Election bannerElection banner
Published:Updated:

மிஸ்ட்ரி பிட்ச், மிடில் ஆர்டர் இம்சை, பிளாக் கேப்ஸின் வியூகம்... கோலி படை சமாளிக்குமா? #INDvNZ

மிஸ்ட்ரி பிட்ச், மிடில் ஆர்டர் இம்சை, பிளாக் கேப்ஸின் வியூகம்... கோலி படை சமாளிக்குமா? #INDvNZ
மிஸ்ட்ரி பிட்ச், மிடில் ஆர்டர் இம்சை, பிளாக் கேப்ஸின் வியூகம்... கோலி படை சமாளிக்குமா? #INDvNZ

மிஸ்ட்ரி பிட்ச், மிடில் ஆர்டர் இம்சை, பிளாக் கேப்ஸின் வியூகம்... கோலி படை சமாளிக்குமா? #INDvNZ

மும்பையிலிருந்து புனேவுக்குப் பயணித்துள்ளது கிரிக்கெட் புயல். சமீபத்தில் ஒவ்வொரு ஒருநாள் தொடரையும் வெற்றியோடு தொடங்கிய இந்திய அணிக்கு, அதிர்ச்சி அளித்துள்ளது நியூசிலாந்து. இந்தத் தோல்வியை மகாராஷ்ட்ராவிலேயே துரத்திவிட்டு, வெற்றிப்பயணத்தைத் தொடங்கக் காத்திருக்கிறது கோலி அண்ட் கோ. ஆடுகளம் சாதகமாக அமையுமா? மிடில் ஆர்டர் பிரச்னைகளைச் சரிசெய்யுமா? மீண்டும் விக்கெட் வேட்டை நடத்துவார்களா நம் ஸ்பின்னர்கள்? #INDvNZ

புனே மைதானம் எப்படி? 

போட்டி நடக்கும் புனேவின், மகாராஸ்ட்ரா கிரிக்கெட் சங்க மைதானம் கணிக்க முடியாத ஒன்று. ஆஸ்திரேலிய அணியுடன் பிப்ரவரி மாதம் இங்கு டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணி, படுதோல்வியடைந்தது. முதல் நாளில் இருந்தே ஆடுகளும் சுழலுக்கு உதவ, போட்டி மூன்றே நாள்களில் முடிவுக்கு வந்தது. சுழல் ஜாம்பவான் வார்னே "இந்த மைதானம் முதல் நாளில் இருந்தே, எட்டாவது நாள் ஆடுகளம் போல் இருந்தது" என்று குற்றம்சாட்டினார். அவர் மட்டுமல்ல, மொத்த மீடியாவும் அந்த ஆடுகளத்தைக் குறை கூறின. ஸ்பின்னர்கள் மட்டும் 29 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆனால், ஒரு மாதம் முன்பு ஜனவரியில் நடந்த, இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின்போது, ஆடுகளம் பேட்டிங்குக்குச் சாதகமாக இருந்தது. 38 ஓவர்கள் வீசிய இரண்டு அணிகளின் ஸ்பின்னர்களாலும் சேர்ந்து 1 விக்கெட் மட்டுமே எடுக்க முடிந்தது.

ஒருநாள் போட்டிகளுக்கும், டெஸ்ட் போட்டிகளுக்கும் ஆடுகளத்தை தயார் செய்வதில் வித்தியாசம் உண்டு. ஆனாலும் இந்த அளவுக்கு மாறுபட்ட அளவில் நடந்துகொள்ளும் பிட்சை நன்கு ஆய்வு செய்வது அவசியம். "ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியைப் போல் இல்லாமல், ஆடுகளம் இம்முறை நன்றாக இருக்கும். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகிறோம்" என்கிறார் புனே ஆடுகளப் பராமரிப்பாளர் பாண்டுரங் சால்கோன்கர். புனே மைதானத்தில் இதுவரை இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, தலா 1 வெற்றி, 1 தோல்வி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணியுடனான கடைசிப் போட்டியில், 350 ரன் டார்கெட்டை 11 பந்துகள் மீதமிருக்கையில் அற்புதமாக சேஸ் செய்தது இந்திய அணி.

இந்திய அணியில் மாற்றம் இருக்குமா?

முதல் போட்டியில் இந்திய அணி தோற்றதை ரசிகர்களால் நம்ப முடியவில்லை. ஆஸி அணியை மிரட்டிய நம் பவுலர்களும், மும்பையில் சோடை போயினர். கோலியைத் தவிர, வேறு எந்த பேட்ஸ்மேனும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. மிடில் ஆர்டர் சோகம் இன்னும் தொடர்கிறது. ஜாதவை 4, 5 என பொசிஷன் மாற்றி மாற்றி இறக்குகிறார் கோலி. ஆனால், பலன் இல்லை. அதனால், அவரை மாற்ற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், 'பார்ட் டைம்' பவுலிங் ஆப்ஷன் இல்லை என்பதால், கோலி அவ்வளவு சீக்கிரம் ஜாதவை நீக்கமாட்டார்.  இங்கிலாந்துடன் இந்த மைதானத்தில்தான் அவர் சதம் அடித்து, இந்திய அணியில் தன் இடத்தை உறுதி செய்தார். இந்தப் போட்டியிலும் அப்படியொரு பெர்ஃபாமென்ஸை அவர் கொடுப்பது அவசியம். 

மனீஷ் பாண்டேவுக்குப் பதிலாகக் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், ஓரளவு நன்றாக ஆடினார். பிரஷரை ஃபீல் செய்யாமல் இந்தத் தொடரில் முத்திரை பதித்தால், இந்திய அணியின் வோர்ல்ட் கப் பிளானில் இடம்பெறலாம். இங்கிலாந்துடனான அந்த அற்புத சேஸிங்கில், ஜாதவுக்கு முன்பாக சதமடித்து ஆட்டத்தை நம் பக்கம் கொண்டுவந்தவர், 'சேஸ் மாஸ்டர்' கோலி. கடந்த போட்டியிலும் சதமடித்து ரன் வேட்டையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இன்னும் மிடில் ஆர்டர் செட் ஆகாத நிலையில், ஜாதவை அடிக்கடி பொசிஷன் மாற்றுவதையும் கோலி தவிர்க்க வேண்டும். கார்த்திக்கை நான்காவது வீரராகவும், ஜாதவை ஐந்தாவதாகவும் இறக்குவதே அவர்கள் இருவரின் கேம்களுக்கும் செட்டாகும். 

மிடில் ஓவர்களில் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளைப் பந்தாடிய சாஹல், குல்தீப் யாதவ் கூட்டணி நியூசிலாந்துக்கு எதிராக ஜொலிக்கத் தவறியது. லாதம், டெய்லர் கூட்டணியைப் பிரிக்க முடியாமல் இவர்கள் தடுமாற, வேகப்பந்துவீச்சாளர்களாலும் சோபிக்க முடியவில்லை. அஷ்வின், ஜடேஜா எனும் மாபெரும் கூட்டணியை ரீப்ளேஸ் செய்திருப்பதால், ஒரு போட்டியில் சோபிக்காவிட்டாலும், நெகடிவ் ரிவ்யூக்களைச் சந்திக்க நேரிடும். அதனால், புனேவில் அவர்கள் விக்கெட் வேட்டை நடத்த வேண்டியது அவசியம். பாண்டியா சிக்கனமாகப் பந்துவீசியது அணிக்கு நம்பிக்கை. அதேசமயம். அவர் பேட்டிங்கில் கொஞ்சம் பொறுமை அவசியம்.

பிளாக் கேப்ஸ் படு ஸ்ட்ராங்!

இந்தியா வந்து விளையாடிய அணிகளில், நல்ல பிளானோடு வந்து விளையாடிய அணி நியூசிலாந்துதான். இந்திய பேட்ஸ்மேன்களில் இருந்து, ஸ்பின்னர்கள் வரை, எப்படி எதிர்கொள்வது என்று பிளான் போட்டு அடித்தனர். போல்ட்டின் அசுர வேகமும், அக்யூரசியும் இந்திய பேட்ஸ்மேன்களை அலறவைத்தது. சௌதியும் நல்ல ஃபார்மில் இருப்பது நம்பிக்கை. வில்லியம்ஸன் தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவருமே நன்றாகவே விளையாடினர். மிகவும் சிக்கல் தரக்கூடிய ஸ்பின்னர்களைக் கையாண்ட விதத்திலேயே, இந்தத் தொடருக்கு அவர்கள் எவ்வளவு தயாராக வந்துள்ளனர் என்பது தெரிந்தது. ஆனால், நியூசிலாந்து அணியின் கேப்டனும் அடிக்கடி சொதப்ப மாட்டார். கோலிக்குச் சளைத்தவர் இல்லையே அவர். அதனால் இந்தப் போட்டியில் தன் தரத்தை நிரூபிக்க கம்பேக் கொடுப்பார். இந்திய வீரர்கள், அவரை மிகவும் கவனமாக எதிர்கொள்வது அவசியம். மொத்தத்தில் நியூசிலாந்து அணி அதிக நம்பிக்கையோடு களம் காண்கிறது.

இரண்டு அணிகளும் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை. காலின் கிராந்தோமை வேண்டுமானால் நியூசி அணி மாற்றலாம். ஆட்டம் பகல் 1.30 மணிக்குத் தொடங்கும். நியூசிலாந்து அணியின் நம்பிக்கையைக் குலைத்து, இந்தத் தொடரில் கம்பேக் கொடுக்க, இந்திய அணி முதல் பந்தில் இருந்தே அவர்களை டாமினேட் செய்ய வேண்டும். தங்களின் வழக்கமான திட்டங்களை மாற்றி, ஏதேனும் ஆச்சர்யம் தந்தால் 'பிளாக் கேப்ஸ்' அணியை எளிதாய் வீழ்த்தலாம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு