Published:Updated:

சச்சின் சாதனையைக் கோலி, ஸ்மித் இருவரில் யார் முதலில் முறியடிப்பார்? #VikatanExclusive

சச்சின் சாதனையைக் கோலி, ஸ்மித் இருவரில் யார் முதலில் முறியடிப்பார்? #VikatanExclusive
சச்சின் சாதனையைக் கோலி, ஸ்மித் இருவரில் யார் முதலில் முறியடிப்பார்? #VikatanExclusive

80's, 90's கிட்ஸ்களைப் பொறுத்தவரையில் கிரிக்கெட் என்றாலே சச்சின்தான்! சச்சினின் ஸ்ட்ரெய்ட் ட்ரைவ்களையும் லேட் கட் ஷாட்களையும் ஆராதிக்கும் பக்குவம் இல்லாத காலத்திலும்கூட அவரை உச்சிமுகரக் காரணம் அவர் ரன் மெஷினாகத் திகழ்ந்ததும், சாதனை மேல் சாதனைகள் புரிந்தது கொண்டிருந்ததும்தான். பிராட்மேன், கவாஸ்கர், விவியன் ரிச்சர்ட்ஸ் என உலகம் வியந்த பேட்ஸ்மேன்கள் வசமிருந்த அத்தனை சாதனைகளையும் தன் பெயரில் ரெஜிஸ்டர் செய்துகொண்டிருந்தார். பேட்டிங்கின் சாதனைகளில் 90 சதவிகிதம் உடையப்பட்டுவிட, புதிய சாதனைகள் படைக்கத்தொடங்கினார். "Sachin become the first man to score 10,000 runs in ODI's", "Sachin become the first man to score 12,000 runs in tests", "Sachin become the first man to score double century in ODI's", "Sachin become the first man to score 100 hundreds"....இப்படிப் பல சாதனைகளின்  'முதல்'வன் - சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்!

பேட்டிங்கைத் தாண்டி சச்சினின் அடையாளமாக அந்த 80's, 90's கிட்ஸ்களுக்கு இருந்தவை, 2 பிராண்டுகள் - பூஸ்ட், MRF. விளம்பரத்தில் நடித்ததால் பூஸ்டும், அவர் பேட்டில் ஒட்டியிருந்ததால் MRF-யும் அவரது கம்பெனிகளாகவே பதிந்திருந்தன. லாரா, ஸ்டீவ் வாஹ் போன்றவர்களும் அதைப் பயன்படுத்தியிருந்தாலும், 'Genius' என்ற MRF பேட் வைத்திருந்தது சச்சின் மட்டுமே. அதனால், அதற்கு மட்டுமே மவுசு. தெருவில் கிரிக்கெட் விளையாடுவதற்குக்கூட MRF Genius பேட்தான் வாங்குவார்கள். அதில் அடித்தால்தான் சச்சின் மாதிரி ரன் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை. MRF-க்கு அன்று அப்படியொரு மதிப்பு. நடுவில் தோனியின் எழுச்சியால் Rbk அந்த இடத்தைப் பிடித்துவிட, இப்போது மீண்டும் தன் மதிப்பை மீட்டுவிட்டது MRF Genius. காரணம், சச்சினைப்போல் சாதனைகளை உடைத்துக்கொண்டிருக்கும் சச்சினின் சாதனைகளையும் உடைக்கப் பயணித்துக்கொண்டிருக்கும் விராட் கோலி!

17 மாதங்களில் 6 இரட்டைச் சதங்கள். தொடர்ந்து இரண்டு இன்னிங்ஸ்களிலும் டபுள் செஞ்சுரி. 202 ஒருநாள் போட்டிகளில் 32 சதங்கள், வெறும் 265 போட்டிகளில் 52 சர்வதேச சதங்கள் என வேற லெவலில் பயணித்துக்கொண்டிருக்கிறார். டெஸ்ட், ஒருநாள் என இரண்டு ஃபார்மட்களிலும் கோலோச்சினார் சச்சின். கோலி அந்த இரண்டோடு, டி-20யிலும் தனி ராஜாங்கம் நடத்திவருகிறார். டி-20 ஃபார்மட்டில் கோலியைப் போன்ற கன்சிஸ்டென்சி வேறு எந்த வீரரிடமும் இல்லை. ஒருநாள் போட்டியில் அவருக்கு டஃப் கொடுப்பது டிவில்லியர்ஸ், ஆம்லா மட்டுமே. ஆனால், இருவரும் வெகுகாலம் ஆடப்போவதில்லை என்பதால், ஒருநாள் போட்டிகளில் கோலி இனி 'ஒன் மேன் ஷோ' நடத்துவார். ஆனால்...

விராட் கோலி vs ஸ்டீவ் ஸ்மித்

டெஸ்ட் போட்டிகளில் நிலைமை அப்படியல்ல. வில்லியம்சன், ஜோ ரூட் இருவரும் கோலிக்கு டஃப் கொடுக்கிறார்கள். அவர்களைவிடவும் கோலி கொஞ்சம் சீராகச் சென்றுகொண்டிருப்பது பாசிட்டிவ். ஆனால்.... கோலியை விடவுமே டாப் கியரில் பறக்கிறார் ஸ்டீவ் ஸ்மித். கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலிய கேப்டனை டெஸ்ட் போட்டிகளில் கட்டுப்படுத்த எவராலும் முடியவில்லை. அப்படியொரு ஃபார்ம். போட்டிக்குப் போட்டி வேற லெவலை அடைந்துகொண்டிருக்கிறார். சச்சினின் சாதனைகளை முறியடிக்க கோலி நான்காவது கியரில் பயணித்தால், ஸ்மித் போவது ஐந்தாவது கியர்!

இருவருக்கும் பெரியளவு வயது வித்தியாசமில்லை. ஸ்மித் 28, கோலி 29. வெகுவிரைவாக 5,000 டெஸ்ட் ரன்களைக் கடந்துவிட்டனர். 20 சதங்களுக்கு மேலும் அடித்துவிட்டனர். பார்த்தால், சச்சினின் சாதனை எட்டும் தூரத்தில் இருப்பதுபோலவே தெரிகிறது. இருவரில் சச்சினின் சாதனையை முதலில் முறியடிப்பது யார்? அப்படி முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது எனில், எப்போது முறியடிப்பர்? கிரிக்கெட்டும் கணிதமும் கலந்த அலசல்...

பி.கு 1: இவை ஆரூடம் அல்ல. இப்படியும் நடக்கலாம் என்று கணிதம் மூலம் கணிக்கிடப்பட்ட projection மட்டுமே.

பி.கு 2: டெஸ்ட் போட்டிகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது

பி.கு 3: இந்தியா - இலங்கை அணிகள் ஆடும் மூன்றாவது டெஸ்ட் போட்டியும், இரண்டாவது ஆஷஸ் போட்டியும் கணக்கில் கொள்ளப்படவில்லை. இந்த ஆய்வு முழுக்க முழுக்க அதற்கு முந்தைய போட்டிகள் வரையிலான ரெக்கார்டுகளை வைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோலிக்குப் பாதகமாகும் இன்னிங்ஸ் வெற்றிகள்

தொடக்கத்தில் டெஸ்ட் போட்டிகளில் தடுமாறிய விராட், இப்போது டாப் ஃபார்மில் இருக்கிறார். ஸ்மித் பற்றிச் சொல்லவே தேவையில்லை. இருவரில் யார் முதலில் சச்சினை நெருங்குவார்கள், எப்போது 52 சதங்கள் அடிப்பார்கள், சச்சினின் 15,931 ரன்களை எத்தனையாவது போட்டியில் முறியடிப்பார்கள் போன்றவற்றைக் கணக்கிட வேண்டும். இவர்களின் சராசரியையும், விளையாடியுள்ள போட்டிகளையும் வைத்து மட்டுமே அதைக் கணக்கிட முடியாது. பொத்தாம்பொதுவாக, ‛50 மேட்ச்ல 5,000 ரன்னா, 160 மேட்ச்ல 16,000 ரன்’ என்று சொல்லிவிட முடியாது. காரணம், இருவரும் வெவ்வேறு நாட்டவர்கள் என்பதைத் தாண்டி, வெவ்வேறு வகையான கிரிக்கெட் ஆடும் நாட்டவர்கள். புரியவில்லையா?

இதுவரை 57 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்மித், 105 இன்னிங்ஸ்களில் பேட் செய்துள்ளார். அவரை விட ஐந்து போட்டிகள் கூடுதலாக 62 போட்டிகளில் ஆடியுள்ள கோலி, 104 இன்னிங்ஸ்களில் மட்டுமே பேட்டிங் செய்துள்ளார். எப்படி? இங்குதான் இரு அணிகளின் கேம்பிளான்களும் முக்கியத்துவம் பெறுகிறது. எதிரணி ஃபாலோ ஆன் ஆனாலும், ஆஸ்திரேலியா பெரும்பாலும் அதைத் தவிர்த்துவிடும். இரண்டாவது இன்னிங்ஸ் பேட் செய்து, டார்கெட் செட் செய்யும். நான்காவது இன்னிங்ஸில் பேட் செய்வதை அவர்கள் விரும்புவதில்லை. (2001 கொல்கத்தா டெஸ்ட் கண்முன் வந்துபோகலாம்!) உதாரணமாக, தற்போது நடந்துகொண்டிருக்கும் இரண்டாவது ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்துக்கு ஃபாலோ ஆன் கொடுத்திருக்கலாம். ஆஸ்திரேலியா அதைச் செய்யவில்லை. இந்தியா அப்படியல்ல. அநேக போட்டிகளில் இந்தியா எதிரணிக்கு ஃபாலோ ஆன் தந்துவிடும். இந்த இரு அணிகளின், வித்தியாசமான மைண்ட் செட்டும்தான் அந்த இரு வீரர்களிடையே இருக்கும் இன்னிங்ஸ் வித்தியாசத்துக்குக் காரணம்.

கோலி ஆடியுள்ள 62 டெஸ்ட் போட்டிகளில், இந்தியா 10 மேட்ச்களில் இன்னிங்ஸ் வெற்றிபெற்றுள்ளது. ஆக, அந்த 10 இன்னிங்ஸ்களும் கோலிக்கு loss. ஸ்மித் பங்கேற்ற 57 போட்டிகளில், ஆஸ்திரேலியா 4 முறை இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. பல ஆட்டங்களில் எதிரணி ஃபாலோ ஆன் ஆகியும், ஆஸ்திரேலியா அணி ஃபாலோ ஆன் கொடுக்கவில்லை. அதனால் ஸ்மித் மீண்டும் பேட் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. ஆஸ்திரேலியாவின் அணுகுமுறையால் ஸ்மித் ஆட முடியாமல் போனது 4 இன்னிங்ஸ்கள் மட்டுமே. அதனால், இனிவரும் போட்டிகளிலும் கோலியின் இன்னிங்ஸ் விகிதம், ஸ்மித்தை விடக் குறைவாகவே இருக்கும். இது கோலிக்குப் பெரிய பின்னடைவு. இதுவரை ஆடிய இன்னிங்ஸ்படியே இனியும் அமையும் எனக் கருத்தில் கொண்டால், 100 போட்டிகளில் ஸ்மித் 184 இன்னிங்ஸ்களும், கோலி 168 இன்னிங்ஸ்களும் ஆடியிருப்பர். இந்தக் கணக்கீடும் அவசியம்.

ஸ்மித்தின் ஆதிக்கத்தைக் குறைக்கும் சராசரி

ஸ்மித், கோலி இருவரின் டெஸ்ட் சராசரியும் முறையே 61.23, 51.82. பொதுவாக, மொத்த ரன்களிலிருந்து, ஆடிய இன்னிங்ஸ்களை வகுத்தே சராசரி கணக்கிடப்படுகிறது. கிரிக்கெட்டில், வீரர்கள் அவுட் ஆகும் முன்பே போட்டிகள் முடிவதால், அவர்கள் 'நாட் அவுட்'டாக இருந்த இன்னிங்ஸ்கள், மொத்த இன்னிங்ஸ்களிலிருந்து கழிக்கப்பட்டு சராசரி கணக்கிடப்படும். ஆனால், இந்த அனாலசிஸுக்கு, இப்படியான சராசரியைப் பயன்படுத்துவது சரியாக இருக்காது. ஏனெனில், இனிவரும் பல போட்டிகளிலும் இவர்கள் அவுட்டாகாமல் இருக்கக்கூடும். 

அதனால், மொத்த ரன்களை, மொத்த இன்னிங்ஸ்களிலிருந்து வகுத்து புதிய சராசரி கணக்கிடப்பட்டுள்ளது. அப்படிக் கணக்கிடும்போது, ஸ்மித்தின் சராசரி, 52.49. கோலியின் சராசரி 47.84. ஸ்மித் (15), கோலியைவிட (8) அதிக போட்டிகளில் அவுட்டாகாமல் இருந்துள்ளதால், அவர்களின் சராசரிகளுக்கு இடையிலான வித்தியாசம் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்தச் சராசரியைக் கொண்டுதான் அனாலசிஸ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சச்சினின் சாதனையை முறியடிப்பது எப்போது?

கடந்த  இரண்டு ஆண்டுகளாக கோலி பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார். 2016-லிருந்து இதுவரை 8 சதங்கள். அவற்றுள் 5 இரட்டைச் சதங்கள் என டெஸ்ட் போட்டிகளிலும் ஸ்பெஷலிஸ்ட் ஆகிவிட்டார். ஸ்மித் நான்கு ஆண்டுகளாகவே அதிரடிதான். 2014 முதல் 2016 வரை ஒவ்வோர் ஆண்டும் 1,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இந்த ஆண்டு மட்டும் கொஞ்சம் மந்தம். சதங்கள் அதே அளவில் அடித்திருந்தாலும், ரன் குவிப்பு குறைந்துள்ளது. இருவரும் கடந்த இரண்டு ஆண்டு ஃபார்மில் (2016,2017) நீடித்தால் எப்போது சச்சினின் சாதனையை நெருங்குவார்கள்?

ஸ்மித் இந்த 2 ஆண்டுகளில் 33 இன்னிங்ஸ்களில் 1921 ரன்கள் எடுத்துள்ளார். அடித்த சதங்கள் 8. கோலி 32 இன்னிங்ஸ்களில் 1981 ரன்கள். 8 சதங்கள். நாட் அவுட்கள் கணக்கில் கொள்ளாமல் இருவரின் சராசரியும் முறையே, 58.21 மற்றும் 61.91. அதேபோல், இந்த இரண்டு ஆண்டுகளில், 1 சதம் அடிக்க ஸ்மித்துக்கும், கோலிக்கும் தேவைப்பட்டது முறையே 4.125 மற்றும் 4 இன்னிங்ஸ்கள். இதே வேகத்தில் இவர்கள் இனிவரும் ஆண்டுகளிலும் ஆடினால்...

சச்சினின் 15,921 ரன்களைக் கடக்க ஸ்மித்துக்கு இன்னும் 179 இன்னிங்ஸ்கள் தேவைப்படும். முந்தைய இன்னிங்ஸ் கணக்கீட்டின்படி, அதற்கு அவர் 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கவேண்டும். அப்படிப்பார்த்தால், ஸ்மித் தன் 154-வது போட்டியில் சச்சினின் ரன் சாதனையை முறியடிப்பார். 52-வது சதம் அடித்து சச்சினின் சாதனையை முறியடிக்க அவருக்கு 128 இன்னிங்ஸ்கள் (70 போட்டிகள்) தேவை. அதாவது, ஸ்மித் தன் 127-வது போட்டியிலேயே அந்தச் சாதனையை முறியிடிக்கக்கூடும். 

கோலி, சச்சினின் ரன் கணக்கைத் தொட இன்னும் அவருக்கு 10,946 ரன்கள் தேவை. கடந்த இரண்டு ஆண்டு வேகத்தில் பயணித்தால், அந்த இலக்கை எட்ட அவருக்கு 177 இன்னிங்ஸ்கள் தேவைப்படும். ஸ்மித்தை ஒப்பிடும்போது 2 இன்னிங்ஸ்கள் குறைவுதான். ஆனால், இன்னிங்ஸ் விகிதப்படி பார்த்தால், இந்த 177 இன்னிங்ஸ்கள் பேட்டிங் செய்ய, கோலி 105 போட்டிகளில் ஆடவேண்டியிருக்கும். இது ஸ்மித்தைவிட அதிகம். ஆக, கோலி தன் 167-வது போட்டியில் சச்சினை முந்தக்கூடும். சதங்களைப் பொறுத்தவரையில், அவருக்கு இன்னும் 33 சதங்கள் தேவை. 4 இன்னிங்ஸ்களுக்கு ஒரு சதம் என இப்போது அடித்துவருவதால், தன் 141வது போட்டியில், கோலி சச்சினைத் தாண்டுவார்.

எல்லா இடங்களிலும் இந்த ஃபார்ம் சாத்தியமா?

இந்த விஷயங்களை ஈசியாகச் சொல்லிவிடலாம். ஆனால், இவை சாத்தியமா என்று அலசுவதும் அவசியம். இந்த ஃபார்மிலேயே இவர்கள் தொடர்ந்து ஆடிட முடியுமா. எத்தனை ஆண்டுகள் இவர்களால் ஆட முடியும். இவற்றையும் பரீசிலிப்போம்...

இந்த இரண்டு ஆண்டுகளில் கோலி 4 போட்டிகளை மட்டுமே ஆசியாவுக்கு வெளியே ஆடியுள்ளார். அதுவும் வெஸ்ட் இண்டீஸுடன். மற்ற போட்டிகள் அனைத்தும் இந்தியாவிலும், இலங்கையிலுமே ஆடப்பட்டவை. ஆனால், வரும் ஆண்டுகளில் இந்திய அணி பல போட்டிகளை அந்நிய மண்ணில்தான் எதிர்கொள்கிறது. அதனால், "கோலி அந்நிய மண்ணில் ஜொலிப்பாரா?" என்ற கேள்வி வலுவாக எழுகிறது. 

ஆனால், இதற்கு முன்பு  தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆடுகளங்களிலும் அவர் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். 3 இடங்களிலும் 50-கும் மேல் சராசரி வைத்துள்ளார். சதங்கள் அடித்துள்ளார். குறைந்த போட்டிகளிலே ஆடினாலும் சோபித்துள்ளார். அதனால் அவரது பர்ஃபாமன்ஸில் பெரிய வீழ்ச்சி இருக்காது என நம்பலாம். ஒரு பிரச்னை - இங்கிலாந்து! அங்கு சோபிக்கத் தவறலாம். ஸ்மித் - இந்த 4 ஆண்டுகளில் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் ஆடிவிட்டார். அனைத்து ஆடுகளங்களிலும் தன்னை நிரூபித்துவிட்டார். அதனால் இங்கு கேள்வியே இல்லை.

எத்தனை ஆண்டுகள்...? எத்தனை போட்டிகள்..?

கிரிக்கெட் அரங்கினுள் சச்சின் காலடி வைத்தபோது அவரது வயது 16. 24 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடினார். 200 போட்டிகளில் அவர் விளையாடக் காரணமே அதுதான். அதே அளவு போட்டிகளில் இவர்கள் இருவராலும் விளையாட முடியுமா எனில்? நிச்சயம் முடியாது. கோலி 22 வயதில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். ஸ்மித் 21 வயதில்... இந்த வகையிலேயே இருவரும் சச்சினை விட சுமார் 5 ஆண்டுகள் பின்தங்குகின்றனர். அதுமட்டுமின்றி, விளையாடப்படும் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கையும் முன்பைவிட இப்போது குறைந்துள்ளது.

அப்போதெல்லாம் இந்திய அணி ஆண்டுக்கு, குறைந்தபட்சம் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும். 15 (2008), 16 (2002) போட்டிகளில் விளையாடியதும் உண்டு. அதனால்தான், அடிக்கடி காயமடைந்தபோதும் சச்சினால், 24 ஆண்டுகளில் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடிந்தது. இன்று நிலைமை அப்படியல்ல. டி-20 யுகம். ஒவ்வொரு சுற்றுப்பயணத்திலும் டி-20 தொடர்கள் இடம்பெற்றுவிடுகின்றன. 2 ஆண்டுக்கு ஒருமுறை டி-20 உலகக்கோப்பை. போதாக்குறைக்கு ஐ.பி.எல், பிக்பேஷ் தொடர்கள் வேறு. இதனால் டெஸ்ட் ஃபார்மட்டுக்கு நஷ்டம்தான். இன்று ஓர் அணி, ஆண்டுக்கு 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே மிகப்பெரிய விஷயம். 

ஸ்மித், கோலி இருவருக்கும் வயது முறையே 28,29. சச்சின் ஓய்வு பெற்றபோது அவருக்கு 40 வயது 6 மாதங்கள். ஒருவேளை ஸ்மித், கோலி இருவரும் 40 வயது வரை கிரிக்கெட் ஆடினாலும் அதிகபட்சம் 170-180 போட்டிகள்தான் விளையாட முடியும். இருவரும் தொடர்ச்சியாக அனைத்து ஃபார்மட்களிலும் ஆடுவதால், அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்க முடியுமா என்பதும் சந்தேகமே. இருவரின் ஃபிட்னஸ் லெவலும் நன்றாக இருந்தாலும், 35 வயதுக்குப்பின் டெஸ்ட் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. உதாரணம், தோனி!

ஒருவேளை ஆடினாலும், இதே ஃபார்மில் ஆட முடியுமா? முடியாது. 24 - 32 வயது வரை ஒரு கிரிக்கெட் வீரன் உச்சகட்ட ஃபார்மில் இருக்கலாம். அதற்குப் பிறகு நிச்சயம் உடல் எனும் இன்ஜின் 'சீஸ்' ஆகத் தொடங்கிவிடும். இப்போதிருக்கும் வேகம் இருக்காது. 31 வயதுக்குப் பின் சச்சினிடம் பழைய ஆட்டம் இல்லை. 1997 முதல் 2004 வரையிலான காலகட்டத்தில் சச்சின் ஆடியது வேற லெவல்! 2003-ல் மட்டுமே காயம் காரணமாக சொதப்பினார். மற்ற 7 ஆண்டுகளிலும் மிகச்சிறப்பாக விளையாடினார். 24 சதங்கள். 6 ஆண்டுகளில் சராசரி 60-கும் மேல். 

அதன்பிறகு, அவரால் கன்சிஸ்டென்டாக விளையாட முடியவில்லை. அடுத்த 9 ஆண்டுகளில், 2 முறை மட்டுமே சராசரி அறுபதைத் தாண்டியது. சச்சினைப் போலவே எதிர்காலத்தில் ஸ்மித், கோலியின் சராசரியும் குறையும். வீரர்கள் எளிதாக லைம்லைட்டுக்கு வந்துவிடும் காலம் இது. தேசிய அணிக்குத் தேர்வாவதற்கான ரூட் ஈசியாகிவிட்டது. இன்று தோனியை ஓய்வு பெறச் சொல்வதுபோல், நிச்சயம் கோலிக்கு எதிராகவும் குரல் எழும். ஸ்டீவ் வாஹையே மதிக்காத ஆஸி நிர்வாகத்துக்கு ஸ்டீவ் ஸ்மித் எம்மாத்தரம்? 

சச்சின் சாதனையை முறியடிக்க முடியாது!

இவற்றையெல்லாம் கருத்தில்கொள்ளும்போது, இந்த 2 ஆண்டு சராசரியை வைத்து, அவர்களின் எதிர்கால ஃபார்மைக் கணக்கிடுவது சரிவாரது என்பதே நிதர்சனம். இவர்கள் டெஸ்ட் வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்ததுபோன்ற மோசமான காலகட்டம், கடைசி காலத்திலும் நிச்சயம் வரும். லாரா, டிராவிட், சச்சின், லட்சுமண், சந்தர்பால் என எந்த டெஸ்ட் ஜாம்பவானும் வீழ்ச்சியைச் சந்திக்காமல் விடைபெறவில்லை! அதனால், இதுவரையிலான அவர்களின் சராசரியைக் கொண்டு, எப்போது அவர்கள் சச்சினின் சாதனையை நெருங்குவார்கள் என்று பார்ப்போம்.

52.49 (மாற்றப்பட்ட சராசரி) என்ற சராசரியில் ஆடினால், ஸ்மித் 15,922 ரன்களை தன் 304-வது இன்னிங்ஸில் எட்டுவார். அது அவரது 165-வது போட்டியாக அமையும். இதுவரை 5 இன்னிங்ஸ்களுக்கு ஒரு சதம் அடித்துள்ளதால், 52-வது சதத்தை தன் 141-வது போட்டியில் எட்டுவார். கோலி 47.84 சராசரியில் ஆடினால், சச்சினை முந்த அவருக்கு இன்னும் 132 போட்டிகள் தேவைப்படும். அதாவது தன் 199 போட்டியில்தான் அவரால், அந்தச் சிறப்பை எட்டமுடியும். ஆனால், 169-வது போட்டியிலேயே அவர் 52 சதங்கள் அடித்துவிடக் கூடும். 

ஆனால், கோலியால் அத்தனை போட்டிகளில் விளையாட முடியுமா என்பது சந்தேகமே. 199 போட்டிகள் ஆடவேண்டுமெனில், அவர் நிச்சயம் 42-43 வயதுவரை ஆடவேண்டியிருக்கும். சச்சினின் 200 போட்டி சாதனையை இவர்கள் இருவராலும், நிச்சயம் தொடக்கூட முடியாது. ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை மாற்றம் விரைவில் நிகழ்ந்துவிடும். ஸ்மித் 40 வயதுவரை (168 டெஸ்ட்) விளையாடினார். பான்டிங் 38-ல் (168 டெஸ்ட்) விடைபெற்றார். மைக்கேல் கிளார்க் 34 வயதிலேயே (115 டெஸ்ட்)  குட்பை சொன்னார்.

ஆஸி அணியில் கேப்டனாக இருப்பது என்பது மிகவும் கடினம். ஸ்டீவ் வாஹ், பான்டிங் ஆகியோர் தலைமையில் ஆஸ்திரேலியா அவ்வளவு எளிதில் தோற்றதில்லை. கிளார்கின் காலத்தில் கொஞ்சம் மாறியது. இப்போது இலங்கையிடம் வைட் வாஷ் ஆகிறது, பங்களாதேஷிடம் தோற்கிறது. ஸ்மித் கேப்டன்ஷியிலிருந்து விரைவில் துரத்தப்படலாம். அதன்பின் அவரது இடமும் கேள்விக்குறியாகிவிடும். அவருக்கு 160 போட்டிகள் என்பது குதிரைக்கொம்பு.

முடியும்...ஆனா முடியாது...

இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில் சச்சினின் மொத்த ரன் சாதனைக்கு ஆபத்து சற்றுக் குறைவே. ஸ்மித் கடைசிவரை நீடித்தால் மட்டுமே, அவர் அச்சாதனையை முறியடிப்பது சாத்தியம். கோலிக்கு வாய்ப்பு மிகமிகக் குறைவு. சச்சினின் 51 சத சாதனையை முறியடிக்க இரு வீரர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அதிலும் ஸ்மித், கோலியை முந்துகிறார். நம் கற்பனையின்படி சென்றால் அவரால் 20,000 ரன்களைக்கூடக் கடந்திட முடியும். 80-க்கும் மேற்பட்ட சதங்கள் அடித்திட முடியும். ஆனால், அவை சாத்தியமே இல்லை. இன்றைய கிரிக்கெட் சூழலில் அவர்கள் 40 வயதுவரை ஆடுவது எல்லாம் நிச்சயம் முடியாதது.

வெறும் கணிதம் மூலம் எண்கள் வழியாகப் பார்க்கையில் இந்தச் சாதனைகளை இவர்கள் முறியடிக்கக்கூடியவர்கள் என்றுதான் தோன்றும். ஆனால், பிராக்டிகலாகப் பார்க்கையில் அது மிகவும் கடினமே. இன்னும் 10 ஆண்டுகளுக்குள் இருவரின் டெஸ்ட் வாழ்க்கையுமே முடிவுக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ள நிலையில், அதற்குள் அவர்களால் சச்சினின் ரன் சாதனையை முறியடிக்க முடியாது. 52 சதங்கள் வாய்ப்பு உள்ளது. சரி, என்னதான் சொல்ல வர்றீங்க...சச்சின் சாதனையை முறியடிக்க முடியுமா முடியாதா, முடியும்... ஆனா முடியாது. முடியாது...ஆனா முடியும்! ஏன் இவ்வளவு குழப்பம்? ஏனெனில், இந்தச் சாதனைகளின் சொந்தக்காரர் சச்சின்!

இன்ஃபோகிராஃபிக்ஸ்: எம்.மகேஷ்