Published:Updated:

சொதப்பல் ஸ்மித், ‛குன்ஃபு’ பாண்டியா, மெர்சல் தோனி, சபாஷ் சாஹல்... இந்தியா வென்றது எப்படி? #MatchAnalysis #IndVsAus

சொதப்பல் ஸ்மித், ‛குன்ஃபு’ பாண்டியா, மெர்சல் தோனி, சபாஷ் சாஹல்... இந்தியா வென்றது எப்படி? #MatchAnalysis #IndVsAus
சொதப்பல் ஸ்மித், ‛குன்ஃபு’ பாண்டியா, மெர்சல் தோனி, சபாஷ் சாஹல்... இந்தியா வென்றது எப்படி? #MatchAnalysis #IndVsAus

“வெஸ்ட் இண்டீஸ், இலங்கை கூட ஜெயிக்கிறதெல்லாம் பெரிய விஷயமில்ல. ஆஸ்திரேலியா கூட ஜெயிக்கணும். அதான் வெற்றி” என்று குமுறிய ஆன்லைன் கிரிக்கெட் ஜீனியஸ்களுக்கு சேப்பாக்கத்தில் நேற்று பதில் சொல்லி விட்டது கோலி அண்ட் கோ. தோனி, பாண்டியாவின் அசத்தல் ஆட்டமும், ஸ்பின் மேஜிக்கும் கைகொடுக்க, மழையின் இடையூறை மீறி தொடருக்கு வெற்றித் தொடக்கம் தந்துள்ளனர் இந்திய வீரர்கள். போட்டியின் தொடக்கத்திலேயே கவிழ்ந்த இந்தியாவின் இன்னிங்ஸ் தலைநிமிர்ந்தது எப்படி?  கையிலிருந்த மேட்ச்சை ஆஸி கோட்டை விட்டது எப்படி? ஒரு பார்வை...

 பார்ட்னர்ஷிப் பக்கா

இந்திய பேட்ஸ்மேன்கள் முக்கியமான நேரத்தில் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்ததும், ஆஸி வீரர்கள் அதைச் செய்யத் தவறியதுமே இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணம். 6 ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகள் இழந்த நிலையில் கேதர் ஜாதவ், ரோஹித் இருவரும் கவனமாக ஆஸி பவுலர்களை எதிர்கொண்டனர். 10.3 ஓவர்களே அந்த பார்ட்னர்ஷிப் நீடித்தாலும், அதுவே அடுத்த வந்த வீரர்களுக்கான ஊட்டச்சத்தாக அமைந்தது. விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்ததோடு சீராக ரன்களும் எடுத்தனர். 63 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டனர். ரன் எடுக்காமல் தடுப்பாட்டம் மட்டும் ஆடிக்கொண்டு இருந்திருந்தால் ஆஸி பவுலர்களுக்கு அது இன்னும் அதிக நம்பிக்கையைக் கொடுத்திருக்கும். ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கலாம்!

அடுத்து, தோனி - பாண்டியா பார்ட்னர்ஷிப். அதைப்பற்றி தனியாகப் பார்ப்போம். புவனேஷ்வர் குமார், கூடிய விரைவில் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் இடம் பிடிக்கப் போகிறார். அடித்த 5 பவுண்டரிகளில் 3 தாறுமாறு. இலங்கையுடன் அரைசதம் அடித்து அணியைக் கரை சேர்த்தவர், நேற்றும் தோனியுடன் இணைந்து நல்லதொரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார். இருவரும் இணைந்து 54 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்ததே அணி நல்ல ஸ்கோரை எட்ட வழிசெய்தது. தான், சந்தித்த முதல் 5 பந்துகளில் சற்று தடுமாறினாலும், அதன்பின்னர் நேர்த்தியாக ஆடினார். தோனி அடிக்கத்தொடங்கியதும், சிங்கிள் எடுத்துக்கொடுப்பதில் முனைப்புக் காட்டியது, அதற்கு முன்பு நல்ல பந்துகளை பவுண்டரிக்கு விளாசுவது என 'டெயிலி'ன் நம்பிக்கையான பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ளார் புவி. அவருக்கும் தோனிக்குமான கெமிஸ்ட்ரி சூப்பர்!

ஆஸி கோட்டை விட்ட ஏரியா இதுதான். 21 ஓவர் போட்டியில் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாதுதான். ஆனால் 3 ஓவர்கள் கூடவா தாக்குப்பிடிக்க முடியாது? ஸ்டாய்னிஸ் - மேக்ஸ்வெல் கூட்டணி மட்டுமே 24 (44 ரன்கள்) பந்துகள் தாக்குபிடித்தது. மற்ற எந்த இணையும் 3 ஓவர்கள் தாண்டவில்லை. 9-வது விக்கெட்டுக்கு இணைந்த ஃபால்க்னர் - கோல்டர்நைல் அடித்த 18 ரன்கள்தான் அவர்களின் இரண்டாவது சிறந்த பார்ட்னர்ஷிப். மற்ற எந்த பார்ட்னர்ஷிப்பும் ஒரு புரிதலோடு ஆடவில்லை. அதுவே அவர்களுக்குப் பாதகமாக அமைந்துவிட்டது.

ஹர்-மஹி!

பாண்டியா, தோனி இருவரிடமும் எந்தச் சலனமும் இல்லை. யார் பந்து வீசுகிறார்கள் என்று கவலைப்படவும் இல்லை. ‛பார்ட்னர்ஷிப் பில்ட் பன்னணும்’ என்பது மட்டுமே அவர்கள் பிளான். பொறுமையாகத் தொடங்கிய அவர்களது பார்ட்னர்ஷிப் மெதுவாக ரன்சேர்க்கத் தொடங்கியது. பந்துவீச்சாளர்களை இருவரும் தேர்ந்தெடுத்து ஆடினர். முதல் ஸ்பெல்லில் அச்சுறுத்திய கோல்டர் நைல் மற்றும் ஃபால்க்னரின் ஓவர்களை எச்சரிக்கையாகக் கையாண்டனர். கோல்டர்நைலின் 2 ஓவர்களில் பாண்டியா 2 முறை கண்டம் தப்பினார். அதன் விளைவாக எப்படியோ 11 ரன்கள் கிடைத்தது. ஃபால்க்னர் இவர்களுக்கு வீசிய 4 ஓவர்களில் ஒரு மெய்டன் உட்பட 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதேசமயம் ஜாம்பா, ஸ்டாய்னிஸ் ஆகியோரின் பந்துகளில் சீராக ரன் சேர்த்தனர். அவர்களின் பந்துவீச்சில் 9.3 ஓவர்களில் இந்த இணை 65 ரன்கள் சேர்த்தது.

இவர்கள் எந்த இடத்திலும் அவசரப்படவில்லை. ஜாம்பா 24 ரன்கள் விட்டுக்கொடுத்த அந்த ஓவருக்கு முன்புவரை சிங்கிள்ஸ் மற்றும் 2 ரன்கள் எடுப்பதில்தான் அக்கறை செலுத்தினர். கேதர் ஜாதவ் தோனிக்கு நிகராக ரன் ஓடவில்லை. பாண்டியா களமியங்கியதும் ஓடி ரன் சேர்ப்பதில் இருவரும் குறியாக இருந்தனர். 2 ரன்கள் எடுக்க முடியாத இடத்தில் சிங்கிள்ஸ் சேர்த்தனர். சிங்கிள் வரவேண்டிய இடத்தில் இரண்டாம் ரன்னுக்கு ஓடினர். இருவரும் ஓடி எடுத்தது 62 ரன்கள். இதுவே  இந்தியா மீண்டு வரக் காரணம். பாண்டியா ஒருபுறம் அடித்து ஆடத்தொடங்கியதும், தோனி ஸ்ட்ரைக் ரொடேட் செய்தார். பவுண்டரி, சிக்சர்கள் அடிப்பதில் கவனம் செலுத்தவில்லை. அடிக்கவும் இல்லை. ஜாம்பாவின் அந்த ஓவருக்குப் பிறகு வேகமாக ரன்சேர்க்கத் தொடங்கினர். ஆனால் துரதிர்ஷ்டமாக பாண்டியா வெளியேறிவிட்டார். 116 பந்துகளின் 118 ரன்கள் குவித்த இந்தக் கூட்டணியைப் பிரிக்க ஸ்மித் எடுத்த முயற்சிகள் பெரிதாகப் பலன் தரவில்லை. அவர்கள் நன்றாக 'செட்' ஆன பின்பு 13 ஓவர்கள் வரை கம்மின்ஸுக்கு அவர் ஓவர் தரவில்லை. அதே கட்டத்தில் பகுதி நேர பவுலர்களைப் பயன்படுத்தவும் ஸ்மித் தயங்கினார். முன்னர் ரோஹித் கேட்சை தவறவிட்டவர். பாண்டியாவை 13 ரன்னிலேயே அவுட் ஆக்கியிருக்கலாம். ஸ்லிப்பில் உஷாராக இல்லாமல் அந்த வாய்ப்பையும் வீணடித்தார். இப்படி ஸ்மித்தின் அஜாக்கரதையும், தவறான முடிவுகளும் ஆஸி அணிக்கு சற்றுப் பின்னடைவாக அமைந்தது.

அசத்தல் பாண்டியா...அட்டாக் பாண்டியா...!

“நான் சென்ற வருடம் இருந்த அதே பாண்டியாதான்” என்றார் ஆட்ட நாயகன் பாண்டியா. ஆனால் அப்படித் தெரியவில்லை. அவர் ஒவ்வொரு போட்டியிலும் வேறொரு ஆளாகத் தெரிகிறார். ஒவ்வொரு போட்டிக்கும் பல மடங்கு முன்னேற்றம். சாம்பியன்ஸ் டிராஃபி ஃபைனலில் என்ன ஆட்டம் காட்டினாரோ அதே ஆட்டம் - 'பாண்டிய'தாண்டவம். ஆனால் 'எக்ஸ்பீரியன்ஸ்' லெவல் பல மடங்கு கூடியிருக்கிறது. வெறுமனே வாணவேடிக்கை காட்டாமல் எந்தப் பந்தை தடுத்தாடுவது, எந்த பந்தில் சிங்கிள் எடுப்பது, எந்த பந்தை 'பறக்காஸ்' செய்வது என தேர்ந்தெடுத்து ஆடினார். தேர்ந்த பேட்ஸ்மேன் போல ஆடினார். தொடக்கத்தில் ஒருசில ஷாட்கள் எட்ஜானது. அதைத் திருத்திக்கொண்டு பின்னர் பட்டையைக் கிளப்பினார். அவர் 5 பவுண்டரியும், 5 சிக்ஸர்களும் அடித்தது அவரின் பலத்தைக் காட்டுகிறது. ஆனால் அந்த சூழ்நிலையில் அவர் எடுத்த 25 சிங்கிள்கள்தான் ஒரு பேட்ஸ்மேனாக பாண்டியா எவ்வளவு தேறியிருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.

பாண்டியாவிடம் பிரமித்த இன்னொரு விஷயம் - ஹாட்ரிக் சிக்சர்கள். இந்த ஆண்டு மட்டும் சர்வதேசப் போட்டிகளில் நான்காவது முறையாக (ஒருநாள் - 3, டெஸ்ட் -1) ஹாட்ரிக் சிக்சர்கள் அடித்துள்ளார். இதில் என்ன ஸ்பெஷல் எனில், அனைத்துமே லெக்-ஸ்பின்னர்களுக்கு எதிராக அடிக்கப்பட்டவை. வலது கை பேட்ஸ்மேன்கள் பொதுவாக  லெக் - ஸ்பின்னில் சற்று திணறுவார்கள். பாண்டியா அதில் விதிவிலக்கு. இனி பாண்டியா என்றாலே லெக் ஸ்பின்னர்களுக்குக் கிலி ஏற்படும்.

பவுலிங்கிலும் பாண்டியா பன்மடங்கு தேறிவிட்டார்.  4 ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரவு நேரம் பிட்ச் பவுன்சுக்கு சாதகமாக இல்லாத நிலையிலும், பவுன்சர்களை அழகாக எழச் செய்தார். ஷார்ட் பால்கள்தான் தன் ஸ்டைல் என்று 'ஃபிக்ஸ்' செய்துவிட்டார் போலும்! அநேக பந்துகள் ஷார்ட் லெந்த்தில்தான் வீசப்பட்டது. அவ்வப்போது சில மோசமான பந்துகளும் வரத்தான் செய்கின்றன. அதன்விளைவு இவர் வீசிய 3-வது ஓவரில் தொடர்ந்து 2 பவுண்டரிகள் அடித்தார் மேக்ஸ்வெல். பந்துவீச்சில் முன்னேற்றம் கண்டால் இன்னும் பட்டையைக் கிளப்பலாம்.


“3 துறைகளிலுமே பாண்டியா மிகச்சிறப்பாக இருக்கிறார். அவரைப் போன்ற ஒரு ஆல்ரவுண்டர் இருப்பது எந்த அணிக்குமே மிகப்பெரிய பலம்” - கோலியின் இந்த வார்த்தையை எந்த அணிக் கேப்டனும் ஒப்புக்கொள்வார்கள்! அணியில் இருந்த ஒரே ஆல்ரவுண்டரை முழுமையாகப் பயன்படுத்தினார் கோலி. ஆனால் ஆஸி ஆல்ரவுண்டர்கள் கைவிரித்தனர். தொடக்கத்தில் நன்றாகப் பந்துவீசிய ஸ்டாய்னிஸ், ஃபால்க்னர் இருவரும் கடைசி கட்டத்தில் சொதப்பினர். ஸ்டாய்னிஸ் பேட்டிங்கிலும் காலை வாரினார். ஃபால்க்னரின் பேட்டிங் சற்று ஆறுதல். பயிற்சிப் போட்டியில் பட்டையைக் கிளப்பிய டிராவிஸ் ஹெட் வந்ததும் நடையைக் கட்டினார். மேக்ஸ்வெல் இந்திய அணிக்குப் பெரிய அச்சுறுத்தலாக இருந்தார். ஆனால் பந்துவீச்சின்போது அவர் பயன்படுத்தப்படவே இல்லை. ஹெட்டையும் ஸ்மித் சரியாகப் பயன்படுத்தவில்லை. தோனி - பாண்டியா இணையை உடைக்க யாரையேனும் பயன்படுத்தியிருக்கலாம். 

சுழலில் சிக்கிய ஆஸி

பாண்டியாவின் வாணவேடிக்கையால் ஜாம்பா  நிற்கதியற்று நிற்க, மேக்ஸ்வெல், ஹெட் இருவரையும் ஸ்மித் நிராகரிக்க, இந்தியாவுக்கு ஆஸியின் ஸ்பின் அட்டாக் ஒரு பொருட்டாகவே அமையவில்லை. ஆனால் மழைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியதும் ஆட்டம் காட்டியது இந்திய சுழல் கூட்டணி. சாஹல், குல்தீப் என இரு 'ரிஸ்ட்' ஸ்பின்னர்களையும் சமாளிக்க ஆஸி தடுமாறியது. குல்தீப்பின் ஒரு மோசமான ஓவர் 22 ரன்கள் போனாலும், மற்ற 3 ஓவர்கள் அவர் சிறப்பாகவே பந்துவீசினார். அதில் 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். நிலைத்து நின்று ஆடிய வார்னர், குல்தீப்பின் சுழலில் சற்று தடுமாறவே செய்தார். குல்தீப் வீசிய ஆட்டத்தின் எட்டாவது ஓவரில் முதலிரண்டு பந்துகளில் தலா 2 ரன்கள் எடுத்தார். அதற்கடுத்த 3 பந்துகளையும் அவரால் சந்திக்கவே முடியவில்லை. சைனாமேன் ஆக்ஷனில் அவரை நிலைகுலையவைத்த குல்தீப், கடைசிப் பந்தில் பெவிலியனுக்கும் அனுப்பிவைத்தார்.

ஓவர் குறைக்கப்பட்டதும் டி-20 ஸ்பெஷலிஸ்ட் சாஹல் உற்சாகமாகிவிட்டார். 5 ஓவர், 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய பவுலர்களுக்கு அல்லு கிளப்பிய மேக்ஸ்வெல்லை சுருட்டி வீசிய சாஹல் விட்டுக்கொடுத்தது 2 சிக்சர்கள் ஒரு பவுண்டரி. ஆனால் இவரது ஓவரின் சிறப்பம்சம் 16 டாட் பால்கள். அது ஆஸி பேட்ஸ்மேன்களின் பிரஷரை பன்மடங்கு அதிகரித்து, பந்தை தூக்கி அடிக்கத் தூண்டியது. அதன் விளைவே சீட்டுக்கட்டாய் சரிந்தன விக்கெட்டுகள். 


தீர்க்கமான திட்டங்கள்

இந்தியாவின் வெற்றிக்கு அணி நிர்வாகம் தங்கள் திட்டத்திலும், முடிவுகளிலும் தீர்க்கமாக இருப்பதும் ஒரு காரணம். “2019 உலகக்கோப்பையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு தயாராகும் வகையில்தான் அணித் தேர்வு நடக்கிறது" என்று இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் M.S.K.பிரசாத் கூறியிருந்தார். ஸ்பின்னர்கள் தேர்வு, சீனியர்கள் ஓய்வு என இத்தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டபோதே இந்திய அணியின் திட்டமிடல் தெளிவானது. நேற்றைய போட்டியில் அது இன்னும் தீர்க்கமாக வெளிப்பட்டது. தொடக்கம் தடுமாறிய நிலையில், 'அணியை நிலைநிறுத்த தோனி களமிறங்கலாம்' என்ற எண்ணம் எழுந்தது. இறக்கியிருக்கலாம். ஆனால் ஜாதவே களம் கண்டார்.


இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் ரஹானே, ரோஹித், தவான், கோலியே பெரும்பாலான போட்டிகளுக்கு 'எண்ட்-கார்டு' போட்டனர். ஒருசில போட்டிகளில் மட்டும் மனீஷ் பாண்டே, ராகுல், ஜாதவ் களம் கண்டனர். அணியைப் பொறுத்தவரையில் மிடில்-ஆர்டர் பலமாக வேண்டும். அவர்கள் இன்னும் அனுபவம் பெற வேண்டும். அவ்வளவே. மனீஷ் நேற்றைய போட்டியில் சோபிக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் ஜாதவுக்கு நேற்றைய போட்டி மிகச்சிறந்த வாய்ப்பு. டாப் ஆர்டர் சொதப்பும் பட்சத்தில் தன்னால் ஒரு பார்ட்னர்ஷிப் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை அளித்துள்ளார்.

இந்திய அணியின் மைனஸ்கள்

இந்தப் போட்டியில் இந்திய அணியின் சில பலவீனங்கள் அப்பட்டமாகத் தெரிந்தது. ரஹானே - ரோஹித் ஓபனிங் இணை செட் ஆகாது. ஓபனிங் பேட்ஸ்மேன்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் 'காம்ப்ளிமென்ட்' செய்து ஆட வேண்டும். இருவரும் ஒரே மாதிரி ஆடினால், நல்ல தொடக்கம் அமையாது. ரோஹித் எப்போதுமே செட்டில் ஆக 20 முதல் 25 பந்துகள் எடுத்துக்கொள்வார். அதேசமயம் தவான் 2-3 ஓவர்களுக்குள் செட்டிலாகி தன் பாணி ஆட்டத்தைத் தொடங்கிவிடுவார். அது ரோஹித் மீதான அழுத்தத்தைக் குறைக்கும். ஆனால் ரஹானேவும் ரோஹித்தின் மைண்ட்-செட்டிலேயே ஆடக்கூடியவர். இருவரும் ஒரே பாணியில் ஆடும்போது இருவருக்கும் அழுத்தம் அதிகமாகும். அப்போது அவர்களின் இயல்பான ஆட்டத்தை ஆட முடியாது. நேற்றைய போட்டியில் ரஹானே அந்த அழுத்தத்தை நன்றாகவே உணர்ந்தார்.

இந்திய அணியின் ஃபீல்டிங் சற்று சுமார்தான். சாஹல் தன் பந்துவீச்சில் இரண்டு கேட்ச்களை தவறவிட்டார். முதல் கேட்ச் மிகவும் கடினமானது என்றாலும், இரண்டாவது கேட்சைப் பிடித்திருக்கலாம். ஸ்மித்தின் கஷ்டமான கேட்சைப் பிடித்து பிரமிக்க வைத்த பும்ரா, பாயின்ட் திசையில் ஒரு மிஸ்ஃபீல்டு செய்தார். மணீஷ் பாண்டே, குல்தீப், பாண்டியாவும் ஒரு சில மிஸ்ஃபீல்டு செய்தனர். ரஹானே கேட்ச் மிஸ் செய்தது மற்றுமொரு ஆச்சர்யம்!

இந்திய அணியின் வெற்றி எளிதாகக் கிடைக்கவில்லை. மிடில் ஆர்டரின் போராட்டத்தாலும், மழையின் உதவியாலும் கிடைத்த ஒன்று. பேட்ஸ்மேன்களின் மோசமான ஷாட்கள், ஃபீல்டிங் என பல விஷயங்களில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். அடிபட்ட கங்காருகள் இனி உக்கிரமாகத் தாக்கத்துடிக்கும். கவனம் புலிகளே!

அடுத்த கட்டுரைக்கு