மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நம்பர் 1 மகேந்திர சிங் தோனி - 07

நம்பர் 1
பிரீமியம் ஸ்டோரி
News
நம்பர் 1 ( முகில் )

முகில்ஓவியம்: ஹாசிப்கான்

2001-ம் ஆண்டு. மேற்கு வங்கத்தின் காரக்பூர் ரயில் நிலையம். இந்தியாவின் மூன்றாவது நீளமான ரயில்வே பிளாட்பாரம். அங்கே டிக்கெட் பரிசோதகராகப் பொறுப்பேற்றிருந்தார் 20 வயது மகேந்திர சிங் தோனி. புதிய வேலை. அதுவும் அரசு வேலை. விஷயத்தைக் கேள்விப்பட்டதும், தந்தை பான் சிங் ஆனந்தக் கூத்தாடினார்; தாய் தேவிகா சந்தோஷக் கண்ணீரில் நனைந்தார். உறவினர்கள், நண்பர்கள் விசில் போட்டுக் கொண்டாடினர். 'ஆஹா வேலை... ஓஹோ வாழ்க்கை!’ என்பது அவர்களின் எண்ணம். ஆனால், தோனியின் மனமோ எதிர் திசையில் யோசித்தது! 

படிப்பில் சுமாரான தோனிக்கு பீகார் கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்ததால்,, அந்த வேலை கிடைத்தது. ஆனால், இனி அவருடைய கிரிக்கெட் கனவுகள்? 'காரக்பூரில் இருந்துகொண்டு, அடிக்கடி ராஞ்சிக்குச் சென்று விளையாட முடியுமா? விடுமுறை எல்லாம் கிடையாது எனக் கடுமையாகச் சொல்கிறார்களே! விக்கெட் கீப்பராக கேட்ச் பிடிக்க வேண்டியவனை, இப்படி டிக்கெட் இல்லாமல் வித்அவுட்டில் வருபவர்களைப் பிடிக்கவைத்துவிட்டார்களே! நான், இந்திய அணியில் இடம்பெறவே முடியாதா?’ - தோனியின் மனதை கேள்விகள் அழுத்தின.

இத்தனைக்கும் தோனி, சச்சினைப்போல சிறு வயதிலேயே கிரிக்கெட் மட்டையுடன் திரிந்த ஆள் அல்ல. சச்சினை ரொம்பப் பிடிக்கும். (பின்னாளில் கில்கிறிஸ்ட்டை ரோல்மாடலாகக் கொண்டார்!) மற்றபடி பாட்மின்டன், டேபிள் டென்னிஸ், கால்பந்து... என வெவ்வேறு விளையாட்டுக்களில் ஆர்வம். தோனி பிறந்து வளர்ந்த ராஞ்சியில், ஹாக்கி விளையாடுபவர்கள்தான் அதிகம்; அடுத்தது கால்பந்து. தோனி, கால்பந்தில் அதிகக் கவனம் செலுத்தினார்... கோல் கீப்பர்!

நம்பர் 1 மகேந்திர சிங் தோனி - 07

'இல்லை... இவன் கிரிக்கெட் விக்கெட் கீப்பராக மாறினால், உயரங்களுக்குச் செல்வான்’ என ஒருவருக்குத் தோன்றியது. அவர், பானர்ஜி. தோனி படித்துக்கொண்டிருந்த ஜவஹர் வித்யாலயா மந்திர் பள்ளியின் கிரிக்கெட் கோச்.  பல நாட்களாக தோனியைத் தொடர்ந்து கவனித்த பானர்ஜி, ஒருநாள் தனியாக அழைத்துப் பேசினார். 'நீ கிரிக்கெட்டுக்கு மாறு. உன் வளமான எதிர்காலம் கிரிக்கெட்டில்தான் இருக்கிறது’. தோனிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால், எல்லோரையும் விட்டுவிட்டு தன்னைத் தேடிவந்து, ஒரு கிரிக்கெட் கோச் நம்பிக்கையுடன் பேசுகிறார் என்றால், அதில் பொய் இருக்காது என்று நம்பினார். கால்பந்தைத் தூர உதைத்தார். கீப்பிங் கிளவுஸ் அவரது கைகளில் இறுக்கமாகப் பொருந்திக்கொண்டது. கீப்பிங் பயிற்சி மட்டுமன்றி, தோனிக்கு பேட்டிங் பயிற்சியும் அளித்தார் பானர்ஜி. ஒருமுறை டென்னிஸ் பந்துகளை நீரில் ஊறவைத்து வேகமாக பௌலிங் போட்டார். தோனி சற்றே தடுமாற, 'வருங்காலத்தில் நீ பாகிஸ்தானின் பௌலர்களை எதிர்கொள்ள வேண்டுமே. அதற்காகத்தான் இது’ என பௌன்ஸர் வீசினார் பானர்ஜி.

பள்ளிகளுக்கு இடையேயான, மாநில அளவிலான போட்டிகளில் தோனி, மட்டையுடன் களம் இறங்கினாலே, பௌலர்கள் பின்வாங்கினார்கள். எப்படிப் போட்டாலும் எல்லைக்கோட்டை முத்தமிடும் பந்துகள்; மைதானத்தைத் தாண்டிச் செல்லும் சிக்ஸர்கள். பந்துகள் அடிக்கடி காணாமல்போனதால், போட்டிகளில் தாமதம் உண்டாவது வாடிக்கையானது.

நம்பர் 1 மகேந்திர சிங் தோனி - 07

ஒருமுறை ஈடன் கார்டனில் பெங்காலுக்கும் ஜார்கண்டுக்கும் இடையே நடந்த போட்டியில், தோனியின் விளாசலில் பந்து, மூன்று முறை வெளி'பற’ப்பு செய்தது. பெங்கால் பௌலர் லஷ்மி ரத்தன் சுக்லா பொறுமை இழந்தார். அவரது பௌலிங்கும் நடவடிக்கைகளும் மோசமாக வெளிப்பட, பெங்கால் கேப்டன் (அப்போதைய இந்திய கேப்டனும்கூட) கங்குலி, சுக்லாவிடம் வந்தார். 'நான்சென்ஸ். அந்த பேட்ஸ்மேனிடம் இருந்து ஏதாவது புதிதாகக் கற்றுக்கொள்ள முடியுமா எனப் பார். இப்படி மோசமாக நடந்துகொள்வதால், உனக்கு எதுவும் கிடைக்கப்போவது இல்லை. ஆனால், அந்த பேட்ஸ்மேன் தன் திறமையில் பாதியைக் காட்டினால்கூட போதும். பின்னாளில் கிரிக்கெட்டை ஆள்வான்.’ வங்கப் புலியின் அனுபவ வார்த்தைகள், தோனியைத் தரையில் இருந்து இரண்டு அடி உயர்த்தின.

2001-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒருநாள். மறுநாள் காலை அகர்தலாவில் நடக்கவிருக்கும் மண்டல அளவிலான கிரிக்கெட் மேட்ச்சில் கலந்துகொள்ள தோனிக்கு அவசர அழைப்பு வந்தது. அதுவும் ஹீரோ சச்சினுடன் விளையாடும் வாய்ப்பு. வாரே வாஹ்! ஆனால், ராஞ்சியில் இருந்து கொல்கத்தாவுக்குப் பேருந்தில் செல்ல 12 மணி நேரம் பிடிக்கும். ரயில் எதுவும் கிடையாது. விரைவாகச் செல்ல கார்தான் ஒரே வழி. அங்கிருந்து அகர்தலாவுக்கு விமானத்தைப் பிடிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் பணம்? தோனியின் தந்தை தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் கெஞ்சிக் கூத்தாடி பணம் திரட்டினார். அன்று இரவே தோனி தன் தந்தையோடு, உறவினரோடு காரில் கிளம்பினார். இரவு முழுக்கப் பயணம். காலையில் கொல்கத்தா விமான நிலையத்தை அடைந்தார்கள். ஆனால், அகர்தலா செல்லும் விமானம் டேக்-ஆஃப் ஆகியிருக்க, தோனியின் எதிர்பார்ப்புகள் நொறுங்கின. தந்தை, ஏமாற்றத்தில் நிலைகுலைந்துபோனார். தோனி சட்டெனத் தன்னை மீட்டுக்கொண்டார். 'இன்றோடு உலகம் முடிஞ்சு போகப்போறது இல்லை; இதுதான் என் கடைசி மேட்ச்சும் இல்லை... விடுங்கப்பா!’

அத்தனை நம்பிக்கையுடன் இருந்த தோனியை, டிக்கெட் பரிசோதகர் வேலை மிகவும் சோதித்தது. ரயில்வே ரஞ்சி கிரிக்கெட் அணியில்கூட இடம்பெற முடியவில்லை. தேர்வாளர்கள் முகம் திருப்பினார்கள். மனதில் ஏதேதோ விரக்தி எண்ணங்கள். தான் செல்லவேண்டிய 'கிரிக்கெட் ரயிலை’ நிரந்தரமாகத் தவறவிட்டுவிடுவோமோ எனும் தவிப்பு. என் லட்சியம் 'கேர் ஆஃப் ரயில்வே பிளாட்பாரம்’தானா? சோர்ந்துபோய் இருந்த தோனிக்கு, உடன் பணியாற்றிய நண்பர்கள் மூலம் காரக்பூரில் புகழ்பெற்றிருந்த டென்னிஸ் பால் கிரிக்கெட் அறிமுகமானது. 18 யார்டு மைதானத்தில் விளையாடும் அதிரடி கிரிக்கெட் ஆட்டம். தோனி அதில் கவனம் செலுத்தினார். டென்னிஸ் பந்துகள் திக்கெட்டும் பறந்தன. யார்க்காராக வீசினாலும் பந்தைத் தோண்டி எடுத்து அபார உயரத்துக்கு அடித்து விரட்டும் ஹெலிகாப்டர் ஷாட்டை அங்குதான் கற்றுக்கொண்டார். தோனியை தங்கள்வசமாக்க பல கிளப்கள் போட்டிபோட்டன. அவருக்கு ஒரு போட்டிக்கு 2,000 ரூபாய் வரை கொடுக்கத் தயாராக இருந்தன. தோனியின் இன்றைய 20-20 வெற்றிகளுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவை, அந்த டென்னிஸ் பால் மேட்ச்களே.

2003-ம் ஆண்டு, கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது. ஆச்சர்ய வெற்றிகளுடன் டீம் இந்தியா முன்னேறிக்கொண்டிருந்தது. அப்போது

ஒரு நாள் மேட்ச் பார்க்க முடியாமல் தவித்த தோனி, ரயில் நிலையத்தில் இருந்த ஒரு பயணிடம் அடிக்கடி ஸ்கோர் கேட்டுக்கொண்டிருந்தார். அதைத் தொந்தரவாகக் கருதிய அந்த நபர், 'ஆமா, இவரு பெருசா வேர்ல்டு கப் ஜெயிச்சுக் கொடுக்கப்போறாரு..!’ எனக் கடுப்பு காட்ட, தோனிக்கு 'சுருக்’கென தைத்தது. செல்ல வேண்டிய பாதையில் தான் இல்லை என உணர்ந்தார். கிரிக்கெட் பயிற்சிகளுக்காக அடிக்கடி விடுப்பு எடுக்க ஆரம்பித்தார். 2004-ம் ஆண்டு மத்தியில், ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. தோனி பதில் சொல்லவில்லை. உச்சபட்ச நடவடிக்கையாக வேலை பறிபோனது. குடும்பத்தினர் கன்னத்தில் கைவைக்க, தோனிக்குள் பாங்ரா கொண்டாட்டம். பெரும் பாரம் கரைந்த நிம்மதி!

எதிர்காலம் குறித்த கேள்விக்குறி ஆச்சர்யக் குறியாக மாற, அதிகக் காலம் பிடிக்கவில்லை. இந்திய அணி சரியான விக்கெட் கீப்பர் இல்லாமல் தடுமாற்றத்தில் இருந்தது. 2004-ம் ஆண்டு செப்டம்பரில், 'இந்தியா ஏ’ அணியின் விக்கெட் கீப்பராக இருந்த தினேஷ் கார்த்திக்குக்கு இந்திய அணியில் அழைப்பு வர, தோனிக்கு அங்கே இடம் கிடைத்தது. 'ஜிம்பாப்வே 11’ அணியுடனான முதல் போட்டியிலேயே ஒட்டுமொத்தமாக ஏழு கேட்ச், நான்கு ஸ்டம்ப்பிங் என அசத்திய தோனி, அடுத்ததாக ஒரு மேட்ச்சில்

பாகிஸ்தான் ஏ உடன் முதல் சர்வதேச செஞ்சுரியை விளாசினார். புதுப் பையன் மேல் கிரிக்கெட் வாரியத்தின் கவனம் குவிந்தது.

டீம் இந்தியா பங்களாதேஷ§டன் அடுத்து ஆடவிருந்த டெஸ்ட், ஒரு நாள் தொடருக்கு தோனி விக்கெட் கீப்பராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; மிளிர்ந்தார். 'இனி ஒன் டேவுக்கு தோனி, டெஸ்ட்டுக்கு கார்த்திக் என வைத்துக்கொள்ளலாம்’ என கேப்டன் கங்குலி அழுத்தமாகச் சொன்னார். 'தன் அணியினரைப் புரிந்து வழிநடத்தக்கூடிய கேப்டனாக வருங்காலத்தில் தோனி வளர வாய்ப்பு இருக்கிறது’ என, அப்போதே பேட்டி கொடுத்தார் இந்திய அணியின் கோச்சான ஜான் ரைட். தோனியை உற்றுக் கவனிக்க ஆரம்பித்தது இந்தியா.

கிரிக்கெட்டில் கவனம் செலுத்தியதற்காக வேலையைவிட்டுத் தூக்கிய ரயில்வே நிர்வாகம், முகத்தில் கரியைத் துடைத்துக்கொண்டு தோனியின் வீட்டு வாசலில் வந்து கைகட்டி நின்றது. 'நீங்கள் ரயில்வேயில் பணியாளராகத் தொடர்வது, தேசத்துக்கே கௌரவம். பணிக்கு வரத் தேவையே இல்லை. எந்த நிபந்தனையும் இல்லை’! தோனி சிறுபுன்னகையுடன் அவர்களை அமைதியாகத் திருப்பி அனுப்பிவைத்தார். மதியாதார் பிளாட்பாரம் மிதியாதே. ஏர் இந்தியாவில் பணி உத்தரவு காத்திருந்தது!

2005-ம் ஆண்டு இறுதியில், இந்தியாவில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில், தோனியின் ருத்ரதாண்டவம் தேசத்தையே திரும்பிப் பார்க்கவைத்தது. அதுவும் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை நிர்ணயித்த 299-ஐ விரட்டிய இந்திய அணி, சச்சினைச் சீக்கிரமே இழந்தது. எந்தவிதச் சலனமும் இன்றி 145 பந்துகளில் 183 ரன்கள் எடுத்த தோனி, வெற்றிக்கு வித்திட்டார். அப்போது ஒரு விக்கெட் கீப்பர் குவித்த அதிகபட்ச ரன் இது. 'பிளேயர் ஆஃப் தி சீரிஸ்’ பட்டம் வென்றார் தோனி. அடுத்தடுத்த போட்டிகளிலும் தொடர்ந்தது தோனியின் ரன் வேட்டை. 2006-ம் ஆண்டு ஏப்ரலில், சர்வதேச ஒரு நாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடம் தோனிக்கு!

2007-ம் ஆண்டு உலகக் கோப்பை. தோனிக்கும் முதல் உலகக் கோப்பை. ஆனால், தோனியின் ஃபார்ம் எங்கோ பறந்துபோயிருந்தது. ஸ்கோர் போர்டில் தோனியின் பெயருக்குப் பக்கத்தில் முட்டைகள் சிரித்தன. அணியின் செயல்பாடுகளும் ஜிம்பாப்வேத்தனமாக இருக்க, சூப்பர் 8 சுற்றுக்குக்கூடத் தகுதி பெறாமல் பங்களாதேஷிடம் தோற்று இந்தியா வெளியேறியது. கேப்டன் டிராவிட், தன் பதவியை ராஜினாமா செய்தார். தோனி

ராஞ்சியில் கட்டிக்கொண்டிருந்த புதிய வீடு, ஜார்கண்ட் முக்தி மோட்சாவினரின் தாக்குதலுக்கு உள்ளானது. களங்கங்களால் தோனி கலங்கவில்லை. இனி பெறும் வெற்றிகளால்தான் தன்னை விளங்கவைக்க முடியும் எனத் தீர்மானித்தார். 2007-ம் ஆண்டில் டி-20 உலகக் கோப்பை அணிக்குக் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டார். பலன், ஃபைனலில் பாகிஸ்தானை வெளுத்துக்கட்டி முதல் டி-20 உலகக் கோப்பையை முத்தமிட்டது இந்தியா. பிரதிபலன், தோனியைத் தேடிவந்தது ஒரு நாள் டீமின் கேப்டன் பதவி.

2009-ம் ஆண்டு டிசம்பரில், தோனியின் தலைமையில் இந்திய டெஸ்ட் அணி முதன்முறையாகத் தரப்பட்டியலில் முதல் இடம் பிடித்தது. 2010-ம் ஆண்டில் ஆசியக் கோப்பை வசமானது. 2011-ம் ஆண்டு, ஒரு நாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோனி சிக்ஸ் அடித்து இலக்கைத் தொட்ட நொடியில், இந்தியா ஒளிர்ந்தது. ஆனால், தோனி தளும்பவில்லை. 'அது சச்சினுக்கான சந்தோஷத் தருணம்’ என, கோப்பையை அணியினர் கையில் கொடுத்துவிட்டு, கொண்டாட்டங்களில் தன்னை முன்னிலைப்படுத்தாமல் பதினொன்றோடு, பன்னிரண்டாக நின்றுகொண்டார்!

நம்பர் 1 மகேந்திர சிங் தோனி - 07

ஆறாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்குவது தோனியின் வழக்கம். மற்ற பேட்ஸ்மேன்கள் இலக்கு வரை நெருங்கியிருக்க, கடைசி ஓவர்களில் களமிறங்கி 'வின்னிங் ஷாட்’டை அடித்துவிட்டு பெயர் வாங்கிக்கொள்கிறார் தோனி என்று, அதன் மேலும் விமர்சனம் உண்டு. ஆனால், ஆறாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கியும் தனது சராசரி ரன் விகிதத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறார் தோனி. குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் தேவைப்படும் சமயத்திலும் சரி, ஆரம்ப விக்கெட்டுகள் குறைந்த ரன்னிலேயே மளமளவெனச் சரிந்துவிட்ட நிலையிலும் சரி, ஆறாவதாக இறங்கும் தோனி, அருமையாக விளையாடி வெற்றி தேடித் தந்த மேட்ச்கள் அதிகம்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே தலைசிறந்த கேப்டன், அதிக வெற்றிகளைக் குவித்த கேப்டன் எனப் புகழ் மாலைகள். இன்னொரு பக்கம் வெளிநாடுகளில் ஆடும் டெஸ்ட் தொடர்களில் தொடர் தோல்விகள் வாட்டின. கடும் விமர்சனக் கணைகள் துளைத்தெடுத்தன. 2014-ம் ஆண்டு டிசம்பரில், தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

'தோனியின் வெற்றிகள் அதிர்ஷ்டத்தில் வருபவை’, 'தோனி சிறந்த பேட்ஸ்மேனே அல்ல’, 'தோனியின் கேப்டன்ஷிப் வெளிநாடுகளில் எடுபடாது’, 'தோனிக்கு சரிவு காலம் ஆரம்பித்துவிட்டது’ - இப்படி அவர் தினம் தினம் எதிர்கொள்ளும் தாக்குதல்கள் ஏராளம். அதற்கு அவரது அமைதியான பதில். 'நான் வீட்டில் மூன்று நாய்களை வளர்க்கிறேன். நான் போட்டியில் தோற்றாலும் சரி, ஜெயித்தாலும் சரி, அவை என்னிடம் ஒரே மாதிரிதான் நடந்துகொள்கின்றன!’

2015-ம் ஆண்டு உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு தோனி ஓய்வுபெற்றுவிடுவார் என எதிர்பார்ப்பு கிளம்ப, தோனி சிரித்துக்கொண்டே சொன்ன பதில், 'எனக்கு 33 வயதுதானே ஆகிறது’!

இன்னும் எத்தனை காலம் தோனி தாக்குப்பிடிக்க முடியும், அடுத்தவர்களுக்கு வழிவிட்டு அவர் ஒதுங்கிக்கொள்ள வேண்டியதுதான் எனத் தொடர்ந்துவரும் எதிர்மறைக் கருத்துகளுக்கு அவர் நம்பிக்கையுடன் சொல்லும் பதில், 'ஒரு நாள் உலகக் கோப்பை, டி-20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி... இந்த மூன்று உலகக் கோப்பைகளையும் மீண்டும் ஒருமுறை ஜெயிக்க வேண்டும். முடியாதா என்ன?!’

கிரிக்கெட்டுக்கு வெளியே...

* 2014-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில், தோனிதான் உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட்டர்.

* ஜார்கண்ட் மாநிலத்திலேயே அதிகம் வருமான வரி செலுத்தும் நபர் தோனியே!

* ஆரம்ப காலத்தில் தனக்குப் பிடித்த பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாம் போல நீண்ட முடி வைத்திருந்தார். ஆனால், தன் காதலி சாக்‌ஷி கேட்டுக்கொண்டதால், ஷார்ட்கட் செய்துகொண்டார்.

* பல சர்வதேச நிறுவனங்களின் பிராண்ட் அம்பாஸிடர். தவிர, ஜார்கண்டில் தோனி ரஸமலாய் முதல் தோனி சமோசா வரை விற்பனையில் சக்கைப்போடுபோடுகின்றன.

* அசைவ விரும்பி. சிக்கன் மிகவும் பிடிக்கும். வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களுக்கு, தோனியின் மனைவி சாக்‌ஷி எலெக்ட்ரிக் குக்கருடனே கிளம்புவார், கணவருக்கு விருப்பமானதைச் செய்து கொடுக்க!

* தோனிக்குப் பிடித்த எண் 7. அவர் அணியும் ஜெர்ஸி எண் 7. அவரது பைக்குகளின், காரின் நம்பர் பிளேட்களிலும் 007. பின்னணியில் எண் கணித ஜோதிடம் இல்லை. தோனி பிறந்தது 7.7.81. அதனால் ஏழு மீது காதல்!

மாஸ்டர்களின் பார்வையில்...

'தோனி, இந்தியாவின் தலைசிறந்த கேப்டன். இந்திய கிரிக்கெட்டில் மாயங்கள் நிகழ்த்திய அவரது சாதனைகள் ஈடு இல்லாதவை!’

சவுரவ் கங்குலி.

'சாம்பலில் இருந்துகூட மீண்டெழும் வலிமை, தோனிக்கு இருக்கிறது!’

சுனில் கவாஸ்கர்.

'கடைசி ஆறு பந்துகளில் 15 ரன் தேவை என்றால், கவலையெல்லாம் பௌலருக்குத்தான். பேட்ஸ்மேன் தோனிக்கு அல்ல!’

இயான் பிஷப்.

நம்பர் 1 மகேந்திர சிங் தோனி - 07

'தோனி, வெறும் கிரிக்கெட்டர் அல்ல; மிகச் சிறந்த தலைவர்!’

வாசிம் அக்ரம்.

'என்னை ஓர் அணியைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால், அதில் சச்சின் தொடக்க ஆட்டக்காரர். தோனிதான் கேப்டன்!’

ஸ்டீவ் வாஹ்.

'நான் விளையாடியதிலேயே தோனியைப் போல் ஒரு சிறந்த கேப்டனைக் கண்டது இல்லை!’

சச்சின் டெண்டுல்கர்

களத்தில் வெற்றிக்கு, கேப்டன் தோனியின் 10 கட்டளைகள்

நம்பர் 1 மகேந்திர சிங் தோனி - 07

* கூட்டத்துக்காக விளையாடாதே... உனக்காகவும் விளையாடாதே. அணிக்காக மட்டும் விளையாடு!

* போட்டிக்கு முன் நல்ல ஓய்வு, மன அமைதி அவசியம். களத்துக்கு வெளியே கிரிக்கெட் பேசாதே!

* பிறர் மீதான கோபத்தை, களத்தில் காட்டாதே. அதற்கு டிரெஸ்ஸிங் ரூம் இருக்கிறது!

* எதிர் அணியினரை எப்போதும் குறைவாக எடைபோடாதே!

* எந்த நெருக்கடியிலும் நிதானம் இழக்காதே. தலைவனின் பதற்றம், அணியையும் தொற்றிக்கொள்ளும். எதையும் எளிமையாக எதிர்கொள்!

* எந்தப் பந்திலும் ஆட்டத்தின் தலை விதி மாறலாம். ஒவ்வொரு பந்துக்கும் வியூகம் அமை!

* வெற்றி மீது ஆசை வை. எப்போதும் 100 சதவிகிதத்துக்கும் மேலான உழைப்பை களத்தில் காட்டு. போட்டியின் முடிவுகளைப் பற்றி அலட்டிக்கொள்ளாதே!

* வேகமாக முடிவெடு. எடுத்த முடிவில் நம்பிக்கை வை!

* தவறுகளைத் தைரியமாக ஒப்புக்கொள்!

* தோல்விக்கு நீ மட்டும் பொறுப்பு ஏற்றுக்கொள்; வெற்றிக்கு அணியினரைக் கைகாட்டு!