சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 9,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி படைத்தார்.
Photo Credit: BCCI
கான்பூரில் நடந்துவரும் நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அவர் இந்த மைல்கல்லை எட்டினார். இந்த போட்டியில் 83 ரன்களைக் குவித்தபோது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 9,000 ரன்களை எட்டினார். 194-வது இன்னிங்ஸில் 9,000 ரன்களைக் கடந்த விராட் கோலி, 205 இன்னிங்ஸ்களில் 9,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்திருந்த தென்னாப்பிரிக்காவின் டிவிலியர்ஸின் சாதனையை முறியடித்தார். இந்தப் பட்டியலில் 228 இன்னிங்ஸ்கள், 235 இன்னிங்ஸ்களுடன் முறையே கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் 3, 4-வது இடங்களைப் பிடித்துள்ளனர்.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. இதனால், இன்றைய போட்டியில் வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும். போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங் தேர்வுசெய்தது. இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர் தவான் விரைவில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இருப்பினும், இரண்டாவது விக்கெட்டுக்கு ரோகித் ஷர்மாவுடன், கைகோத்த கேப்டன் கோலி விரைவாக ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 230 ரன்கள் குவித்தது. ரோகித் ஷர்மா 147 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கான்பூர் மைதானத்தில் ஒரு ஜோடி குவிக்கும் அதிகபட்ச ரன் இதுவாகும். 44 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் குவித்துள்ளது. 96 பந்துகளில் சதமடித்த விராட் கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 32-வது சதத்தைப் பதிவுசெய்தார்.