Published:Updated:

இந்தியாவில் கால்பந்து மிருகம் விழித்துவிட்டது! #BackTheBlue #FIFAU17WC

இந்தியாவில் கால்பந்து மிருகம் விழித்துவிட்டது! #BackTheBlue #FIFAU17WC

17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்துத் தொடர், அக்டோபர் 6-ம் தேதி  தொடங்கவிருக்கிறது. 87 வருட உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இந்திய அணி கலந்துகொள்ள இருக்கிறது. இதில், 24 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இந்தியா நேரடியாக உலகக் கோப்பைக்குத் தகுதிபெற்றது. ஆனால், இந்தத் தொடர் நமக்கு அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. ஏனென்றால், இந்திய அணியைத் தவிர மீதமிருக்கும் 23 நாடுகளும் கண்டங்கள் வாரியாக நடத்தப்பட்ட தகுதிச்சுற்றுப் போட்டிகளில் பலத்தை நிரூபித்தே இங்கு வந்துள்ளன. 

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் இந்த 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வெல்லும் கனவு இந்திய அணிக்கு இருந்தாலும், அது இரண்டாம்பட்சம்தான். ஏனெனில், இந்தச் சவால் நிறைந்த போர்க்களத்தில் இளம் இந்திய வீரர்கள் எப்படி தங்களை நிரூபிக்கப்போகின்றனர் என்பதுதான் ஒட்டுமொத்த இந்திய கால்பந்து ரசிகர்களின் கேள்வி. இரண்டு வருடங்களுக்கும் மேலாக திறமையான இளம் இந்திய வீரர்கள், முன்னாள் இந்திய வீரரான அபிஷேக் யாதவால் அடையாளம் காணப்பட்டனர். அவர்களுக்கு கடினமான பயிற்சி வழங்கப்பட்டது. பல்வேறு கட்ட சோதனை, பயிற்சிக்குப் பின் இந்திய அணியின் ஜெர்சியை அணிய தகுதியுடைய வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். 

இந்த வீரர்களுக்கு கோடிகளைக் கொட்டி வெளிநாடுகளில் கடினமான சூழ்நிலைகளில் சிறப்பாகச் செயல்படுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதுவரை வேறு எந்த விளையாட்டுக்கும், வேறு எந்த இளம் அணிக்கும் இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) இவ்வளவு செலவு செய்யவில்லை. இந்தத் தொடரில் பங்கேற்கும் மற்ற அணிகளைப்போல, இந்திய அணிக்கு பழம்பெருமை வரலாறு எதுவும் இல்லைதான். ஆனாலும் நம் வீரர்கள், இந்தச் சவாலை `வெற்றி பெற வேண்டும்' என்ற கனவோடுதான் எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் கையிலிருப்பது இந்திய கால்பந்தின் எதிர்காலம் மட்டுமல்ல; இந்திய விளையாட்டுத் துறையின் எதிர்காலமும்தான்.

போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த  லூயிஸ் நார்டன் டி மடோஸின் பயிற்சியின் கீழ், 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து அணி எல்லா வகைகளிலும்  முழுமைபெற்ற ஓர் அணியாகவே விளங்குகிறது. தரவரிசை பற்றியெல்லாம் கவலைப்படாமல், களத்தில்  90 நிமிடமும் போராடி பந்தை வெல்ல வேண்டும் என்ற ஆர்வமே, பிற போட்டியாளர்களிடமிருந்து நம் அணியை வேறுபடுத்திக்காட்டுகிறது. சமீபத்தில் சிலி அணியோடு 1-1 என்ற கோல்கணக்கில் டிரா செய்த இந்திய அணியினரின் தைரியத்தைப் பார்த்த பயிற்சியாளர் நார்டன், `இந்திய அணி, எதிர்வரும் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரின் கால் இறுதி வரை முன்னேறும்' என உறுதியளித்திருக்கிறார். இந்திய அணி, தனிப்பட்ட ஒரு வீரரின் திறமையை நம்பாமல் கூட்டுமுயற்சியின் மூலமே வெற்றியை எதிர்நோக்கியிருந்தாலும்,  நம் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கப்போகும் சில கீபிளேயர்களும் இருக்கிறார்கள்.

கோமல் தடால், இந்தியாவின் மிரட்டல் மிட்ஃபீல்டர்; பிளே மேக்கர், அட்டாக்கிங்கில் கில்லி. ஆட்டத்தின் போக்குக்கு ஏற்ப வேகத்தை மாற்றி முடிந்தவரை பந்தைத் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கும் ஆற்றல்கொண்டவர். சிக்கிமைச் சேர்ந்த இவர்தான், கடந்த 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிக்ஸ் (BRICS) தொடரில் பிரேசில் அணிக்கு எதிராக கோல் அடித்தார். பிரேசில் அணிக்கு எதிராக கோல் அடித்த ஒரே இந்திய வீரரும் இவர்தான்.

‘டெட் பால் ஸ்பெஷலிஸ்ட்’ என்றழைக்கப்படும் சஞ்சீவ் ஸ்டாலின்தான் கடந்த செப்டம்பரில் நடந்த 16 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை சாம்பியன்ஷிப்பில் கோல் அடித்த முதல் இந்திய வீரர். பயிற்சிப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்ட இவர், விங்கராகவும் ஸ்ட்ரைக்கராகவும் ஆடக்கூடியவர். தேவைப்பட்டால் டிஃபென்ஸிலும் தன் திறமையைக் காட்டுவார்.

பஞ்சாப்பைச் சேர்ந்த டிபெண்டர் ‘உயர்ந்த மனிதன்’ அன்வர் அலி. பின் களத்தில் பட்டையைக் கிளப்பக்கூடியவர். கடந்த ஏப்ரலில்தான் அணியில் சேர்க்கப்பட்டாலும், அணியில் தன் இடத்தை முதலில் உறுதிசெய்தவர்களில் இவரும் ஒருவர். சமீபத்தில் ஐரோப்பாவில் இந்திய அணி விளையாடிய பயிற்சிப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.

உலக கால்பந்து மேடையில் தங்களது பெயரைப் பொறிக்க இதுவே சரியான தருணம் என்பதை நம் வீரர்கள் அறிவர். அதற்கு தயாரான நிலையில் முழுமையான ஓர் அணியாக வெற்றியை எதிர்நோக்கியிருக்கின்றனர். ஐரோப்பா மற்றும் தெற்கு அமெரிக்க அணிகளைப்போல் மாபெரும் பலமிக்க அணியாக இல்லாமல் இருந்தாலும், நம் வீரர்களுக்கு அனுபவம் குறைவு என்றாலும், உடல் தகுதியிலும் மனநிலையிலும் நம் வீரர்கள் வலுவாக இருக்கின்றனர். அதுவே அவர்கள் இந்தத் தொடரில் சாதிக்க ஊன்றுகோலாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இந்தப் படை இளம் படை. போதுமான அனுபவம் இல்லாவிட்டாலும் பயம் அறியாத படை. நம் வீரர்கள் திறமையானவர்கள்; தைரியமானவர்கள். வெற்றியைக் குறிக்கோளாகக்கொண்டிருகிறார்கள். இந்திய கால்பந்து ரசிகர்களான நாம்தான் அவர்களை வெற்றிக்காக உற்சாகப்படுத்தவும், தோல்வியின்போது ஆதரிக்கவும் வேண்டும். ஏனெனில், இந்தச் சவால் நம் ஒட்டுமொத்த இந்திய விளையாட்டுக்கானது. இவர்கள் பெறப்போகும் வெற்றி, நம் ஒட்டுமொத்த இந்தியாவுக்குமானது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு