Published:Updated:

கங்குலி, கெய்ல், லாராவுக்கு நிகழ்ந்தது இவர்களுக்கும் நிகழும்! ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும்? பாகம் - 8 #IPLAuction

கங்குலி, கெய்ல், லாராவுக்கு நிகழ்ந்தது இவர்களுக்கும் நிகழும்! ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும்? பாகம் - 8 #IPLAuction
கங்குலி, கெய்ல், லாராவுக்கு நிகழ்ந்தது இவர்களுக்கும் நிகழும்! ஐ.பி.எல் ஏலம் எப்படி இருக்கும்? பாகம் - 8 #IPLAuction

2011-ம் ஆண்டு ஐ.பி.எல் ஏலம்... ரீடெயின் செய்யப்பட்ட 12 வீரர்களைத் தவிர மற்ற அனைவரும் ஏலத்துக்கு வந்ததால், எக்கச்சக்க எதிர்பார்ப்பு. `Unsold' என்ற வார்த்தை பிரபலமடைந்தது இந்த ஏலத்தில்தான். டேனியல் கிறிஸ்டியன், சௌரப் திவாரி போன்ற வீரர்கள் எல்லோரும் கோடிகளில் ஏலம்போக, கங்குலி, கெய்ல், லாரா போன்ற பெயர்கள் `Unsold' லிஸ்ட்டில் இணைந்தன. `வயதாகிவிட்டது' என்பது அன்று சொல்லப்பட்ட காரணம் என்றாலும், அடுத்தடுத்த ஏலங்களில் ஹஷிம் அம்லா, ராஸ் டெய்லர், மார்டின் குப்தில் போன்ற நட்சத்திரங்கள்கூட ஏலம்போகாத நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டு நடக்கும் ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நட்சத்திரங்கள், ஐ.பி.எல் அனுபவம் அதிகம் உள்ள நட்சத்திரங்கள் பலரும் ஏலத்தில் வாங்கப்படாமல் இருக்க வாய்ப்புள்ளது. அவர்கள் யார் யார் எனப் பார்ப்போம்...#IPLAuction 

வயது மட்டுமல்லாமல், ஃபார்ம், டி-20 செயல்பாடு, துணைக்கண்டச் செயல்பாடு, அடிப்படை விலை, ஐ.பி.எல் சமயத்தில் வீரர்கள் சர்வதேசப் போட்டியில் பங்கேற்கச் செல்வார்களா எனப் பல்வேறு அம்சங்களைக் கருத்தில்கொண்டுதான் ஐ.பி.எல் அணிகள் ஏலத்தின்போது வீரர்களை வாங்குகின்றன. அதனால்தான் இரண்டு ஆண்டுக்கு முன்னர் வரை ஹஷிம் அம்லாவை ஏலத்தில் எடுக்க, ஐ.பி.எல் அணிகள் தயங்கின. புஜாரா, இஷாந்த் ஷர்மா போன்றோர் சமீபகாலமாகப் புறக்கணிக்கின்றனர். பெரிதும் அறியப்படாத கே.சி.கரியப்பா, முருகன் அஷ்வின் போன்ற வீரர்களுக்கு அணிகள் போட்டிபோடுவதும் இதனால்தான். இந்த 2018-ம் ஆண்டு ஏலத்துக்குத் தேர்வாகியிருக்கும் 218 வீரர்களில், அதிகபட்சம் 70-80 வீரர்கள்தான் அணிகளால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் பெரும்பாலானவர்கள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியவர்களாகவே இருப்பார்கள். ஆனால், மிகப்பெரிய நட்சத்திரங்கள் மேற்கூரிய காரணங்களுக்காக கண்டுகொள்ளாமல் விடப்படவே வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன!

சர்வதேச அரங்கில் ஓய்வுபெற்றிருந்தாலும், இரண்டு மாதங்களுக்குள் கோடிகளில் கிடைக்கும் சம்பளத்துக்காகவும், ஐ.பி.எல் தொடர் தரும் ஜாலி அனுபவங்களுக்காகவுமே பல வீரர்கள் இன்னும் இந்த டி-20 ஃபார்மட்டில் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். ஐ.பி.எல் தொடரிலிருந்து ஓய்வுபெறும்போது மைக் ஹஸ்ஸிக்கு வயது 40. 46 வயதிலும் இந்த ஆண்டுக்கான ஏலத்துக்கு பெயர் கொடுத்திருந்தார் ஸ்பின்னர் பிரவீன் தாம்பே. மெக்குல்லம், சச்சின், ஹெய்டன் போன்ற வீரர்கள் ஓய்வுக்குப் பிறகும் ஜொலித்தனர்; ஜொலிக்கின்றனர். இளைஞர்களுக்கான ஃபார்மட்டாகக் கருதப்பட்டபோதிலும், 35+ வீரர்கள் பலர் இங்கு ஜொலித்துள்ளனர். அதேசமயம் முரளிதரன், பான்டிங் போன்ற உச்ச நட்சத்திரங்கள் திணறியுள்ளனர். ஆக, 35+ பிரிவு ரொம்பவுமே எச்சரிக்கையோடு டீல் செய்யப்படவேண்டிய ஒன்று. அவர்கள் அஃப்ரிடி போல். க்ளிக்கானால்  ஹிட்... இல்லையெனில் பெரிய ஃப்ளாப்!

இந்தப் பிரிவில் இந்த ஆண்டு ஏலத்திலும் பல வீரர்கள் இருக்கின்றனர். ஹர்பஜன் சிங், பிரெண்டன் மெக்குல்லம், மிட்சல் ஜான்சன், ஷேன் வாட்சன், கிறிஸ் கெய்ல்... என நீண்ட வரிசை. அதில் சில வீரர்களுக்கு இன்னும் மவுசு குறையாமல்தான் இருக்கிறது. உதாரணமாக, பிரெண்டன் மெக்குல்லம் இன்னமும் சி.எஸ்.கே-வின் ஃபேவரைட்டாகத்தான் இருக்கிறார். ஆனால், பிரச்னை என்னவோ ஜான்சன், டேரன் சமி போன்றோருக்குத்தான். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இரண்டு டி-20 உலகக்கோப்பையை வென்று தந்த டேரன் சமி, ஐ.பி.எல் தொடரில் சோபிக்கவேயில்லை. கேப்டனாக, பேட்ஸ்மேனாக, பௌலராக என எதிலும் அவரால் ஜொலிக்க முடியவில்லை. இப்போது சர்வதேசப் போட்டிகளிலும் ஆடுவதில்லை. வயதும் 34 ஆகிவிட்டதால், இந்த ஏலம் அவருக்கு கடினமான ஒன்றாகவே அமையும்.

போன ஐ.பி.எல் தொடரில் சோபிக்காவிட்டாலும், முறையே பிக்பேஷ், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடர்களில் கலக்கிய வாட்சன், கெய்ல் ஏலம்போகக்கூடும். இவர்கள் விஷயத்தில் அணிகள் எடுக்கும் முடிவு கன்னிவெடி மாதிரிதான். அவர்களுக்கே ஆபத்தாகவும் அமையலாம். லுங்கி என்கிடி, ககிஸோ ரபாடா என அசத்தலான இளம் பௌலர்கள் நிறையபேர் நிறைந்திருக்கும் இந்த ஏலத்தில், ஜான்சன் ஏலம்போவது கடினம்தான். இந்த பிக்பேஷ் தொடரில் அதிகம் விக்கெட் வீழ்த்தாவிட்டாலும், மிகவும் சிக்கனமாகப் பந்து வீசியுள்ளார். அதனால் `பேக் அப்' ஆப்ஷனாக அவரை அணிகள் எடுக்க நினைக்கும். ஆனால், அங்குதான் மிகப்பெரிய சிக்கலான `Base price' எனப்படும் அடிப்படை விலை உள்ளது.

ஒரு வீரரின் அடிப்படை விலை, ஏலத்தை நிர்ணயிக்கும் மிகப்பெரிய காரணி. அடிப்படை விலை குறைவாக இருந்தால், `வாங்கித்தான் பார்ப்போமே!' என கோதாவில் இறங்குவார்கள். அதுவே அதிகமாக இருக்கும்போது, தேவையற்ற முதலீடாகத் தோன்றும். கங்குலி, அம்லா, இஷாந்த் ஷர்மா போன்ற வீரர்கள் விலைபோகாததற்கு அதுவே காரணம். அந்தக் காரணம் ஜான்சனுக்கும் பாதகம். அவரது அடிப்படை விலை 2 கோடி ரூபாயாக இருப்பதால், இவரை வாங்குவதற்கு அணிகள் எப்படியும் யோசனை செய்யும். அதேபோல் காலின் இங்ரம். நான்கு ஆண்டுகளாக சர்வதேசப் போட்டிகளில் விளையாடாத வீரருக்கு எதற்காக 2 கோடி ரூபாய் அடிப்படை விலையை பி.சி.சி.ஐ நிர்ணயித்துள்ளது எனத் தெரியவில்லை. அவர் விலைபோவதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. 

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டேவிட் வில்லிக்கும் இதே கதிதான். இந்த ஐ.பி.எல் தொடரின்போது, சர்வதேசப் போட்டியில் ஆடும் ஒரே பெரிய அணி இங்கிலாந்துதான். அயர்லாந்து அணியுடனான தொடரில் அவர்கள் பங்கேற்க உள்ளதால், பெரும்பாலான இங்கிலாந்து வீரர்களுக்கு அதிக கிராக்கி இருக்காது. ஜோ ரூட், மோர்கன், ஸ்டோக்ஸ் போன்றோர் ஏலம்போவதை மட்டுமே நிச்சயமாகக் கூற முடியும். விக்கெட் கீப்பர்கள் ஜானி பேர்ஸ்டோ, சேம் பில்லிங்ஸ் ஆகியோரும் ஐ.பி.எல் அணிக்காக தேர்வுசெய்யப்படுவது கடினம்தான். 1.5 கோடி ரூபாய் என்ற அடிப்படை விலை, பௌலர் மார்க் வுட்டின் முதல் ஐ.பி.எல் வாய்ப்புக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்.

1.5 கோடி அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கும் வீரர்களில் சிலருக்கு, அது மிகவும் அதிகமான தொகை. பெரிய அளவில் சாதிக்காத மைக்கேல் க்ளிங்கர், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகியோருக்கு வாய்ப்புகள் குறைவுதான். கிங்ஸ் லெவன் அணிக்காக ஆடியும் பெரிதும் சோபிக்காத கைல் அப்பாட்டுக்கும் அதே அடிப்படை விலை. இந்தத் தொடரில் அவர் தொடர்வதற்கான வாய்ப்பு குறைவே. இவரைப்போல் கடந்த சில சீஸன்களாக சொதப்பிவரும் ஃபால்க்னர், இந்தமுறை அதிர்ச்சிகரமான முடிவைச் சந்திக்கக்கூடும். தேசிய அணியிலும் தன் இடத்தை இழந்துவிட்டார். நடந்துவரும் பிக்பேஷ் தொடரிலும் எந்தத் தாக்கமும் ஏற்படுத்தவில்லை. இதனால் இந்த ஆண்டு ஏலம், அவருக்கு பாதமாக அமையக்கூடும். 

அதேபோல் டெஸ்ட் வீரர்கள் என்ற முத்திரை பதிக்கப்பட்ட வீரர்களும் unsold லிஸ்ட்டில் சேர அதிக வாய்ப்புள்ளது. லட்சுமண், புஜாரா போன்ற இந்திய வீரர்களின் செயல்பாடு, ஏலத்தின்போது சர்வதேச வீரர்கள் விஷயத்திலும் பிரதிபலித்தது. நாதன் லயான், டீன் எல்கர் போன்ற வீரர்களின் பெயர்கள் எப்படியும் கடந்துபோய்விடும். இவர்களை வாங்க, அணிகள் எப்படியும் ஆர்வம் காட்டாது. சொல்லப்போனால், லயானுக்கு அந்த அனுபவம் புதிதாகவும் இருக்காது. ஏற்கெனவே அவரது பெயர் பலமுறை ஏலங்களின்போது புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஏழு ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடும் டாப் டெஸ்ட் பௌலர், இன்னும் ஒருமுறைகூட ஐ.பி.எல் அணிகளால் தேர்வுசெய்யப்பட்டதில்லை. அது இந்தமுறையும் தொடரும்!

அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து பல வீரர்கள் ஏலத்துக்கு பெயர் கொடுத்திருக்கிறார்கள். அவர்களில் ஓரிருவர் மட்டுமே ஏலம்போக வாய்ப்பிருக்கிறது. பிக்பேஷ், தென்னாப்பிரிக்க டி-20 லீக் போன்றவற்றில் விளையாடும் உள்ளூர் வீரர்கள் பலரும் unsold லிஸ்ட்டில் இணைவது உறுதி. பெரும் இந்திய வீரர்கள் சிலரின் பெயர்களும் அந்த வரிசையில் இணையலாம்.