Published:Updated:

கோலிக்கு எதிராக ஒலிக்கும் கலகக்குரல்... அலர்ட் விராட்...! #SAvsIND

கோலிக்கு எதிராக ஒலிக்கும் கலகக்குரல்... அலர்ட் விராட்...! #SAvsIND
கோலிக்கு எதிராக ஒலிக்கும் கலகக்குரல்... அலர்ட் விராட்...! #SAvsIND

கோலிக்கு எதிராக ஒலிக்கும் கலகக்குரல்... அலர்ட் விராட்...! #SAvsIND

கிரீம் ஸ்மித் - சின்னாபின்னமாகிக் கிடந்த தென்னாப்பிரிக்க அணிக்கு இளம் வயதிலேயே கேப்டன் பொறுப்பேற்றவர். தென்னாப்பிரிக்காவின் சக்சஸ்ஃபுல் டெஸ்ட் கேப்டன் எனப் பெயரெடுத்தவர். இப்போது வர்ணனையாளராக இருக்கிறார். ஆனால்,  அவர் ஒன்றும் ஹர்ஷா போக்லே இல்லை. பி.சி.சி.ஐ-யின் கமென்ட்ரி பேனலில் எந்நேரமும் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டுமென்ற அவசியமும் அவருக்கில்லை. சூப்பர் ஸ்டார்களுக்கு ஜால்ரா அடித்தால்தான் பிழைப்பு என்ற நிலையுமில்லை. இந்த இடத்தில் தேவையில்லாமல் ஹர்ஷா போக்லேவை ஏன் இழுத்தீர்கள் என்ற கேள்வி எழலாம்.


2016 டி-20 உலகக் கோப்பையின்போது பி.சி.சி.ஐ-க்கு அறிவுரை சொல்லும் விதத்தில் பேசியதற்காகவே, ஓராண்டுக்கும் மேலாக வர்ணனையாளர்கள் குழுவில் இருந்து போக்லே விலகி இருக்க வேண்டியிருந்தது. இன்றும் கூட அவரால், முன்புபோல மைதானத்துக்குள் சென்று பழையபடி Post match presentation ceremony நடத்த முடியாது. அதனால்தான், அவர் `பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்’ என்ற ரேஞ்சில் விமர்சனம் செய்கிறார். ஆனால், ஸ்மித் வெளிநாட்டவர். எதைப் பற்றியும் கவலைப்படாதவர். ஆஸி முதல் இன்னிங்ஸில் 434 ரன்கள் அடித்தபோதே கவலைப்படாதவர். அதனால்தான் அவர் சொன்ன,  ``இந்தியாவின் நீண்டநாள் கேப்டனுக்கான பதில் விராட் கோலிதானா எனத் தெரியவில்லை’’ என்பது வேலிட் பாயின்ட்டாகத் தெரிகிறது. அது கிரிக்கெட் நிபுணர்களின், விமர்சகர்களின் குரலாக எதிரொலிக்கிறது. 

ராமச்சந்திரா குஹா... கிரிக்கெட் நிபுணர். உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பி.சி.சி.ஐ-யின் நிர்வாகக் கமிட்டியில் பணியாற்றியவர்.  ஆதாயம் தரும் இரட்டைப் பதவியில் ஒரே நபர் நீடிப்பதை எதிர்த்தவர். குழுவாக பணிபுரியும் இடத்தில் சூப்பர் ஸ்டார் ஆராதனை கூடாது என்றவர். கடந்த 2016 மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலியின் டிரைவ்களைப் பார்த்து, `என் ஆல் டைம் இந்தியா லெவன் அணியில் இருந்து என் பால்யகால நாயகன் குண்டப்பா விஸ்வநாத்தைத் தூக்கிவிட்டு, விராட் கோலியைச் சேர்க்கிறேன்’ என்று ட்வீட் செய்தவர். இன்று விராட் கோலிக்கு எதிராக பக்கம் பக்கமாக கட்டுரை தீட்டியிருக்கிறார். 

`கொல்கத்தா டெலிகிராப்’ பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரையின் சில வரிகள், இந்திய கிரிக்கெட் வட்டாரத்தை உலுக்கி எடுத்துள்ளது.  `அரசியல், கல்வி, வியாபாரம், விளையாட்டு என இந்தியாவில் எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், சாதனைகளுக்கும் குணாதிசயத்துக்கும் முடிச்சுப் போடப்படுகிறது. இது ஓர் அமைப்பில் தனிநபரின் ஆதிக்கத்துக்கு வழி ஏற்படுத்திவிடுகிறது. களம், களத்துக்கு வெளியே இரண்டிலும் கோலி கவர்ந்திழுக்கும் தன்மைவாய்ந்தவர். பி.சி.சி.ஐ நிர்வாகக் கமிட்டியில் பணிபுரிந்த நான்கு மாதங்களில் கோலியின் ஆதிக்கம் நீக்கமற நிறைந்திருப்பதைப் பார்த்தேன். கேபினட் அமைச்சர்கள் பிரதமர் நரேந்திர மோடியைத் தொழுவதைவிட, பி.சி.சி.ஐ அதிகாரிகள் கோலிக்கு பல மடங்கு மரியாதை அளிக்கின்றனர். கேப்டனின் கட்டுப்பாட்டுக்குள் வராத தேசிய கிரிக்கெட் அகாடமி மற்றும் போட்டி அட்டவணை தயாரிக்கும் விஷயத்திலும்கூட கோலிக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இதுநாள்வரை ஊழலும் குடும்ப ஆதிக்கமும்தான் இந்திய கிரிக்கெட்டை பீடித்துக்கொண்டிருந்தது. இப்போது, மூன்றாவதாக சூப்பர் ஸ்டார் ஆராதனை அந்த வரிசையில் இணைந்துள்ளது’ என காட்டத்துடன் குறிப்பிட்டுள்ளார். (சூப்பர் ஸ்டார் ஆராதனைகுறித்து தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம்). 

ஒரேயொரு டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்வி. விராட் கோலிக்கு பல பாடங்களைக் கற்றுக்கொடுத்துவிட்டது. ஆயிரம் ஆயிரம் விமர்சனத்துக்கு வழிவகுத்துள்ளது. `Skipper of a series - losing side’ முத்திரை குத்தப்பட்டுவிட்டது. அதைவிட... ``இது ஆரம்பம்தான். கோலி சுதாரிக்கவில்லை எனில்...’’ என எச்சரிக்கிறார் கிரீம் ஸ்மித். தென்னாப்பிரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் சூப்பர் ஸ்போர்ட் சேனல் நடத்திய நிகழ்ச்சியில் சுனில் கவாஸ்கர், ஜிம்பாப்வே முன்னாள் பெளலர் பொமி பங்வா, கிரீம் ஸ்மித் மூவரும் பேசினர் என்றாலும், கவாஸ்கர் பேசியது கிரிக்கெட் உலகில் வைரலாகவில்லை. அவர் வழக்கம்போல பூசி மெழுகிக் கொண்டிருந்தார். ஆனால், ஸ்மித் பேசியதுதான் இன்று டிரெண்டிங். காரணம், அதில் உண்மையிருந்தது. 

``விராட் கோலி தன் இடத்தில் இருந்து பார்த்தால், மற்ற வீரர்கள் அவருக்கு ஒரு படி கீழே இருப்பதாகத்தான் தோன்றும். அதற்காக அவர் கோபப்படுவது தவறு. மற்ற வீரர்களின் இடத்தில் இருந்து அவர்களின் தரத்தை உயர்த்துவதைப் பற்றி அவர் சிந்திக்க வேண்டும். சில நேரங்களில் களத்தில் வெளிப்படுத்தும் சில உணர்ச்சிகள், அணிக்கு எதிர்மறையான முடிவுகளைத் தரும். நுட்ப ரீதியாக கோலி திறமையானவர். ஆட்டத்தை நன்கு புரிந்துவைத்திருக்கிறார். அதேநேரத்தில் அவர், தன்னிடம் மனசுவிட்டு பேசக் கூடிய, தன்னை சிந்திக்க வைக்கக்கூடிய, வித்தியாசமான ஐடியாக்களை தரக்கூடிய, சில நேரங்களில் தன் கருத்துடன் முரண்படக் கூடிய, கோபமாகவோ ஆக்ரோஷமாகவோ அல்லாமல் அதேநேரம் தன்னை யோசிக்க வைக்கக்கூடிய, சாத்தியக்கூற்றை ஆராயத் துாண்டும் ஒருவரை தன்னைச் சுற்றி வைத்திருப்பது நல்லது. இதுதான் ஒரு நல்ல தலைவனாக உதவும்’’ என்றார் ஸ்மித்.

தன் முடிவில் முரண்படுகிறார் என்பதற்காகவே அனில் கும்ப்ளேவைத் தூக்கிவிட்டு, ரவி சாஸ்திரியை வேண்டி விரும்பி பயிற்சியாளராக்கினார் கோலி. ரவி சாஸ்திரியும் பக்காவாக பஜனை செய்கிறார். `முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் ரஹானேவை ஏன் தேர்வுசெய்யவில்லை’ என ஊரெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க, ``ஒருவேளை முதல் டெஸ்ட்டில் ரஹானேவைத் தேர்வுசெய்து அவர் ரன் எடுக்காமல் இருந்திருந்தால், ஏன் ரோஹித் ஷர்மாவைத் தேர்வுசெய்யவில்லை என நீங்கள் கேட்டிருப்பீர்கள்’’ என கோலியின் முடிவுக்கு வக்காலத்து வாங்குகிறார். 

பயிற்சியாளர் பொறுப்புக்கென ஒரு கெத்து இருக்கிறது. ரவி சாஸ்திரியிடம் அது இல்லை. பயிற்சியாளர் என்பவர் கேப்டனுடன் எல்லா நேரத்திலும் உடன்பட வேண்டிய அவசியமில்லை. முரண்படலாம். ரவி சாஸ்திரி எல்லா நேரத்திலும் விராட் கோலியுடன் உடன்படுகிறார். முரண்படுவதே இல்லை. அவர் வெறுமனே விராட் கோலியைப் புகழ்வதற்காக, கோலியின் சொதப்பல் முடிவுகளுக்கு நியாயம் கற்பிப்பிதற்காக நியமிக்கப்பட்டவர். ஸ்மித் சொன்ன சப்போர்ட்டிங் ஸ்டாஃப் நிச்சயம் ரவி சாஸ்திரி இல்லை. ரவி சாஸ்திரி மட்டுமில்லை, ஒட்டுமொத்த சப்போர்ட்டிங் ஸ்டாஃப், ஏன்... பி.சி.சி.ஐ அதிகாரிகளும் கோலி முன் கூனிக்குறுகி நிற்கின்றனர். `இது இந்திய கிரிக்கெட்டுக்கு ஆபத்து’ என்கிறார் ராமச்சந்திர குகா. இதையேதான் ராகுல் டிராவிட்,  ``கோலியின் அணுகுமுறையை இளம் தலைமுறை வீரர்கள் அப்படியே பின்பற்றுவது அச்சுறுத்தலாக இருக்கிறது’’ என நாசூக்காக சொல்லியிருந்தார். 

ஸ்மித், குகா இருவரும் பேட்ஸ்மேன் விராட் கோலியை அணுவளவும் குறைசொல்லவில்லை. கோலியின் கவர் டிரைவ்களில் அவர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் சொக்கிக்கிடக்கிறது. செஞ்சுரியன் டெஸ்ட் போட்டியில் அடித்த 150 ரன்கள் அவர் பெஸ்ட் இன்னிங்ஸில் ஒன்று. ஆனால், ஆரம்பத்தில் இருந்தே அவரது ஆட்டிட்யூட்தான் உறுத்தலாக இருந்தது. வீரனாக இருந்தபோது அந்த ஆட்டிட்யூட் பிரச்னையில்லை. இப்போது இந்திய அணியின் மூன்று ஃபார்மட்டுக்கும் கேப்டன் அவர். வீம்பு பிடிக்காமல் சில முடிவுகளை மாற்றுவது நல்லது. உதாரணமாக... ஒரு ஃபேன்டஸிக்காக எல்லா டெஸ்ட்டிலும் பிளேயிங் லெவனை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ``நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. எங்களால் ஒருபோதும் இப்படி செய்யமுடியாது’’ என கிண்டலடிக்கிறார் தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளெஸ்ஸி.

இத்தனை நாள்களாக கோலியை ஆஹா ஓஹோவெனப் புகழ்ந்தவர்கள் மெள்ள விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றனர். போதாக்குறைக்கு இந்த சீசன் முழுவதும் துணைக்கண்டங்கள் அல்லாத நாடுகளில் அதிக டெஸ்ட் போட்டிகள் அணிவகுத்துள்ளன. தென்னாப்பிரிக்காவில் நடந்ததே அங்கும் நடக்க வாய்ப்புள்ளது. அதற்குள் சுதாரிக்க வேண்டும். சில முடிவுகளை, அணுகுமுறையை மாற்ற வேண்டும். மற்றவர்கள் கருத்துக்கு காது கொடுக்க வேண்டும். இல்லையெனில், இப்படித்தான் ஆளாளுக்கு விமர்சிப்பார்கள். ஏற்கெனவே, பூனைக்கு மணி கட்டிவிட்டார்கள்!

அடுத்த கட்டுரைக்கு