
சார்லஸ்
வெற்றிகரமாக தொடர்ந்து மூன்றாவது ஒருநாள் தொடரிலும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. கடந்த 26 ஆண்டுகளில் போட்டியே இல்லாமல் முதல் மூன்று போட்டிகளிலுமே தோற்று, ஒருநாள் தொடரை இந்திய அணி இழப்பது இதுவே முதல் முறை.
`வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, இப்போது ஆஸ்திரேலியா என மூன்று தொடர் தோல்விகளுக்கும் தோனிதான் காரணம்’ என கோஷங்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றன. `தோனியிடம் வெற்றிக்கான வேகம் இல்லை’ என்கிறார்கள் விமர்சகர்கள். `கோஹ்லி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி உலகின் நம்பர் 1 இடத்தைப் பிடித்துவிட்டது. தோனி தலைமையிலான ஒருநாள் அணி தோல்வி மேல் தோல்விகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது' என்கிற ஒப்பீடுகள் அதிகமாகிவிட்டன. ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி, ஒருநாள் போட்டிகளில் இருந்து மட்டும் அல்ல, கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வுபெறும் காலம் நெருங்கிவிட்டது.
பௌலர்களைக் காணவில்லை!
ஆஸ்திரேலிய மண்ணில் முதல் மூன்று போட்டிகளிலும் முதலில் ஆடிய இந்திய அணியின் ஸ்கோர் 309, 308, 295... முதல் இரண்டு போட்டிகளிலும் ரோஹித் ஷர்மா சதம், மூன்றாவது போட்டியில் கோஹ்லி சதம் என பேட்டிங் பட்டையைக் கிளப்பியது. ஆனால் பௌலிங்? வழக்கத்தைவிடவும் சொதப்பல். `ஸ்ட்ரைக் பௌலர்’ என்கிற ஒரு வார்த்தையே இந்திய அணிக்குத் தெரியாமல் போய்விட்டது. வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆஸ்திரேலிய மண்ணில் இஷாந்த் ஷர்மாவும் உமேஷ் யாதவும்தான் சீனியர்கள். ஆனால், இருவரின் பௌலிங்கும் படுமோசம். முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியதால், மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு உலகின் நம்பர் 1 பௌலரான ரவிச்சந்திரன் அஷ்வினையே வெளியே உட்காரவைத்தார் தோனி.

2015-ம் ஆண்டில் இதே ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக்கோப்பை தோல்விக்குக்கூட சரியான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாததுதான் காரணம். மீண்டும் அதே ஊருக்கு, அசுரபலம்கொண்ட ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, ஃபார்மிலேயே இல்லாத பௌலர்களைக் கொண்டுபோனது யார் தவறு? கடந்த ஐந்து ஆண்டுகளாக ஓர் ஒழுங்கற்ற, சரியான பௌலர்கள் இல்லாத மோசமான அணியை வழிநடத்திவந்த தோனிதானே இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்கவேண்டியவர்? இப்போதும் `பௌலர்களுக்குப் போதுமான அனுபவம் இல்லை’ என இஷாந்த் ஷர்மாவையும் உமேஷ் யாதவையும் காப்பாற்றுகிறார் தோனி. 100, 50 போட்டிகளுக்கும் மேல் ஆடியிருக்கும் இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவை `அனுபவம் இல்லாதவர்கள்’ எனச் சொல்லி யாரைக் காப்பாற்றப்பார்க்கிறார் தோனி? தன் அணிக்கான திறமையான பௌலர்களை ஏன் அவரால் கேட்டு வாங்க முடியவில்லை. இந்தியாவில் போட்டிகள் நடக்கும்போது இளம் வீரர்களுக்கு எந்தப் போட்டியிலும் விளையாட வாய்ப்பு தராமல், ஸ்பின் பிட்ச்சுகளை மட்டுமே வைத்துக்கொண்டு வெற்றிபெற்றுவிட்டால் போதும் என்கிற பி.சி.சி.ஐ பிரதிநிதி போலவே ஏன் தோனியும் யோசிக்க வேண்டும்?
‘‘ஹார்ஸஸ் ஃபார் கோர்ஸஸ்’ தியரியைப் பின்பற்றுகிறேன்’ என்பார் தோனி. ‘போட்டி நடைபெறும் நாள் அன்று பிட்ச்சின் தன்மை, தட்டவெப்பச் சூழல் இவற்றைப் பொறுத்துதான் அணியைத் தேர்ந்தெடுக்க முடியும். எல்லோரும் எல்லா போட்டிகளிலும் இருக்க முடியாது’ என்பதுதான் தோனியின் வாதம். ஆனால், இப்படிச் சொன்ன தோனியே தொடர்ந்து சரியாக பேட் செய்யவில்லை என்பதுதான் உண்மை.
டூ டௌன் பேட்ஸ்மேனாக களம் இறங்குவதா, ஐந்தாவது வீரராக களம் இறங்குவதா அல்லது ஆறாவது வீரராகவா என தான் மட்டும் குழம்பாமல், அணியின் பேட்டிங் ஆர்டரையே குழப்பிக்கொண்டிருக்கிறார் தோனி.
‘டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்றாலே ஒருவரால் முழுமையான கிரிக்கெட் வீரராக இருக்க முடியாது. ஒரு ஃபார்மேட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டாலே, அது ஒரு வீரருக்குப் பின்னடைவுதான்’ என தோனியை விமர்சித்திருக்கிறார் முன்னாள் கேப்டன் கபில்தேவ்.
2014-ம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார் தோனி. மீண்டும் அதே ஆஸ்திரேலியாவில் அப்படி ஒரு நிலைமையில்தான் வந்து நின்றிருக்கிறார் தோனி.
பல விக்கெட் கீப்பர்கள் வருவதும் போவதுமாக இருந்த இந்திய அணியில், சட்டென உள்ளே புகுந்து கவனத்தை ஈர்த்தவர் மகேந்திர சிங் தோனி. எந்தக் கிரிக்கெட் பின்புலமும் இல்லாத, கிரிக்கெட்டுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து வந்தவர், இந்திய அணிக்கு கேப்டனாக மாறியது யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட். 20-20 உலகக்கோப்பை, 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை என கேப்டனாக அவர் படைத்தது சாதனை சகாப்தம். ஆனால், 2011 உலகக்கோப்பைக்குப் பிறகு அவர் தலைமையிலான அணி சந்தித்தது அனைத்துமே மோசமான தோல்விகளே. ஒரு நிலையில்லாத அணிக்குத் தலைவனாகத் தொடர்ந்து பொறுப்பேற்றுவந்திருக்கிறார் தோனி.
20-20 உலகக்கோப்பை தோனிக்கு வாழ்வா... சாவா போராட்டம். உலகக்கோப்பையில் சொதப்பினால், கேப்டனாக மட்டும் அல்ல ஒரு வீரராகக்கூட தோனி இந்திய அணிக்குள் தொடர்வாரா என்பது சந்தேகமே.
இந்தியாவுக்கு இரண்டு உலகக்கோப்பைகளை வென்றுதந்த கேப்டன், கௌரவ விலகலுக்குத் தயாராகி வருகிறார் என்பது இப்போது அவரது பேச்சுகளில் இருந்தும் தெரிகிறது!