Published:Updated:

களத்தில் பீமன், வெளியே போகன்! #HBDGayle

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
களத்தில் பீமன், வெளியே போகன்! #HBDGayle
களத்தில் பீமன், வெளியே போகன்! #HBDGayle

களத்தில் பீமன், வெளியே போகன்! #HBDGayle

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் அமர்ந்து ஐ.பி.எல் பார்க்கும் ரசிகனின் கண்களில், உற்சாகத்தோடு பயமும் கலந்திருக்கும். போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்தாலும் அந்த ரசிகனின் கரம், சிரத்துக்கு பாதுகாப்பு குறைவே. மணிக்கு 140, 150 கி.மீ வேகத்தில் வீசப்படும் பந்து அதைவிட வேகத்தில் வந்து தாக்கினால்? அதுவும் அந்த மனிதன் களத்தில் இருக்கும்போது கேலரியை நோக்கி பந்து படையெடுத்துக்கொண்டே இருக்கும். அப்படியிருக்கையில் யாருக்குத்தான் அச்சம் ஏற்படாது. அந்த மனிதனுக்குள் அப்படி என்னதான் இருக்கிறது? டாப் எட்ஜ் ஆகும் பந்து கூட எப்படி பவுண்டரி எல்லையைக் கடக்கிறது. ஒருவேளை அவன் நாடி , நரம்பு, ரத்தம் அனைத்திலும் கிரிக்கெட் கலந்திருக்குமோ? இருக்கலாம். கரீபியத் தீவில் பிறந்தவனாயிற்றே. இன்று அவனுக்குப் பிறந்த நாள். அவனைப் பற்றி அறிந்துகொள்ள விரும்பினால் கூகுளில் கெய்ல் என்று தட்டுங்கள். பின் கொஞ்சம் ஸ்பேஸ் விட்டு புயல் என்று தட்டுங்கள்!

இந்தியாவில் மிகவும் உணர்வுப்பூர்வமாக அணுகுவதைப்போல கிரிக்கெட்டை மேற்கிந்திய தீவுகள் அணுகுவதில்லை. மாறாக அவர்கள் கிரிக்கெட்டை கொண்டாட்டமாகப் பார்க்கிறார்கள். ப்ரையன் லாரா தனி ஆளாக தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையோடும், மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் நிர்வாகத்துடனும் முட்டிமோதிக்கொண்டிருந்த வேளையில், தன்னுடைய 19 வயதில் தேசிய அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார், கெய்ல். லாரா, எப்பாடு பட்டாவது அணியை சரிவிலிருந்து மீட்டுவிடவேண்டுமென்று நினைத்திருந்த சமயத்தில், பேட்டிங் இலக்கணங்களுக்கு அப்பாற்பட்டு, டெக்னிக், ஃபுட்வர்க் இதைப்பற்றியெல்லாம் மருந்துக்குக் கூட கவலைப்படாமல், நின்ற இடத்திலிருந்து பந்துகளை கொஞ்சம் கூட சலனமில்லாமல் அடித்து நொறுக்கத் துவங்கினார். மற்ற அணிகள், கெய்லை வீழ்த்துவதற்கு பிரத்யேகமாக ஆலோசனை கூட்டமெல்லாம் நடத்த ஆரம்பித்தார்கள். 

இந்தியாவுக்கு எதிராக 7 போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று சதங்கள் விளாசி, தொடரின் நாயகனானர். ஸ்ரீநாத், 'அந்தக்கால' நெஹ்ரா, ஹர்பஜன் போன்றவார்களால் கூட கெய்லைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 2003 உலகக் கோப்பைக்கு சற்று தெம்போடு மேற்கிந்திய தீவுகள் செல்வதற்கு கெய்ல் போன்றவர்கள் நம்பிக்கை அளிக்கத் தொடங்கினர். சந்தர்பால், லாரா, ஹூப்பர் என ஸ்லோ பேட்ஸ்மேன்கள் நிறைந்த அந்த அணியின் ஸ்டிரைக்கிங் கில்லி கெய்ல்தான். வீழ்ச்சியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த அணியின் மாபெரும் நம்பிக்கையே இவர்தான். அணி வெற்றி பெற வேண்டுமானால் கெய்ல் நல்ல ஓபனிங் கொடுத்தாக வேண்டும்.

ஒருநாள் போட்டிகளில் தன்னை மெருகேற்றி வந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் கெய்லின் ஆக்ரோஷம் வெகு நாட்களாக எடுபடவில்லை. காரணம், ஸ்ட்ரோக், டிரைவ், டிஃபன்ஸ் போன்ற கிரிக்கெட் டெர்மினாலஜிகளுக்கான அர்த்தம் அவருக்குத் தெரியாது. 2004-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், அணி மிகவும் பின்தங்கிய நிலையில், வெகுண்டெழுந்து சதம் அடித்தார். அடுத்த வருடம், சொந்த மண்ணில் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்னையால் ஒதுக்கப்பட்டு, பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், அதே தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து சொந்த மண்ணில் 317 ரன்களைக் குவித்தார். பின், சாம்பியன்ஸ் கோப்பையை தக்கவைப்பதில் முனைப்புக் காட்டி, 8 போட்டிகளில் 3 சதங்கள் உட்பட 474 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார். 

சுழற்பந்து வீச்சாளர்களின் சொர்க்கமான இலங்கையில், தன் இரண்டாவது முச்சதத்தைப் பதிவுசெய்து, டான் பிராட்மன், சேவாக் வரிசையில் இணைந்தார். அதிரடிக்கே பேர்போனாலும், 2009-ம் ஆண்டில் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஏழரை மணி நேரம் போராடி அணியைத் தோல்வியிலிருந்து மீட்டெடுத்தார். அடுத்த போட்டியிலேயே அதிவேகமாக அரைசதம் அடித்து தன் உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தினார். 

இருபது ஓவர் உலகக்கோப்பை கெய்லுக்காகவே படைக்கப்பட்டதோ என்று ஆச்சர்யப்படும் வகையில், 2007 டி-20 தொடரின் முதல் போட்டியிலேயே 57 பந்துகளில் 100 ரன்களை கடந்தார். அடுத்த வருடம் இந்தியன் ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட ஆரம்பித்தார். நான்காவது சீசனில், கெயிலின் ஃபார்ம் நன்றாக இல்லாத காரணத்தால் யாரும் ஏலம் கேட்கவில்லை. தொடரின் பாதியில் பெங்களூரு அணிக்காக மல்லையா கெய்லை அழைத்து வந்தார். அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை இனி ஐ.பி.எல் எனும் தொடர், இந்த மனிதனால் மோட்சம் பெறும் என்று. ஃபாஸ்ட் பவுலர்கள் தூக்கம் தொலைத்தனர். ‘கேலரியில்தான் ஃபீல்டர்களை நிற்க வைக்க வேண்டுமோ’ என்று கேப்டன்கள் குமுறினார்கள். எந்த அணி தன்னை கழட்டி விட்டதோ, அதே அணிக்கு எதிராக வீறுகொண்டெழுந்து 101 ரன்களை குவிக்க, அதன் பின் இருபது ஓவர் போட்டிகளில் கெய்லை சமாளிக்க முடியாமல் திணறின எதிரணிகள். 

2013-ம் ஆண்டில் புனே வாரியர்ஸ் கெய்லிடம் சிக்கி சின்னாபின்னமானது. 20 ஓவர்களில் ஓர் அணியின் சராசரி ரன்களை விட அதிகமாக அடித்து (175) ரசிகர்களுக்கு விருந்தளித்தார். ‛நான் ஸ்ட்ரைக்கர்’ எண்டில் இருந்த தில்ஷன் ‛என் வாழ்வில் எதிர்முனையில் இருந்து பார்த்த பெஸ்ட் இன்னிங்ஸ் இதுவே’ என மனதார பாராட்டினார். ஐ.பி.எல் மட்டுமல்ல உலகில் எங்கெல்லாம் டி-20 தொடர் நடக்கிறதோ அங்கெல்லாம் நங்கூரம் பாய்ச்சினார். ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ், பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் லீக் போன்றவற்றில் இதுவரை 10,000 ரன்களுக்கும் அதிகமாக அடித்து 40 ரன்களுக்கு அதிகமாக சராசரி வைத்திருக்கும் ஒரே வீரர் கெய்ல் மட்டுமே. அதுமட்டுமல்ல, டி-20 போட்டிகளில் 20 சதங்கள்! ஆம் 20... இது இன்னும் அதிகரிக்கலாம்.

டி-20 யில் சதம், ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம், டெஸ்டில் முச்சதம் என்ற அற்புத சாதனையை நிகழ்த்தியிருக்கும் ஒரே ஆள் இவர்தான். எப்போதும் சிரிப்புடனும், கங்னம் ஸ்டைல், ரொனால்டோ ஸ்டைல் போன்றவைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தி, வெற்றி, தோல்வி இரண்டையும் அலட்டிக்காமல் ஏற்றுக்கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில்  அசாதாரணமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதெல்லாம் கெய்லுக்கு மட்டுமே கைவரும் கலை. 

2019 ஆண்டு உலகக்கோப்பை வரை ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், வயதும் உடலும் ஒத்துழைக்குமா என்று தெரியாது. ஏனெனில் அவர் வயது 38. எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்திலும், பவுலர்களை அலறவிட்ட ஒரு சகாப்தம் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. ஆனால் இன்றும் கூட அவரால் அசால்டாக 105 மீட்டர் சிக்சர்கள் அடிக்க முடியும். அது அவரது சிறப்பம்சம் அல்ல. அதுவே அவரது ஹாபி! கிறிஸ்டோஃபர் ஹென்றி கெயில் - ஜமைக்காவின் மற்றுமொரு ஜாம்பவான்.

ஹேப்பி பர்த்டே டூ தி யுனிவர்சல் பாஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு