கிரிக்கெட் விளையாடுவது ஈஸி. கால்பந்து விளையாடுவது கஷ்டம். இதை, இந்திய கிரிக்கெட் அணியினர் பங்கேற்ற செலிபிரிட்டி கிளாசிகோ கால்பந்துப் போட்டியை உன்னிப்பாக கவனித்திருந்தாலே தெரியும். கால்பந்தில் 90 நிமிடமும் கால்கள் பம்பரமாக சுழல வேண்டும். ப்ரபொஷனல் பிளேயர்களுக்கே எக்ஸ்ட்ரா டைமில் மூச்சு வாங்கும். வியர்த்து ஊத்தும். தலை சுற்றும். சின்ன வயதில் இருந்தே உடல் சார்ந்த விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவரால் மட்டுமே, இந்த இரண்டு விளையாட்டிலும் ஜொலிக்க முடியும், எல்லிஸ் பெர்ரியைப் போல...
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி, சிட்னியில் நடந்து வருகிறது. ஆஷஸ் தொடரின் முதல் இரவு பகல் போட்டி. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த முதல் போட்டியிலேயே இரட்டைச் சதம் அடித்துள்ளார் ஆல் ரவுண்டர் எல்லிஸ் பெர்ரி. முதல் இரட்டைச்சதம், சர்வதேச அரங்கில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய வீராங்கனை, ஆஷஸ் தொடரில் அதிக ரன் குவித்த ஆஸ்திரேலிய வீராங்கனை, பெண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த மூன்றாவது வீராங்கனை என வரிசைகட்டி நிற்கின்றன சாதனைகள்.
எல்லிஸ் பெர்ரியைப் பற்றிய விக்கிப்பீடியாவின் ஆரம்ப வரிகளே அசரடிக்கிறது. கிரிக்கெட்டர், ஃபுட்பாலர் என்பதைத் தாண்டி, அவரை ஸ்போர்ட்ஸ்வுமன் என அடையாளப்படுத்துகிறது விக்கிப்பீடியா. கிரிக்கெட் சாதனைகள் தனி, கால்பந்து சாதனைகள் தனி என இரு வேறு விவரிப்புகள்! வேறு எந்த வீரர், வீராங்கனைக்கும் இப்படியொரு அறிமுகம் இல்லை, இப்படியொரு பக்கம் இல்லை. ஏனெனில், எல்லிஸ் பெர்ரி, தன் 16 வயதுக்குள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய கால்பந்து அணி இரண்டு தேசிய அணியிலும் இடம்பிடித்து விட்டார்.
ஆஸ்திரேலியாவின் நியூ செளத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள வரூங்கா நகரில் பிறந்த எல்லிஸ் பெர்ரியின் பள்ளி வாழ்க்கையே சொல்லும் அவர் அசாதாரணமானவர் என்று. ஸ்போர்ட்ஸ் கேப்டன், அத்லெடிக் கேப்டன், கிரிக்கெட் கேப்டன் என்பதோடு நில்லாமல் அரசியல் கார்ட்டூன்கள் வரைவது வரை நீள்கிறது அவரது மல்ட்டி ஸ்பெஷாலிட்டி!
வெள்ள நேரத்து அணையின் நீர்மட்டம் போல ஏறியது, ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் எல்லிஸ் வளர்ச்சி. 2007 ஜனவரியில் நியூ செளத் வேல்ஸ் அணிக்காக அண்டர் -19 இன்டர்ஸ்டேட் தொடரில் விளையாடியவர், அடுத்த மாதமே நியூஸிலாந்து செல்லும் இளம் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தார். அதே ஆண்டு ஜூலையில் ஆஸ்திரேலிய சீனியர் அணிக்குள்ளேயே வந்துவிட்டார். கிடுகிடு ஓட்டம். நியூஸிலாந்துக்கு எதிராக முதன்முதலாக ஆஸ்திரேலிய அணியின் ஜெர்ஸியை அணிந்தபோது அவர் வயது 16. விலாவரியாகச் சொன்னால், 16 ஆண்டு, எட்டு மாதம். ஆண்கள் அணியிலும் கூட இந்த வயதில் யாரும் சீனியர் டீமில் இடம்பிடிக்கவில்லை.
இதைவிட ஆச்சர்யம், அதே 16 வயதில் (16 ஆண்டு, 9 மாதம்) ஆஸ்திரேலிய கால்பந்து அணியில் நுழைந்துவிட்டார். அதாவது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் நுழைந்த அடுத்த இரண்டு வாரங்களில்... ஹாங்காங் அணிக்கு எதிரான ஒலிம்பிக் தகுதிச் சுற்று முதல் போட்டியிலேயே, அதுவும் போட்டி ஆரம்பித்த இரண்டாவது நிமிடத்திலேயே கோல் அடித்தார் எல்லீஸ். இத்தனைக்கும் அவர் ஒரு டிஃபண்டர். AFC தொடர் உள்பட ஆஸ்திரேலிய அணிக்காக 11 போட்டிகளில் விளையாடியவர், உள்ளூர் தொடரான வேர்ல்ட் லீக் டோர்னமென்ட்டில் சென்ட்ரல் கோஸ்ட் மரைனர்ஸ் க்ளப்புக்காக களம்புகுந்தார்.
டெஸ்ட், ஒன்டே, டி -20 என கிரிக்கெட்டின் மூன்று ஃபார்மட்டிலும் ஒரு வீரர் ஜொலிப்பது சிரமம். அப்படி இருக்கையில் கிரிக்கெட்டும் விளையாடிக் கொண்டு கால்பந்தும், அதுவும் தேசிய அணியில் விளையாடுவது எவ்வளவு சிரமம்? ‘‘ஒரு கட்டத்தில் கிரிக்கெட் அல்லது கால்பந்து இரண்டில் ஒன்றுக்கு குட்பை சொல்ல வேண்டிய சூழல் வரும் எனத் தெரியும்’’ என்று சொன்ன எல்லீஸ், கால்பந்துக்கு முழுக்குப் போட்டார். 2009 உலகக் கோப்பை முடிந்து கிரிக்கெட்டில் பீக்கில் இருந்த நேரம். 2010-ல் டி-20 உலகக் கோப்பை, AFC ஆசியக் கோப்பை கால்பந்து என இரண்டு பெரிய தொடர்களும் ஒரேநேரத்தில் வந்தது.
அப்போது எல்லிஸ், கான்பெரா யுனைடெட் கால்பந்து க்ளப்பில் விளையாடிக் கொண்டிருந்தார். ‛‛எல்லீஸ்... இதுதான் நீ முடிவெடுக்க வேண்டிய நேரம். எது உன் வாழ்க்கை... கால்பந்தா, கிரிக்கெட்டா? விரைவில் முடிவெடு’’ என நெருக்கடி கொடுத்தார் அவரது கால்பந்து கோச் ஹீத்தர் ரீட். சில மாதங்களில் எல்லீஸ், வேறு க்ளப்புக்கு மாறினார். சிட்னி எஃப்.சி க்ளப் பயிற்சியாளர் அலென் ஸ்டேஜ்சிச், எல்லீஸை கால்பந்து, கிரிக்கெட் இரண்டிலும் விளையாட வைக்க விரும்பினார். அதற்காக, நியூ செளத் வேல்ஸ் கிரிக்கெட் க்ளப் பயிற்சியாளருடன் இணைந்து, அதற்கான முயற்சிகளில் இறங்கினார். ஆனால், இது வொர்க்அவுட் ஆகவில்லை. ஏனெனில், 2013 ஜனவரி 15-ம் தேதி, சிட்னி எஃப்.சி கால்பந்து க்ளப் வேர்ல்ட் லீக்கிலும், நியூ செளத் வேல்ஸ் அணி ஒரு டி-20 தொடரின் ஃபைனலிலும் விளையாடின. சில நாள்கள் கழித்து அதாவது ஜனவரி 19-ம் தேதி கால்பந்து செமி ஃபைனல், கிரிக்கெட் ஃபைனல் என இரண்டும் ஒரே நாளில் நடந்தன. இதில் எல்லீஸ், கால்பந்து போட்டியில் பங்கேற்க முடிவெடுத்தார்.
நியூசெளத் வேல்ஸ் அணி கிரிக்கெட்டில் வெற்றி பெற்றது. சிட்னி எஃப்.சி அரையிறுதியில் வென்றது. ஆனால், அடுத்த வாரம் கால்பந்து ஃபைனலில் பங்கேற்பதைவிட்டு, இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் இணைந்தார் எல்லீஸ். அந்தசமயம், ஆஸ்திரேலிய கால்பந்து அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற ஹெஸ்டரின் டீ ரூஸ், ‛எல்லீஸ் அதிகளவில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதால், அவரால் போதிய அளவிலான சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை’’ என, கால்பந்து அணியில் இருந்து கழட்டிவிட்டார். அதன்பின் முழுமூச்சாக ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் முத்திரை பதிக்கத் தொடங்கினார். அதன் ஒரு பதம்தான் இன்று அவர் அடித்த இரட்டைச்சதம்!
தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் டி வில்லியர்ஸ் பள்ளிப் பருவத்தில் கிரிக்கெட், ஹாக்கி, டென்னிஸ், ரக்பி என எல்லா ஸ்போர்ட்ஸிலும் கலக்கியதாகச் சொல்வார்கள். அப்படிப் பார்த்தால், எல்லீஸ் பெர்ரி ஒரு லேடி டி வில்லியர்ஸ்!