Published:Updated:

`மிஷன் 2019' லோடிங்... கோலி படை உலக சாம்பியனுக்கு சொன்ன மெசேஜ்! #IndVsAus

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`மிஷன் 2019' லோடிங்... கோலி படை உலக சாம்பியனுக்கு சொன்ன மெசேஜ்! #IndVsAus
`மிஷன் 2019' லோடிங்... கோலி படை உலக சாம்பியனுக்கு சொன்ன மெசேஜ்! #IndVsAus

`மிஷன் 2019' லோடிங்... கோலி படை உலக சாம்பியனுக்கு சொன்ன மெசேஜ்! #IndVsAus

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``ஆஸ்திரேலியா என்றால் பயம். 1996-ம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான்'' என்று எல்லோரும் சொல்லியபோது, இறுதியில் இலங்கையிடம் கோப்பையை இழந்த அந்தத் தருணத்திலிருந்து கங்காரு தேசத்தின் ஆதிக்கம் தொடங்கியது. அதன்பிறகு, தொடர்ச்சியாக மூன்று உலகக்கோப்பைகள். அதுவும் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற உலகக்கோப்பைகளை வென்று, `கிரிக்கெட் உலகில் எங்களைத் தாண்டி செல்லவேண்டுமென்றால், அதற்கு எங்களைப்போலவே ஆடவேண்டும். அப்படி விளையாட எங்களால் மட்டும்தான் முடியும்' எனச் சொல்லாமல் சொல்லி வந்தார்கள். ஒரு தொடராக இல்லையென்றாலும், அவ்வப்போது அங்கும் இங்கும் ஆஸ்திரேலியாவை வெல்வதே பெரும் வெற்றி என இந்தியா உள்பட மற்ற நாடுகள் அனைத்தும் நினைத்தன.


1998-ம் ஆண்டில் ஷார்ஜாவில் சச்சின் தனி ஆளாக எதிர்கொண்டவிதம், கென்யாவில் நடைபெற்ற மினி உலகக்கோப்பையில் யுவராஜ் ஆடிய ருத்ரதாண்டவம், கொல்கத்தாவில் ஹர்பஜனின் ஹாட்ரிக், டிராவிட் & லக்ஷ்மண் மாரத்தான் கூட்டணி, பிரிஸ்பேனில் கங்குலி உயிரைக் கொடுத்து அடித்த நூறு, அடிலெய்டில் டிராவிட்டின் இரட்டைச் சதம், அகர்கரின் அசகாய ஆறு விக்கெட்டுகள், தோனி தலைமையில் முதல்முறையாக 2007-2008 ஆண்டு காமன்வெல்த் பேங்க் தொடரில் வெற்றி என, உலக அரங்கில் இந்தியா மட்டுமே ஆஸ்திரேலியாவை அவ்வப்போது எதிர்த்து விளையாடிய அணி. இதனாலேயே, இந்தியாவை இந்தியாவில் எதிர்கொள்வதாயினும் சரி, சொந்த மண்ணில் விளையாட அழைத்தாலும் சரி, ஆஸ்திரேலியா மிகுந்த எச்சரிக்கை உணர்வோடும் ஆக்ரோஷத்தோடும் விளையாடும். கும்ப்ளே தலைமையில் சென்றபோது, சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக நிறைய விஷயங்கள் நடக்க, கும்ப்ளே வெறுத்துப்போய், ``இந்தப் போட்டியில் ஓர் அணி மட்டுமே நேர்மையாக விளையாடியது. அது எந்த அணி என்பதை நான் சொல்லத் தேவையில்லை" என்று வார்த்தைகளால் எரிக்க, எப்போதுமே எரிந்துகொண்டிருக்கும் தனலில் பெட்ரோல் கொட்டிய செயலாகிப்போனது. அதன் பிறகு இந்தியா – ஆஸ்திரேலியா எப்போதெல்லாம் சந்தித்துக்கொள்கிறதோ, அப்போதெல்லாம் `நெருப்புடா’தான்.
 
டெஸ்ட் போட்டிகளில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தொடரை மட்டும் 1 - 2 என இழந்தாலும், இந்திய அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியர்களுக்கு எதிராகத் தோற்றதே இல்லை. ஆனால், 2000-க்குப் பிறகு ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் கைப்பற்ற முடியாமல் திணறியது. 2001 (2 - 3), 2007 (2 - 4), 2009 (2 - 4) என ஒரு நாள் தொடர்களை இழந்தது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமே! அதுவும் 2008-ம் ஆண்டு தோனி தலைமையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் குவித்த பிறகும் இது சாத்தியப்படவில்லை என்றபோது, என்ன செய்தால் உலகின் தலைசிறந்த அணியை வெற்றிகொள்ள முடியும் என ஆராய்ந்து சமர்பிக்கப்பட்ட கட்டுரைகள் ஏராளம். எங்கும் எப்போதும் வயது வித்தியாசமின்றி, எப்படிப்பட்ட வீரர்கள் கிடைத்தால் ஆஸ்திரேலியாவை வெல்லலாம் என பெருமூச்சு விட்டுக்கொண்டே இந்திய ரசிகர்கள், தோற்ற தினங்களைக் கடந்தார்கள்.

2010-ம் ஆண்டில் மூன்று ஆட்டங்கள்கொண்ட தொடரில் இரண்டு ஆட்டங்கள் மழையால் ரத்தாக, ஒரே போட்டியில் இந்தியா வெற்றிபெற்று தொடரை கைப்பற்றினாலும் அது பெரிய ஆறுதலாக அமையவில்லை. அதற்கடுத்த வருடத்தில், உலகக்கோப்பையின் காலிறுதியில் பலம்வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு, வியர்வையும் ரத்தமும் கொட்டக் கொட்ட கடைசிவரை நின்று வெற்றி தேடித் தந்தார் யுவராஜ் சிங். அதன் பிறகு, ஏழு போட்டிகள்கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்க, 14 வருடங்களில் முதல்முறையாக, `உலக சாம்பியன்ஸ்' என்ற அடைமொழி இல்லாமல், இந்தியாவை எதிர்கொள்ள வந்தது ஆஸ்திரேலியா. சேவாக், சச்சின், காம்பீர், ஜாகிர், நெஹ்ரா என உலகக்கோப்பையை வென்ற அணியில் பாதி வீரர்கள் இல்லை. தோனிக்கு, அடுத்த உலகக்கோப்பைக்கு தரமான ஓர் அணியை உருவாக்க வேண்டும் என்ற கட்டாயம். தவான், ரோஹித், கோலி என முதல் மூன்று வீரர்கள் அரண்களாக நிற்க ஆரம்பித்தார்கள். இமாலய இலக்குகளைக்கூட அசால்ட்டாகக் கடந்தனர். ரோஹித் பெங்களூரில் இரட்டைச் சதம் அடித்து, தொடரை 3-2 என வென்றபோது, `உண்மையாகவே இந்தியா உலக சாம்பியன்தான்' என்று ரசிகர்கள் அங்கீகரிக்க ஆரம்பித்தனர்.
 
2011-ம் ஆண்டு உலகக்கோப்பை முடிந்து ஒரு தலைமுறை மாற்றத்தை எதிர்கொண்டவேளையில் பெற்ற அந்தத் தொடர் வெற்றி, இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கத் தொடங்கியது. அதேபோல் இப்போதும், இரண்டு வருடங்களில் இங்கிலாந்தில் நடக்கப்போகும் உலகக்கோப்பையை எதிர்கொள்ளத் தயாராகும்போது, `தற்போதைய உலக சாம்பியன் அணியை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம்?' என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் இருந்தது.

என்னதான், அரசர்களின் ஆட்சி இந்தியா முழுவதும் எப்போதோ முடிவுக்கு வந்துவிட்டாலும், சென்னையை ஆள்வது, மெர்சல் அரசன் தோனிதான். சென்னை ரசிகர்கள் அவர் மீதுகொண்டிருக்கும் சொல்லில் அடங்கா பாசமோ என்னவோ தெரியவில்லை, ரஹானே, ரோஹித், பாண்டே, ஜாதவ் என எல்லோரும் சொதப்ப, அணியை மீட்க மெரினாவின் அலையோசைகளின் சத்தத்தைத் தாண்டி மக்கள் ஆராவாரத்தோடு வந்தாலும், ரசிகர்களுக்காக அல்லாமல் அணிக்காக தன்னுடைய அடித்து ஆடும் தன்மையைக் குறைத்து உடன் ஆடிய ஹர்திக் பாண்டியாவை ஊக்குவித்து, அணியை சரிவிலிருந்து மீட்டார் தோனி. பாண்டியா 6, 6, 6 எனத் தொடர்ச்சியாக சிக்ஸர்கள் பறக்கவிட்டு, இந்திய ரசிகர்களுக்கு தேவனாகவும், ஆஸ்திரேலியாவுக்கு சைத்தானாகவும் மாறினார். மழையால் ஆட்டம் தடைபட, ஒரே நாளில் ஒருநாள் போட்டி மற்றும் டி20 என இரு வேறு ஆட்டங்களையும் ஒற்றை டிக்கெட்டில் பார்க்கும் வரம் பெற்றனர் சென்னை ரசிகர்கள். 21 ஓவரில் 164 ரன்கள் என்ற இலக்கை, சாஹல், குல்தீப் யாதவ் இருவரும் சுழற்றியடிக்க, 27 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய வெற்றிபெற்றது.

கொல்கத்தாவில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில், மீண்டும் ரோஹித் சீக்கிரம் வெளியேற, ரஹானே – கோலி ஜோடி சேர்ந்தது. பெரிய இலக்கை நோக்கிப் பயணிக்கையில் ஒரு ரன் அவுட். எதிர்பாராதவிதமாக கேப்டன் கோலியும் போல்டாகி வெளியேறினார். தட்டுத்தடுமாறி 250 ரன்களைக் கடந்தது. 15 வருடங்களுக்கு முன் ஹர்பஜன் ஹாட்ரிக் எடுத்ததைப்போல, ஆட்டம் அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் ஊசலாடிக்கொண்டிருந்த வேளையில், குல்தீப் யாதவின் ஹாட்ரிக்கால், அவரது சுழலைப்போலவே என்னவென்று அறிவதற்கு முன் தொடரில் 2-0 என்று முன்னிலை பெற்று இந்தியா, இந்தூருக்குப் பயணப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் முதல் நிலை வீரர்களில் ஒருவரான ஆரோன் ஃபின்ச், உடல்நிலை சரியில்லாமல் விலகியிருந்தார். முதலிரண்டு ஆட்டங்கள் கைகொடுக்காதநிலையில் ஃபின்ச்சின் வருகை தெம்பளித்தது. சரசரவென அடித்து ஆடிய தொடக்க வீரர்கள் நல்ல அடித்தளம் அமைத்துக்கொடுத்தாலும், பும்ரா – புவனேஷ் குமார் கூட்டணி, இறுதி ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்தியதால், 330 ரன்களுக்குமேல் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸி அணி, 300-க்குள் சுருண்டது. சுருட்டினர் இந்திய வீரர்கள். கூடவே அவர்களுக்குப் பிடித்தமான `சேஸிங்' கேமை விளையாடப் புறப்பட்டனர். துண்டு ஒரு முறைக்கு இரு முறை தவறிவிட்டது, இனிமேல் அது நடக்காது என்பதுபோல, ரோகித் அவருக்கே உரித்தான பாணியில், `புல்’, `ஹுக்’, `ஸ்லாக் ஸ்வீப்’ என பௌண்டரிகளை வெறுத்து சிக்ஸர்களாக அடித்து அருமையான அடித்தளம் அமைக்க, ரஹானே தன் பங்குக்கு சத்தமில்லாமல் அரை சதம் அடிக்க, அடிக்கவேண்டிய ரன்களில் தொடக்க வீரர்களே பாதியை அடித்தனர். பாண்டியா நான்காவது வீரராகக் களமிறங்க, ஆஸ்திரேலியா அதிர்ச்சியடைந்தது. நடு ஓவர்களில் ஸ்பின்னர்களைப் பதம்பார்க்கவே பாண்டியாவை அனுப்பியிருந்தாலும், கிட்டத்தட்ட அணியை வெற்றிக் கோட்டுக்கு அழைத்துச் சென்ற பிறகே அவுட் ஆனார். வெற்றிபெறும் வாய்ப்பிருந்தும் பேட்டிங், பௌலிங் இரண்டிலும் அசந்த நேரம் பார்த்து இந்தியாவிடம் முக்கியமான தருணங்களை இழந்து தொடரையும் இழந்தது ஆஸ்திரேலியா. ஒரு நாள் போட்டிகளில், இந்தியாவுடன் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோற்பதும் இதுவே அவர்களுக்கு முதல் முறை.

தமிழ்நாடு, மேற்குவங்கம், மத்தியப்பிரதேசம் எனப் பறந்து மீண்டும் தென்னிந்தியா வந்தன இரு அணிகளும். இந்த முறை பெங்களூரு. மழையின் அச்சுறுத்தலால் போட்டி நடைபெறுவதே சந்தேகம் என நினைக்கையில், போட்டி நடைபெற்ற நாளில் மட்டும் மழை மேகங்கள் பொறுமை காக்க, மீண்டும் வார்னர் - ஃபின்ச் ரன் மழை பொழிய ஆரம்பித்தனர். பும்ரா – புவனேஷ் இருவருக்கும் ஓய்வு அளித்துவிட்டு, ஷமி – உமேஷ் என வேகப்பந்துக்கு கோலி டிக் அடிக்க, அக்‌ஷர் படேல் குல்தீப்பின் இடத்தை எடுத்துக்கொண்டார். 200 ரன்களுக்குமேல் விக்கெட் எதையும் இழக்காமல், வார்னர் செஞ்சுரி அடிக்க, ஃபின்ச் 95 ரன்களில் வெளியேறி தொடர்ந்து இரண்டு சதங்கள் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஒரு நாள் ஆட்டங்களில் முப்பது ஓவர்களின் இறுதியில் இருக்கும் ரன்களை அப்படியே டபுள் ஆக்குவது வழக்கம். அப்படிப் பார்க்கையில், 350 ரன்களுக்குமேல் அடிப்பார்கள் என எதிர்பார்த்த நேரத்தில், நேர்த்தியான இறுதி ஓவர்களால் 332 ரன்களுக்குள் கொண்டுவர, நான்கு வருடங்களுக்கு முன்னர் இதைவிட பெரிய இலக்குகளை எல்லாம் எட்டிப்பிடித்த நினைவுகள். ஒரு ஸ்பெஷல் தருணத்துக்காக ரசிகர்கள் ஆவலோடு இருக்க, ரோஹித் ரஹானே மீண்டும் 100 ரன்களுக்குமேலாக அடித்தளம் அமைக்க, எவரையும் விட்டுவைக்காமல் சிக்ஸர்களாக ரோஹித் பறக்கவிட, ஸ்டீவன் ஸ்மித்தின் அசாத்திய ஃபீல்டிங்கால் குழப்பம் ஏற்பட்டு, ரோஹித் ரன் அவுட்டாகி வெளியேற, ஆட்டம் திசைமாறத் தொடங்கியது. ‘சேஸிங்கின் ராஜா’ கோலி இரண்டாம் முறையாக தொடர்ந்து ஆட்டத்தை முடிக்காமல் வெளியேற, கள நடுவர்களுக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் மட்டும் மழை பெய்வதை போன்ற மாயை ஏற்பட, 15 நிமிடம் ஆட்டம் தடைபட்டது. அப்போதுதான் ஜாதவ்வும் – பாண்டேவும் வெற்றியை நோக்கி அடித்து ஆட ஆரம்பித்தனர். அந்த ‘மொமன்டம்’ தடைபடவே இருபது ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை விருந்தினர்கள் பதிவுசெய்தனர்

கர்நாடகாவிலிருந்து கடைசி ஆட்டதுக்கு இந்தியாவின்  நாக்பூர் வந்த இரு அணிகளும், தொடர் ஏற்கெனவே முடிவுசெய்யப்பட்ட நிலையில் தங்களது தரவரிசைக்காகவும், அடுத்துவரும் இருபது ஓவர் தொடரை வெற்றியோடு அணுகுவதற்கும் இந்தப் போட்டியைத் தீவிரமாகக் கையாண்டனர். டாஸில் வெற்றிபெற்று பேட்டிங் தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலியா, முதல் பத்து ஓவர்களில் விக்கெட் ஏதும் இழக்காமல் நிதானமாக ஆடினாலும், பாண்டியா முதல் விக்கெட்டை வீழ்த்தி அரணை உடைக்க ஆரம்பித்தார். ஜாதவின் பார்ட் டைம் ஸ்பின், ஸ்மித்தை பெவிலியன் அனுப்ப, கிடைத்த கேப்பில் கோலி ஆட்டோ ஓட்ட தொடங்கிவிட்டார். அடுத்தது சீரான இடைவெளியில் விக்கெட்டை, வீழ்த்த 250 ரன்களுக்குள் சுருண்டது ஆஸ்திரேலியா.

இந்தியத் தரப்பில் ஒரு சதம்கூட ஒட்டுமொத்தத் தொடரிலும் இல்லையே என ஆதங்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், ஹிட்மேன் ரோஹித் இந்த முறை பொறுமையாக ஆரம்பித்து அடித்து ஆடினார். முதல் 14 பந்துகளில் கணக்கைத் தொடங்காமல் ஆடுகளத்தின் தன்மையை ஆராய்ந்துவிட்டு, அடுத்தடுத்து இரண்டு பௌண்டரிகள் விளாச, ரஹானே தன் பங்குக்கு நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் ரன்ரேட்டைக் கட்டுக்குள் வைத்திருந்தார். தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் செஞ்சுரி கூட்டணி என்று முதல் இருபது ஓவர்களிலேயே வெற்றியை உறுதிப்படுத்தினர் இருவரும். தொடரில் தன்னுடைய நான்காவது அரை சதத்தைப் பதிவுசெய்து ரஹானே ஆட்டமிழக்க, தன்னுடைய டிரேட்மார்க் சிக்ஸர்களுடன் ரோஹித் தன்னுடைய 14-வது சதத்தை அடித்து, ஒரு நாள் ஆட்டங்களில் 6,000 ரன்களைக் கடந்தார். பத்து ஓவர்கள் மீதமிருக்கும் வேளையிலேயே வெற்றியைப் பதித்து 4 - 1 என்ற பெரிய வித்தியாசத்தில் தொடரைக் கைப்பற்றியது இந்தியா.

வெற்றிபெறும்போது சில கேள்விகள் மறைந்துவிடுவது இயல்பு. ஆனால், `உலகின் தலைசிறந்த ஒரு நாள் அணியாக, எங்கும் எப்போதும் எல்லோரையும் தைரியமாக எதிர்கொள்ளக்கூடிய அணியாக உருவாகிவிட்டதா?' என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதா என்றால், இல்லை என்றே கூற வேண்டும். தவான் மீண்டும் வந்தால், ரஹானே என்ன ஆவார்? மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்தத் தொடர் என இரண்டிலும் பிசிறில்லாமல் விளையாடிய ரஹானேவை வழிவிடச் சொல்வதென்பது கொஞ்சம் கடினம்தான். மத்திய வரிசை ஆட்டக்காரர்களில் ஜாதவ், பாண்டே, கே.எல்.ராகுல், பாண்டியா என வீரர்கள் ஒருவருக்கொருவர் இடத்தைப் பிடிக்க போட்டிபோட்டாலும் இப்போதைக்கு அந்த இடத்தைத் தக்கவைத்துள்ளது பாண்டியா மட்டுமே. இவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் பொருட்டு, தோனியை ஏழாவது வீரராக மட்டுமே களமிறக்குவது சில நெருடல்களை ஏற்படுத்தாமல் இல்லை. எப்படி இளம் வீரர்களுக்கு நிறைய வாய்ப்புகளைக் கொடுப்பது முக்கியமோ, அதேபோல முடிந்தவரை தோனியிடமிருந்து அவரின் சேவையை, திறமையைப் பெற்று வெற்றிகளைக் குவிக்க வேண்டும்.

இந்தத் தொடரின் சிறப்பம்சமே, இந்த வெற்றிகள் அனைத்தும் ஓரிரு வீர்களால் மட்டுமே பெற்றவை அல்ல. ரஹானே, ரோஹித், கோலி, ஜாதவ், தோனி, அக்‌ஷர், பும்ரா, புவி, குல்தீப், சாஹல், அட... ஜடேஜா கூட இரண்டு ஆட்டங்களில் ஃபீல்டிங் மட்டும் செய்து வெற்றிக்கு உதவினார். ஒரு குழுவாக ஒவ்வொருவரும் வெற்றிக்கு வித்திடுவது மெச்சக்கூடிய விஷயம். எப்போதெல்லாம் நெருக்கடியான சூழல் ஏற்பட்டதோ, அப்போதெல்லாம் கோலிக்கு திரும்பிய பக்கமெல்லாம் பக்கபலமாக யாரவது ஒருவர், `நான் இருக்கிறேன், என்னிடம் பொறுப்பைக் கொடுங்கள்' என்று கேட்டு வாங்கக்கூடிய நிலைக்கு அணி வந்திருப்பதாகத் தெரிகிறது.  

2019-ம் ஆண்டு வெகு தரத்தில் இருப்பதைப்போல தெரிந்தாலும், மொத்தம் 30 ஒரு நாள் போட்டிகளே இந்தியாவிடம் உள்ளன. அதற்குள், உலகத்தரமான உலகை வெல்லக்கூடிய 15 வீரர்களை, கோலி – ரவி சாஸ்திரி கண்டறிய வேண்டும். மிஷன் உலகக்கோப்பைக்கு, தற்போதைய உலக சாம்பியன் அணிக்கு எதிராக இந்த வெற்றி நல்ல தொடக்கமாக அமையும் என நம்புவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு