Published:Updated:

ஜனவரியில் ஏலம் நடந்தது நல்லது... ஏன்? ஐ.பி.எல் 2018... உள்ளே வெளியே என்ன நடக்கும்? பகுதி - 2 #IPLAuction

ஜனவரியில் ஏலம் நடந்தது நல்லது... ஏன்? ஐ.பி.எல் 2018... உள்ளே வெளியே என்ன நடக்கும்? பகுதி - 2 #IPLAuction
ஜனவரியில் ஏலம் நடந்தது நல்லது... ஏன்? ஐ.பி.எல் 2018... உள்ளே வெளியே என்ன நடக்கும்? பகுதி - 2 #IPLAuction

ஜனவரியில் ஏலம் நடந்தது நல்லது... ஏன்? ஐ.பி.எல் 2018... உள்ளே வெளியே என்ன நடக்கும்? பகுதி - 2 #IPLAuction

கடந்த சில ஆண்டுகளாக பிப்ரவரி மாதம் நடந்த ஐ.பி.எல் ஏலம், இந்தமுறை ஜனவரியிலேயே நடந்தது. ஏலத்துக்கே  இந்த மாற்றம் ஏன் என்றும், இது சரிதானா என்றும் கேள்விகள் எழுந்தன. ஆனால், உண்மையில் ஏலம் நடத்துவதற்கு இதைவிடச் சிறந்த நேரத்தை பி.சி.சி.ஐ-யால் தேர்ந்தெடுத்திருக்க முடியாது. வங்கதேசத்தில் முத்தரப்புத் தொடர், நியூசிலாந்தில் பாகிஸ்தான் - நியூசிலாந்து தொடர், அதன் பக்கத்து நாட்டில்  இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் திண்டாட்டம், தென்னாப்பிரிக்காவில் இந்தியாவின் போராட்டம் என சர்வதேச அளவில் கிட்டத்தட்ட அனைத்து அணிகளும் இப்போது விளையாடி வருகின்றன. பிக்பேஷ் டி-20 தொடர் மற்றுமொரு தேடுதல் வேட்டையாக அமைந்தது. போதாக்குறைக்கு அண்டர் -19 உலகக்கோப்பை, இளம் வீரர்களின் திறமையை அடையாளம் கண்டெடுத்திருக்கிறது. இந்தத் தொடர்கள், ஏலத்தின்போது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. #IPLAuction

டார்ஸி ஷார்ட் என்ற பெயர் திரையில் காட்டப்பட்டபோது, பெரும்பாலானவர்களுக்கு புதிதாகவே தெரிந்தது. அதுவரை சர்வதேச அரங்கில் கேள்விப்பட்டிடாத பெயர். கெய்ல், அம்லா போன்றவர்களெல்லாம் விற்கப்படாத நிலையில், இவரும் unsold பட்டியலில் சேர்வார்  என்றுதான் எதிர்பார்த்தனர். ரூ.20 லட்சம்தான் அடிப்படை விலை. சி.எஸ்.கே, சன்ரைஸர்ஸ் இரண்டு அணிகளும் எடுத்த எடுப்பில் போட்டி போடத் தொடங்கின. லட்சத்தில் இருந்து கோடிக்குச் சென்றது ஷார்ட்-ன் மதிப்பு. ஒருகட்டத்தில் அந்த இரு அணிகளும் ஒதுங்கிக்கொள்ள, ராஜஸ்தான், டெல்லி அணிகள் களம்புகுந்தன. ஒரு சர்வதேசப் போட்டியில்கூட விளையாடாத ஒரு வெளிநாட்டு வீரருக்கு 4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது ராஜஸ்தான். 

அம்லா - 2017 ஐ.பி.எல் தொடரில் 2 சதங்கள் அடித்திருந்தார். ஆனால், இம்முறை விலைபோகவில்லை. காரணம், அவர் அந்தச் சதங்கள் அடித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. டிசம்பர் மாதம் நடந்த தென்னாப்பிரிக்க டி-20 தொடரில் அவரது செயல்பாடு சுமார்தான். ஆனால், ஷார்ட்...? கடந்த ஒரு மாதமாக பிக்பேஷ் தொடரில் அவர்தான் டாப் ரன்ஸ்கோரர். 10 போட்டிகளில் 504 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 147.80, 22 சிக்ஸர்கள் என இந்த சீசனில் ராஜ்ஜியம் நடத்தி வருகிறார். அதனால்தான் அவ்வளவு போட்டி. 

அடுத்து, ஷிவம் தூபே - மும்பைக்காரர். உள்ளூர் அளவில் 18 போட்டிகளில் மட்டுமே விளையாடியவர். எந்த அணியும் paddle உயர்த்தவில்லை. தூபே விலைபோகவில்லை... அடுத்து ஜோஃப்ரா ஆர்சர்... லோயர் மிடில் ஆர்டரில் அதிரடி காட்டும் 'டிபிகல்' வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர். 20 முதல்தரப் போட்டிகளில் மட்டுமே விளையாடியவர். சூப்பர் கிங்ஸ், டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன், சன்ரைஸர்ஸ், ராஜஸ்தான் என பலமுனைப் போட்டி. ரூ.50 லட்சம் அடிப்படை விலையில் தொடங்கி ரூ.7.20 கோடியில் நின்றது ஆர்சருக்கான போர். அடையாளமில்லாத வீரர்களுக்கு அடையாளம் கொடுக்கும் ராஜஸ்தான் அணிதான் இவரையும் வாங்கியது. 10 பிக்பேஷ் போட்டிகளில் 15 விக்கெட்டுகள். இந்த 15 விக்கெட்டுகளுக்குத்தான் 7.20 கோடி!

8 போட்டிகள் - 71 ரன், 5 விக்கெட்...2017 ஐ.பி.எல் தொடரில் இதுதான் ஷேன் வாட்சனின் செயல்பாடு. 36 வயதாகிவிட்டது. அவரது ராயல் சேலஞ்சர்ஸ் டீம் மேட் கெய்ல் சற்று முன்னர்தான் unsold பட்டியலில் இணைந்திருந்தார். ஆனால், இவருக்கோ முடிவு பாசிடிவாக அமைந்தது. 4 கோடி கொடுத்து வாட்சனை வாங்கியது சூப்பர் கிங்ஸ்! காரணம்...? அதே பிக்பேஷ் தொடர். இந்த ஒரு மாதத்தில் இவர் அடித்த 331 ரன்களும் 3 விக்கெட்டுகளும்தான். இவர்கள் மட்டுமல்ல, ஆண்ட்ரூ டை 7.20 கோடி வரை ஏலம் போனதற்குக் காரணம் பிக்பேஷ்!  பென் லாலின், பில்லி ஸ்டான்லேக் போன்ற பெரிய அளவில் அறியப்படாத வீரர்கள் ஏலம் போனதற்கே பிக்பேஷ் தொடர்தான் காரணம்.

பிக்பேஷ் தொடர் ஒருபுறம் இவர்களுக்கான அடையாளத்தைக் கொடுக்க, அண்டர் 19 உலகக்கோப்பை இளம் வீரர்களை அடையாளப்படுத்தியது. ஒருவேளை இந்தத் தொடர் இப்போது நடக்காமல் இருந்தால், கேப்டன் ப்ரித்வி ஷா (டெல்லி டேர்டெவில்ஸ் - 1.20 கோடி) மட்டுமே ஏலம் போயிருப்பார். ஆனால், இப்போது 5 இந்திய வீரர்களும் 2 ஆப்கானிஸ்தான் வீரர்களும் ஏலம் போயுள்ளனர். தொடர்ந்து 140+ கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசிய அசத்திய கமலேஷ் நாகர்கோட்டி (கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - 3.20 கோடி), விளையாடிய 3 இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்து அசத்தியிருந்த சுப்மான் கில் (கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - 1.80 கோடி), நான்கு போட்டிகளில் 8 விக்கெட் வீழ்த்திய ஷிவம் மாவி (கொல்கத்தா நைட்ரைடர்ஸ் - 3 கோடி), 11 விக்கெட் வீழ்த்தியிருந்த ஸ்பின்னர் அனுகுல் ராய் (மும்பை இந்தியன்ஸ் - 20 லட்சம்) ஆகியோரும் ஐ.பி.எல் அணிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். 

இந்திய அண்டர் 19 வீரர்கள் மட்டுமல்ல, ஆப்கானிஸ்தான் அண்டர் 19 வீரர்களும் ஏலத்தில் எடுக்கப்பட்டதுதான் இதன் சிறப்பு. பௌலர் ஜாஹிர் கான் - 60 லட்சத்துக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அஃப் ஸ்பின்னர் முஜீப் ஜத்ரான் - டெல்லி, பஞ்சாப் அணிகள் கடும் போட்டி போட, 4 கோடிக்கு ஏலம் போனார் இந்தப் பதினாறு வயது இளைஞர். ஐ.பி.எல் ஏலத்தை தலைப்புச் செய்திகள் நிர்ணயிக்கும் என்பதற்கு இதுவே மிகச்சிறந்த உதாரணம். ஒருவேளை வழக்கம்போல பிப்ரவரி மாதம் ஏலம் நடந்திருந்தால், ஜத்ரான் இந்த அளவுக்கு ஏலம் போயிருப்பாரா என்று தெரியாது. அப்போது நடந்துகொண்டிருக்கும் தொடரில் சாதித்துக்கொண்டிருக்கும் ஒரு பௌலரை வாங்கத்தான் ஐ.பி.எல் அணிகள் போட்டி போட்டிருக்கும். 

இவ்வளவு ஏன்... இரண்டு நாள் இடைவெளி, ஒரு வீரரின் வாய்ப்பைத் தட்டிப் பறித்துவிட்டது. இஷான் போரெல் - இந்த வீரரின் பெயரை ரிச்சர்ட் மேட்லி அறிவித்ததும், அமைதியே நிலவியது. அதுவரை அண்டர் 19 உலகக்கோப்பையில் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தார் இஷான். 55 பந்துகள் மட்டுமே வீசியிருந்தார். விக்கெட் வீழ்த்தவில்லை. ஞாயிற்றுக்கிழமை அவர் விலைபோகவில்லை. செவ்வாய் அதிகாலை... பாகிஸ்தான் அணியுடனான அரையிறுதி. அந்த அணியின் முதல் நான்கு விக்கெட்டுகளையும் தான் வீசிய ஆறாவது ஓவரிலேயே வீழ்த்தி ஆட்டத்தை அப்போதே இந்தியாவுக்கு வென்று கொடுத்திருந்தார். நாகர்கோட்டி, ஷிவம் மாவி ஆகியோரைப் போல் வேகம் இல்லை. ஆனால், நன்றாக ஸ்விங் செய்யத் தெரிந்தது. பேட்ஸ்மேன் எப்போது பொறுமை இழப்பார் என்பதை அறிந்து, லூஸ் பால் வீசி விக்கெட் எடுக்கத் தெரிந்தது. ஆனால், இவரைப் பற்றி ஐ.பி.எல் அணிகளுக்குத் தெரியவில்லை. காரணம்...ஏலத்துக்கும் இந்தப் போட்டிக்கும் இடையே இருந்த 2 நாள் வித்தியாசம்!

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான தொடர் காலின் டி கிராந்தோம், மிட்சல் சான்ட்னர் ஆகியோருக்கு அணிகளைப் பெற்றுத் தந்தது. இஷ் சோதி - லெக் ஸ்பின்னர் வேறு. லெக் ஸ்பின்னர் என்பதனாலேயே இன்னும் அமித் மிஷ்ரா, பியூஷ் சாவ்லோ ஆகியோருக்கெல்லாம் கோடிகள் கொட்டுகிறார்கள். இவர் உலகின் நம்பர் 1 பௌலர் வேறு. ஆனால், ஏலம் போகவில்லை. காரணம்,  இந்த பாகிஸ்தான் டி-20 தொடர்.  இவர் பெயர் ஏலத்துக்கு வந்த 27-ம் தேதி, இந்தத் தொடரின் 2 போட்டிகள் முடிவடைந்திருந்தது. முழுமையாக 8 ஓவர்களும் வீசியவர் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. 28-ம் தேதி மூன்றாவது டி-20 போட்டி. 47 ரன் கொடுத்து 2 விக்கெட் (எகானமி : 11.75) வீழ்த்துகிறார். அன்று நடந்த மறு ஏலத்தில் யாரும் இவரை வாங்க முன்வரவில்லை. உலகின் நம்பர் 1 டி-20 பௌலருக்கு, நம்பர் - 1 டி-20 தொடரில் இடமில்லை. ஒருவேளை இந்தத் தொடர் இப்போது நடக்காமல் இருந்திருந்தால், முந்தைய பெர்ஃபாமன்ஸ்கள் அடிப்படையில் நிச்சயம் சோதி ஏலம் போயிருப்பார். 

இப்படி, தற்சமயம் நடந்த ஒவ்வொரு தொடரும், ஏலத்தில் வீரர்கள் ஏலம் போனதற்கும் போகாததற்கும் முக்கியக் காரணமாக விளங்கின. இந்த சர்வதேசத் தொடர்கள் ஒருபுறம் தாக்கம் ஏற்படுத்த, ரஞ்சிக் கோப்பையிலேயே விளையாடாத 30 வயது வீரர் ஒருவர் ஐ.பி.எல் விளையாடக் காரணமாக அமைந்தது நம் உள்ளூர் தொடர் ஒன்று. அதைப்பற்றி... அடுத்த பாகத்தில்.

அடுத்த கட்டுரைக்கு