Published:Updated:

வெஸ்ட் இண்டீஸ், வங்க தேச அணிகளின் எழுச்சி... புத்துயிர் பெறும் டெஸ்ட் கிரிக்கெட்!

வெஸ்ட் இண்டீஸ், வங்க தேச அணிகளின் எழுச்சி... புத்துயிர் பெறும் டெஸ்ட் கிரிக்கெட்!
வெஸ்ட் இண்டீஸ், வங்க தேச அணிகளின் எழுச்சி... புத்துயிர் பெறும் டெஸ்ட் கிரிக்கெட்!

வெஸ்ட் இண்டீஸ், வங்க தேச அணிகளின் எழுச்சி... புத்துயிர் பெறும் டெஸ்ட் கிரிக்கெட்!

2008-ம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசன் அறிமுகமான ஏப்ரல் மாதம் இப்போது இருப்பதுபோல் அப்போது ஐபிஎல்-க்குப் பின்னால் 8, 9 என்றெல்லாம் எழுதாத காலம். ஷாருக் கான், மல்லையா, அம்பானி, சீனிவாசன் என்று பெரும் பணக்காரர்கள் பல கோடி முதலீட்டில் உதயமான அந்த கிரிக்கெட் திருவிழாவின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் மெக்கலம் 73 பந்துகளுக்கு 158 ரன்கள் எடுத்து ஐபிஎல்-ன் முதல் சதத்தைப் பதிவுசெய்தார். 223 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டிராவிட் தலைமையிலான பெங்களூரு அணி, 82 ரன்களுக்கு மண்ணைக் கவ்வியது. அப்போது 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் சர்வதேச அணிகள் விளையாட ஆரம்பித்து சில ஆண்டுகள்தான் கடந்திருக்கும். 2007-ம் ஆண்டுதான் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 20 ஓவர் கோப்பையை தன் வசமாக்கி புதிய வரலாற்றின் முதல் அத்தியாயத்தை எழுதத் தொடங்கியது. 

ஐபிஎல்-ன் எழுச்சி பலருக்கு சந்தோஷம் தந்தது. குடும்ப உறுப்பினர்கள் மாலை வேளையில் ஒன்றாக உட்கார்ந்து கிரிக்கெட் மேட்ச் பார்க்க ஆரம்பித்தார்கள். பெண்கள் அதிக அளவுக்கு மைதானத்துக்கு வந்தார்கள். உலகின் அத்தனை முன்னணி கிரிக்கெட் வீரர்களும் காசு கொடுத்து வாங்கப்பட்டார்கள். பாலிவுட்டும் கிரிக்கெட்டும் மணமுடித்த அந்த திருவிழாவில் பட்டாசு சத்தத்துக்கு பஞ்சமே இல்லை. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு உலக கிரிக்கெட் ரசிகர்களை கட்டிப் போட்டது ஐபிஎல். பல டெஸ்ட் விரும்பிகள் மனதில் ஒரு மூலையில் இருந்த பயம், 'இனி டெஸ்ட் கிரிக்கெட்டின் நிலை!'

அடுத்த ஆண்டும் ஐபிஎல் வந்தது. உலகில் இருக்கும் பெரும்பான்மையான கிரிக்கெட் போர்டுகள் ஐபிஎல் போட்டிகளுக்கு ஏற்றவாறு தங்களது போட்டிக்கான அட்டவணையை மாற்றினர். இதோ ஐபிஎல்-ன் 10-வது சீசனும் முடிந்துவிட்டது. ஆரம்பத்தில் ஐபிஎல்-க்கு இருந்த மவுசு இப்போது இருக்கிறது என்று அறுதியிட்டுக் கூற முடியாத நிலை. இப்போதெல்லாம் ஐபிஎல் இரண்டு மாதங்கள் நீடிப்பது பலருக்கு அலுப்பூட்டுகிறது. சாம்பியன்ஸ் டிராபியின் மீதும் ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை மீதும் இருக்கும் மோகம் ஐபிஎல் மீது இப்போது இருப்பதில்லை. இத்தனைக்கும் முன்னெப்போதையும் விட ஐபிஎல்-ன் விளம்பரத்துக்கான செலவு கூடிக் கொண்டுதான் போகிறது. ஆனால், அதே நேரத்தில், தரமான டெஸ்ட் போட்டிகள் மீது (அது அண்டை நாடாக இருந்தாலும் சரி) இருக்கும் ஈர்ப்பு அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இன்றும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்று நாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளுக்கு மைதானத்தில் 'ஃபுல் ஹவுஸ்' கூட்டம் வருகிறது. தொழில்நுட்பம் உச்சத்தைத் தொட்டுள்ள சமயத்தில்தான் இந்த அதிசயமும் தொடர்ந்து நடந்து வருகிறது. 

புத்தாயிரத்தின் தொடக்கத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பெரிய அச்சுறுத்தலாக ஒரு விஷயம் இருந்தது. அப்போது ஆஸ்திரேலியா கோலோச்சிக் கொண்டிருந்த 2000-ம் ஆண்டுகளின் தொடக்கம். பாண்டிங், தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் எதிராளிகளை தவிடு பொடியாக்கிக் கொண்டிருந்த காலகட்டம். அப்போது பாண்டிங், 'மிகவும் உயிரோட்டமே இல்லாத பிட்ச்களால் டெஸ்ட் கிரிக்கெட்டின் சுவாரஸ்ய தன்மையே இல்லாமல் போகின்றது' என்று கூறினார். டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு நாடும் பெரும்பான்மையான நேரங்களில் தன் நாட்டு பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நோக்கில் மிக தட்டையான பிட்ச்களை உருவாக்கினார்கள். இதனால், அதிக ரன்கள் எடுக்கப்பட்டாலும் ஒரு பக்கம் ரிசல்ட் கிடைக்காமல் டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதிருந்த சுவாரஸ்யத்தன்மை குறைந்து வந்தன. பின்னர் 20 ஓவர் கிரிக்கெட்டின் அறிமுகம் டெஸ்ட் கிரிக்கெட்டை வீரர்கள் அணுகும் விதத்தையே மாற்றியது. இது ஒரு வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 'ரிசல்ட்' கிடைப்பதற்கு மறைமுகமாக உதவியது. 

இப்படி மறைமுகமான பல விஷயங்களால் டெஸ்ட் கிரிக்கெட்டின் சுவாரஸ்யத் தன்மை கூடிக் கொண்டே போனது, 29-ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணி, உலகில் தற்போது நம்பர் 1 டெஸ்ட் அணி என்று சொல்லப்பட்ட இங்கிலாந்தை சொந்த மண்ணில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வீழ்த்தி தற்கால கிரிக்கெட்டில் மிகப் பெரிய 'அப்செட்டை' அரங்கேற்றியுள்ளது. இது ஒரு புறமிருக்க, ஆஸ்திரேலியாவை முதன்முதலான டெஸ்ட் அரங்கில் வீழ்த்தி வரலாற்றை திருத்தி எழுதியுள்ளது வங்கதேச அணி. ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் அனைத்து கிரிக்கெட் பிரபலங்களும் இது டெஸ்ட் கிரிக்கெட்டின் புத்துயிர் பெற்றுள்ள விஷயமாகவே பார்க்கின்றனர். T20 அல்ல T10, T5 என எத்தனை கிரிக்கெட் வந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாற்று இருக்கப் போவதில்லை என்பது கடந்த இரண்டு நாள்களில் மீண்டுமொரு முறை நிரூபணம் ஆகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு