Published:Updated:

பெயர்: விராட் கோலி... வேலை: செஞ்சுரி அடிப்பது... ஹாபி: ரெக்கார்ட் பிரேக்கிங்!

பெயர்: விராட் கோலி... வேலை: செஞ்சுரி அடிப்பது... ஹாபி: ரெக்கார்ட் பிரேக்கிங்!

பெயர்: விராட் கோலி... வேலை: செஞ்சுரி அடிப்பது... ஹாபி: ரெக்கார்ட் பிரேக்கிங்!

Published:Updated:

பெயர்: விராட் கோலி... வேலை: செஞ்சுரி அடிப்பது... ஹாபி: ரெக்கார்ட் பிரேக்கிங்!

பெயர்: விராட் கோலி... வேலை: செஞ்சுரி அடிப்பது... ஹாபி: ரெக்கார்ட் பிரேக்கிங்!

பெயர்: விராட் கோலி... வேலை: செஞ்சுரி அடிப்பது... ஹாபி: ரெக்கார்ட் பிரேக்கிங்!

ஜூலை 21, 2016 - ஆன்டிகுவா. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ். 28-வது ஓவர், புஜாரா அவுட். களமிறங்குகிறார் கேப்டன் விராட் கோலி. டெஸ்ட் கிரிக்கெட்டில் கால் பதித்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்திருந்தன. 41 போட்டிகளில் 12 அரை சதங்களும், 11 சதங்களும் அடித்திருந்தார். 169 ரன்தான் அவரது அதிகபட்சம். ஆனால், ‘டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்' என்ற அந்தஸ்து அவருக்கு இல்லை. சில நல்ல இன்னிங்ஸ்கள் ஆடியிருந்தாலும், ஒரு நாள் போட்டிகளில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்ததுபோல், டெஸ்ட் அரங்கில் தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. காரணம், 200 என்ற இலக்கை அவர் ஒருமுறைகூட அடையாததுதான்.

இன்னொரு டெல்லிக்காரர் சேவாக்கை எடுத்துக்கொள்வோம். டெஸ்ட் போட்டிகளில் மேட்ச் வின்னராக வலம்வந்தவர். இந்தியர்களின் மிகப்பெரிய நம்பிக்கையாக உருவெடுத்திருந்தார். இத்தனைக்கும் தன் முதல் 41 போட்டிகளின் முடிவில் சேவாக் அடித்திருந்த சதங்களின் எண்ணிக்கை 11 மட்டுமே. ஆனால், அவரை மிகப்பெரிய சக்தியாக உருவகப்படுத்தின அவர் அடித்திருந்த முச்சதமும், இரண்டு இரட்டைச் சதங்களும். தன்னுடைய 40-வது போட்டியிலேயே மூன்றாவது 200+ ஸ்கோர் எடுத்திருந்தார். இதுதான் டெஸ்ட் அரங்கில் 200 என்ற எண்ணுக்கான மரியாதை. அதைத்தான் கோலி அதுவரை மிஸ் செய்திருந்தார்.

அந்த ஆன்டிகுவா இன்னிங்ஸ், அனைத்தையும் புரட்டிப்போட்டது. தன் முதல் இரட்டைச் சதத்தை அடுத்த நாள் பூர்த்திசெய்தார் விராட். அதன் பிறகு அவர் விளையாடியது சாதாரண கிரிக்கெட் அல்ல. 61 மாதங்களில் ஓர் இரட்டைச் சதம்கூட அடிக்காதவர், அடுத்த 16 மாதங்களில் அடித்த இரட்டைச் சதங்களின் எண்ணிக்கை மட்டும் 5. விராட் கோலி - ஒரு நாள் போட்டிகளுக்கு மட்டுமல்ல, கிரிக்கெட்டின் அத்தனை ஃபார்மெட்களுக்கும் இனி இவரே ராஜா!

2016-ம் ஆண்டு ஜூலைக்குப் பிறகு, பத்து முறை 50 ரன்னைக் கடந்துள்ளார் விராட். இதே காலகட்டத்தில் 12 முறை 50+ ஸ்கோர் எடுத்துள்ளார் கே.எல்.ராகுல். ஆனால், ராகுல் ஏன் விராட் ஆக முடியவில்லை, காரணம், அந்த மூன்று இலக்கம். ஐம்பது அடித்து வெறுமனே பேட்டை உயர்த்திக் காட்டுவதற்கும்; 100 ரன் அடித்துவிட்டு, ஆர்ப்பரிப்போடு ஹெல்மட்டைக் கழட்டி, பேட்டை முத்தமிட்டு, அதை பெவிலியன் பக்கம் காட்டி `ஃப்ளையிங் கிஸ்' கொடுத்துவிட்டு வேட்டைச் சிங்கத்தைப்போல் எதிர் அணி வீரர்களைப் பார்க்கும் அந்த செலிப்ரேஷனுக்கும் வித்தியாசம் உண்டுதானே! அதுதான் கோலி - ராகுல் இருவருக்கும் இடையிலான வித்தியாசம்.

ஐம்பது அடிக்கும் வரை ஒரு மைண்ட்செட். அதன் பிறகு வேறு வகையிலான அணுகுமுறை. எண்பது, தொண்ணூறுகளைத் தொட்டுவிட்டால் சதத்தை நோக்கி வேறு வகையான ஆட்டம். பெரும்பாலான வீரர்கள் தங்கள் அரைச் சதங்களைச் சதமாக மாற்ற முடியாமல்போவதற்குக் காரணம் இதுதான். விராட், இந்த க்ளப் அல்ல. ஆட்டத்தின் தொடக்கப் பந்து முதல் கடைசிப் பந்து வரை ஒரே ட்ரீட்மென்ட்தான். அவரது அணுகுமுறை அணியின் நிலையைப் பொறுத்தும் ஆடுகளத்தின் தன்மையைப் பொறுத்தும் மாறுமே தவிர, தன் ஸ்கோரைப் பொறுத்து மாறாது. தான் கவனமாக ஆடுவதாக நினைத்து, பௌலர்களுக்கு `சைக்லாஜிக்கல் அட்வான்டேஜ்' கொடுக்கும் ஆள் அல்ல. ஆகவேதான் தனது 33 அரைச் சதங்களில் 19-ஐ சதமாக அவரால் மாற்ற முடிந்தது.

இந்த 16 மாதங்களில் அவரது Century conversion rate வேற லெவல். பத்து 50+ இன்னிங்ஸ்களில் எட்டை சதமாக மாற்றியுள்ளார். அதுவும் இந்த ஒன்றரை ஆண்டுகளில் ஒவ்வொரு நான்கு போட்டிகளுக்கும் தவறாமல் ஒரு சதம் அடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியுடனான தொடர்தான், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் அரை சதம் அடிக்காத தொடர். ஒருநாள், டெஸ்ட் இரு ஃபார்மெட்களிலும் சேர்த்து, தனது கடைசி ஆறு இன்னிங்ஸ்களில் மூன்று சதங்களும், ஓர் இரட்டைச் சதமும் அடித்துள்ளார். கன்சிஸ்டென்சியின் மறுபெயராக மாறிவருகிறார் கேப்டன் கோலி.

2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை சீராக முன்னேறிக்கொண்டிருந்த கோலியின் டெஸ்ட் கிராஃப் அடுத்த இரண்டு ஆண்டுகள் சரிவைச் சந்தித்தது. 2014-ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம், அடுத்த ஆண்டு நடந்த தென்னாப்பிரிக்கத் தொடர் போன்றவற்றில் சோபிக்கத் தவறினார் கோலி. அந்த இரண்டு ஆண்டுகளிலும் அவரது சராசரி, 45-யைத் தொடவில்லை. 2016-ம் ஆண்டு, கோலியால் மறக்கவே முடியாத ஆண்டு. ஆடிய 12 டெஸ்ட் போட்டிகளில் 1 அரைச் சதம், 1 சதம், 3 இரட்டைச் சதங்கள் உள்பட 1,215 ரன் (சராசரி:75.94) எடுத்து மிரட்டினார். வெஸ்ட் இண்டீஸ், நியூஸிலாந்து, இங்கிலாந்து என மூன்று தொடர்களிலும் ஓர் இரட்டைச் சதம். 2017-ம் ஆண்டில் வங்கதேசத்துடனான போட்டியிலும் இரட்டைச் சதம் அடித்து, தொடர்ந்து நான்கு தொடர்களில் டபுள் செஞ்சுரி அடித்த பேட்ஸ்மேன் என்ற சிறப்பைப் பெற்றார். இப்போது ஐந்தாகிவிட்டது. அதுவும் 32 இன்னிங்ஸ்களில் ஐந்து இரட்டைச் சதங்கள். இந்த ஃபார்ம் தொடர்ந்தால், பிராட்மேனின் 12 டபுள் செஞ்சுரி சாதனையை விராட் விரைவில் முறியடிக்கக்கூடும்.

பிரஷரை ஹேண்டில்செய்வது அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று. சேஸிங்கின்போதான பிரஷர் மட்டுமின்றி, கேப்டன் என்ற மிகப்பெரிய பொறுப்பையும் ஜஸ்ட் லைக் தட் என டீல் செய்கிறார். சொல்லப்போனால், அழுத்தம் கூடும்போதுதான் அவர் விஸ்வரூபம் எடுக்கிறார். கேப்டன் ஆன பிறகு, 31 போட்டிகளில் (45 இன்னிங்ஸ்கள்) 2,907 ரன் குவித்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் அவரது சராசரி 64.60. இதில் 12 சதங்கள். இதிலும் கடந்த போட்டியில் புது சாதனை படைத்திருக்கிறார். ஒரே ஆண்டில் அதிக சதங்கள் (டெஸ்ட் + ஒரு நாள்) அடித்த கேப்டன்களின் வரிசையில் ரிக்கி பான்ட்டிங்கை முந்தி முதல் இடம் (10). இப்படி ஆட்டத்துக்கு ஆட்டம் சதங்களையும் சாதனைகளையும் அடிக்கிக்கொண்டேபோகிறார் கோலி.

இவை எப்படிச் சாத்தியமாகின்றன. இவரது சக்சஸ் சாதாரணமாக வந்ததல்ல. தன்னை ஒவ்வொரு ஏரியாவிலும் பட்டைதீட்டிக்கொண்டே இருந்தார் விராட். 2014-ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் திணறினார். படுமோசமாக ஆடினார். ஆனால், மீண்டு வர எத்தனை நாள்கள் ஆனது. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ‘அவுட் ஸ்விங்' ஆன பந்துகள், அவரது ஸ்டைலிஷ் கவர் டிரைவ்களாலும், ஃப்ளிக் ஷாட்களாலும் பௌண்டரிகளாக மாறத் தொடங்கிவிட்டன. ஆஸ்திரேலியத் தொடரில் அவ்வப்போது `இன்சைட் எட்ஜ்' ஆகி போல்டானார். இலங்கைக்கு எதிரான இந்த இரட்டைச் சதத்தின்போது `தேர்ட் மேன்' திசையில் எடுக்கப்பட்ட ரன்கள் மிகச் சொற்பம். தன் தவறுகளைத் திருத்திக்கொள்வதில் கோலி அவ்வளவு ஃபாஸ்ட். 

2012-ம் ஆண்டு டெஸ்ட், ஒருநாள் என நல்ல முன்னேற்றம் இருந்தது. ஐ.பி.எல் தொடரில் சாதிக்க முடியும் என நம்பினார். ஆனால் முடியவில்லை. காரணம் என்னவென யோசித்தார், `அனைத்து ஃபார்மெட்களிலும் ஜொலிக்க ஃபிட்னெஸ் ரொம்பவும் அவசியம்'. ஃபிட்னெஸ் ஆபரேஷன் தொடங்கியது. ``இப்போது இருப்பதைவிட 10 - 15 கிலோ எடை அதிகமாக, `சப்பி'யாக இருந்தேன். என்னால் சரியாக பெர்ஃபார்ம் பண்ண முடியவில்லை. ஒரே நாள் - என்னோட பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டேன். தினமும் ஒன்றரை மணி நேரம் ஜிம்மில் இருந்தேன். கோதுமை இல்லை... டெசர்ட்ஸ் இல்லை... கூல்டிரிங்ஸ் இல்லை... ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. முதல் இரண்டு மாதங்கள், தூங்கப் போகும்போதெல்லாம் பெட்ஷீட்டைக் கடித்துச் சாப்பிட வேண்டும் போல இருக்கும். அந்த அளவுக்குப் பசி. ருசியான சாப்பாட்டுக்காக ஏங்கினேன். ஆனால், அதன் பலன்களை நேரில் பார்த்தபோது ஆச்சர்யமாக இருந்தது. இன்று அதுவே எனக்கு அடிக்ட் ஆகிவிட்டது" என்கிறார் விராட். 

2012 சீஸனில்கூட அவர் ஃபிட்டாகத்தான் இருந்தார். ஆனால், அவரது ஐ.பி.எல் செயல்பாடு திருப்தியளிக்கவில்லை. அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இப்படி உணவிலிருந்து அனைத்துக்கும் கட்டுப்பாடு விதித்து கிரிக்கெட் வீரர்களின் ஃபிட்னெஸுக்கு மறுவடிவம் கொடுத்துள்ளார். `உடம்பு ஃபிட்டாக இருந்தாலே அதிக நம்பிக்கை கிடைக்கும்' என்பது விராட்டின் பாலிசி. அதைத்தான் இன்று தன் வீரர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறார். 

“நான் என்றுமே அந்த மூன்று இலக்க டார்கெட்டை நோக்கி விளையாடியது கிடையாது. அதனால்தானோ என்னவோ, அதை அடைய முடிகிறது" என்றார் விராட். அணிக்காக ஆட வேண்டும் என்ற அவரது எண்ணம்தான், சாதனைகளை அவர் பின்னால் வரவைக்கிறது. வெறும் பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல், தன்னுடைய அனைத்து அம்சங்களையும் மெருகேற்றிக்கொண்டதால்தான் அவரால் இன்று ஜொலிக்க முடிகிறது. ஒவ்வொரு தொடரிலும் சாதனைகளை நொறுக்கிக்கொண்டிருக்கிறார். இந்த ஃபார்ம் தொடர்ந்தால், பேட்ஸ்மேன்கள் செய்யக்கூடிய சாதனைகள் அனைத்திலும் `விராட் கோலி' எனும் பெயர் இடம்பிடிக்கும்.

விராட் கோலி எனும் சகாப்தம், இந்த 16 மாத சாதனைகளால் மட்டுமே உருவானதல்ல; தன் ஆட்டம், கோபம், நடத்தை, பயிற்சி, அணுகுமுறை அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகச் செதுக்கியதன் விளைவு. `கோலியோட கோபம் டீமை பாதிக்கும்', `ஆட்டிட்யூட் சரியல்ல', `அவுட் சைடு ஆஃப் ஸ்டம்ப் பால் ஆடத் தெரியாது'... எழுப்பப்பட்ட கேள்விகள் எதுவுமே டீலில் விடப்படவில்லை. அனைத்துக்கும் பதில் சொல்லிவிட்டார். அனைத்து கேள்விகளுக்குமான பதில்களுமே ரொம்பவும் சிம்பிளானவை - சதங்கள், சாதனைகள், வெற்றிகள்! இனியும் கேள்விகள் எழலாம். அவற்றுக்கும் இந்த மூன்றும்தான் பதில்.