Published:Updated:

தோனி, தோனி, தோனி... சேப்பாக்கம் மைதானத்தில் செம்ம்ம்ம்ம அனுபவம்! #VikatanExclusive

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தோனி, தோனி, தோனி... சேப்பாக்கம் மைதானத்தில் செம்ம்ம்ம்ம அனுபவம்! #VikatanExclusive
தோனி, தோனி, தோனி... சேப்பாக்கம் மைதானத்தில் செம்ம்ம்ம்ம அனுபவம்! #VikatanExclusive

தோனி, தோனி, தோனி... சேப்பாக்கம் மைதானத்தில் செம்ம்ம்ம்ம அனுபவம்! #VikatanExclusive

‘கிளம்பு, கிளம்பு... இங்க எல்லாம் நிக்கக் கூடாது...’

‘சார்... ஃப்ரெண்டு டிக்கெட் எடுத்துட்டு வர்றான். அவன் வந்ததும் கிளம்பிருவேன்’

‘பாஸ்... எக்ஸ்ட்ரா டிக்கெட் இருக்கா? இருந்தா ஒன்னு உஷார் பண்ணுங்களேன். அதுவும் எனக்கில்லை...!’ 

குரலில் அதிகாரமில்லை. காக்கிச்சட்டையில் மிடுக்கில்லை. 

இடம்: பட்டாபிராமன் கேட், சேப்பாக்கம் மைதானம். நேரம்: ஞாயிறு மதியம் 12.30.

வழக்கத்தை விட வாலாஜா ரோட்டில் ஹெவி டிராபிக். பெல்ஸ் ரோடு, விக்டோரியா ஹாஸ்டல் ரோடு என சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தைச் சுற்றியுள்ள அத்தனை சாலைகளிலும் ஹாரன் சவுண்ட். அங்கிருந்து பிரஸ் கிளப்புக்குச் செல்லும் சாலையின் இரு மருங்கிலும் அணிவகுத்து நின்றன டூ வீலர்கள். இது எதிர்பார்த்ததே. எதிர்பாராதது இதுவே... கறுப்புச் சட்டைகளைக் கவனமாகத் தவிர்த்தது காக்கி. பதாகைகளுக்கும் தடா. காரணம், அச்சம். அனிதா மரணம். நீட் தேர்வு எதிர்ப்பு. எதேச்சையாக கருப்பு  டீ - சர்ட் போட்டு வந்தவன், வேறு வழியின்றி தோனி, கோலியின் ஜெர்ஸிக்கு ரூ.150 அழுதான். வழக்கமாக அந்த டீ-சர்ட்டின் விலை 100 ரூபாய். தோனியின் பெயரை முதுகிலும், கன்னத்திலும் சுமந்து ஒரு சிறுவன் பட்டாபிராம் கேட்டைக் கடந்தான். அவனைப் பின்தொடர்ந்து உள்ளே நுழைந்தால், மெட்டல் டிடெக்டர், செக்கிங் எனப் பல கட்ட சோதனைகள். அங்கும் களையப்பட்டன கறுப்புச் சட்டைகள்.

டிக்கெட்டை ஸ்கேனரில் பரிசோதித்துக் கொண்டிருக்கும்போதே அந்தச் சத்தம் கேட்டுவிட்டது. இல்லை இல்லை, வாலாஜா ரோட்டுக்கு வந்தபோதே அந்தச் சத்தம் கேட்டது. எந்தச் சத்தம்? ஏதோ ஒரு சத்தம்... ஹோவென ஆர்ப்பரிக்கும் சத்தம். யாரோ பேசுவதுபோல தெரிகிறது. ஆங்கில உச்சரிப்பு புரியவில்லையே. Accent-ஐப் பார்த்தால் பேசுவது இந்தியர் அல்ல. ஆம், ஸ்டீவ் ஸ்மித். ஆஸ்திரேலிய கேப்டன். அதற்குள் டாஸ் போட்டு விட்டார்களா? நாம லேட்டா? இல்லை இல்லை. மணி 1. இன்னும் அரை மணி நேரம் இருக்கு. சரியான டைம்தான். இவ்ளோ கெடுபிடி இருக்கும் எனத்தெரியாது. யார் ஃபர்ஸ்ட் பேட்டிங்? கேள்வி எழும் முன், விடை வந்தது... இந்தியா. We are going to bat first... ஆம், இந்தப் பேச்சுத் தெளிவாகக் கேட்கிறது. பேசுவது கோலி, இந்தியக் கேப்டன் விராட் கோலி.

வார்ம் அப் முடிந்தது. டாஸ் முடிந்தது. கசகசவென இருந்த மைதானத்தில் இப்போது எந்தப் பொருளும் இல்லை. வீரர்கள் இல்லை. சப்போர்ட்டிங் ஸ்டாஃப் இல்லை. வர்ணனையாளர்கள் இல்லை. அதிகாரிகள் இல்லை. மைதான பராமரிப்பாளர்கள் இல்லை. ஸ்டம்ப் தவிர வேறு எதுவும் இல்லை. மேகமூட்டம் இல்லை. மழை வர வாய்ப்பில்லை. ரன் மழைக்கு மட்டுமே வாய்ப்பு. விராட் கோலி சதம் அடிக்க வாய்ப்பு. கடைசியாக இங்கு அவர் சதம் அடித்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில்... இன்றும் அடிப்பாரா? வாய்ப்பில்லை. இது தோனியின் செகண்ட் ஹோம்.. டிரஸ்ஸிங் ரூமில் தோனியின் தலை தெரிந்தாலே, தோனி, தோனி, தோனி... சத்தம் எக்கோ அடிக்கிறது. ‛பார்த்துக்கிட்டே இரு. இன்னிக்கி என் தலைவன் அடிப்பான். இறங்கி அடிப்பான்’ - உரக்கச் சொன்னான் தோனி ரசிகன். 

காலகாலமாக இந்தப் பேச்சு உண்டு. ‘நேர்ல கிரிக்கெட் பார்க்கிறதைவிட டிவியில பார்த்துரலாம்.’ உண்மைதான். டெக்னிக்கல் ரீதியாக, விலாவரியாக, அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து மேய நினைப்பவர்களுக்கு... இன்ச் பை இன்ச் கிரிக்கெட்டை ரசிக்க நினைப்பவர்களுக்கு, டிவிதான் சரி. டேட்டா சல்லிசாகக் கிடைப்பதால், 23 சி-யில் பயணித்தபடி மொபைலில் மேட்ச் பார்த்து விடலாம். ஆனால், நேரில் மேட்ச் பார்ப்பதென்பது ஒரு வகையில் தவம். ஒருவகையில் கலை. எல்லோருக்கும் அது கைகூடாது. அந்த வித்தை தெரிந்தவன் எப்படியாவது டிக்கெட் உஷார் பண்ணத் துடிப்பான். இறுதியில் Sold out-களை வெல்வான். டிக்கெட்டுடன் எம்.ஜி.கோபாலன் ஸ்டேண்ட் முன் போட்டோ எடுப்பான். மைதானத்துக்குள் நுழைந்ததும், தடுப்பு வேலிக்கு இந்தப் பக்கம் இருந்து செல்ஃபி எடுப்பான். அதை உடனே ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்வான். காலத்துக்கும் நீடித்திருக்கும் நினைவில் அடியெடுத்து வைப்பான்.

இதோ இரு அணி வீரர்களும் தங்கள் டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து அடியெடுத்து வைக்கின்றனர். பெவிலியன் அருகே இருந்து வீடியோகிராபர், இரு அணி வீரர்களையும் ஃபோகஸ்செய்தபடி பின்னோக்கி மைதானத்துக்குள் வருகிறார். ஸ்டீவ் ஸ்மித் வருகிறார். ஆஸ்திரேலிய அணி வருகிறது. விராட் கோலி வருகிறார். தோனி வருகிறார், (தோனி, தோனி, தோனி...) ஒட்டுமொத்த இந்திய அணியும் வந்துவிட்டது. பல விஷயங்களில் ஆஸ்திரேலிய அணி கச்சிதம். இதோ பிளேயிங் லெவன் வீரர்கள் ஒருவருக்கொருவர் தோள் சேர்த்து நிற்பதிலேயே அது தெரிகிறது. இந்திய வீரர்கள் அப்படி இல்லை. தனித்தனி ஆளாக இருக்கின்றனர். இடைவெளி இருக்கிறது. ஆஸ்திரேலிய தேசிய கீதம் ஒலிக்கிறது. டேவிட் வார்னர் உற்சாகமாகப் பாடுகிறார். அந்த உற்சாகம் முடிந்தது. அவர்கள் தேசியகீதம் முடிந்தது. இதோ இந்திய தேசிய கீதம். தேசிய கீதம் பாடும்போது யாரும் ஆடக் கூடாது, அசையக் கூடாது, சத்தம் போடக் கூடாது. ஆனால், மெகா ஸ்கிரீனில் தோனியை க்ளோசப்பில் காட்டும்போது சத்தம் போடாமலும் இருக்க முடியாது. தேசிய கீதம் முடிந்தது. இனி கிரிக்கெட் கீதம்!

பேட்ஸ்மேனுக்கும் விக்கெட் கீப்பருக்குமான இடைவெளி, வேகப்பந்து வீச்சாளர்கள் ஓடி வரும் தூரம், இவை இரண்டும்தாம்  மைதானத்தில் இருக்கையில் அமர்ந்த ரசிகனுக்கு முதலில் பிரமிப்பை ஏற்படுத்தும். அதுவும் ஸ்கொயர் லெக் திசையில் இருந்தால் மட்டுமே அந்த நீளம் புரியும். D,E,F Stand-களில் இருப்பவர்களுக்கு மட்டுமே அக்காட்சி கிடைக்கும். பெவிலியன் எண்ட் மற்றும் Far End ஸ்டேண்ட்களில் இருப்பவர்களுக்கு இந்த பிரமிப்பு தெரியாது. ஆனால், அவர்களால் மட்டுமே, பிட்ச்சில் நடப்பதை உன்னிப்பாகக் கவனிக்க முடியும். எல்டபிள்யு-வில் இருந்து பந்து ஸ்விங் ஆவது வரை எல்லாவற்றையும் அங்கிருந்தால்தான் துல்லியமாகக் கணிக்க முடியும். பெவிலியனுக்கு மேலே இருக்கும் ஸ்டேண்டில் இருப்பவர்களால் மட்டுமே, வீரர்களை மிக அருகில் பார்க்க முடியும். அதனால்தான் அந்த இருக்கைகளுக்கு அவ்வளவு கிராக்கி (8,000 ரூபாய்). ஆனாலும், அவர்களுக்கு ஒரு அசெளகர்யம். பேட்ஸ்மேன் Far end-ல் இருந்து பேட் செய்யும்போது, பெவிலியனுக்கு மேலே இருக்கும் Stand-ல், Sight Screen அருகே இருப்பவர்கள் எழுந்திருக்கக் கூடாது. 

 ‘சேப்பாக்கத்துக்கு மேட்ச் பார்க்கப் போனால், கண்களை மைதானத்தில் அலைபாய விட்டு, காதுகளைப் பக்கத்தில் இருப்பவர்களிடம் கொடுத்து விடுங்கள்’ என்பார்கள் சீனியர் ரசிகர்கள். உண்மைதான். ஒரு மேட்ச் பார்க்கப் போனால், பல கிளைக்கதைகள் விரியும். மகாபாரதம்போல. ஸ்லிப்பில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் ஒரு கேட்ச்சை மிஸ் செய்தபோது, ‘இப்படித்தான் ஒரு வாட்டி சேவாக் கேட்ச் மிஸ் பண்ணான்’ என ஏதோ ஒரு மேட்ச்சுக்குள் அழைத்துச் சென்றது ஒரு குரல்.

குரல் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. மைதானத்தில் மேட்ச் பார்ப்பவர்களுக்கு சக ரசிகன் எழுப்பும் குரல்தான், வர்ணனை. சமயத்தில் அது சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கமென்ட்ரியை மிஞ்சும். ரோகித்தின் டிஃபென்ஸிவ் ட்ரைவுக்கு ‘பேட்டிங்டா, பேட்டிங்டா’ என கமென்ட் வரும். ரோகித் சர்மா ஸ்கொயர் லெக் திசையில் தட்டிவிட்டு ரன் ஓடும்போது, ஆஸி விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் பந்தை பெளலரிடம் எறிகிறார். ‘விக்கெட் கீப்பர்னா, விக்கெட் கீப்பர் வேலையை மட்டும் பாருடா’ எனக் கிண்டல் வரும். அதேநேரத்தில் டேவிட் வார்னர் Direct hit அடித்தபோது ‘சபாஷ்டா’ எனப் பாராட்டும் வரும். கோல்டர் நைல் அநியாயத்துக்கு பெளன்ஸர் போட்டபோது ‘கெட்ட வார்த்தையில் திட்டு விழும். ரோகித் டிஃபென்ஸிவ் ஸ்ட்ரோக் அடித்தபோது ‘நீ அடிக்கவே வேணாம் தல’ என அட்வைஸ் வரும். ஹாட்ரிக் சிக்ஸர்கள் கொடுத்த ஜாம்பா பேட்செய்ய வரும்போது ‘வாழ வெச்ச தெய்வம்யா ஜாம்பா’ எனப் பரிதாபம் வரும். பெளன்ஸரை எதிர்கொள்ள முடியாமல் புவனேஷ்வர் குமார் குனிந்தபோது ‘அப்படித்தான் அப்டித்தான் உக்காந்துக்கோ’ என அப்ளாஸ் அள்ளும். கைதட்டல் என்றதும் நினைவுக்கு வருவது இதுவே.

லாபி செய்து விருதுகளை வாங்கி விடலாம். சாமானியனிடம் கைதட்டல் வாங்குவது கடினம். Put Your Hands together Pls எனக் கெஞ்சாத தருணங்களில் வெளிப்படும் கைதட்டலுக்கு வீச்சு அதிகம். மதிப்பும் அதிகம். கைதட்டல் என்பது போதை. கைதட்டல் என்பது அங்கீகாரம். கைதட்டல் என்பது கெளரவிப்பு. கைதட்டுவது என்பது ஊக்குவிப்பது. அது இயல்பு. என்றாலும் இயல்பான தருணங்களில் எல்லாம் அந்தச் சத்தம் கேட்பதில்லை. ஆனால், இந்தியா - ஆஸ்திரேலிய மேட்ச்சின் ஒவ்வொரு நிமிடமும் அந்தச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. பேட் கம்மின்ஸ் முதல் பந்தை வீச ஓடி வந்ததில் இருந்து, இரு அணி வீரர்களும் கைகுலுக்கி விடைபெறுவது வரை அந்தச் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு முறையும் தினுசு தினுசாக...

ரகானே அவுட். பேட்டில் பந்து பட்ட சத்தம் இங்கு கேட்கிறது. அம்பயர் கைவிரலை மேலே தூக்கத் தேவையில்லை. நடையைக் கட்டலாம். ரகானே பெவிலியன் விரைகிறார். பரவாயில்லை எனும் விதத்தில் கைதட்டல். ரகானேவை மிதமான வேகத்தில் வழியனுப்பி வைத்த அந்தக் கைதட்டல், பெவிலியினில் இருந்து விராட் கோலியைக் கூடுதல் உற்சாகத்துடன் அழைத்து வந்தது. கைதட்டலின் ஓசை கூடுகிறது. காற்றில் கைகளை வட்டமிட்டபடி வருகிறார் விராட். கைதட்டல் மட்டுமல்ல விசில். விசில் மட்டுமல்ல ஹோவென ஆர்ப்பரிப்புச் சத்தம்தான் மைதானத்தில் இருந்தவர்களை ஒன்றுபடுத்துகிறது. எங்கிருந்தோ வரும் அலைகள் நம் கால்களை நனைத்துச் செல்வதுபோல... எல்லா நேரத்திலும் எல்லாச் சத்தமும் உற்சாகப்படுத்துவதில்லை. இதோ இப்போது ஊஊஊஊ சத்தம். இது என்ன சத்தம்? இதற்கென்ன அர்த்தம்? கோலி அவுட்டா? நம்ப முடியவில்லை. டக் அவுட்டா? ஜீரணிக்கவே முடியவில்லை.

சேப்பாக்கம் மைதானத்தின் ஒவ்வொரு ஸ்டேண்டும் மூன்று அடுக்குகள் கொண்டது. அப்பர், மிடில், லோயர். இதில் நடுவில் இருப்பவை அனைத்தும் ஏ.சி அறைகள். அங்கு தண்ணீர், உணவு, டீ, ஸ்நாக்ஸ், Wifi எல்லாமே கிடைக்கும். இலவசம். மீடியா, ஸ்பான்சர்கள், வி.ஐ.பி-கள், வர்ணனையாளர்கள் எனக் கனவான்கள் இருக்கும் இடம். மைதானத்தில் என்ன நடந்தாலும் அவர்களிடம் எந்தவித எக்சைட்மென்ட்டும் இருக்காது. ஒட்டுமொத்த மைதானமும் ஓவெனக் கத்தினாலும் கிணற்றுக்குள் இருந்து கத்துவது போலத்தான் அவர்களுக்குக் கேட்கும். மீறிக் கத்தினாலும் அது வெளியே யாருக்கும் கேட்பதுவும் இல்லை. தனித்தீவு போல இருக்கும். ஆனால், தோனி இறங்கியபோது அங்கும் பேரலை அடித்தது.

சென்னை ரசிகர்களுக்குத் தோனி, தொலைதூரத்து வெளிச்சம். அந்த வெளிச்சம் எப்போதும் வசீகரித்துக்கொண்டே இருக்கும். ரோகித் சர்மா அவுட்டானதும் மைதானத்தில் ஒரு வெறுமை. அந்த வெற்றிடத்தை நிரப்ப வருகிறார் தோனி. டிரெஸ்ஸிங் ரூமிலிருந்து தோனி புறப்படும் தருணம், மெகா ஸ்கிரினில் விரிகிறது. இங்கு யாருக்கும் இருப்பு கொள்ளவில்லை. யாரும் உட்காரவில்லை. தோனியின் வருகைக்காகக் காத்திருந்தனர். எழுந்து நின்று கைதட்டி வரவேற்கக் காத்திருந்தனர். பொதுவாக சாதித்த வீரன் பெவிலியன் திரும்பும்போதுதான் Standing Ovation கிடைக்கும். தோனி அதில் விதிவிலக்கு. தோனி வருகிறார். வேகவேகமாக... டிரஸ்ஸிங் ரூம் இருக்கும் இடத்துக்கும் F stand-க்கும் இடையே 100 மீட்டருக்கும் மேல் இடைவெளி இருக்கும். இங்கிருந்து Redmi Note 4 மொபைலில் வீடியோ எடுத்தால் எதுவுமே தெரியாது. எதுவுமே எனில் தோனியின் உருவம் தெரியாது. தெரிந்தாலும் துல்லியம் இருக்காது. 6,000 ரூபாய்க்கு லென்ஸ் வாடகைக்கு வாங்கி, மெட்ராஸ் கிரிக்கெட் க்ளப்புக்கு முன் தேவுடு காத்துக்கொண்டிருக்கும் போட்டோகிராபர் கூட, தோனியின் சரியான ஒரு ஷாட் கிடைக்கத் திணறுகிறார். எனில், இந்த வீடியோ எல்லாம் எம்மாத்தரம்!  ஆனாலும், விடுவதாக இல்லை. இது பொக்கிஷம். ஏனெனில் அதில் இருப்பது தோனி. சி.எஸ்.கே தலைவன், இந்திய அணியின் முன்னாள் கேப்டன். முன்பல்ல, இப்போதும், இப்போதல்ல, எப்போதும்... 

‘அந்த சீனுக்கே கொடுத்த காசு செத்துச்சு’ என்ற மனநிலையில் இருப்பவர்களால் மட்டுமே மைதானத்துக்கு வரமுடியும். காசு கொடுத்து கிரிக்கெட் பார்க்க முடியும். இந்தியா - ஆஸ்திரேலியா மேட்ச்சிலும் அப்படியொரு தருணம் வந்தது. ஜேம்ஸ் ஃபாக்னர் பந்தில் எக்ஸ்ட்ரா கவர் திசையில் தோனி சிக்ஸ் அடித்தபோது சொன்னான் ஒரு தோனி வெறியன்... ‘1,200 ரூபாய்க்கு இது போதும்டா...!’ ரசிகர்கள் இப்படித்தான் குழந்தைகள் மாதிரி. அவர்களை எளிதில் திருப்திபடுத்திவிட முடியும். சமயத்தில் திருப்திப்படுத்தவும் முடியாது.  ஹர்திக் பாண்டியா ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தபோது கூட இந்த மாதிரி கமென்ட் வரவில்லை. உற்சாகம் மட்டுமே வந்தது. திருப்தி வரவில்லை. ஆனால், மைதானத்தில் ஒருவித எனர்ஜியைக் கொண்டு வந்தது பாண்டியாவே. அந்த சிக்ஸர்களே! ஜாம்பா பந்தில் பாண்டியா முதல் சிக்ஸர் அடித்தபோது இங்கு ஒருவன் சொல்லிவிட்டான், ‘இன்னிக்கிம் ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்கப் போறான்!’. தீர்க்கதரிசி அவன். இரண்டாவது பந்தும் சிக்ஸர். கத்தல், கைதட்டல், விசில், உற்சாகம்...சேப்பாக்கம் குலுங்கியது. யாரும் இருக்கையில் அமர்ந்திருக்கவில்லை. மூன்றாவது சிக்ஸர்... பாண்டியா, பாண்டியா, பாண்டியா....  இந்தியா, இந்தியா, இந்தியா.... சத்தம் விண்ணைப் பிளக்கிறது. யாராலும் துள்ளிக்குதிக்காமல் இருக்க முடியவில்லை. செக்கிங் பாயின்ட்டுக்கு முன்பு அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த Paytm அட்டைகள் லாட்டரிச் சீட்டுகளாகக் கிழிபடுகிறது. காகித மழை பொழிகிறது. ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை. உற்சாகம் கரைபுரளும்போது யாரும் இருப்புக் கொள்ளவில்லை. எப்போது எழுந்து நிற்கிறோம், எப்போது கைதட்டுகிறோம், எப்போது சகஜ நிலைக்குத் திரும்புகிறோம் என்பதை உணரமுடியவே இல்லை. எல்லாம் அதன்போக்கில் நடக்கிறது. அதுதான் சுவாரஸ்யமும் கூட.

Photo credit- BCCI

ஜாம்பாவின் பந்து வெளுக்கப்படுவதை உணர்ந்து அவருக்கு ஓவர் கொடுக்கவில்லை ஸ்மித். அப்போது வந்தது ஒரு குரல் ‛வீ வான்ட் ஜாம்பா, வீ வான்ட் ஜாம்பா, வீ வான்ட் ஜாம்பா... சத்தம் கேட்டு டீப் மிட் விக்கெட் திசையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த டிராவிஸ் ஹெட் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்தார். உடனே  ‛என்ன லுக்கு...’ என ஒருவர் கத்திச் சொன்னது டிராவிஸ் ஹெட் காதிலும் விழுந்தது. மீண்டும் ஜாம்பாவிடம் பந்தைக் கொடுக்கிறார் ஸ்மித்... உடனே ஒரு சவுண்ட்... ‛வீ வான்ட் சிக்ஸர், வீ வான்ட் சிக்ஸர், வீ வான்ட் சிக்ஸர்...’ இது ஹர்திக் பாண்டியாவின் காதுகளுக்குக் கேட்டிருக்கும்போல! லாங் ஆன் திசையில் பறந்து விழுந்தது பந்து. ஜாம்பா.... ஏம்பா... ஜாம்பா... ஏம்பா...! ரைமிங் கமென்ட். ஒரு வகையில் பாண்டியாவின் ஆட்டத்துக்கு இந்த ரசிகர்களின் உற்சாகமும் ஒரு காரணமாக இருக்குமோ?

இருக்கலாம். ஏனெனில்... நியூஸிலாந்து முன்னாள் வீரர் மெக்கல்லம் ஃபிட்டானவர். தார் ரோட்டிலும் டைவ் அடிக்கக் கூடிய உடல்வாகுடையவர். அவர், வெல்லிங்டன் டெஸ்ட்டில் இந்தியாவுக்கு எதிராக விட்டு விளாசிக் கொண்டிருக்கிறார். முச்சதம் அடிக்கப் போகிறார். ஆனால், ஸ்டாமினா இல்லை. வியர்வை வழிகிறது. எனர்ஜி குறைகிறது. ‘சுத்தமா முடியாது’ என்றநிலை. திடீரென கரகோஷம் விண்ணைப் பிளக்கிறது. ஏதோ ஒளி தெரிகிறது. உற்சாகம் பிறக்கிறது. மெக்கல்லம் உயிர்பெறுகிறார். அவர் சந்திக்கும் ஒவ்வொரு பந்துக்கும் கைதட்டல்... ஒவ்வொரு பந்துக்கும் என்பதை விட, பெளலர் ஓடி வரும் ஒவ்வொரு ரன் அப்புக்கும் கைதட்டல்... அரங்கமே அதிர்கிறது. மெக்கல்லம் முச்சதம் அடித்து விட்டார். அடிக்க வைத்துவிட்டனர் ரசிகர்கள். ரசிகனின் கைதட்டல் என்ன வேண்டுமானாலும் செய்யும்!

சென்னை ரசிகர்களும் அப்படியே. ஆஸ்திரேலியா பேட்டிங். முதல் பந்தை வீச வருகிறார் புவனேஷ்வர். அவர் ஓடி வரும்போது எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் கைதட்டல். அந்தப் பந்தில் ரன் இல்லையா... பலத்த கைதட்டல். ரன் அடித்து விட்டார்களா... ‛பரவாயில்லை, பரவாயில்லை’ எனக் கைதட்டல். டேவிட் வார்னர் பவுண்டரி அடித்து விட்டாரா, அதற்கும் பரவாயில்லை என கிளாப்ஸ். பும்ராவின் பந்தில் கார்ட்ரைட் கிளீன் போல்டாகி விட்டாரா? ஸ்டம்பில் இருந்த லைட் எரிகிறதா, கைதட்டல்... அப்ளாஸ் மட்டுமல்ல கூச்சல், ஆர்ப்பரிப்பு. இங்குதான் ஒரு விஷயம் புரிகிறது கைதட்டல் என்பது அங்கீகாரம். சத்தம் என்பது கொண்டாட்டத்தின் வெளிப்பாடு. டீப் மிட்விக்கெட்டில் இருந்து பந்தை பிட்ச் செய்யாமல் விக்கெட் கீப்பர் தோனிக்குப் பந்தை கேதர் ஜாதவ் த்ரோ செய்தபோது அடித்த கிளாப்ஸ் பாராட்டுக்குரியது. மணிஷ் பாண்டேவின் த்ரோவின்போதும் விராட் கோலியின் அட்டகாச ஃபீல்டிங்கின்போதும் அடித்த கிளாப்ஸும் ஒரே ரகம். வார்னர் வெளியேறியபோது கிடைத்த கைதட்டலும் பாராட்டுக்குரியது. ஹாட்ரிக் பாண்ட்யாவின் சிக்ஸர்களின்போது வந்த சத்தமும் தோனியைப் பார்க்கும்போதெல்லாம் வந்த சத்தமும் கொண்டாட்டத்துக்குரியது.

பாண்டியா 2 விக்கெட் எடுத்தபோதே இங்கு முடிவுசெய்து விட்டார்கள். இவன்தான்டா இன்னிக்கி மேன் ஆஃப் தி மேட்ச்!. சொன்னதுபோலவே பாண்டியா ஆட்ட நாயகன். ஆனால், சேப்பாக்கத்தைப் பொறுத்தவரை தோனிதான் என்றென்றும் நாயகன். ‘எங்க தல தோனிக்குப் பெரிய விசில் அடிங்க...’ - தோனி நிதானமாக ஆடும்போது இப்படிக் கத்தினார்கள். அவர் 50 அடித்ததும் அடிவயிற்றிலிருந்து கத்தினார்கள். எக்ஸ்ட்ரா கவரில் தோனி சிக்ஸர் அடித்தபோது ஜென்ம சாபல்யம் அடைந்தார்கள். 50 dismissal against Australia என ஸ்கிரீனில் பாராட்டு தெரிவித்தபோதும் சரி, சிக்ஸர்கள் விளாசியபோதும் சரி... கோலிக்குப் பதிலாக ஃபீல்டிங் செட் செய்தபோதும் சரி.... தோனி, தோனி, தோனி... எனச் சத்தம் ஒலித்துக்கொண்டே இருந்தது.

ஏனெனில்... ‛Dhoni loves Chennai. Chennai loves Dhoni’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு