Published:Updated:

‘இன்றும் நீல உடையைப் பெருமையோடு அணிகிறேன்!’ - சச்சின்

‘இன்றும் நீல உடையைப்  பெருமையோடு அணிகிறேன்!’ - சச்சின்
‘இன்றும் நீல உடையைப் பெருமையோடு அணிகிறேன்!’ - சச்சின்

‘இன்றும் நீல உடையைப் பெருமையோடு அணிகிறேன்!’ - சச்சின்

கோயம்புத்தூரில் தொடங்கிய 'ரேலி ஃபார் ரிவர்ஸ்' (Rally for Rivers) - நதிகளைக் காக்கும் பயணம், இன்று தேசம் எங்கும் ஆதரவு பெற்று வருகிறது. சர்ச்சைகள் பல இருந்தாலும் ஜக்கியின் இந்த அழைப்புக்கு பிரபலங்கள் குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். நேற்று லேட்டஸ்டாக இந்திய கிரிக்கெட்டின் பிதாமகன் சச்சின், இந்தப் பயணத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.

தன் ட்விட்டர் பக்கத்தில், இந்தப் பயணத்தை ஆதரித்தும், மக்களை ஆதரிக்கச் சொல்லியும் சச்சின் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். "நாம் ஒரு கட்டத்தில் வெறும் 50 சதவிகிதம் தண்ணீரோடு வாழவேண்டிய நிலை ஏற்படும். அது மிகவும் ஆபத்தானது. இந்நிலையில் நதிகளைக் காக்கும் பயணத்திற்கு மக்கள் ஆதரவு தருவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். நதிகளே நமது வாழ்வாதாரம். அதனால்தான் இந்த முன்னெடுப்பை நான் ஆதரிக்கிறேன். 80009 80009 எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்து என் ஆதரவைத் தெரிவித்துள்ளேன். நீங்களும் இதைச் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால் எதுவும் நடக்கும்" என்று சச்சின் அந்த வீடியோவில் பேசியுள்ளார். 

தன் tவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை அப்லோட் செய்துள்ள சச்சின், " நீண்ட காலம் நான் நீல உடையை அணிந்துள்ளேன். ஒவ்வொருமுறை அதை அணியும்போதும் பெருமை அடைந்துள்ளேன். இன்றும் அப்படியே" என்று நீல நதிகளுக்காக குரல் கொடுப்பதில் பெருமிதம் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் 3-ம் தேதி ஜக்கி வாசுதேவ் பிறந்த நாள். அன்று தன் ட்விட்டரில் அவருக்கு வாழ்த்துச் சொல்லியிருந்தார் சச்சின். 2015-ல் தான் கோவையில் ஜக்கியை சந்தித்த நினைவை அந்த ட்வீட்டில் அவர் நினைவுகூர்ந்திருந்தார். அதற்கு ட்விட்டரில் பதில் அளித்த ஜக்கி, " நன்றி சச்சின். இத்தனை நாள்கள், இந்தியாவை உங்கள் பேட்டிங்கால் மகிழ்ச்சிப்படுத்தினீர்கள். இனி இறந்து வரும் நதிகளுக்காக நீங்கள் பேட் பிடிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். சச்சின் நேற்று இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார்.

12 வயது ரசிகனுக்குப் பதில்


அதுமட்டுமன்றி, 12 வயது ரசிகர் ஒருவருக்கும் ட்விட்டரில் பதிலளித்துள்ளார் சச்சின். கான்பூரைச் சேர்ந்த ஸ்ரீஹரி என்ற சிறுவன் சச்சினுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளான். "நான் கிரிக்கெட் ரசிகனாக இல்லாவிடிலும் உங்களின் தீவிர ரசிகன். நான் பேட்மின்டன் விளையாடுவேன். உங்களின் சுயசரிதையைப் படித்துக்கொண்டிருக்கிறேன். உற்சாகமாகவும், எழுச்சியூட்டுவதாகவும் இருக்கிறது. அதன் மூலம்தான் தோல்விக்குப் பிறகு எப்படி மீண்டு வருவது என்பதை கற்றுக்கொண்டேன். என்னுள் இப்படியான தன்மையை வளர்த்ததற்கு மிகப்பெரிய நன்றி. கிரீன்பார்க் மைதானத்தில் நீங்கள் விளையாடுவதைப் பார்க்க வேண்டும் என்று ஏங்கினேன். ஆனால், எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. உங்களின் பங்களிப்புகளால் எங்களை, நம் தேசத்தை பெருமைப்பட வைத்துள்ளீர்கள். அஞ்சலிக்கு என் மரியாதையான வணக்கங்கள்" என்று அக்கடித்ததில் அவன் சச்சினைப் பற்றி சிலாகித்துள்ளான்.

அதையும் ட்விட்டரில் பதிவிட்ட சச்சின், "உங்கள் அன்பான கடிதத்துக்கு நன்றி. நீ பேட்மின்டன் விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. எப்போதும் கடுமையாக உழைத்தக்கொண்டிரு. என்னுடைய வாழ்த்துகள்" என்று வாழ்த்தியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு