Published:Updated:

தோனியின் பேட்டிங்கில் ஏற்பட்ட அந்த 2 மாற்றங்கள்! #Dhoni300

தோனியின் பேட்டிங்கில் ஏற்பட்ட அந்த 2 மாற்றங்கள்! #Dhoni300
தோனியின் பேட்டிங்கில் ஏற்பட்ட அந்த 2 மாற்றங்கள்! #Dhoni300

தோனியின் பேட்டிங்கில் ஏற்பட்ட அந்த 2 மாற்றங்கள்! #Dhoni300

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 300-வது போட்டியில் இன்று களமிறங்கியிருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி. 


கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் இலங்கை அணிக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியின் மூலம் இந்த மைல்கல்லை அவர் எட்டியிருக்கிறார். டி20 உலகக் கோப்பை, ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் சர்வதேச டெஸ்ட் அரங்கில் நம்பர் ஒன் என தோனியின் கேப்டன்ஷிப் ரெக்கார்டுகள் மற்றெந்த கேப்டனும் எட்டாதது. கேரியர் கிராஃப் உச்சத்தில் இருந்தபோதே, டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அவர் அறிவித்தார். கடந்த 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே டெஸ்ட் போட்டிகளிலிருந்து விடைபெறுவதாக ஒரு அவசர அறிவிப்பு தோனியிடமிருந்து வந்தது. டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டு, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கவனம் செலுத்தப் போவதாக கூலாகச் சொன்னார் தோனி. களத்தில் நெருக்கடியான நேரங்களானாலும் சரி, கேரியரில் நெருக்கடியான நேரமானாலும் சரி நிதானமாக முடிவெடுப்பவர் அவர். அதுதான், கோரக்பூர் ரயில்நிலையத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த ஒரு ஊழியரை, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிஸ்டர் கூல் என்று போற்றப்படும் அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. 

கடந்த 2014 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின்போது அவருக்கு ஏற்பட்ட அதே நெருக்கடியான சூழல் இலங்கை ஒருநாள் தொடருக்கு முன்னரும் தோனிக்கு ஏற்பட்டது. இங்கிலாந்தில் நடந்துமுடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தோனியின் செயல்பாடு சரியாக இல்லாதது, பெரிய அளவில் விமர்சனங்களுக்குள்ளானது. தோனி சரியாக விளையாடவில்லையென்றால், அவருக்கு மாற்றுவீரரைத் தேட வேண்டி வரும் என்று கூறினார் இந்திய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத். தோனி மற்றும் யுவராஜ் ஆகியோரின் எதிர்காலம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம்தான் முடிவு செய்யும் என்றார் இந்திய ஜூனியர் அணியின் பயிற்சியாளர் டிராவிட். பழைய ரெக்கார்டுகளை வைத்துக்கொண்டு மட்டுமே ஒருவர் அணியில் நீடிப்பது என்பது இயலாத காரியம் என்கிற ரீதியில் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் பேசியிருந்தார். இது ஒருபுறமிறக்க இந்திய அணியின் வெற்றிக்குத் தோனி இன்னும் பெரிய அளவில் பங்களிப்பு செய்வார் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸியிடமிருந்து தோனிக்கு ஆதரவுக் குரலும் எழுந்தது. இந்தநிலையில்தான் இலங்கையில் காலடி எடுத்து வைத்தார் தோனி. முதல் ஒருநாள் போட்டியில் தோனிக்கு வேலை வைக்காமல் இந்திய அணி வென்றது. 

இரண்டாவது போட்டியில் தோனியின் அனுபவமும், பேட்டிங்கும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றின. இலங்கை அணி நிர்ணயித்த 237 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி ஒருகட்டத்தின் 131 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருடன் கைகோத்த தோனி, இந்திய அணியை வெற்றிபெறச் செய்தார். அந்த போட்டியில் 6-வது பேட்ஸ்மேனாகக் களமிறங்கிய தோனி 45 ரன்கள் குவித்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புவனேஷ்வர் குமார் குவித்ததோ 53 ரன்கள். போட்டிக்குப் பின்னர் பேசிய புவனேஷ்வர் குமார், விக்கெட்டை இழக்காமல் இருந்தாலே வென்று விடலாம். டெஸ்ட் போட்டியைப் போல விளையாடுமாறு தோனி கூறினார். அதையே பின்பற்றினேன் என்று தோனிக்கு கிரடிட் கொடுத்தார். கேப்டன் கோலியும் தோனியின் பங்களிப்பு குறித்து சிலாகித்தார். 

மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் தோனி மின்னினார். இலங்கை அணியின் 217 ரன்கள் இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணி 61 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த சூழலில் தோனி களமிறங்கினார். தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மாவுடன் கைகோர்த்த தோனி, இந்த முறையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோஹித் ஷர்மா சதமடிக்க, தோனி 67 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் வரை இந்திய அணியில் தோனி நீடிப்பது சந்தேகமே என்று கூறி வந்தவர்களை, தனது சிறப்பான ஆட்டத்தால் அமைதிப்படுத்தினார் தோனி.  

இந்த இரண்டு போட்டிகளிலும் தோனியின் பேட்டிங் டெக்னிக்கில் நிறைய மாற்றம் ஏற்பட்டதை கிரிக்கெட் ஆர்வலர்கள் கண்டிருக்கலாம். ஒன்று தனது ஆஸ்தான மொரான்ட் பேட் (Morrant Pad) எனப்படும் அகலமான பேட்களை மாற்றிவிட்டு, சாதாரண பேட்களுக்கு மாறினார். 36 வயதில், 300-வது போட்டியில் விளையாடப் போகும் சூழலில், இதுபோன்ற ஒரு புது முயற்சியை எடுக்க தனித்தெம்பு வேண்டும். அவரது கேரியரில் முதன்முறையாக இந்த முயற்சிகளை அவர் எடுத்துள்ளார் என்றே கூறலாம். சாதாரண பேட்களை விட, மொரான்ட் பேட்கள் எடையில் 200 கிராம் அளவுக்குக் குறைந்தவை. இதனால் களத்தில் வேகமாக ஓடி ரன் குவிக்க முடியும். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக், சவுரவ் கங்குலி மற்றும் ரவிச்சந்திர அஷ்வின் ஆகிய ஒருசிலரே இந்த மொரான்ட் பேட்களைப் பயன்படுத்திவுள்ளனர். 

மொரான்ட் பேட்களைப் பயன்படுத்துவதில் ஒரு சின்ன குறை இருக்கிறது. மற்ற சாதாரண பேட்களில் இருப்பதுபோல் இந்த பேட்களில் மூன்று ஸ்ட்ராப்கள் இருக்காது. இரண்டு மட்டுமே இருக்கும். அதிலும் ஒன்று முட்டிக்கு நேர் பின்னால் இருக்கும். இதனால் முன்னங்கால் முட்டியை மடக்கி அடிக்கும் பல்வேறுவிதமான ஷாட்களை ஆடுவது சிரமம். ஆனால், இந்த வயதில் பரிசோதனை முயற்சியாக எடை அதிகமான பேட்களுடன் களமிறங்கியிருக்கிறார் தோனி. பெரும்பாலும், பார்வார்டு ஷாட் எனப்படும் முன்னோக்கிச் சென்று விளையாடுவதிலேயே ஈடுபாடு கொண்ட தோனி, இலங்கை அணிக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பேக்ஃபூட் ஷாட்களையும் (Backfoot Shot) ஆடி அசத்தினார். 

தோனியின் பேட்டிங்கில் ஏற்பட்ட இரண்டாவது மாற்றம் ட்ரிக்கர் மூவ்மெண்ட் (trigger movement). பந்துவீச்சாளர்கள் பந்துவீச ஓடிவரும்போது பின்னங்கால் முதலில் லெக்கிலிருந்து ஆஃப் திசையை நோக்கி செல்லும், அதைத் தொடர்ந்து முன்னங்காலும் செல்லும். இவை அனைத்தும் பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவதற்கு முன்னதாக நிகழ்த்தப்படும். (இதற்கும் பிக்பாஸ் ட்ரிக்கரிங்-க்கும் எந்த தொடர்பும் இல்லை மக்களே!). இதன்மூலம் பந்துவீச்சாளர்களின் கவனத்தை திசைதிருப்பலாம். இதனால், வேகமாக பந்துவீச வேண்டும் என்ற ஒற்றை எண்ணமே பந்துவீச்சாளர்களுக்கு ஏற்படுமே தவிர, நேர்த்தியாக வீச வேண்டும் என்பதை பந்துவீச்சாளர்கள் பலரும் யோசிக்கமாட்டார்கள். தனது கேரியரின் பெரும்பாலான சமயங்களில் சேவாக் போன்று, பந்துவீசும்போது எந்தவொரு மூவ்மென்டை தோனி காட்டியதில்லை. பந்துவீச்சாளரின் கையிலிருந்து பந்து வெளிப்பட்ட பின்னரே, அதை எப்படி எதிர்கொள்வது என்பதை தோனி முடிவு செய்து ஆடுவது வழக்கம். சில சமயங்களில் பந்துவீச்சாளரை நோக்கி கிரீஸை விட்டு வெளியே தோனி நடந்து வருவதுண்டு. அது ஃபுல்டாசாக பந்துவீச வேண்டிய கட்டாயத்துக்கு பௌலர்களை ஆளாக்கும். ஆனால், இலங்கைத் தொடரில் இந்த வழக்கத்தையும் தோனி மாற்றிக்கொண்டார். இந்த இரண்டு மாற்றமும் தோனிக்குக் கைகொடுத்தது என்றே கூறலாம். இலங்கை அணிக்கெதிராகக் களமிறங்கிய 2-வது மற்றும் 3-வது ஒருநாள் போட்டிகளில் தோனியின் விக்கெட்டை இலங்கை பந்துவீச்சாளர்களால் வீழ்த்த முடியவில்லை. 

அடுத்த கட்டுரைக்கு