Published:Updated:

தில்லாலங்கடி வேலை இலங்கைக்கு புதிதல்ல... காற்று மாசுபாடு டிராமாலாம் சும்மா! #INDvsSL

மு.பிரதீப் கிருஷ்ணா
தில்லாலங்கடி வேலை இலங்கைக்கு புதிதல்ல... காற்று மாசுபாடு டிராமாலாம் சும்மா! #INDvsSL
தில்லாலங்கடி வேலை இலங்கைக்கு புதிதல்ல... காற்று மாசுபாடு டிராமாலாம் சும்மா! #INDvsSL

டெல்லி டெஸ்ட் போட்டியில் இலங்கை வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாட, “டெல்லியையும் இந்தியாவையும் நினைத்துக் கேவலப்படவேண்டும்" என்று பலரும் பொங்கிக்கொண்டிருக்கிறார்கள். டெல்லி காற்றில் அவ்வளவு மாசு. இரு இலங்கை வீரர்கள் சுவாசிக்க முடியவில்லையென்று களத்தைவிட்டு வெளியேற, களத்தில் எக்கச்சக்க கச்சேரி. காற்று மாசுபாடு - நிச்சயம், டெல்லிக்குத் தலைக்குனிவுதான். ஆனால், இலங்கை கிரிக்கெட்....? குற்றம் சொல்லத் தகுதியற்ற குற்றவாளி!

ஞாயிற்றுக்கிழமை, டெல்லி காற்றில் கலந்திருந்த PM 2.5, PM 10 எனப்படும் மாசுத்துகள்களின் அளவு முறையே 316, 420 வரை இருந்தது. ரொம்பவே அதிகமாகத்தான் இருந்தது. ஆனால், டெல்லிக்கு இது புதிதல்ல. சில வருடங்களாகவே பனிப்பொழிவைப்போல், மாசுப்பொழிவைக் கண்டுகொண்டுதான் இருக்கிறது. ஆனால், இலங்கை வீரர்கள் செய்தது கொஞ்சம் ஓவர்தான். மைதானத்தில் அமர்ந்திருந்த 15,000 ரசிகர்களில் யாருக்கும் மூச்சுத்திணறல் வரவில்லை. இரண்டு நாள்களாக களத்தில் ஓடிக்கொண்டிருந்த இந்திய கேப்டன் விராட் கோலிக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இவர்களை மட்டும் அந்த மாசு படாதபாடுபடுத்தியதா? 

கொழும்புவும் டெல்லியும் வெவ்வேறு துருவங்களில் இல்லை. இந்தியாவின் க்ளைமேட் அவர்களுக்குப் புதிதுமில்லை. போன மாசம் அமெரிக்கா, கொலம்பியா, கானா நாட்டுச் சிறுவர்கள் இதே டெல்லியில்தான் அண்டர் 17 கால்பந்து உலகக்கோப்பையில் விளையாடிச் சென்றனர். அனைவரும் 17 வயதுச் சிறுவர்கள். 90 நிமிடமும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். எவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்படவில்லை. அப்போதும் டெல்லியில் 'தூய்மை இந்தியா' தொலைந்துதான் போயிருந்தது. இப்போதும்கூட இஷாந்த் ஷர்மா, முகம்மது ஷமியும் எந்தப் பிரச்னையும் இல்லாமல்தானே பந்து வீசிக்கொண்டிருக்கின்றனர். இன்றும்கூட PM 2.5-யின் அளவு 270 வரையும், PM 10 அளவு 333 வரையும் இருந்தது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலும் அதன் அளவு மிக அதிகமாகவே இருந்தது. பின்பு கமேஜ், லக்மல் இருவருக்கு மட்டும் ஏன்....? அது இலங்கையின் கீழ்த்தரமான கிரிக்கெட் யுக்தி. நேற்று டெல்லியில் நடந்ததொன்றும் புதிதல்ல.

2012 டி-20 உலகக்கோப்பை. ஓவர் ரேட் (over rate) குறைவாக இருந்ததால் எச்சரிக்கப்பட்டார் கேப்டன். மீண்டும் எச்சரிக்கப்பட்டால், ஒரு போட்டியில் விளையாடத் தடை. எனவே, இங்கிலாந்துக்கு எதிரான சூப்பர் 8 போட்டிக்கு கேப்டனாக்கப்பட்டார் சங்கக்காரா. ஜெயவர்தனே போட்டியில் ஆடியும், டாஸ் போடச் சென்றது சங்கக்காரா. தடையைத் தடுக்க இப்படி மோசமான யுக்திகளையெல்லாம் கையாண்டுள்ளது இலங்கை. இதுபோன்ற திருட்டுத்தனங்களை மற்ற அணிகளும் செய்யாமல் இருக்க, ஐ.சி.சி விதிமுறைகளைப் பின்னர் மாற்றி அமைத்தது. 

2010 இந்தியா - இலங்கை ஒருநாள் போட்டி. இந்தியா வெற்றி பெற ஒரு ரன் வேண்டும். சேவாக் 99 நாட் அவுட். சேவாக்கின் சதத்தைத் தடுப்பதற்காக வேண்டுமென்றே நோ பால் வீசினார் சூரஜ் ரந்திவ். விளையாடுவது 'ஜென்டில்மேன்ஸ் கேம்'. ஒரு தனிநபரின் சாதனையைத் தடுக்க அவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொள்ளவேண்டுமா? 

இவ்வளவு ஏன்... கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியையே எடுத்துக்கொள்வோம். கடைசி நாளில் வெற்றி இந்தியாவின் வசமிருக்க, டிரா செய்யும் நோக்கில்தான் இலங்கை ஆடியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததும், வெளிச்சம் போதவில்லை என்று குற்றம்சாட்டத் தொடங்கினர் இலங்கை வீரர்கள். வேண்டுமென்றே கோலி, ஷமியிடம் முறைத்துக்கொண்டு நேரத்தைக் கடத்தினர். நினைத்தது நடந்தது. வெளிச்சமின்மை காரணமாக போட்டி நிறுத்தப்பட, தோல்வியிலிருந்து தப்பியது இலங்கை. 

இந்தப் போட்டி நடக்கும் டெல்லி மைதானம் 2009-ம் ஆண்டு கடும் விமர்சனத்துக்குள்ளானது. 83 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தவித்துக்கொண்டிருந்தது இலங்கை. ஆடுகளம் மோசமாக இருப்பதாகவும், மிகவும் பௌன்ஸ் ஆவதாகவும் போட்டிக்கு நடுவிலேயே குற்றம்சாட்டினார் அப்போதைய கேப்டன் சங்கக்காரா. ஆட்டம் கைவிடப்பட்டது. பிட்ச் மோசமாக இருந்தது உண்மைதான். இப்படி பல பிட்ச்களும் மோசமாக இருந்துள்ளன. ஆனால், எந்த அணியும் போட்டிக்கு நடுவே பிரச்னை செய்ததில்லை. இந்த ஆண்டு இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி நடந்த புனே ஆடுகளம்கூட மிகமோசமாகத்தான் இருந்தது. மூன்றரை நாள்களில் ஆட்டம் முடிந்தது. ஆடுகளம் மிகமோசமாக இருந்ததாக ஐ.சி.சி-யே அறிக்கைவிட்டது. ஸ்டீவ் ஸ்மித் போட்டி முடியும்வரை வாய்திறக்கவில்லையே. அதுதானே ஜென்டில்மேன்களுக்கு அழகு.

தங்களின் இந்தக் கேவலமான கேம் பிளானைத்தான் இந்தப் போட்டியிலும் செயல்படுத்தியுள்ளனர் இலங்கை வீரர்கள். கோலியை நிறுத்த முடியவில்லை. 4 விக்கெட்டுக்கு 450-க்கும் மேல் எடுத்துவிட்டது. இப்படியே கோலி 300,400 என டார்கெட் செய்தால்? இந்தியா ஏற்கெனவே 1 போட்டியில் வென்றுவிட்டது. தொடரை வெல்ல டிரா போதும். கோலியின் சாதனைக்கு முக்கியத்துவம் தரப்படலாம்? எப்படிப் பொறுப்பார்கள்? கோலியை எப்படியும் வீழ்த்திவிடவேண்டும். அதற்கு அவரது பொறுமையை இழக்கச்செய்யவேண்டும். 

அடிக்கடி இலங்கை ஃபிசியோ உள்ளேவர, அவர்கள் நினைத்ததுபோலவே கோலி டென்ஷனாகி நடுவரிடம் முறையிட்டார். இலங்கையின் 'சீப்' திட்டத்துக்கு பலன் கிடைக்கத் தொடங்கிவிட்டது. நாடகத்தைத் தொடங்கிவைத்தார் கமேஜ். மூச்சுத்தினறல் நாடகம். 17 நிமிட இடைவெளி. கோலி மட்டுமல்ல அஷ்வினும் பொறுமையிழந்துவிட்டார். உடனே அவுட். நாடகம் மீண்டும் தொடர்கிறது. ரவி சாஸ்திரியும் பொறுமையிழந்து களத்துக்குள் நுழைந்துவிட்டார். கமேஜ் வெளியேற, அந்த இடத்தை நிரப்புகிறார் லக்மல். பந்துவீச மட்டுமல்ல, நாடகத்தைத் தொடரவும்...

லக்மலும் அதை சிறப்பாகவே நடத்துகிறார். இவற்றுக்கு மத்தியில், ஏற்கெனவே சோர்ந்திருந்த கோலி, முழுமையாகப் பொறுமை இழந்துவிட்டார். அதுவரை கொஞ்சமும் பிசிறில்லாமல் ஆடியவர், சாதாரண பந்துகளையும் மிஸ் செய்தார். கவர் ட்ரைவ்களில் துல்லியம் இல்லை. ஃப்ளிக் ஷாட்கள் பந்தை மீட் செய்யவே இல்லை. அப்படி மிஸ் செய்த ஒரு ஃப்ளிக்தான், முச்சதத்தை நோக்கிச் சென்ற அவரது பயணத்தை முடித்துவைத்தது. இலங்கையின் மிஷன் அக்காம்பளிஷ்ட். ஏற்கெனவே, ஸ்கோர் 500-யைத் தாண்டிவிட்டது. நாடகம் அடுத்த கட்டத்தை அடைகிறது.

கமேஜைத் தொடர்ந்து லக்மலும் வெளியேறுகிறார். அந்த நாடகத்தின் ஒரு பகுதியாக 'ரிசர்வ் வீரர்கள்' ஏற்கெனவே உடல்நலக்குறைவு என்ற போர்வையை போர்த்திக்கொள்ள, '10 வீரர்களுடன் ஃபீல்டிங் செய்ய முடியாது' என்று, டீச்சரிடம் கம்ப்ளெய்ன்ட் செய்கிறார் 'க்ளாஸ் ரெப்' சந்திமால். இதற்கு மேலும் பொறுமை காக்கமுடியாத விராட், "நாம் போய் டீல் பண்ணிக்கலாம்.. நீங்க வாங்க, பௌலிங் போடப் போவோம்" என்று சஹா, ஜடேஜா இருவருக்கும் சைகை செய்ய, இலங்கையின் நாடகம் முடிவுக்கு வந்தது.

இரண்டு நாள்களாக இந்தியா பந்துவீசுகிறது. கமேஜ் (25.3 ஓவர்கள்), லக்மல் (21.2) இருவரையும்விட இஷாந்த் (29.3), ஷமி (26) அதிக ஓவர்கள் வீசிவிட்டனர். எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இருவரும் நன்றாகத்தானே இருக்கிறார்கள்? ஏன் இப்படி கேவலமான யுக்திகளை இலங்கை பின்பற்றவேண்டும். இப்படிப் பல போட்டிகள் பல்வேறு பிரச்னைகளால் தடைபட்டுள்ளன. பல்வேறு மோசமான சூழல்களை அணிகள் சந்தித்துள்ளன. ஆனால், எந்த அணியும் இவர்களைப் போல் கீழ்த்தரமாக நடந்துகொண்டதில்லை. இதே வீரர்கள், இதே மைதானத்தில் அடுத்த ஐ.பி.எல் போட்டியின்போது கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் ஆடுவார்கள். காற்றின் நிலமை இதைவிட மோசமாக இருந்தாலும், வாயை மூடிக்கொண்டு அவர்கள் விளையாடுவதை நாம் பார்க்கத்தான் போகிறோம்.

ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் என்பது இலங்கையிடம் கொஞ்சமும் இருந்ததில்லை. ஜெயவர்தனே, சங்கக்காரா போன்ற உலகத்தர வீரர்களின் காலத்திலேயே இல்லாத ஒன்று, இந்தத் தலைமுறையிலா இருக்கப்போகிறது? 'எதிக்ஸ்' என்ற வார்த்தையே சிங்கள அகராதியில் இருக்காது போல!  சுகாதார சீர்கேட்டுக்காக டெல்லி அரசும், மத்திய அரசும் வெட்கப்படவேண்டியதுதான். ஆனால், இலங்கை வீரர்கள்...இதைப் பற்றி வாய்திறக்கத் தகுதியற்றவர்கள்!