்ள அவர்கள் வெற்றி பெறுவது முக்கியம். மும்பை அணியின் எதிர்காலமாக கடந்த ஆண்டே கருதப்பட்ட ப்ரித்வி ஷா உலகக் கோப்பையை வென்றே தீருவது என்ற வேட்கையில் இருக்கிறார். கோப்பையை ஏந்தப் போவது ஏனோ இந்திய ரத்தம்தான். ஆனால், அது நீல உடையணிந்த இந்திய ரத்தமாக இருக்கவேண்டும்!

அடுத்த கட்டுரைக்கு