Published:Updated:

ரோஹித் அன்னிக்கு வெடிச்ச வெடி நாளைக்கும் வெடிக்குமா..? #IndVsAus

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரோஹித் அன்னிக்கு வெடிச்ச வெடி நாளைக்கும் வெடிக்குமா..? #IndVsAus
ரோஹித் அன்னிக்கு வெடிச்ச வெடி நாளைக்கும் வெடிக்குமா..? #IndVsAus

ரோஹித் அன்னிக்கு வெடிச்ச வெடி நாளைக்கும் வெடிக்குமா..? #IndVsAus

நவம்பர் 2, 2013. தீபாவளி. பக்கத்து வீட்டு அண்ணனோடு பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தேன். போன் ஒலித்தது. "மேட்ச் பாத்துட்டு இருக்கியா?" நண்பணின் குரல். "இல்லடா. வெடி வெடிச்சுட்டு இருக்கேன்". "டேய், நீ வெடிக்கிறதெல்லாம் என்ன வெடி? ரோஹித் வெடிச்சுட்டு இருக்கான் பாரு.. அதான் வெடி. டக்குனு போய் மேட்சப் பாரு" என்று க்யூரியாசிடியைக் கிளப்பினான். கால் கட் ஆகும் முன்பே டிவி முன் அமர்ந்திருந்தேன். ரோஹித் 197 நாட் அவுட். மிரண்டு போனேன். கடைசி மூன்று ஓவர்களில் 63 ரன்கள். என்ன நடக்கிறது எனப் புலப்படவில்லை. 114 பந்துகளில் சதமடித்திருந்த ரோஹித் இப்போது 155 பந்துகளில் 197 ரன்கள். எப்படி? புரியவில்லை. சச்சின் 200 அடித்த போது நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் நின்றிருந்த அதே மனிதன் இப்போதும் நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் - தோனி. இப்போதும் கடைசி ஓவர். ஆனால், முதல் பந்திலேயே சிக்சர் அடித்து, பேட்டை உயர்த்தி மாஸ் காட்டினார் ரோஹித். அன்று உண்மையில் தீபாவளியைக் கொண்டாடியது பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் தான். ஹைலைட்சைப் பார்த்தபோதே அவ்வளவு மிரட்சி. ஆஸ்திரேலிய ஃபீல்டர்களை மெல்போர்னுக்கே ஓடவிட்டுக்கொண்டிருந்தார். இம்முறை தீபாவளிக்கு இன்னும் 20 நாள்கள் இருக்கிறது. மீண்டும் அதே ஆஸ்திரேலிய அணியுடன் மோதவுள்ளது இந்தியா. ரோஹித் அன்று தீபாவளி கொண்டாடிய அதே சின்னசாமி மைதானத்தில்!


தொடரை வென்றுவிட்டோம். நம்பர் 1 ஆகிவிட்டோம். இனியும் தொடர் சுவாரஸ்யமாக இருக்குமா? இனிதான் சுவாரஸ்யமே. ஆஸ்திரேலிய அணியை... ஒருகாலத்தில் நாம் ஒரு போட்டியில் தோற்கடிப்பதையே பெரிதாய் நினைத்த ஆஸ்திரேலிய அணியை வைட்வாஷ் செய்ய வேண்டுமல்லவா. இனிதான் கிரிக்கெட் வெறியர்கள் இன்னும் வேட்கையோடு காத்திருப்பார்கள். மஞ்சள் உடையில் கரியைப் பூச வேண்டுமே. தமிழகத்தில் தொடங்கிய முதல் போட்டியின்போது இருந்த அதே உற்சாகம், காவிரியின் மறுமுனையிலும் இருக்கும். 

சின்னசாமி ஸ்டேடியம் எப்படி?

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம் நமக்கு நன்கு பரிட்சயம். ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் 'ஹோம் கிரவுண்ட்'. ரன்மழை பொழியும் இடம். இவை நமக்குத் தெரிந்ததே. ஆனால், சர்வதேசப் போட்டிகளில்? 50 ஓவர் ஆட்டங்களில்? இந்தியாவுக்கு இந்த மைதானம் வெற்றி மைதானம்தான். இங்கு விளையாடிய 19 போட்டிகளில் இந்திய அணி 13-ல் வென்றுள்ளது. 4 தோல்விகள்,  1 டை, 1 ஆட்டம் கைவிடப்பட்டது. ஆஸ்திரேலிய அணியுடன் ஆடிய 6 போட்டிகளில் 4-ல் வெற்றியை ருசித்துள்ளது. ஒரு ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வி கண்டது. ரோஹித் இரட்டை சதம் அடித்த அந்தப் போட்டிதான் இங்கு நடைபெற்ற கடைசி சர்வதேச ஒருநாள் போட்டி. அதன்பிறகு 4 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் மீண்டும் இங்கு ஒருநாள் போட்டி நடத்தப்படுகிறது.

கடந்த சில நாள்களாக பெங்களூரில் காலையில் இருந்தே மழை பெய்துவருகிறது. ஸ்டேடியம் இருக்கும் இடத்திலும் அவ்வப்போது மழை பெய்கிறது. தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வியாழக்கிழமை மழையின் வாய்ப்பு பற்றி இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்று பெங்களூரு வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. ஏற்கெனவே கடந்த 3 போட்டிகளும் மழையின் அச்சுறுத்தலுக்கு நடுவேதான் நடந்தது.

தொடருமா ரோஹித்தின் தீபாவளி?

அந்த ஆட்டத்தில் ரோஹித் ஆடிய ருத்ரதாண்டவத்தை ஆஸி வீரர்கள் மறந்திருக்க மாட்டார்கள். 114 பந்துகளில் சதமடித்தவர். அடுத்த 42 பந்துகளில் இரட்டைச் சதத்தை நிறைவு செய்துவிட்டார். அந்த இன்னிங்ஸில் 16 சிக்சர்கள். இந்நிலையில், 3-வது போட்டியிலும் அரைசதம் அடித்து நல்ல டச்சில் இருக்கிறார். ஸ்மித் அவருக்கு ஸ்பெஷல் பிளான் போடுவது நல்லது. ரோஹித் மட்டுமே அந்த ஆட்டத்தில் அடித்தார். கேப்டன் MSD-யும் தான். 38 பந்துகளில் 73 ரன்கள். இன்று அவர் அந்த ஆட்டத்தை ஆடப்போவது இல்லை. அந்த ரோலைத்தான்  இப்போது 'ராக்-ஸ்டார்' பாண்டியா எடுத்துக்கொண்டாரே! 3 போட்டிகளில் 2 ஆட்டநாயகன் விருதுகள். ஆஸி அணி மிகவும் எச்சரிக்கையாகக் கையாள்வது அவசியம்.


விராத் கோலி - சின்னசாமியின் செல்லப்பிள்ளை! இந்த ஆடுகளத்தைப் பற்றி இவரைவிட நன்கு அறிந்தவர் இருக்க முடியாது. பனி, ஸ்பின், பவுன்ஸ் என்று ஆட்டத்தின் போக்கை நிர்ணயிக்கும் அனைத்து 'ஃபேக்டர்ஸை'ப் பற்றியும் கோலி நன்கு அறிவார். எனவே, இந்தப் போட்டியில் அணியை வழிநடத்துவது அவருக்கு ஈசியாகவே இருக்கும். அணியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என 3-வது போட்டி முடிந்ததும் கூறியிருந்தார். இதுவரை ஆடாத ராகுல், உமேஷ், ஷமி ஆகியோரில் ஓரிருவர் இன்று ஆடலாம். காயத்துக்குப் பிறகு திரும்பியுள்ள அக்சர் படேல் அணியில் இணைந்துள்ளார். இரண்டு ஸ்பின்னர்களும் நன்றாகவே செயல்பட்டுள்ளனர். ஆனாலும் குல்தீப் சற்று ரன்கள் அதிகமாகக் கொடுப்பதால், நாளை அவருக்குப் பதில் அக்சர் களமிறங்கக்கூடும்.

மீண்டு எழுமா கங்காரு?

சென்னையில் அடிபட்ட கங்காரு என்னும் எழவே இல்லை. அவ்வப்போது பாய நினைத்தாலும், புலியிடம் மொத்தமாக சரண்டர் ஆகிவிடுகிறது. இந்தூரில் பேட்டிங்கில் கொஞ்சம் முன்னேற்றம் கண்ட நிலையில், பவுலிங்கில் சொதப்பியது. இந்த ஆட்டத்தில் ஸ்மித் நல்ல கேம் பிளானுடன் களம் காண வேண்டும். அந்த 2013 ஆட்டத்தில் ஆடிய வீரர்கள் நால்வர் இந்த ஆட்டத்தில் இருக்கின்றனர். அந்தப் போட்டியில் மேக்ஸ்வெல் (60 ரன், 22 பந்து), ஃபால்க்னர் (116 ரன், 73 பந்து) ஆகியோரும் தாண்டவம் ஆடினர். அவர்கள் தங்கள் அனுபவத்தைப் பயன்படுத்தினால் ஆஸி அணியின் எழுச்சிக்கு உதவும். அணித் தேர்விலும் சில மாற்றங்களைக் கொண்டுவருவது நல்லது. 15 வீரர்களையும் ஏற்கெனவே பயன்படுத்திவிட்ட ஸ்மித், சில வீரர்களை அணிக்கு மீண்டும் அழைக்கலாம். ஆஷ்டன் அகர் தொடரிலிருந்து வெளியேறிவிட்டதால், ஜாம்பா ஆடுவது உறுதி. இந்தூரில் பெரிதாக சோபிக்காத ஃபால்க்னருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கலாம். இந்த மைதானத்தில் ஆடிய அவரது அனுபவம், கடைசி கட்ட ஃபினிஷிங் போன்றவை அணிக்குக் கூடுதல் பலம். ஹேண்ட்ஸ்கோம்ப் கீப்பிங்கில் சற்று சுமார்தான். மாத்யூ வேடின் பேட்டிங்கும் மோசம். ஆனால், பெங்களூரு போன்ற மைதானங்களில் கீப்பரின் பங்கு முக்கியம் என்பதால் ஹேண்ட்ஸ்கோம்ப் நீக்கப்படலாம்.


மற்றபடி, இருக்கும் வீரர்களே தங்களின் கேம்-பிளானை மாற்றிக்கொள்வது அவசியம். ஸ்மித்துக்குப் பிறகு, மிடில் ஆர்டரின் தடுமாற்றம் அப்பட்டமாகத் தெரிகிறது. ஸ்டாய்னிஸ் மட்டுமே கொஞ்சம் தாக்குப்பிடிக்கிறார். மேக்ஸ்வெல், ட்ராவிஸ் ஹெட் இருவரும் ஒரு நல்ல இன்னிங்ஸ் விளையாட வேண்டும். ஃபின்சின் வருகை ஆஸி அணியை எவ்வளவு பலப்படுத்தியது என்று கடந்த போட்டியிலேயே பார்த்தோம். அவரும் வார்னரும் மீண்டும் ஒரு நல்ல ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தால் இந்தத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்யலாம்.


பகல்-இரவு ஆட்டமாக நடக்கும் இப்போட்டி, இந்திய நேரப்படி நாளை மதியம் 1.30-குத் தொடங்கும்.


உத்தேச அணி


இந்தியா : ரோஹித், ரஹானே, விராத் கோலி, மனீஷ் பாண்டே, கே.எல்.ராகுல், தோனி, பாண்டியா, அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, சாஹல்.


ஆஸ்திரேலியா : ஆரோன் ஃபின்ச், வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட், ஃபால்க்னர், ஆடம் ஜாம்பா, கம்மின்ஸ், கோல்டர்நைல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு