Published:Updated:

பாய்ச்சல் பாண்டியா... பலே இந்தியா... கோலி அண்ட் கோ இப்போ நம்பர் 1 #IndVsAus

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பாய்ச்சல் பாண்டியா... பலே இந்தியா... கோலி அண்ட் கோ இப்போ நம்பர் 1 #IndVsAus
பாய்ச்சல் பாண்டியா... பலே இந்தியா... கோலி அண்ட் கோ இப்போ நம்பர் 1 #IndVsAus

பாய்ச்சல் பாண்டியா... பலே இந்தியா... கோலி அண்ட் கோ இப்போ நம்பர் 1 #IndVsAus

16 பந்துகளுக்கு 3 ரன்கள் தேவை. ரிச்சர்ட்சன் வீசிய ஃபுல் டாஸ் பந்தை ஸ்கொயர் லெக் திசையில் அடித்துவிட்டு ஓடுகிறார் மனீஷ் பாண்டே. இரண்டு ரன்கள் ஓடியிருக்கலாம். ஆனால் அவர் அந்த சிங்கிளோடு ஹேப்பி. காரணம் இல்லாமல் இல்லை. ஹோல்கர் மைதானத்தில் அமர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான இந்திய ரசிகர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டுமல்லவா? 15 பந்துகளில் 2 ரன்கள். மிட் விக்கெட், லாங்-ஆன்,ஸ்கொயர் லெக் திசையில் அமர்ந்திருந்த ஒவ்வொரு ரசிகனும் பந்தைப் பிடிக்க தயாராகிக்கொண்டு இருக்கிறான். காரணம், ஸ்ட்ரைக்கர் எண்டில் நிற்பது - தோனி... மகேந்திர சிங் தோனி! 

மைதானத்தில் இருந்த ஆயிரக்கணக்கானவர்களும் சரி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் முன் அமர்ந்திருந்தவர்களும் சரி, அவருடைய ஆஸ்தான 'வின்னிங் சிக்ஸருக்கு'வெயிட்டிங்.  ஆஃப் சைடில் ஒரு ஷார்ட் பால். ஃபைன்-லெக் திசையில் தட்டிவிட்டு சிங்கிள் எடுக்கிறார். இந்தூரில் வீசிய அந்த இரவு நேரக் காற்றில் எக்கச்சக்க ஏமாற்றம். ஆனால் "இதுதாண்டா தோனியின் பெருந்தன்மை. எப்பவும் போல சின்னப் பையனையே வின்னிங் ஷாட் அடிக்க விட்றார் பாத்தியா!" என பூரித்துப் போன ரசிகனுக்கு, அந்த சிக்சரைக் காணாத ஏக்கத்தை தீர்க்கிறது ஸ்க்ரீனில் தோன்றிய அந்த அறிவிப்பு. "India won the series 3-0"..தொடரை வென்றுவிட்டோம். ஆம், ஆஸ்திரேலிய அணியை பந்தாடி மூன்றே போட்டிகளின் முடிவில் தொடரை வென்றுவிட்டோம். இந்தியா இப்போ நம்பர் - 1. டெஸ்ட், ஒருநாள் இரண்டிலும் நம்பர் - 1. ஹோல்கர் மைதானம் சிக்சரைக் காணாத ஏமாற்றத்தை மறந்து ஆர்ப்பரிக்கவே செய்தது.

ஏனெனில், வென்றிருப்பது ஆஸ்திரேலியாவை. உலக சாம்பியனை... ஆம், கிரிக்கெட் உலகைக் கட்டியாண்ட, தோல்வியை மிக எளிதில் கண்டிராத, அதே மஞ்சள் உடை அணிந்த  அணிதான். இன்று இந்திய மண்ணில் அடிமேல் அடி வாங்குகிறது. ஒருகட்டத்தில் ஆஸி 350 எடுக்குமா, இல்லை அதையும் தாண்டிப் போகுமா என்று வர்ணனையாளர்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.  50 ஓவர்கள் முடிந்த நிலையில் 300 கூட எட்டப்படவில்லை. திக்குத் தெரியாமல் கிடந்த இந்திய பவுலர்களின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. கோலியின் கண்களில் திருப்தி. ஸ்மித் மட்டும் ஒரு வாரமாக தான் கொண்டிருக்கும் அதே டெம்ப்ளேட் 'சேட் ஸ்மைலி' மூடில்... ஆஸ்திரேலியா தன் பிடியை ஆட்டத்திலிருந்து இழந்தது எப்போது? அதன் பிறகு கங்காருக்களுக்கு வாய்ப்பே அளிக்காமல் இந்திய அணி தொடரை வென்றது எப்படி? ஒரு பார்வை...

ஆல் அவுட் அட்டாக்...

முதலிரு போட்டிகளிலும் இந்திய அணிக்குப் பெரிய வில்லனாக இருந்தவர் கோல்டர்நைல். இரண்டு போட்டிகளிலும்  தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். சென்னையில் கோல்டர் நைலின் முதல் ஸ்பெல்லிலேயே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது (5-0-12-3). கொல்கத்தாவிலும் ரோஹித்தை தனது முதல் ஸ்பெல்லிலேயே வெளியேற்றியிருந்தார் (4-0-26-1). இந்திய வீரர்கள் அவரது பந்துவீச்சை கவனமாக எதிர்கொண்டிருந்தாலும், மிகவும் டிஃபன்சிவாக ஆடியதே விக்கெட் வீழ்ச்சிக்குக் காரணம். ஆனால் நேற்று ரஹானேவும், ரோஹித்தும் தொடக்கத்தில் இருந்தே அவரை டார்கெட் செய்து அடிக்கத் தொடங்கினர். அதனால் 3 ஓவர்களிலேயே நேற்று அவரது முதல் ஸ்பெல் முடிவுக்கு வந்தது (3-0-23-0). அவரை மட்டுமல்ல, ரோஹித் - ரஹானே இணை மூன்றாவது ஓவருக்குப் பிறகு அனைத்துப் பந்துவீச்சாளர்களையும் பதம் பார்த்தது. விளைவு - 11வது ஓவரிலேயே தனது ஐந்தாவது பவுலரைப் பயன்படுத்தினார் ஸ்மித். ரிச்சர்ட்சனின் முதல் ஸ்பெல்லில் 26 ரன்கள் (4 ஓவர்கள்), ஸ்டாய்னிஸின் 2 ஓவர்களில் 17 ரன்கள், அகர் வீசிய முதல் 3 ஓவர்களில் 23 ரன்கள் என எந்தப் பவுலருக்கும் கொஞ்சம் கூட 'ஸ்பேஸ்' கொடுக்காமல் அவர்களைத் திக்குமுக்காட வைத்தனர். முதல் 15 ஓவர்களில் 10 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடித்திருந்தது  இந்திய அணி. 
 

விளைவு - ஆஸி அணியின் அனைத்துப் பிளான்களும் ஃப்ளாப். எத்தனை முறை பவுலர்களை மாற்றினார் என்பது ஸ்மித்துக்கே தெரியாது. பவுலர்கள் 'பவுலிங் எண்ட்'களை மாற்றி முயற்சித்தும் பலன் இல்லை. 130 பந்துகளில் 139 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கம் தந்தது இந்த பார்ட்னர்ஷிப். அந்த நல்ல தொடக்கமே, அணியின் ரன்ரேட் கடைசி வரை சீராக இருக்க வழிவகுத்தது. அதேபோல் ஹர்திக்கும் வந்த வேகத்தில் டாப் கியரில் கிளம்பியது ஆஸி பவுலர்களின் நம்பிக்கையை தவிடுபொடியாக்கியிருக்கும். 12 பந்துகளில் ரோஹித், ரஹானே இருவரும் வெளியேற, ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடலாம் என நினைத்திருப்பார் ஸ்மித். ஆனால் பாண்டியாவின் அந்த 'லாங்-ஆன்' சிக்ஸர்கள் அந்த நம்பிக்கையையும் சீர்குலைத்திருக்கும். எந்த இடத்திலும், இந்திய வீரர்கள் ரன்ரேட் குறையாமல் சீராக ரன் சேர்த்தது வெற்றியை எளிதாக்கியது.

ப்ரமோஸன்களும் விளைவுகளும்...
இரு அணியினரும் நேற்று பேட்டிங்கில் செய்த மாற்றங்கள், அந்தந்த அணிகளின் வாய்ப்பை நன்றாகவே மாற்றியிருந்தது. இந்திய அணியைப் பொறுத்தவரை ரிசல்ட் பாசிடிவ். ரஹானே அவுட் ஆனதும், மனீஷின் என்ட்ரிக்குத் தான் அனைவரும் காத்திருந்தனர். ஆனால் கிரீஸில் நின்றது பாண்டியா. "ஃபினிஷரை யாருப்பா இப்ப இறக்குனது?" - கேள்விகள் எழாமல் இல்லை. வெற்றிக்கு 146 ரன்கள் தேவை என்பதால் அந்தக் கேள்வி அதிக வலுவுடனே கேட்கப்பட்டது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் இதே நம்பர் 4 இடத்துக்கு ப்ரமோட் செய்யப்பட்ட பாண்டியா, 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஆனால் நேற்றைய முடிவு சாதகமாக அமைந்தது. அவசரம் காட்டாமல், அகரை மட்டும் என்கவுண்டர் செய்துகொண்டிருந்தார். வேகப்பந்து வீச்சாளர்களை பொறுமையுடனே கையாண்டார். ஹர்திக் நன்றாக செட்டில் ஆனதால், கோலி, ஜாதவ் அடுத்தடுத்து ஆட்டமிழந்தபோதும், அணியின் நம்பிக்கை குறையாமல் இருந்தது. நம்பிக்கை குறையாமல் இருக்க ரன்ரேட் குறையாமல் இருந்ததே காரணம். அதில் ஹர்திக்கின் பங்கு அளப்பரியது.

ஆஸி அணிக்கோ அவர்கள் செய்த ப்ரமோஷன் முடிவு பின்னடைவாக அமைந்துவிட்டது. 37.5 ஓவர்களில் 224 ரன்கள். அப்போதுதான் 2-வது விக்கெட்டாக ஃபின்ச் (124 ரன்கள்) ஆட்டமிழக்கிறார். இன்னும் 12 ஓவர்கள். ஓவருக்குப் 10 ரன் எடுத்தாலும் கூட எளிதாக 350 எடுத்துவிடலாம். சோ...மேக்ஸ்வெல் களமிறங்குகிறார். அணியின் ஆகச்சிறந்த அதிரடி வீரர் தான். கடந்த இரு போட்டிகளிலும் அதிரடி காட்டினார்தான். ஆனால் அவரது ஒட்டுமொத்த பெர்ஃபாமென்ஸ்? குல்தீப்பின் ஓவரை மட்டுமே அதுவரை பதம்பார்த்த மேக்ஸ்வெல், சாஹலின் பந்துவீச்சில் பய்ங்கரமாகத் திணறினார். இரண்டு போட்டிகளிலும் சேர்த்து குல்தீப்பின் 12 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த அவர், சாஹலின் 12 பந்துகளில் 7 ரன்கள்  மட்டுமே எடுத்து இரண்டு முறை அவுட் ஆகியிருந்தார்.  

நேற்று மேக்ஸ்வெல் களமிறங்கியதும், தொடர்ந்து 6 ஓவர்கள் பந்துவீசிய குல்தீப்புக்கு ஓய்வளித்துவிட்டு, பாண்டியா - பூம்ரா என 'பேஸ் அட்டாக்' செய்கிறார் கோலி. இரண்டு ஓவர்களில் 8 'டாட் பால்கள்'.  8 பந்துகளில் 1 ரன்னோடு தடுமாற்றத்துடன் ஆடிக்கொண்டிருக்கிறார் மேக்ஸ்வெல். அடுத்து மீண்டும் சாஹல்- குல்தீப் ஸ்பெல். பெரும்பாலான பந்துகளை எதிர்கொண்ட ஸ்மித்தும் குல்தீப் சுழலில் சிக்க, சாஹலின் பந்துவீச்சில் தான் எதிர்கொண்ட இரண்டாவது பந்திலேயே ஸ்டம்பிங் செய்யப்பட்டு நடையைக் கட்டுகிறார் மேக்ஸ்வெல். இரண்டு பந்துகளில் 2 விக்கெட்டுகள். அடுத்து வந்த ட்ராவிஸ் ஹெட், ஹேண்ட்ஸ்கோம்ப் விரைவில் நடையைக் கட்ட, கடைசி 10 ஓவர்களில் 61 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா. 350, 370 என அவர்கள் கண்ட கனவுகளையெல்லாம் சாம்பிராணிப் புகையைப் போல் மேக்ஸ்வெல்லே ஊதித்தள்ளினார்.


கேப்டன்ஷிப்...

முதல் இரண்டு போட்டிகளில் கோலியின் கேப்டன்ஷிப்பில் குறை இல்லாவிடிலும், பெரிதாக பாரட்டும்படியும் இல்லை. ஆனால் நேற்றைய போட்டியில் கேப்டன் கோலியின் செயல்பாடு சூப்பர்! தான் வீசிய முதல் 7 ஓவர்களில் 55 ரன்கள் வாரிக்கொடுத்திருந்தார் குல்தீப். ஆரோன் ஃபின்சும், ஸ்மித்தும் அவரது பந்துவீச்சை பதம் பார்த்துக்கொண்டிருந்தனர். நினைத்திருந்தால் கேதர் ஜாதவை பந்துவீச அழைத்திருக்கலாம். ஆனால் குல்தீப்புக்கே மறுபடியும் வாய்ப்புக் கொடுத்தார். ஃபின்ச்சை சாய்த்தார் குல்தீப். அடுத்து மேக்ஸ்வெல் களமிறங்கியதும் வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டு வந்து பிரஸ்ஸரைக் கூட்டினார். மீண்டும் குல்தீப்... இப்போது ஸ்மித் அவுட். மேக்ஸ்வெல்  பேட்டிங். இரண்டு போட்டிகளிலும் அவரைத் திணறடித்த சாஹல் கையில் பந்தைத் தருகிறார் கேப்டன். எஸ், கோலி கணிப்பு பலித்தது. மேக்ஸ்வெல் அவுட். 350-யை நோக்கிப் பயணித்த ஆஸி படகில் துளையைப் போட்டு கரை ஒதுங்க வைத்தார். 
இரண்டு போட்டிகளிலுமே மனீஷ் சொதப்பினாலும், அவருக்கு மீண்டும் வாய்ப்பு தந்தது பல வகையில் உதவியது. மனீஷின் இருப்பு ஃபீல்டிங்கில் மிகப்பெரிய பலம். ஹேண்ட்ஸ்கோம்ப் அடித்த பந்தை அநாயசமாகப் பிடித்து அமர்க்களப்படுத்திய மனீஷ், ரன்களைத் தடுத்ததிலும் படு ஸ்மார்ட். பேட்டிங்கில் நேற்று கொஞ்சம் நம்பிக்கையுடனேயே விளையாடினார். ஆர்டர் மாறி களம் கண்டாலும் கூலாக விளையடிய மனீஷ் 32 பந்துகளில் 36 ரன்கள் அடித்து, ஆட்டத்தை ஃபினிஷ் செய்து வைத்தார்.
 

ஹர்திக்கை ப்ரமோட் செய்தது மாஸ்டர் ஸ்ட்ரோக். 40 ஓவர்களுக்குள் அகரின் 10 ஓவர்கள் முடிந்துவிடும் என்பதால், அவரை டார்கெட் செய்து ஆஸி அணியின் திட்டங்களை சீர்குலைக்க எடுத்த முடிவு. அணியின் ரன்ரேட்டை சீராக வைத்திருக்க உதவியதோடு, இரண்டு ஆட்டங்களிலும் சொதப்பிய மனீஷ் பிரஷர் இல்லாமல் ஆடுவதற்கு அது பெரிதும் உதவியது. ஹர்திக்கை ப்ரமோட் செய்தது ரவி சாஸ்திரியின் திட்டம் என்று ஆட்டம் முடிந்ததும் கோலி கூறியிருந்தார். அதை அவர் ஆமோதித்ததும், பயிற்சியாளருக்கும் கேப்டனுக்குமான கெமிஸ்ட்ரி சரியாக இருப்பதும் பாராட்டத்தக்கதே. ஆட்டம் முடிந்ததும் ஹர்திக்குடன் தான் பேசிய வீடியோவை ட்விட்டரில் அப்லோட் செய்திருந்தார் கோலி. ஹர்திக்கை சூப்பர் ஸ்டார் என்று கொஞ்சமும் ஈகோ இல்லாமல் அவர் பாராட்டுவதும், ட்ரஸ்ஸிங் ரூமில் சக வீரர்களுடன் ஃப்ரண்ட்லியாகப் பழகுவதும் கோலியின் மீது தனி மரியாதையைக் கொடுக்கிறது.

ஸ்மித்....என்ன சொல்வது? மீண்டும் மீண்டும் அதே தவறுகள். என்னதான் இந்திய அணி முழுக்க வலது கை பேட்ஸ்மேன்களாக இருந்தாலும், ஒன்றிரண்டு ஓவர்களாவது பார்ட் டைம் பவுலர்களுக்குக் கொடுத்துப் பார்த்திருக்கலாம். இதே இந்திய அணிதான் இலங்கையின் தனஞ்செயா பந்துவீச்சில் திக்குமுக்காடியது. ஸ்மித் அந்த ஹிஸ்டரியை கொஞ்சமேனும் ரெஃபர் செய்திருக்கலாம். ஹெட், மேக்ஸ்வெல் என இரண்டு ஆல்ரவுண்டர்களும் சேர்ந்து இந்தத் தொடரில் 3 ஓவர்கள் மட்டுமே பந்து வீசியிருக்கின்றனர். நேற்றய போட்டியில் எல்லாம் முடிந்த பிறகு 47-வது ஓவரில் மேக்ஸ்வெல்லைப் பந்து வீச அழைத்தார் ஸ்மித்? ஆட்டத்தை விரைவில் முடிக்கவோ...? மேஸ்வெல்லை ப்ரமோட் செய்தது இன்னொன்று. கடந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆஅடி அரைசதம் அடித்திருந்த ஸ்டாய்னிஸை ப்ரமோட் செய்திருக்கலாம். இந்தப் போட்டியிலும் அவர்தான் கடைசியில் கொஞ்சம் ரன் சேர்த்தார். ஸ்ட்ரைக் ரேட் நேற்று கம்மியென்றாலும், அந்த சூழலில் அவர் ஆடிய விதம் பாராட்டுதலுக்குரியதே.
 


அணித்தேர்வில் ஸ்மித் நேற்று படுசொதப்பல். மாத்யூ வேடுக்குப் பதில் களம் கண்டார் ஹேண்ட்ஸ்கோம்ப். பேட்டிங்கில் அப்படியே வேடை ஜெராக்ஸ் எடுத்தார். கீப்பிங்கின்போது ரோஹித்தின் கேட்சை வேறு கோட்டை விட்டார். பார்ட் டைம் கீப்பரிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். ஒரு போட்டியில் மோசமாக பந்துவீசியதற்காக ஜாம்பாவுக்குப் பதில் அகரைத் தேர்வு செய்தார். நேற்று பாண்டியாவின் அதிரடியில் அவர் காணாமலே போய்விட்டார். இனிவரும் போட்டிகளிலாவது ஸ்மித் சற்று சிறந்த முடிவுகளை எடுத்து தங்களின் தோல்விப் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

ஹர்திக் பாண்டியா...

அடிக்கிறார். அசரடிக்கிறார். அச்சுறுத்துகிறார். விக்கெட் வீழ்த்துகிறார்.  ஆட்டத்துக்கு ஆட்டம் மெச்சூர்டாகிக் கொண்டே போகிறார். "என்னை நான்காவது வீரராகக் களமிறக்கியதால் நான் ஆச்சர்யப்படவில்லை. எனக்கான வாய்ப்பாக அதை நினைத்தேன். பயன்படுத்திக்கொண்டேன்" என்கிறார் கூலாக. இவரைப் பற்றிய போதுமான விமர்சனங்களை முதல் போட்டி முடிந்ததுமே பார்த்திவிட்டோம். இதற்கும் மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை

இந்த வெற்றியின் மூலம் 3-0 என தொடரை வென்றுள்ளது இந்திய அணி. இனிவரும் போட்டிகளில் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பளிக்க விரும்புவதாக கோலி கூறியுள்ளார். ஆனால் "அணியில் உள்ள 15 வீரர்களும் ஒரே மனநிலையில் தான் இருக்கின்றனர். வெற்றிக்காகப் போராடுவது. யார் விளையாடினாலும், அணியின் வின்னிங் ஸ்பிரிட் குறையாது" என்றும் கூறியுள்ளார். அதே ஸ்பிரிட்டில் ஆஸி அணியை ஒயிட்-வாஷ் செய்து சரித்திரம் படைக்க வேண்டும். இந்தூர் வெற்றி, கோலியின் தலைமையில் இந்திய அணிக்கு 9-வது தொடர் வெற்றி. மொத்தத்தில் 30-வது. விரைவில் 30 வெற்றிகளைப் பெற்ற கேப்டன்களின் வரிசையில் (37 போட்டிகளில் 30 வெற்றி) பாண்டிங்குக்கு (38 போட்டி) அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அதேசமயம், இப்போது அந்நிய மண்ணில் தொடர்ந்து 11-வது ஒருநாள் போட்டியில் தோற்றுள்ளது ஆஸி அணி. ஆம், பாண்டிங் தலைமையில் தொடர்ச்சியான வெற்றிகளைக் கணக்கிட்டுக் கொண்டிருந்த அதே ஆஸ்திரேலிய அணிதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு