Published:Updated:

சென்னை பயிற்சிஆட்டம்:ரசிகர்களுக்கு தோனி விருந்து!

சென்னை, பிப்.17,2011

சென்னையில் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில், இந்தியா 117 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ##~~##

இப்போட்டியில் 361 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 43.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 243 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

அந்த அணியின் மெக்கலம் 58 ரன்களையும், குப்தில் 38 ரன்களையும் எடுத்தனர். ரைடர் 32 ரன்களை எடுத்தார். ஏனையோர் சொற்ப ரன்களே எடுத்தனர்.

இந்திய தரப்பில் நேஹ்ரா, யுவராஜ், ஹர்பஜன், சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முன்னதாக, இந்தியா தனது இன்னிங்ஸ்சில் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் குவித்தது.

கேப்டன் தோனி ஆட்டமிழக்காமல் 64 பந்துகளில் 108 ரன்கள் விளாசி, சென்னை ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

கம்பீர் 89 ரன்களையும், கோஹ்லி 59 ரன்களையும், ராய்னா 50 ரன்களையும் குவித்து அணியின் ரன் எண்ணிக்கையை வெகுவாக கூட்டினர்.

முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்திலும் இந்தியா அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.