Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

பாலிவுட் குயின் கங்கனா ரனாவத், தன் வாழ்க்கையைப் புத்தகமாக எழுதப்போகிறார். `சொந்த வாழ்வில் நான் மிகப் பெரிய வெற்றி அடைந்திருக்கிறேன். இதற்குப் பின்னால், 10 ஆண்டு களாக நான் சந்தித்த மனம் மற்றும் உடல்ரீதியிலான தாக்குதல்கள் அதிகம். நடிகை கனவுடன் நான் சினிமாவுக்குள் வந்தபோது, என் அப்பா வயதுக்காரர் ஒருவர் என்னை உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தினார். சிலர் நமக்கு உதவி செய்பவர்களாக அறிமுகம் ஆவார்கள். ஆனால், எப்போதும் நமக்கான உணவு மட்டும் இலவசமாகக் கிடைக்காது. என் தோல்விகளை, சவால்களைச் சமாளித்தது எப்படி என அந்தப் புத்தகத்தில் சொல்லப்போகிறேன். இது இன்றைய இளம்பெண்களுக்கு மிகவும் பயன்படும்’ எனச் சொல்லியிருக்கிறார் கங்கனா.  படிங்க பெண்களே!

இன்பாக்ஸ்

• இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் சைபர் க்ரைம்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தைத் தொட்டுவிட்டது. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப்பில் இளம்பெண்களைத் தவறாகச் சித்திரித்து படங்களை அனுப்புவது, கணவன்-மனைவி அந்தரங்கப் படங்களை அவர்களுக்கே தெரியாமல் போன், கம்ப்யூட்டரை ஹேக்செய்து வெளியிடுவது என, குற்றங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டேபோகிறது. இதைத் தடுக்கவும் குறைக்கவும் இளைஞர்களிடம் விழிப்புஉணர்வை ஏற்படுத்த, மும்பை போலீஸ் மேற்கொண்ட, ட்விட்டர் பிரசாரத்தில், ட்ரெண்டியாக மீம்ஸ், ஒன்லைனர் ட்வீட்ஸ் என இறங்கியடிக்க, பிரசாரம் மும்பையைத் தாண்டியும் வைரல் ரீச். ம்... நம்ம ஊர்ல ஸ்டிக்கர் பிரசாரம்தான்!

• உலகக் கோப்பையை வென்று தன்னை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் தோனி மட்டும் அல்ல, ராகுல் டிராவிட்டும் இருக்கிறார். தோனிக்கு டி-20 உலகக் கோப்பை என்றால், டிராவிட்டுக்கு ஜூனியர் உலகக் கோப்பை. இந்த மாத இறுதியில், 19 வயதுக்கு உட்பட்டோ ருக்கான உலகக் கோப்பை போட்டிகள் வங்கதேசத்தில் நடக்கவிருக்கிறது. இந்தியாவின் ஜூனியர் அணிக்கு பயிற்சியாளராகப் பொறுப்பேற்றிருக்கும் ராகுல் டிராவிட்டுக்கு முதல் சவால் இது. `இது இளம் வீரர்களுக்குக் கிடைத் திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு. அவர்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு பயிற்சியாளராக, என் நோக்கம் உலகக் கோப்பையை வெல்வது கிடையாது; எனது அணியில் இருந்து சிறந்த வீரர்கள் எதிர்காலத்தில் இந்திய அணியில் விளையாட வேண்டும்’ என்கிறார் ராகுல் டிராவிட். ஆல் தி பெஸ்ட் ஜென்டில்மேன்!

இன்பாக்ஸ்

• `டென்னிஸிலும் மேட்ச் ஃபிக்ஸிங்கா?!' என அதிர்ந்துபோயிருக்கிறார்கள் டென்னிஸ் ரசிகர்கள். `கடந்த 10 ஆண்டுகளில், முதல் 50 இடங்களுக்குள் உள்ள 16 டென்னிஸ் வீரர்கள் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உண்டு. அவர்களில் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்கள் சிலரும் உண்டு. இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன’ என பிபிசி-யும் பஸ்ஃபீட் நிறுவனமும் அறிவித் துள்ளன. இந்தச் செய்தி வெளியான கொஞ்ச நேரத்தில் உலகின் நம்பர் 1 வீரரான ஜோகோவிச், `என்னுடன் பணிபுரிபவர்கள் வழியாக என்னிடம் மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய சிலர் அணுகினார்கள். ஆனால், அதை நான் ஏற்கவில்லை. மேட்ச் ஃபிக்ஸிங் விவகாரம் தொடர்பாக ஆதாரங்கள் எதுவும் இல்லை. அப்படி இருக்கும் வரை இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் யூகமே’ என பதில் அளித்திருக்கிறார். காசு, பணம், துட்டு மணி... மணி!

• 1988-ம் ஆண்டு எடுக்கப்பட்டதாக, ஆர்.எஸ்.எஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி துடைப்பத்தால் தரையைப் பெருக்குவதுபோல் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவியது. இது உண்மைதானா? என ஒருவர் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் பதில் கோர, `அந்தப் புகைப்படம் உண்மையானது அல்ல; போட்டோஷாப்பில் `வேலை' செய்யப்பட்டது' என உறுதி அளித்திருக் கிறது தகவல் ஆணையம். இதேபோல் `கடந்த ஆண்டு மோடி டீ விற்றார் என்பதற்கான எந்த ஆதாரமும் தங்களிடம் இல்லை' என ரெயில்வே துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஓவர்... ஓவர்... பப்ளிசிட்டி டிராமா ஓவர்!

இன்பாக்ஸ்

• நாம் ஒவ்வொருவரும் ஃபேஸ்புக்கில் அல்லும்பகலும் உழைத்ததில், கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் அந்த நிறுவனம் சம்பாதித்தது 123.5 கோடி ரூபாய். இது, 2014-ம் ஆண்டு வருவாயைவிட 27 சதவிகிதம் அதிகம். ஃபேஸ்புக்கில் இணைந்திருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 13 கோடியே 80 லட்சம். இவர்கள் ஒவ்வொருவரும் சம்பாதித்துக் கொடுத்தது தலைக்கு 9 ரூபாய். இந்தியாவைவிட அமெரிக்காதான் ஃபேஸ்புக்குக்கு வருமானம் கொழிக்கும் மார்க்கெட். அங்கு ஒவ்வொரு யூஸரிடம் இருந்து, 630 ரூபாய் சம்பாதித்திருக்கிறது ஃபேஸ்புக்.  இதை மட்டும் மார்க் ஷேர் பண்ணவே மாட்டாரு!

இன்பாக்ஸ்

• மினிமம் பட்ஜெட்டில் படம் எடுத்து, மேக்ஸிமம் வசூல்செய்வது மல்லுவுட்டின் ஸ்டைல். ஆனால், இங்கேயும் மெகா பட்ஜெட் படங்கள் எடுப்போம் என இறங்கியிருக்கிறார் ப்ருத்விராஜ். இதற்காக மலையாளத்தில் கிளாசிக் ஹிட்டடித்த, `என்னு நின்டே மொய்தீன்’ இயக்குநர் விமலுடன் மீண்டும் இணைந்திருக்கிறார் ப்ருத்வி. மகாபாரதத்தின் எவர்கிரீன் ஹீரோ கர்ணனின் கதைதான் 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படமாகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் டீஸர் வைரல் ஹிட்டடிக்க ப்ருத்வி செம குஷி. சேட்டன் காட்டுல மழை!

• பாலகிருஷ்ணாவின் 99-வது படம் ‘டிக்டேட்டர்’ பாக்ஸ் ஆபீஸில் பாஸ் ஆகி ஓடிக் கொண்டிருக்க, அடுத்து ‘பாலைய்யா 100’ மோடுக்குத் தயாராகின்றனர் மனவாடுகள். 1991-ம் ஆண்டில் வெளியான சயின்ஸ்ஃபிக்‌ஷன் ‘ஆதித்யா 369’ படத்தின் இரண்டாம் பாகத்தை ‘ஆதித்யா 999’ என எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். இதில் பாலைய்யாவுக்கு ஜோடி டாப்ஸி. ஜெய் பாலைய்யா!

இன்பாக்ஸ்

• ஒவ்வோர் ஆண்டும் `கிரெடிட் ஸ்விஸ்' எனும் ஸ்விட்ஸர்லாந்து வங்கி, உலகில் எந்தெந்த நாடுகளில் பெரும் பணக்காரர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள் என்ற பட்டியலை வெளியிட்டுவருகிறது. இந்த ஆண்டின் பட்டியல்படி முதல் இடம் அமெரிக்காவுக்கு. 2 கோடியே 6 லட்சம் பெரும் பணக்காரர்கள் இருக்கிறார்கள். இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்திருக்கின்றன. இந்தியாவில் 4,352 பெரும் பணக்காரர்கள் இருப்பதாக அந்த வங்கி அறிவித்துள்ளது. மெக்ஸிக்கோ நீங்கலாக வடஅமெரிக்காவில் ஒருவரின் சராசரி சொத்து மதிப்பு 2 கோடியே 30 லட்சம் ரூபாய். இது ஒரு சராசரி இந்தியரின் சொத்து மதிப்பைவிட 75 சதவிகிதம் அதிகம்! கறுப்புப் பணம் லிஸ்ட் கொடுக்காதிங்கப்பா!

• நவீனக் கருவிகள் விவசாயத் தொழிலுக்குள் வந்தபோது, விவசாயத் தொழிலாளர்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழந்தனர். ஐ.டி வேலைவாய்ப்புகளுக்கும் இந்த நிலை வரவிருக்கிறது என எச்சரித்திருக்கிறது, இன்ஃபோசிஸ் நிறுவனமும் உலக பொருளாதார மன்றமும் (WEF) இணைந்து நடத்திய ‘தி ஃபியூச்சர் ஆஃப் ஜாப்ஸ்’ என்னும் ஆய்வு. `எதிர்காலத்தில் நாம் சந்திக்கவிருக்கும் நான்காவது தொழிற்புரட்சியால், தற்போதைய 50 லட்சம் வேலைவாய்ப்புகள் அழிந்துவிடும். வளர்ந்துவரும் ரோபோட்டிக்ஸ், ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ், பயோடெக்னாலஜி, ஆட்டோமேஷன் ஆகியவற்றால் 2020-ம் ஆண்டுக்குள், ஐ.டி நிறுவனங்களில் தற்போதைய பணிச்சூழல் மாறிவிடும். புதிய வேலைகள் இந்த இடங்களை ஆக்கிரமிக்கும். தன்னை டெக்னிக்கலாக அப்டேட் செய்துகொண்டவர்கள் மட்டுமே இந்தப் பிரச்னையில் இருந்து தப்பிக்கலாம்’ என எச்சரித்திருக்கிறது இந்த ஆய்வு. வாழ்க்கை ஒரு வட்டம்!