Published:Updated:

செஞ்சுரி சீக்ரெட் சொல்லும் கோலி... குல்தீப் மீது குறி வைக்கும் ஸ்மித்! #IndiaVsAustralia

செஞ்சுரி சீக்ரெட் சொல்லும் கோலி... குல்தீப் மீது குறி வைக்கும் ஸ்மித்! #IndiaVsAustralia
செஞ்சுரி சீக்ரெட் சொல்லும் கோலி... குல்தீப் மீது குறி வைக்கும் ஸ்மித்! #IndiaVsAustralia

செஞ்சுரி சீக்ரெட் சொல்லும் கோலி... குல்தீப் மீது குறி வைக்கும் ஸ்மித்! #IndiaVsAustralia

‛நான் சதம் அடிப்பதைப் பற்றி எப்போதுமே கவலைப்பட்டதில்லை. அதனால்தான் என்னவோ என்னால் இவ்வளவு சதம் அடிக்க முடிகிறது. விளையாடும் வரை அணியின் வெற்றிக்காக உழைப்பதே என் விருப்பம்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்திய அணி நேற்றிலிருந்து பயிற்சியைத் தொடங்கியது. இன்று மதியம் இரண்டு மணியளவில் இந்திய வீரர்கள் வலைபயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சிக்கு முன் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கேப்டன் கோலி, "யாரை எதிர்த்து விளையாடுகிறோம் என்பதை விட, நாம் எப்படி போட்டிக்குத் தயாராகிறோம் என்பதுதான் முக்கியம். ஒவ்வொரு அணியின் பலம், பலவீனத்தை ஆராய்வது அவசியம்தான். ஆனால், அதற்காக அணியின் பலத்தைப் பொறுத்து நம் செயல்பாட்டின் தன்மையை மாற்றிக்கொள்வது சரியல்ல. அது எங்களின் நோக்கமும் அல்ல" என்று தீர்க்கமாகப் பதிலளித்தார்.

அணியில் கே.எல்.ராகுல் இடம் பற்றிக் கேட்டதற்கு ‛வீரர்கள் அனைத்து இடங்களிலும் விளையாடத் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்று கோலி அறிவுறித்தினார். "ஒரு வீரர் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் குறிப்பிட்ட ஒரு பொசிஷனில் ஆடிப் பழகிவிட்டால், வேறொரு இடத்தில் அவரைக் களமிறக்க நினைக்கும்போது அது அவருக்கும், அணிக்கும் மிகவும் கடினமாக இருக்கும். எனவே அணியின் தேவைக்கு ஏற்ற இடத்தில் விளையாடுமளவிற்கு வீரர்கள் தங்களைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் அது எளிதல்ல. ரஹானே கூட அப்படித்தான். டெஸ்டில் மிடில் ஆர்டரில் ஆடுகிறார். டி-20ல் ஓப்பனிங் ஆடினார். ஒருநாள் போட்டிகளில் இப்போது மீண்டும் ஓப்பனிங் இறங்கப் போகிறார். ராகுல் அனைத்துப் போட்டிகளிலும் தன்னை நிரூபித்த மிகச்சிறந்த வீரர். அவருக்கும் அவகாசம் கொடுத்து ஆதரவளிப்பது அவசியம்" என்றார்.


டெஸ்ட் போட்டிகளில் எப்போதும் 5 பவுலர்களுடன் களமிறங்க விரும்பும் கோலி, ஒருநாள் போட்டிகளில் 3 பவுலர், 2 ஆல்-ரவுண்டர் கூட்டணியோடு களமிறங்க வாய்ப்புகள் உள்ளதாகக் குறிப்பிட்டார். பாண்டியா, அக்சர், ஜடேஜா போன்ற ஆல்ரவுண்டர்களால் அணிக்குத் தேவையான 'பேலன்ஸ்' கிடைப்பாதாகவும், குறைந்தபட்சம் 2 ஆல்ரவுண்டர்களாவது கொண்டிருப்பது அணியின் பேட்டிங், பவுலிங்கை பலப்படுத்தும் என்பது கோலியின் கருத்து.  அனைத்து அணிகளும் அதையே விரும்புவதாகக் கூறிய இந்தியக் கேப்டன், ‛ஆல்ரவுண்டர் என்பவர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் மட்டும் ஜொலிப்பவராக இல்லாமல், நல்ல ஃபீல்டராகவும் இருக்க வேண்டும்’ என்றார்.  

சர்வதேச அரங்கில் இதுவரை 47 சதங்கள் அடித்து அசத்தியிருக்கும் கோலியின் சத வேட்டைக்குக்கான காரணம் குறித்து கேட்கப்பட்டது. "நான் எப்போதுமே மூன்று இலக்க ஸ்கோர் எடுக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. அதனால்தான் அதை அடித்துவிடுகிறேனோ என்னவோ!  சொந்த சாதனைகளைப் பற்றியும் நான் சிந்திப்பதில்லை. அது அழுத்தம் ஏற்படுத்தும். அப்படியான அழுத்தங்கள் இல்லாமல் தான் விளையாடுவேன். அணியின் வெற்றி மட்டுமே என் இலக்கு. 98 ரன்களிலோ, 99 ரன்களிலோ இருக்கும்போது ஆட்டம் முடிந்தால் கவலைப்பட மாட்டேன். அணி வெற்றி பெற்றால் மட்டுமே எனக்கு மகிழ்ச்சி. ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று மட்டுமே நினைப்பேன். அதன் பலனாக இப்படியான சாதனைகள் ஏற்படுகிறது. இன்னும் 10 வருடங்களோ, 12 வருடங்களோ... எத்தனை வருடம் ஆனாலும் தனிப்பட்ட சாதனைகளைப் பற்றி நினைத்துப் பார்க்க மாட்டேன். அணியின் வெற்றிக்கு 120 சதவிகித உழைப்பைத் தருவதைப் பற்றி மட்டுமே சிந்திப்பேன்’’ என்று தன் 'ஃப்ரீ மைண்ட்செட்' பற்றிக் குறிப்பிட்டார் கோலி.


இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்களில் இருக்கும் வார்த்தை மோதல்கள் இந்த முறையும் ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என்று கேட்டதற்கு, "என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் சிறப்பாக செயல்படவிட்டால் எதற்குமே அர்த்தம் இல்லை. காரசாரமாக  பேசிக்கொள்வது ரசிகர்களுக்கு பொழுதுபோக்காக இருக்கும். வீரர்களுக்கு ஒரு வகையில் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கையை அது தூண்டும். ஆனால் மனதளவிலோ, உடலளவிலோ அது தாக்கம் ஏற்படுத்தாது என்றே கருதுகிறேன். பல முக்கியமான, கடினமான தொடர்களை விளையாடியுள்ளோம். எங்கு எப்போது அமைதி காக்க வேண்டுமென்பதை அறிவோம். சீண்டல்களால் ஆட்டத்தின் போக்கு மாறாது என்றே நினைக்கிறேன்" என மெச்சூரிட்டியாக பதிலளித்தார். 

ஐ.சி.சி-யின் 2 புதிய பந்துகள் விதிகளால் வேகப்பந்து வீச்சாளர்கள் ரிவர்ஸ்-ஸ்விங் செய்ய கஷ்டப்படுகிறார்கள். டி-20 கிரிக்கெட்டின் தாக்கத்தால் பேட்ஸ்மேன்களின் கை சற்றே ஓங்கியே இருக்கிறது. அது அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளிலும் வெளிப்படுகிறது என்று கருத்து தெரிவித்த கோலி,  2 'wrist spinner'களைக் கொண்டிருப்பது அணிக்கு மிகப்பெரிய பலம் என்றார். மிடில் ஓவர்களில் அவர்கள் விக்கெட்டுகள் எடுக்க உதவுவார்கள் என்றும், அவர்களால் ஒரு கேப்டனாக தனக்கு சாதகமே என்றும் கோலி தெரிவித்தார்.

முன்னதாக, ஆஸ்திரேலிய வீரர்கள் சுமார் 2 மணி நேரம் வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியின் முடிவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆஸி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், இத்தொடரை தங்கள் வீரர்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ளப்போவதாகக் குறிப்பிட்டார். முன்னதாக நடந்த டெஸ்ட் தொடரில் தங்கள் அணியை நிலைகுலையவைத்த குல்தீப் யாதவை கவனமாகக் கையாள வேண்டுமென்றும் என்றார்.

"மிகவும் திறமையான இளம் வீரர். அவரை கணிப்பது சற்று கடினமானது. அவரை எங்கள் வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் எதிர்கொண்டுள்ளனர். அந்த அனுபவம் சற்று உதவியாக இருக்கும்" என்று குல்தீப்பின் திறமையை வெகுவாகப் பாராட்டினார். ஒருநாள் போட்டிகளில் கோலி தன்னை விட ஒரு படி மேலே இருப்பதையும், தொடர்ந்து சதங்கள் விளாசுவதைப் பற்றியும் அவ்வளவாக சிந்திக்கவில்லை என்றார். "கடந்த 2013 தொடரில் அனைத்து போட்டிகளிலுமே ரன்மழை பொழிந்தது.  350 ரன்கள் மிக எளிதாக எடுக்கப்பட்டது. எனவே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது முக்கியம்" என்று பேட்ஸ்மேன்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

ஆஸ்திரேலிய அணியின் ஓபனர் ஆரோன் ஃபின்ச், இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவன் இருவரும் முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. இதுகுறித்த கேள்விக்கு ‛ராகுல், ரஹானே போன்ற அனுபவ வீரர்கள் இருப்பது இந்திய அணிக்கு மிகவும் சாதகம்’ என்ற ஸ்மித், இந்தத் தொடரில் எந்த அணி வெற்றிபெறும் என்ற கேள்விக்கு, ‛மைதானகளின் தன்மை, அதற்கேற்ப தயார்படுத்திக்கொள்ளுதலுமே வெற்றியைத் தீர்மானிக்கும்’ என்றார்.  தங்கள் அணியில் ஆல்-ரவுண்டர்கள் அதிகமாக இருப்பது சாதகம் என்று தெரிவித்த ஸ்மித் ‛2019 உலகக்கோப்பைக்கு முன் சுமார் 30 ஒருநாள் போட்டிகள் இருப்பதால், அணி தேர்வைப் பற்றி இப்போதே கவலைப்படத்தேவையில்லை’ என்றார் ஸ்மித். 

அடுத்த கட்டுரைக்கு