Published:Updated:

தோனி - கோஹ்லி

ஜெயிக்கப்போவது யார்?பு.விவேக் ஆனந்த் , படங்கள்: சு.குமரேசன்

நீண்ட இடைவேளைக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப்பயணம், இந்தியாவில் டி-20, டெஸ்ட், ஒரு நாள்... எனப் பலவிதங்களிலும் கிரிக்கெட் ஜுரத்தைப் பற்றவைக்க இருக்கிறது. அதிலும் தொடர் தொடங்கும் முன்னரே 'கேப்டன்’ பஞ்சாயத்து களைகட்டியிருக்கிறது.   

இந்திய அணி, வங்கதேசத்திடம் தோனி தலைமையிலான ஒரு நாள் தொடரை இழந்ததும்... கோஹ்லி தலைமையில் இலங்கையிடம் டெஸ்ட் தொடரை வென்றதும் அந்தப் பஞ்சாயத்துக்குத் திரி கிள்ளியது. 'விராட் கோஹ்லியையே அனைத்துவிதமான போட்டிகளுக்கும் கேப்டன் ஆக்கிவிடலாம். தோனியிடம் முன்னர் இருந்த ஸ்பிரிட் இல்லை’ என்றெல்லாம் ஹேஷ்யங்கள், அறிவுரைகள் குவிந்தன. இந்தச்  சூழ்நிலையில் காயம் அடைந்த இங்கிலாந்து ராணுவ வீரர்களுக்கான நலநிதி சேகரிக்கும் 20-20 போட்டியில் தோனி விளையாடினார். 'ரெஸ்ட் ஆஃப் வேர்ல்டு’ அணி திரட்டிய 158 ரன்களைத் துரத்தியது தோனி அணி. மாஸ்டர் பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழக்க, கடைசிவரை நிலைத்து நின்ற தோனி பௌண்டரி, சிக்ஸர் என வெளுத்து 38 ரன்கள் விளாசி மூன்று பந்துகள் மிச்சம் வைத்து வெற்றியைத் தேடித் தந்தார். 'மேன் ஆஃப் த மேட்ச்’ தோனி. டாட்! தோனியின் கிரிக்கெட் ஆர்வம் பற்றிய அத்தனை வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி விழ, 'ஒரே கேப்டன்’ கோரிக்கை கிடப்புக்குப் போனது. ஆனால், ஒரு நாள், டி-20 போட்டிகளில் வெற்றி பெற தோனியும் டெஸ்ட் தொடரில் வெற்றிபெற கோஹ்லியும் மெனக்கெடுவார்கள். ஆக, தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் 'கேப்டனாக’ இவர்கள் இருவருமே ஸ்கோர் செய்யவேண்டிய நிலை. கள நிலவரம் என்ன?

தோனி - கோஹ்லி

ஒன் டே: ஒரு நாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி கொஞ்சம் வலுவிழந்தே இருக்கிறது. ஒட்டுமொத்தமாக தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்றாலும், பதற்றச் சூழ்நிலைகளில் ஒட்டுமொத்தமாக நிலைகுலையும் பழக்கம் விட்டபாடு இல்லை. அதிலும் எதிர் அணி கணிக்க  முடியாதபடி அடிக்கடி 'கேம் பிளான்’ மாற்றும் தோனியின் வியூகங்கள் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டி வில்லியர்ஸுக்குப் பெரும் தலைவலி. அதே சமயம் டி வில்லியர்ஸ் ஃபார்முக்கு வந்து சிக்ஸர்களும் பௌண்டரிகளும் வெளுத்தால், எந்த பௌலராலும் அவரைக் கட்டுப்படுத்த முடியாது. 'டி வில்லியர்ஸ் பேட் செய்யும்போது ஃபீல்டிங்கில் துடிப்பாகச் செயல்பட்டு ரன்-அவுட் செய்யக் கிடைக்கும் வாய்ப்பைத் தவறவிடவே கூடாது!’ எனச் சொல்லியிருக்கிறார் தோனி. அது மட்டும் அல்ல, உலகக் கோப்பை, ஐ.பி.எல்., ஆகிய போட்டிகளில் தோனி, டி வில்லியர்ஸை அப்படி அவுட் ஆக்கவும் செய்திருக்கிறார்.டி வில்லியர்ஸைச் சமாளித்தாலே, இந்தியாவுக்குப் பாதி வெற்றிதான்.  ஒரு நாள் போட்டிகளைப் பொறுத்தவரை, இரு அணிகளுக்குமான வெற்றி வாய்ப்பு சதவிகிதம்  50:50..!

டி20: 20-20 போட்டிகள் அறிமுகமான காலத்தில் இருந்தே இந்திய அணிதான் கிங். இதுவரை தென் ஆப்பிரிக்கா, இந்தியாவுடன் விளையாடிய 8 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வென்றுள்ளது. 20 ஓவர் போட்டிகளுக்கான அனைத்து நிமிட அலெர்ட், எதிர் அணியைத் தவறு இழைக்கச் செய்யும் வியூகம், சமயோசித முடிவுகள் ஆகிய அனைத்துத் தகுதிகளும்கொண்ட ஒரே கேப்டன் தோனி. அதோடு டி-20 போட்டிகளில் உலகில் சிறந்த பேட்ஸ்மேன் கோஹ்லி இந்தியாவின் பலம். வரலாறு இந்தியாவுக்குச் சாதகமாக இருந்தாலும் மில்லர், டுமினி, டி வில்லியர்ஸ் உள்ளிட்ட உலகின் அதிபயங்கர அதிரடி வீரர்கள் இருப்பதால், தென் ஆப்பிரிக்காவும் விட்டுக்கொடுக்காது. அதனால், ஆக்ஷன் அட்டகாசம் நிரம்பிய இந்த த்ரில்லர் தொடரில், இந்திய அணிக்குச் சற்றே சாதகமான நிலை இருக்கிறது!  

டெஸ்ட்: தென் ஆப்பிரிக்காவின் பேட்டிங் அரண், ஹாஷிம் அம்லா. தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். ஆசிய மண்ணில் அபாரமாகப் பந்து வீசக்கூடிய  உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர் ஸ்டெயின். 2008-ம் ஆண்டில் இந்திய மண்ணிலேயே இந்திய அணியை ஒரு டெஸ்ட் போட்டியில் 20 ஓவர்களில் 76 ரன்னுக்குள் ஆல் அவுட் ஆக்கியது ஸ்டெயினின் பந்துவீச்சு. வங்கதேசத்துக்கு எதிராக  அறிமுகமான முதல் ஒரு நாள்  போட்டியிலேயே  ஹாட்ரிக் சாதனை படைத்து ஆறு விக்கெட்டுகளைச் சாய்த்தவர் ககிசோ ரபாடா. இவரது பந்துவீச்சை இதுவரை  இந்திய வீரர்கள் எதிர்கொண்டது இல்லை என்பதால், இந்திய பேட்டிங்கைக் குலைக்கும் துருப்புச்சீட்டாக அவரை வைத்திருக்கிறது தென் ஆப்பிரிக்கா. இத்தனை சாதகங்களுடன் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி இருக்கிறது.

இந்தியாவிடம்?

விராட் கோஹ்லியின் 'அக்ரஸிவ்’ கேப்டன்சி மற்றும் உள்ளூர் சாதகங்கள் மட்டுமே. டெஸ்ட் போட்டித் தொடரில் இந்திய அணி சொல்லி அடித்தால், விராட் கோஹ்லி கில்லிதான்!

ஆக, தோனி, கோஹ்லி இடையிலான கேம் ஆரம்பம்!