Published:Updated:

பாண்டியா விஷயத்தில் சச்சின் சொன்னது பலித்தது..! ஹர்திக் டைம்லைன்

பாண்டியா விஷயத்தில் சச்சின் சொன்னது பலித்தது..! ஹர்திக் டைம்லைன்
பாண்டியா விஷயத்தில் சச்சின் சொன்னது பலித்தது..! ஹர்திக் டைம்லைன்

புகழ்பெற்ற மும்பை டிரைடென்ட் ஹோட்டல் அறையில் தங்கியிருக்கிறான் அந்த இளைஞன். அறையில் உள்ள ஜன்னலின் வழியே அவனது நினைவுகள் விரிகின்றன. சில ஆண்டுகளுக்கு முன், இந்த ஊருக்கு விளையாட வரும்போதெல்லாம், இந்த ஹோட்டலுக்கு முன்பு நின்றுதான் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வான். அந்தப் புகைப்படங்கள் அன்று அவனுக்கு பொக்கிஷம். இப்பொழுது அவன், அதே ஓட்டலின் அறையில். காலம் அவனுக்கு மாற்றம் எனும் மாயமருந்தை இனிப்பு கலந்து கொடுத்திருக்கிறது. ஆனால் வறுமை எனும் கசப்புச்சாற்றை அது ஊட்டிவிட்டபோது தன்னம்பிக்கை என்னும் ஆயுதம் கொண்டு வென்றான். வியந்து ரசித்த ஹோட்டலில் வி.ஐ.பி-யாக வீற்றிருக்கிறான். அவன் - இந்திய அணியின் அடுத்த ஆல் ரவுண்டர்; அடுத்த ஸ்டார்... ஹர்திக் பாண்டியா!


2015ம் ஆண்டு மே 8, சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதல். 159 ரன்கள் இலக்கைத் துரத்திய மும்பை அணியின் ரோகித் ஷர்மா நான்காவது விக்கெட்டாக வெளியேறுகிறார். 17 பந்துகளில் 34 ரன்கள் தேவை. களம் இறங்கினார் ஹர்திக். சென்னை ரசிகர்களில் பலருக்கும் அவரைத் தெரிந்திருக்கவில்லை. காரணம், அதுவே அவருக்கு முதல் ஐ.பி.எல் தொடர். 19-வது ஓவரில் 3 சிக்சர்கள், 8 பந்துகளில் 21 ரன்கள் குவித்து, 4 பந்துகள் மீதமிருக்கும்போதே மும்பை அணியை வெற்றி பெற வைத்தார் ஹர்திக். அன்று அவர் ஆட்டநாயகன் விருதை வாங்கியபோது சென்னை ரசிகர்கள் அனைவரும் யாரென்று தெரியாத அந்த 21 வயது இளைஞனைப் பார்த்து கோபம் கொண்டிருப்பர். 


அதே மைதானம். முன்பை விட ஹர்திக்கின் சீற்றம் அதிகம். இப்பொழுது 'தொடர்ச்சியாக' மூன்று சிக்சர்கள். இப்போதும் மஞ்சள் உடையணிந்த அணியே தோல்வி. அவரே மீண்டும் ஆட்ட நாயகன். ஆனால், சென்னை ரசிகன் இம்முறை பாண்டியாவின் பெயரை உரக்கச் சொல்லி மகிழ்ந்தான். அவர் மீது கோபமில்லை. காரணம், ஹர்திக்  அன்று மும்பை இந்தியன்ஸ் வீரன். இன்று இந்தியாவின் டாப் ஆல் ரவுண்டர். ஆடம் ஜாம்பாவின் ஓவரில் பாண்டியா ஹாட்ரிக் சிக்சர்களை  விளாசியபோது, இந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்த மூன்றாவது ஹாட்ட்ரிக் என வர்ணனையாளர்கள் அலறினர். அந்த மூன்றும் வலது கை பேட்ஸ்மேன்கள் திணறும் லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக அடிக்கப்பட்டவை என்பதே பாண்டியாவின் ஸ்பெஷல். 

"நீ ஆட்டங்களை வெற்றிகரமாக முடிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்திய அணிக்காக எதிர்காலத்தில் நீ அதைத்தான் செய்யப் போகிறாய்" - இது, பாண்டியாவிடம் டிராவிட் சொன்னது. இந்திய ஏ அணிப் பயிற்சியாளரான டிராவிட்டுக்கு,  ஹர்திக்கின் மீது அவ்வளவு நம்பிக்கை. டிராவிட் மட்டுமல்ல சச்சின், ரிக்கி பாண்டிங், ஜான் ரைட் போன்ற ஜாம்பவான்கள் கூட, ‛This guy will go an extra mile’ என கணித்திருந்தனர். இந்த இளம் வீரன் மீது இத்தனை ஜாம்பவான்களின் கண்களும் பதியக் காரணம் என்ன? பாண்டியா நிரப்பபோவது 22 ஆண்டுகள் காலியாகக் கிடந்த கபில் தேவின் இடத்தை. காலிஸ், ஃபிளின்டாப், பிராவோ, வாட்சன் என ஒவ்வொரு அணியிலும் 'ஃபாஸ்ட் பவுலிங்' ஆல்ரவுண்டர்கள் உருவாக, அப்படியொருவனைத் தான் இந்திய அணி வெகுகாலம் தேடிக்கொண்டிருக்கிறது. கவாஸ்கருக்குப் பிறகு சச்சினும், சச்சினுக்குப் பிறகு கோலியும் எளிதாகக் கிடைத்துவிட்டனர். ஆனால் பாண்டியா - 22 ஆண்டுகாலத் தேடலுக்குக் கிடைத்த பதில்!

2013 சையது முதாக் அலி டி-20 தொடர்தான் பாண்டியா மீது வெளிச்சம் பாய்ச்சியது. பதான் சகோதரர்கள், முனாஃப் படேல், அம்பதி ராயுடு போன்ற சீனியர்கள் ஆடிய அதே அணியில் 19 வயது ஹர்திக் . எல்லோரும் சீனியர்கள். ஒரு ஆல்ரவுண்டரின் வாழ்க்கை எப்படி மாறும் என்பதை இர்ஃபானின் கண்கள் வழியே அவன் அப்போதே பார்த்திருப்பான். திடமான ஆளாக இல்லாமல் இருந்திருந்தால் அதுவே அவன் நம்பிக்கையை குலைத்திருக்கும். அவன் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவனுக்குள் இருந்த ஒரே எண்ணம், 'ஹர்திக்  ஆகிய நான்...' தனக்கென்று ஒரு அடையாளம் தேடிக்கொண்டான். 9 போட்டிகளில் 11 விக்கெட்டுகள். அணியின் 3-வது சிறந்த பவுலர் ஹர்திக்  தான். பவுலிங்கை விட பேட்டிங்கில் அசத்தல். 8 இன்னிங்ஸ்களில் 219 ரன்கள். இந்திய அணிக்காக உலகக் கோப்பைகளில் விளையாடிய வீரர்களின் நிழலில் இருந்தே இவன் எழுந்தான். பாண்டிங் இவரை அடையாளம் காண, முற்றுப்பெற்றது இந்தியாவின் ஆல்ரவுண்டர் ஏக்கம். 2015 ஐ.பி.எல் முடியும் தருவாயில் பாண்டியாவை அழைத்து, "நீ இன்னும் 18 மாதங்களில் இந்திய அணியில் இருப்பாய்" என்றிருக்கிறார் சச்சின். அடுத்த 6 மாதங்களில் ஹர்திக் இந்திய அணியில்!

அடிப்படையில் பாண்டியா மிகவும் சுமாரான ஆல்ரவுண்டர். பேட்டிங்கும் ஆவரேஜ், பவுலிங்கும் ஆவரேஜ். "என் மீது எனக்கு 200 சதவிகிதம் நம்பிக்கை உள்ளது. என்னால் என்னை வளர்த்துக்கொள்ள முடியும்" என்று பயிற்சியாளர்கள் முன் நம்பிக்கையோடு நின்றான் சிறுவன் ஹர்திக் . அச்சிறுவன் கொண்டிருந்த நம்பிக்கையை அளவுகோல் கொண்டு அளந்திட முடியாது. அவ்வளவு நம்பிக்கை. எந்த வசதிகளும் இல்லாத போதே, இந்த விளையாட்டு தனக்குப் பிடித்த கார்கள் வாங்க வழிசெய்யும் என்று கனவு காணுமளவு நம்பிக்கை. அந்த கனவுகளுக்கு உயிர் கொடுக்க, அவன் யாரிடமும் வளைந்து கொடுக்கவில்லை. மோசமான அணுகுமுறையால் அவ்வப்போது 13 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்குட்பட்டோர் அணிகளிலிருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார். பயிற்சியாளர்களுக்கு இவரைப் பிடிக்கவில்லை. சக வீரர்களுக்கு மத்தியில் அவரைப் பற்றி தவறான அபிப்பிராயம். ஆனால் கவலைப்படவில்லை. தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. இன்று தன் பயிற்சியாளர்களிடம் சொன்னது போலவே வளர்ந்து நிற்கிறார்.

"பயிற்சியாளருக்கு வணக்கம் வைப்பது மரியாதை கொடுப்பது என்றாகிவிடாது. என்னைப் பொறுத்தவரையில் மரியாதை என்பது மனதளவில் இருக்க வேண்டும். உதட்டளவில் மரியாதை செலுத்த விரும்பாதவன் நான். அதனால் என் அணுகுமுறையை குறை கூறினார்கள்.  அவர்கள் அனைவரும் 19 வயதுக்குட்பட்ட பரோடா அணிக்கு நான் தேர்வானதும் , என் அணுகுமுறையைப் பாராட்டுகிறார்கள். நீங்கள் ஜொலிக்கத் தொடங்கிவிட்டால் மற்றவர்களின் பார்வை மாறும்" - பாண்டியாவின் இந்த வார்த்தைகளில் அவ்வளவு தெளிவு. அதே தெளிவு அவரது விளையாட்டிலும்.

ஐ.பி.எல் போட்டியோ சர்வதேசப் போட்டியோ... இல்லை சாம்பியன்ஸ் டிராபியோ, பாண்டியாவின் இதயம் நிமிடத்திற்கு 72 முறை தாண்டித் துடிக்காது. எந்த ஒரு சூழ்நிலையிலும் அவரிடம் அவ்வளவு தெளிவு. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் மொத்த டாப் ஆர்டரும் சொதப்ப, கடைசியில் வாணவேடிக்கை காட்டிய அந்தக் கண்களில் பதற்றம் சிறிதளவுமில்லை. அது வெறும் சாம்பிள்தான். 2016 டி-20 உலகக்கோப்பை பார்த்தவர்களுக்குத் தெரியும், எரிமலையில் நின்று கொண்டும் அவரால் குளிர் காய முடியுமென்று. வங்கதேசத்துடனான லீக் போட்டி. தோற்றால் வெளியேற வேண்டும். 147 ரன் இலக்கை விரட்டிய வங்கதேசம் வெற்றி பெற கடைசி ஓவரில் 11 ரன்களே தேவை. இரண்டு செட்டில் ஆன பேட்ஸ்மேன்கள். சர்வதேச அனுபவம் இல்லாத ஹர்திக்கின் கையில் வெள்ளை நிற குக்கூபுரா பந்தும், பல கோடி இந்திய மக்களின் கனவும். முதல் பந்து 1 ரன், 2-வது பந்து வழக்கமாக தான் வீசும் ஷார்ட் பால்... நான்கு ரன்கள்...3-வது பந்திலும் பவுண்டரி... 3 பந்துகளில் 2 ரன்கள் வேண்டும். ஆட்டம் டை ஆனாலும் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறி. கொஞ்சமும் ஹர்திக் டென்ஷன் ஆகவில்லை. முன்பு கைகொடுக்காத அதே ஷார்ட் பால்...விக்கெட். அடுத்த பந்திலும் விக்கெட்...1 பாலுக்கு 1 ரன்...ஹர்திக்  இன்னும் கூல்... ரன் அவுட்..1 ரன்னில் இந்தியா வெற்றி. உண்மையில் பாண்டியாவின் சிறந்த சர்வதேச பெர்ஃபாமென்ஸ் என்றால் அதுதான். 

இந்த கூலான 'ஆட்டிட்யூட்' தான் பாண்டியாவை அந்த உயரத்துக்கு கொண்டு சென்றது. கிரிக்கெட்டில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் பாண்டியா சோகங்களைக் கடக்க அதுதான் காரணம். தந்தை ஹிமான்ஷு பண்டியாவுக்கு மூன்றாவது முறை மாரடைப்பு ஏற்பட, தன் வேலையை விட வேண்டிய நிலை. குடும்பத்தில் சம்பாதித்துக்கொண்டிருந்த ஒருவருக்கும் இப்போது வேலையில்லை. சில காலம் கழித்து, அம்மாவுக்கு ஆப்ரேஷன். அப்போது ரஞ்சியில் முன்னேறிக் கொண்டிருந்த சமயம். "யோசிக்கத் தொடங்கினால் என்னால் சரிவர கவனம் செலுத்த முடியாது. எல்லாவற்றையும் அண்ணன் தான் பார்த்துக்கொண்டான்" என்று தனக்கு தன் மூத்த சகோதரன் குருனால் பாண்டியாவின் ஆதரவைப் பற்றிச் சொல்கிறார் பாண்டியா.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த இரண்டு சீசன்களிலும் கலக்கிய குருனால், தன் தம்பி எதைச் செய்தாலும் ஆதரவளிக்கும் பொறுப்பான அண்ணன். சிறு வயதில் இருவரையும் கிரிக்கெட் விளையாட்டைப் பார்க்க அழைத்துச் சென்ற அவரது தந்தை, சகோதரர்கள் இருவருக்கும் விளையாட்டின் மீது ஈர்ப்பு ஏற்படவே, வதோதராவில் இருந்த முன்னாள் இந்திய வீரர் கிரன் மோரேவின் கிரிக்கெட் அகாடமியில் சேர்த்துள்ளார். அந்த வறுமையான நாட்கள் பெரும்பாலும் மைதானத்திலேயே கழிந்தன."எங்கள் நாள் முழுதும் மைதானத்தில் தான் கழியும். என்னிடம் அப்போதெல்லாம் 5 ரூபாய் கூட இருக்காது. எப்பொழுதும் கடன்காரனாகத்தான் இருப்பேன்" என்று தன் பால்யத்தை நினைவுகூறும் பாண்டியா, எந்த விஷயத்தையும் பாசிடிவாகவே எடுத்துக்கொள்கிறார்.

சிறு வயதில் 5 ரூபாய் 'மேகி' வாங்கிக்கொண்டு, மைதானத்தில் இருக்கும் தோட்டக்காரரிடம் சுடுதண்ணீர் வாங்கி நூடுல்ஸ் செய்து சாப்பிடுவது பாண்டியா பிரதர்ஸ் ஹாபி. காலை உணவு, மதிய உணவு என 365 நாட்களும் அப்படித்தான் கழியுமாம். ஆனால் இதைச் சொல்லும்போது அவர் முகத்தில், 'வறுமை வாட்டியது' என்னும் சோக ஸ்மைலி இல்லை. 'ஏழ்மையை மகிழ்ச்சியாகக் கழித்தோம்' என்ற மலரும் நினைவுகள். களத்தில் எந்த சூழ்நிலையையும் பாண்டியா ஈஸியாக எடுத்துக்கொள்ளக் காரணம், அவர் வழ்க்கையை எளிதாக எடுத்துக் கொண்டதுதான். வாழ்கையை ஈஸியாக எடுத்துக்கொண்ட இந்த வீரன், தனக்குக் கிடைத்த வாய்ப்பை மட்டும் சீரியஸாக எடுத்துக்கொண்டான். அதனால்தான் ராணி, குதிரை... ஏன் ராஜாவே இறந்தாலும், இந்தச் சிப்பாய் எதிராளியை செக் மேட் செய்கிறான். 

பாண்டியா வாழ்கையைப் பற்றிச் சொன்ன சிம்பிள் விஷயம் : "கஷ்டங்கள் இல்லாமல் எப்படி நீங்கள் வாழ்கையை அனுபவிக்க முடியும்?" கஷ்டமான சூழ்நிலைகளே அவன் வெற்றியைத் தேட உதவுகின்றன. வெல்வான். அனைத்து கஷ்டங்களையும் இவன் வெல்வான்!