Published:Updated:

சைனாமேன் குல்தீப் ஹாட்ரிக்... 26 ஆண்டுகளுக்குப் பின் ஒரு சாதனை! #MatchAnalysis #IndVsAus

சைனாமேன் குல்தீப் ஹாட்ரிக்... 26 ஆண்டுகளுக்குப் பின் ஒரு சாதனை! #MatchAnalysis #IndVsAus
News
சைனாமேன் குல்தீப் ஹாட்ரிக்... 26 ஆண்டுகளுக்குப் பின் ஒரு சாதனை! #MatchAnalysis #IndVsAus

சைனாமேன் குல்தீப் ஹாட்ரிக்... 26 ஆண்டுகளுக்குப் பின் ஒரு சாதனை! #MatchAnalysis #IndVsAus

கொல்கத்தா ஈடன் கார்டன் ரோஹித் சர்மாவுக்கு ராசியான மைதானம். நேற்று அப்படி இல்லை. விராட் கோலிக்கு ராசியாக இருந்தது போலத் தெரிந்தது. அவரும் 92 ரன்களில் அவுட். தாதாவின் கோட்டையில் சதம் அடிக்கும் வாய்ப்பு நழுவியது. ஸ்மித் பக்கம் அதிர்ஷ்டம் அடித்ததுபோலத் தெரிந்தது. ம்ஹூம். அவருக்கும் ராசியில்லை. ஆஸ்திரேலிய பேட்டிங்கின்போது 33 வது ஓவரை வீச வருகிறார் குல்தீப் யாதவ். வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே ‛இன்றைய நாள் குல்தீப் நாள்போலத் தெரிகிறது’ எனக் கணித்தார். அவர் கணிப்புத் தப்பவில்லை. ஆம், ஓர் ஓவரில் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டார். மூன்று பந்துகளில் ஆஸ்திரேலியாவின் கனவைத் தகர்த்துவிட்டார். அதோடு ஒரு சாதனையும் படைத்துவிட்டார்.

சைனாமேன் குல்தீப் வீசிய 7 ஓவர்களில் 39 ரன்கள். விக்கெட் ஏதும் இல்லை. மேக்ஸ்வெல் பளிச் பளிச்சென அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் விளாசியிருந்தார். சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும், குல்தீப் பந்தில் மேக்ஸ்வெல் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்திருந்தார். ஆனால், நேற்று அவர் வீசிய எட்டாவது ஓவரில் நடந்தது அதிசயம். அதிசயம் மட்டுமல்ல சாதனை. 26 ஆண்டுகளுக்குப் பின் ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் வீழ்த்திய இந்தியர் என்ற சாதனை. இதற்கு முன், 1987 உலகக் கோப்பையில் சேதன் ஷர்மா நியூஸிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் வீழ்த்தியிருந்தார். 1991-ல் இதே ஈடன் கார்டனில் ஆசியக் கோப்பையில் இலங்கையிடம் ஹாட்ரிக் எடுத்தார் கபில்தேவ். அந்த வரிசையில் மூன்றாவதாக இணைந்துள்ளார் குல்தீப். (டெஸ்ட் போட்டியில் இதே மைதானத்தில் இதே ஆஸிக்கு எதிராக ஹர்பஜன் ஹாட்ரிக் எடுத்தது தனிக்கதை. 

33 வது ஓவரை வீச வருகிறார் குல்தீப். முதல் பந்தை டிஃபண்ட் செய்தார் மேத்யூ வேட். இரண்டாவது பந்து லெக் பிரேக், ஸ்லோ பால், அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்ப்... டிஃபண்ட் செய்தார் வேட். இன்சைட் எட்ஜ், பந்து ஸ்டம்பை நோக்கி விரைகிறது. அதைத் தடுக்க முனைகிறார் பேட்ஸ்மேன். முடியவில்லை. பந்து ஸ்டம்பை பதம் பார்த்துவிட்டது. லைட் எரிந்துவிட்டது. இந்திய வீரர்கள் உற்சாகமாகிவிட்டனர். அதற்குள் மைதானம் ஆர்ப்பரிக்கத் தொடங்கிவிட்டது. மேத்யூ வேட் அவுட். அடுத்த பந்தைச் சந்திக்க வந்தது ஆஷ்டன் அகர். ஒரு மாதிரியான ‛லூப்பி லெக்’ பிரேக். பறந்து சென்ற பந்து ஆஷ்டன் அகரின் முன் காலில், Pad-ல் படுகிறது. Howzat... எஸ்... அவுட். Finger went up. ரிவ்யூ கேட்கலாமா? யோசிக்கிறார் அகர். வேண்டாம் என எதிர்முனையில் இருந்து சிக்னல் கொடுக்கிறார் ஸ்டாய்னிஸ். அடுத்த பந்து. குல்தீப் ஹாட்ரிக் எடுக்க வாய்ப்பு... அதைத் தடுக்க பேட் கம்மின்ஸுக்கு வாய்ப்பு. யார் ஜெயிப்பது? ஹாட்ரிக் எடுக்கவிடக் கூடாது என டிஃபண்ட் செய்கிறார் கம்மின்ஸ். அவுட் சைட் எட்ஜ். பந்து விக்கெட் கீப்பரின் கைகளில்... கம்மின்ஸ் அவுட்... யாராலும் நம்பமுடியவில்லை. குல்தீப் ஹாட்ரிக் விக்கெட் எடுத்துவிட்டார். துள்ளிக் குதிக்கிறார். அவர் மட்டுமல்ல, கோலியும்... கோலி மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய அணியும்... இந்திய அணி மட்டுமல்ல ஒட்டுமொத்த ஈடன் கார்டன் ரசிகர்களும்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‛‛முதல் ஐந்து ஓவர்களில் சரியான இடத்தில் பந்துவீசத் தடுமாறிக் கொண்டிருந்தேன். கடந்த போட்டியில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்கள் விட்டுக் கொடுத்தேன். கிரிக்கெட்டில் இது சகஜம். ஆனால், இங்கே மூன்று பந்துகளில் மூன்று விக்கெட். இது கண்டிப்பாக ஸ்பெஷல் தருணம்’’ எனப் போட்டி முடிந்தபின் பேட்டியளித்தார் குல்தீப். மீண்டும் ஒருமுறை ரிஸ்ட் ஸ்பின்னர்களிடம் ஆஸி பணிந்து விட்டது. யுஸ்வேந்திர சஹால் 10 ஓவர்களில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் எடுத்திருந்தார்.

அந்நிய மண்ணில் இது ஆஸ்திரேலியாவுக்குத் தொடர்ந்து பத்தாவது தோல்வி. ஸ்மித் இதை விரும்பவில்லை. கொல்கத்தா வரும் முன்பே இதைத் தவிர்க்க திட்டமிட்டிருந்தார். ஈடன் கார்டன் மைதானம் பெரிது. அங்கு தன் 100-வது ஒருநாள் போட்டி என்பது அதனினும் பெரிது. இங்கு கேப்டன் இன்னிங்ஸ் ஆடினால் காலத்துக்கும் பெருமை. இந்தியக் கேப்டன் விராட் கோலி தனக்கு முன் 92 ரன்கள் விளாசி இருக்கிறார். அதை மிஞ்ச வேண்டும். அல்லது தனி ஆளாகப் போராடி அணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும். பல விதங்களில் ஸ்மித் ஸ்மார்ட். நேர்த்தியான ஆட்டம். சேஸிங்கில் பதறாத ஆட்டம். ஃபுல் லெந்த் பந்துகளில் பளிச்சென ஓர் அறை, அட்டகாச ட்ரைவ், பக்கா ஃப்ளிக் என ஷாட்கள் அனைத்தும் கச்சிதம். இத்தனை வெரைட்டி ஷாட்கள் எனில் அரைசதம் அடிக்காமலா? 70 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். சேஸிங்கில் நிதானம் தேவை. ஸ்மித்திடம் அது ரொம்பவே இருந்தது. ஆனால், ஹர்டிக் பாண்டியாவின் ஒரு ஷார்ட் பந்தில் ஏமாந்தார். அவர் அடித்த புல் ஷாட், மிட் விக்கெட் திசையில் இருந்த ரவீந்திர ஜடேஜாவின் கைகளில் சிக்கியது. ஸ்மித் நடையைக் கட்டியபின் ஸ்டாய்னிஸ் மட்டுமே ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை. அவரும் விட்டு விளாசி அரைசதம் கடந்தார். அவரால் அரைசதம் மட்டுமே கடக்க முடிந்தது. தோல்வியின் வீரியத்தை மட்டுமே தவிர்க்க முடிந்தது. தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

கொல்கத்தாவில் கிடைத்த வெற்றி பெளலர்களின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. 252 ரன்களை டிஃபண்ட் செய்வது என்பது கடினம். ஆனால், புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஸ்பெல் அட்டகாசம். சாஹல் தன் பங்குக்கு 3 விக்கெட் எடுத்தார் எனில், பும்ரா, பாண்டியாவின் முயற்சி பாராட்டுக்குரியது. அதைவிட, விராட் கோலி பாராட்டுக்குரியவர். சென்னையில்  டக் அவுட்டானவர், அடுத்த போட்டியிலேயே சதம் அடிக்க முயன்றார். அடித்திருந்தால் 31-வது சதம். எட்டு ரன்களில் மிஸ். எடுத்த எடுப்பிலேயே அடிக்காமல் செட்டில் ஆன பின் அடிப்பது கோலி ஸ்டைல். நேற்றும் அப்படியே. முதல் 9 பந்துகளில் 1 ரன். கனே ரிச்சர்ட்சன், ஜேம்ஸ் ஃபாக்னர் பந்துவீச வந்ததும் ஆட்டத்தைத் தொடர்ந்தார் விராட். கோலிக்கு கவர் ட்ரைவ் அடிப்பது தண்ணி பட்ட பாடு. ரிச்சர்ட்சன் பந்தில் அடித்த ட்ரைவ் அட்டகாசம் எனில், ஸ்டாய்னிஸ் பந்தில் விரட்டியது கண்ணுக்குக் குளிர்ச்சி. இரண்டு புல் ஷாட்டும் பக்கா. அதுவும் மிட் விக்கெட் திசை ஓபனாக இருப்பதைப் புரிந்து அங்கு பந்தை விரட்டுவது தேர்ந்த பேட்ஸ்மேனுக்கு அழகு. கோலி அதைச் செய்யாமல் போனால்தான் ஆச்சர்யம். கடைசியில் அவர் சதம் அடிக்காமல் கோல்டர் நைல் பந்தில் இன்சைட் எட்ஜாகி போல்டானதும் ஆச்சர்யம்.

கோலிக்கு அடுத்து பேட்டிங்கில் ரசிக்க வைத்தது ரகானே. அடுத்தடுத்த சொதப்பல்களுக்குப் பின் தன்னை நிரூபித்தார் அவர். இரு ஃபீல்டர்களுக்கு இடையில் பவுண்டரி அடிக்கும்போதெல்லாம் ‛He finds the gap’ - என வர்ணனையாளர்கள் சொல்வது வழக்கம். கோல்டர் நைல் பந்தில் கவர் ஏரியாவில் ரகானே அடித்த பவுண்டரி, அந்த வர்ணனைக்கு நல் உதாரணம். ரகானே ஆஃப் சைடில் ஸ்ட்ராங். அவர் முதலில் அடித்த 31 ரன்களில் 1 ரன் மட்டுமே லெக் சைடில் அடிக்கப்பட்டது. அதுவும் தப்பித்தவறி வந்தது. இன் சைட் எட்ஜ். மற்றவை எல்லாமே ஆஃப் சைடில் அடிக்கப்பட்டவை. Classical Shots. அரைசதம் அடித்து முன்னேறிக் கொண்டிருந்தவரை, இரண்டாவது ரன்னுக்கு அழைத்தார் விராட். தயக்கத்துடன் ஓடியதால் என்னவோ ரன் அவுட். ஏமாற்றமே என்றாலும் இந்த இன்னிங்ஸ் ரகானேவுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கும்.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டு போட்டிகளில் இந்திய அணி எந்த மாற்றமும் செய்யவில்லை. மனீஷ் பாண்டே, ரோகித் சர்மா மட்டுமே இன்னும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ரோகித் ஓபனர். வசமாக ஒரு மேட்ச் சிக்கினால், வெளுத்து விடுவார். ஆனால், மனீஷ் தன்னை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதை விட, ஆஸ்திரேலியா இந்தூரில் வெற்றி பெற்றாக வேண்டும். இல்லையெனில், இந்தத் தொடர் சப்பென முடிந்து விடும். ஸ்மித் அதை விரும்ப மாட்டார். போட்டி முடிந்தபின் நடந்த பிரஸ் மீட்டில், தங்கள் பேட்ஸ்மேன்கள்மீது பொறிந்து தள்ளிவிட்டார். இந்தூரில் கங்காருகள் இன்னும் உக்கிரமாக இருக்கும்!