Published:Updated:

பாயின்ட்ல நீ நின்னா, பங்காளி பயப்படுவான் பாரு... அதான் யுவி! #HBDYuvi

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாயின்ட்ல நீ நின்னா, பங்காளி பயப்படுவான் பாரு... அதான் யுவி! #HBDYuvi
பாயின்ட்ல நீ நின்னா, பங்காளி பயப்படுவான் பாரு... அதான் யுவி! #HBDYuvi

பாயின்ட்ல நீ நின்னா, பங்காளி பயப்படுவான் பாரு... அதான் யுவி! #HBDYuvi

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஏன்... ஜிம்பாப்வே கூட தரமான ஃபீல்டர்களைக் கொண்டிருந்த காலகட்டத்தில், இந்தியாவிலிருந்து ஒருவர் அப்படி வந்துவிட மாட்டாரா என ரசிகர்கள் ஏங்காத நாளில்லை. ஃபீல்டிங்கில் பாகிஸ்தானைப் போல மோசமில்லை என்றாலும், ஜெர்ஸியில் அழுக்குப்பட்டுவிடுமோ என நொந்துகொண்டே, கையில் பந்து வந்தால் மட்டுமே பிடிப்போம் என்கிற ரீதியில்தான் இருந்தது இந்திய அணி. 

ஸ்டம்பைப் பார்க்காமலே, பந்தை த்ரோ செய்வதில் அசாருதீன் கில்லி. பத்துக்கு 9 கேட்ச்களைப் பிடித்திவிடுவார் சச்சின். என்றாலும், இந்திய அணியில் நன்றாக ஃபீல்டிங் செய்யக்கூடியவர் என்று அனைவரும் கைகாட்டியது, அஜய் ஜடேஜா நின்றிருந்த திசையையே! ஒப்பீட்டளவில் பார்த்தால், உலகத்தரம் என்பதில் பாதிக்கும் கீழ்தான் இருந்தது இந்திய அணியின் ஃபீல்டிங். அதன்பிறகு, கொஞ்சம் ஓகே என்றால் தமிழக வீரர் ராபின் சிங் மட்டுமே. ஜடேஜா, ராபின் இருவரின் கதையும், 1999 உலகக்கோப்பையுடன் முடிவுக்கு வந்தது. ஃபிக்ஸிங் பிரச்னையில் சிக்கிச் சின்னாப்பின்னமான அணியை வழிநடத்த, கங்குலி தைரியமாக முன்வந்தார். ஆனாலும், அணியின் முதல் பிரச்னை, நல்ல ஃபீல்டர்கள் இல்லை என்பதே. ஏனென்றால், தலைமைப் பொறுப்பிலிருந்த கங்குலியே சுமாரான ஃபீல்டர்தான்!

இந்த விஷயங்கள் எல்லாம் தலைகீழாக மாறத்தொடங்கிய நாள் அக்டோபர் 7, 2000. யுவராஜ் சிங் என்கிற சிங்கம், கிரிக்கெட் உலகத்துக்குத் தன் பெயரை உரக்க உச்சரித்த நாள்.  ‛இது வேற மாதிரியான இந்திய அணி’ என்று சொல்லாமல் சொன்ன நாள்... கென்யாவுக்கு எதிராக ஏற்கெனவே சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தாலும், யுவராஜின் முதல் போட்டியாகப் பலரும் நினைவில் வைத்திருப்பது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக் அவுட் போட்டியைத்தான்...  காரணம், எதிர்த்து நின்று ஆடிய அணி அப்படி. 

சரியாக அதற்கு ஒரு வருடத்துக்கு முன், சச்சின் தன்னுடைய தந்தையை இழந்து, 1999 உலகக்கோப்பையில் பாதியில் வெளியேறி, மீண்டும் இங்கிலாந்து செல்வதற்குள் இந்தியா, ஜிம்பாப்வே அணியிடம் தோற்றது. அப்போதைய ஃபார்மில் ஆஸ்திரேலியாவிடம் சூப்பர் சிக்ஸில் வெளியேறிய கடுப்பில் இருந்தபோது, சச்சினே மெக்ராத்தை வசைபாடிய தினம் அக்டோபர் 7, 2000. பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்த முதல் போட்டியிலேயே பயப்படாமல் வெளுத்து வாங்கியது மட்டுமல்லாமல், பறந்து பறந்து ஃபீல்டிங் செய்து, டைரக்ட் ஹிட்டில் ரன் அவுட் செய்து ஒட்டு மொத்த இந்தியாவையும் மெய்சிலிர்க்க வைத்தார் யுவி. அன்று தொடங்கிய அவரது வெறியாட்டம், இந்தியாவின் அனைத்து முக்கிய வெற்றிகளிலும் யுவராஜ் சிங் பெயரை பொன்னெழுத்துகளில் பொறித்தது.  

இந்தியாவின் தலைசிறந்த கேப்டனாக கங்குலி விளங்கியதற்கு ஒரே காரணம் அவருடைய தேடல். எப்படியாவது இந்திய அணியைத் தலைநிமிர செய்துவிட வேண்டும் என்று, ஊர் ஊராகச் சென்று, உள்ளூர் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர்களைக் கண்டறிந்து, மாநிலத் தேர்வாளர்களுக்குத் தானே பரிந்துரை செய்து, தனக்கான ஓர் அணியை உருவாக்கினார். யுவராஜ் அந்தத் தேடலின் பரிசு. அதன் பின்பு, யுவராஜுடன் விளையாடிய பல்வேறு வீரர்கள், உதாரணமாக முகமது கைஃப் முதற்கொண்டு அணிக்குள் வர ஆரம்பிக்கவே , இந்திய அணியின் க்ராஃப் பங்குசந்தையைப்போலவே உயர ஆரம்பித்தது. அணியில் புது ரத்தம் பாயத் தொடங்கியது. கங்குலி, டிராவிட், சச்சின், கும்ப்ளே என ஒட்டுமொத்தமாக எல்லோரும் இளைஞர்களின் முன்னால் நாமும் சிறப்பாக ஃபீல்டிங் செய்ய வேண்டுமென மெனக்கிட்டனர். அதில் டிராவிட் பாஸ்! 

ஏறக்குறைய எல்லோருமே டிவியை நிறுத்தியபிறகு, யுவராஜ் சிங் - முகமது கைஃப் இருவரும் நாட்வெஸ்ட் கோப்பையை லார்ட்ஸ் மைதானத்தில் அட்டகாசமாக சேஸ் செய்து முடித்த தினத்தில்தான், சச்சினைத் தாண்டியும் நம்மை சந்தோஷப்படுத்த ஆள் இருக்கிறது என இந்தியர்கள் நம்பத் தொடங்கினர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரை இறுதியில், "catches win matches" என்கிற அடைமொழிக்கு ஆகச்சிறந்த உதாரணமாகத் திகழும், ‛மாடர்ன் ஃபீல்டிங்கின் தந்தை’ என்றழைக்கப்படும் ஜான்ட்டி ரோட்ஸின் விக்கட்டை வீழ்த்த யுவராஜ் அடித்த டைவ் எல்லாம், இப்போது நினைத்தாலும் சிலிர்க்கும்!

பல வருடங்களுக்குப் பின்பு, இந்தியா பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செல்ல, அங்கும் தன்னுடைய தோழன் தோனியுடன் சேர்ந்து பாகிஸ்தான் பௌலர்களை வெளுத்துவாங்கியது... 2007 உலகக்கோப்பையில் வங்கதேசத்திடம் தோற்று, இதன்பின் என்ன இருக்கிறது இந்த அணியில் என்று நொந்துப்போன ரசிகனை, அதே ஆண்டு டர்பன் மைதானத்தில் முதல் இருபது ஓவர் உலகக்கோப்பையில் ஆறு சிக்ஸர்கள் பறக்கவிட்டது... அந்த உலகக் கோப்பையை வெல்ல காரணகர்த்தவாகத் திகழ்ந்தது என யுவி இந்திய கிரிக்கெட்டுக்குச் செய்தது ஏராளம். எப்போதெல்லாம் இந்திய ரசிகனின் மனம் நோகிறதோ, அப்போதெல்லாம், "நான் இருக்கிறேன்!" என்று சொல்லாமல் சொல்லிய வீரன்.

ஏப்ரல் 2, 2011-ல் இந்தியா உலகக்கோப்பையை வென்றிருக்கலாம். ஆனால், மார்ச் 24-ம் தேதியே, யுவராஜ் உலகக்கோப்பை வென்றதுக்கும் மேலான சந்தோஷத்தைக் கொடுத்துவிட்டார். 2003 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் பெற்ற தோல்வி, கும்ப்ளே தலைமையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் சிட்னி டெஸ்ட்டில் பெற்ற கசப்பான சம்பவம் என எல்லாவற்றுக்கும் ஒன்று சேர்த்து, அகமதாபாத்தில் நடந்த காலிறுதி ஆட்டத்தில், ஒட்டுமொத்தமாக கணக்குத் தீர்த்தார் யுவராஜ். சேஸிங் செய்வதில் இந்தியா கில்லியாக இருந்தாலும், காம்பிர், சச்சின் போன்றவர்கள் அந்தப் போட்டியில் அடித்தளம் அமைத்தாலும், ஆட்டத்தை முடிக்கக் கூடிய வீரர்களில் ஒருவரான தோனி சோபிக்காமல் போக, ரத்தம், வியர்வை என உடலின் வலிகளையும் வேதனைகளையும் தாங்கிக்கொண்டு, அதற்கு முன் ஹாட்ரிக் அடித்த அணியை, யுவராஜ் தனியாளாக வெளியேற்றி விட்டு கத்திய கத்தில், ஒட்டுமொத்த உலகமும் எழுந்து நின்று ஆர்ப்பரித்தது. அடுத்த போட்டியிலேயே டக் அடித்தாலும், பௌலிங் மூலம் பாகிஸ்தானை நிலைகுலையச் செய்து ‛என்றுமே நான் ராஜா’ என நிரூபித்தார் யுவி. 

யார் யாரோ என்னென்னவோ சொல்லிக்கொண்டிருக்க, சரியாக உலகக்கோப்பை தொடங்குவதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே, ‛இந்தக் கோப்பையை நாங்கள் சச்சினுக்காக வெல்வோம்’ என்று முன்மொழிந்தவர் யுவராஜ். சொன்னதைப்போலவே, உயிரைக்கொடுத்தே வெற்றியைத் தேடித்தந்தார். கிரிக்கெட்டில் மட்டுமல்லால் புற்றுநோயையும் தன்னுடைய அசாத்திய மனவலிமையுடன் வென்றெடுத்த யுவராஜ் சிங், இளமைப் பொங்கும் இந்தியாவின் முதல் முகப்புத் தோற்றம்!

மீண்டும் வாருங்கள் யுவி. உங்களுக்காக பாயின்ட் திசை காத்திருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு