Published:Updated:

துச்சமென கருதிய இங்கிலாந்தை மோதி ஜெயித்த வெஸ்ட் இண்டீசின் அந்த 'Hope'! #WIvsENG

துச்சமென கருதிய இங்கிலாந்தை மோதி ஜெயித்த வெஸ்ட் இண்டீசின் அந்த 'Hope'! #WIvsENG
துச்சமென கருதிய இங்கிலாந்தை மோதி ஜெயித்த வெஸ்ட் இண்டீசின் அந்த 'Hope'! #WIvsENG

துச்சமென கருதிய இங்கிலாந்தை மோதி ஜெயித்த வெஸ்ட் இண்டீசின் அந்த 'Hope'! #WIvsENG

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கிரிக்கெட்டை ரசிக்கும் எவருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பிடிக்கும். எதிராளிகளை வீழ்த்தும்போதெல்லாம் பகடி செய்வார்கள்; ஆக்ரோஷம் கூட்டுவார்கள்; நடனமாடுவார்கள்; ஜெயிக்கும்போதெல்லாம் 'நாங்க தாண்டா கெத்து' எனக்காட்டும் அவர்களது ஆர்ப்பாட்டம் நிச்சயம் நம்மைக்  கோபப்படுத்தாது. நாமும் அவர்களின் கொண்டாட்ட மனநிலைக்கு சென்றுவிடுவோம் அல்லது அந்தக் கொண்டாட்டத்தை ரசிக்கத் தொடங்கிவிடுவோம். ஏனெனில் விளையாட்டை நேசிக்கும்... வீரர்களை மதிக்கும் பண்பு வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கே உரித்தானது. போட்டியின் முடிவு எப்படியிருந்தாலும் போட்டி முடிந்த பின்னர் எதிரணி வீரர்களுடன் சகஜமாக பழகக்கூடியவர்கள் விண்டீஸ் வீரர்கள்.  

எந்தச் சூழ்நிலையிலும் வெற்றிக்காக போராடும் பண்பு வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கே உரித்தானது. கிரிக்கெட்டில் ஆண்ட பரம்பரையாக அந்த அணி இருக்கும் காலகட்டத்தில்தான் இங்கிலாந்து மண்ணில் விண்டீசை வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது. நிச்சயம் கிரிக்கெட்டைப்  பொறுத்தவரை, இந்தியாவின் வெற்றிகளில் ஆகச்சிறந்த வெற்றி அதுதான். காலம் உருண்டோட ஆண்ட அணி  அடங்கிப்போனது. கங்குலி தலைமையில் இந்தியா எழுந்தது; தோனி தலைமையில் இந்தியா ஓடியது; இதோ கோலி தலைமையில் கிரிக்கெட் உலகை ஆட்டுவிக்கும் அசைக்கமுடியாத அரியணையில் உட்காரத் துடிக்கிறது. இந்தியாவின் வெற்றிகள் எப்படி மகிழ்ச்சியைத் தரக்கூடியவையோ அதேப்போல வெஸ்ட் இண்டீசின் வெற்றிகளும் இங்கே பலருக்கும் மகிழ்ச்சியைத் தரலாம். ஆரோக்கியமான கிரிக்கெட்டை விரும்பும் எவரும் அந்த அணியை விரும்புவர். 

சமீபத்திய 20 ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் உலகில் பல சரிவுகளை சந்தித்து வருகிறது. அணித்தேர்வு அரசியல், அணி நிர்வாகத்துக்கும் வீரர்களுக்கும் இடையேயான மோதல்கள் எனப்  பல காரணங்கள் உண்டு. இத்தனைப் பிரச்னை இருந்தாலும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் எதிர்பாராத அதிர்ச்சியைத் தந்துக் கோப்பையை ஜெயித்து கும்மாளம் போடும் விண்டீஸ். அது சாம்பியன்ஸ் டிராபி கோப்பையாகவும் இருக்கலாம், டி 20 கோப்பையாகவும் இருக்கலாம். விண்டீஸ் இல்லாத இந்த சாம்பியன்ஸ் டிராபித் தொடர் அவ்வளவாக இனிக்கவில்லை. பாகிஸ்தானைப்  போலவே கிட்டதட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியும் எப்போது எழும் எப்போது வீழும் எனக் கணிக்கவே முடியாது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி இனி 'வேஸ்ட் இண்டீஸ்'  என விமர்சிக்கப்படும் போதெல்லாம் கிரிக்கெட் உலகை அதிரவைக்கும் ஒரு வெற்றியைப் பெறும். ஆக்சிஜன் இல்லாமல் அடங்கிப்போய்விட்டது எனத் தோன்றிய காலகட்டத்தில் எல்லாம் ஒரு அதிர்ச்சி வெற்றி மூலம் cool buddy என்றவாறே உயிர்த்தெழும்.

கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையின் அரை இறுதியில் இந்தியா வைத்த இலக்கை அநாயாசமாகக் கடந்தது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை நினைத்துப் பார்க்கவே முடியாத வகையில் வென்றது. உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் ஆகச் சிறந்த கடைசி ஓவர் அதுதான். நான்கு பந்தில் நான்கு சிக்ஸர் வைத்து ஹீரோவாக உயர்ந்தார் பிராத்வெயிட். ஜெர்சிக்குக்  கூடக் காசில்லாமல் இந்தியா வந்த விண்டீஸ் அணி, கோப்பையை ஜெயித்து சட்டையைக் கழற்றி கர்ஜித்தபோது, தங்களது அணியின் கனவை காவு வாங்கிய எதிரணி என்றும் பாராது இந்தியர்களும் உற்சாகப்படுத்தினார்கள்.

அமெரிக்காவில் நடந்த டி20 தொடரில் இந்தியாவுக்கு எதிராக 245 ரன்கள் குவித்து மிரள வைத்தது. இந்தியா சும்மாவிடுமா சேஸிங்கில் அடங்காமல் அதிரடிக் கூட்டியது. இறுதி ஓவரில் உலகின் தலைசிறந்த சிறந்த பினிஷர் எனச் சொல்லப்படும் தோனி களத்தில் நின்றார். பௌலிங்கில் டுவைன் பிராவோ வந்தார். தோனியும் பிராவோவும் 'மச்சி' நண்பர்கள். அதனாலென்ன அதெல்லாம் களத்துக்கு வெளியே என்பது இருவரின் பாலிசி. தோனியை கட்டுப்படுத்தினார் பிராவோ. விண்டீஸ் ஒரு ரன்னில் வென்றது. 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிகள் ஏற்படுத்தும் தாக்கம் நிறைய நாள்கள் ரசிகர்கள் மத்தியில் நீடிக்காது. காரணம் அந்த அணி மிக மோசமாக அடுத்தடுத்த மேட்ச்களிலே தோல்வி அடையும். அதுதான் அப்போதும் நடந்தது. வரிசையாக தொடர் தோல்விகள் மீண்டும் துரத்தின. 

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் சொந்தமண்ணிலேயே சூடு போட்டுக் கொண்டிருந்தது. கடந்த ஆண்டு டெஸ்ட் தொடரை அநாயசமாக வென்றது. இந்தாண்டு ஒருநாள் தொடரை எளிதாக ஜெயித்தது. டி20 மேட்ச் வந்தது. இந்தியா 191 ரன்கள் இலக்கு வைத்தது. 'இதைத்தான் இவ்வளவு நேரம் உருட்டிக்கிட்டு இருந்தீங்களா' ரேஞ்சில் சிக்ஸர்கள் விளாசியே இலக்கைச் சிதைத்தது. 

இதோ... இப்போது இங்கிலாந்து டூர். ஸ்விங்கிற்கு சாதகமான இங்கிலாந்து மண்ணில் தென் ஆப்ரிக்க அணிக்கே அல்லு விட்டது. சேசிங் எடுத்த மூன்று போட்டிகளும் மண்ணைக்  கவ்வி பரிதாபமாக சொந்த ஊருக்கு திரும்பியது டுபிளசிஸ் தலைமையிலான தென் ஆப்ரிக்க அணி. யானை பலத்தோடு சொந்த மண்ணில் ஃபுல் பார்மில் இங்கிலாந்து இருக்க, விண்டீஸ் எறும்பு போல் தரையில் ஊர்ந்து வந்தது. இங்கிலாந்து அலட்டிக்கொள்ளவில்லை. அசால்ட்டாக ஒரு மிதி வைத்தது. நசுங்கிப் போனது விண்டீஸ். மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் மேட்ச்சில் இன்னிங்ஸ் மற்றும் 209 ரன்கள் வித்தியாசத்தில் அவமானத் தோல்வியைத் தழுவியது ஹோல்டர் அணி. 

தோற்கிறவன் ஜெயிக்கலாம். ஆனால், அவனமானப்படுபவன் மட்டுமே சாதிப்பான் எனச் சொல்வார்கள். அதுதான் இங்கே நடந்தது. அவமானத் தோல்வி ஹோல்டர் அணியை ஆக்ரோஷமடைய வைத்தது. இப்போதும் வெஸ்ட் இண்டீஸ் எறும்புதான். அடி வாங்கிய கட்டெறும்பாக இருந்தாலும் அந்த அணிக்கு நம்பிக்கை இருந்தது. குறிப்பாக 'ஹோப்' இருந்தார். இந்த முறை பிளானை மாற்றியது. தரையில் ஊர்ந்து வந்த எறும்பு  இம்முறை யானையின் காதில் புகுந்தது. தன்னை விட ஆயிரம் மடங்கு பலமுடைய யானையை அந்த எறும்பு கதறவைத்தது. கடைசியில் சாய்த்தும் விட்டது. 

1973-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை வெஸ்ட் இண்டீஸ் அணி 13 டெஸ்ட் தொடர்களில் விளையாடியிருக்கிறது. இதில் ஒன்றில் கூட இங்கிலாந்திடம் மண்டியிட வில்லை. இதில் ஏழு முறை தொடர் இங்கிலாந்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. சுமார் 25 ஆண்டுகள் இங்கிலாந்து தொடரை ஜெயிக்க முடியாமல் அடங்கியே இருந்தது. எல்லா விஷயத்தையும் வாழ்க்கையில் பார்த்துதான் ஆக வேண்டும். தேனிலவு முதல் மரணக்குழி வரை. அது வெஸ்ட் இண்டீஸ் விஷயத்திலும் நடந்தது. இந்தத் தொடரை தவிர்த்து விட்டுப் பார்த்தால் 2000-ம் ஆண்டு முதல் 2012 வரை ஐந்து முறை இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் அனைத்திலும் தோல்வியைத் தழுவியது. 

25 ஆண்டுகள் இங்கிலாந்தை அதன் மண்ணில் முடக்கிப் போட்ட விண்டீஸ் பிற்காலத்தில் ஒரே ஒரு டெஸ்ட் வெற்றிக்காக திண்டாடியது. 2000-ம் ஆண்டுக்கு பிறகு 17 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் ஒரு டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து மண்ணில் வென்றிருக்கிறது விண்டீஸ். கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்கிய இந்த டெஸ்ட் மேட்சில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் பௌலர்கள் ரோச்சும் கேப்ரியலும் ஈரப்பதத்தை பயன்படுத்தினார்கள். துல்லியமான பந்துவீச்சில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அலறியடித்துக் கொண்டு பெவிலியின் ஓடினார்கள். இருப்பினும் ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆடி சதமடித்தார். அந்தச் சதத்தால் 258 என்ற கௌரவ ரன்கள் கிடைத்தன. 

வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. 35 ரன்னில் மூன்று விக்கெட் விழுந்தது. இந்த மேட்சில் கூட வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்ஸ் தோல்வி அடையக்கூடும் என அலட்சியக் குரல்கள் ஒலித்தன. க்ரெய்க் பிராத்வெயிட்டுடன் 23 வயது இளம் வீரர் 'ஹோப்' களமிறங்கினார். இந்த இருவரும் அணியைத் தேற்றினார்கள். நான்காவது விக்கெட்டுக்கு 246 ரன்களைச் சேர்த்தது இந்த இணை. பிராத்வெயிட் 134 ரன்களிலும் ஹோப் 147 ரன்களிலும் அவுட் ஆயினர். பிளாக்வுட் மற்றும் ஹோல்டரின் கடைசி நேர அதிரடிகளால் முதல் இன்னிங்சில் 427 ரன்கள் குவித்தது வெ.இ. 

169 ரன்கள் பின்தங்கியிருந்த  இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் மெர்சல் காட்டியது. விவேகமான ஆட்டத்தால் விறுவிறுவென ரன்களை குவித்தது. களம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு ஃபிளாட் பிட்ச் போலவே  காணப்பட பந்துகள் பேட்டுக்கு நல்லபடியாக வந்துசேர்ந்தன. பேட்டில் படும் பந்துகளும் பௌண்டரிக்கு துள்ளிக் குதித்து ஓடின. நிலைமையை பயன்படுத்திய இங்கிலாந்து அணியில் ஆறு பேர் அரை சதம் அடித்தனர். இங்கிலாந்து பௌலர்கள் கூட அரை சதம் எடுக்கவே இங்கிலாந்தின்  முன்னிலை 300 ரன்களைத் தாண்டியது. நான்காவது நாள் இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் 96 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 321 ரன்களை கடக்க முடியாது என நினைத்தார் ரூட். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இதுவே போதும் என்ற நம்பிக்கையில் டிக்ளேர் செய்தார். அந்த முடிவு பின்னர் பெரும் பின்னடைவாக அமைந்தது. 

29 ஆகஸ்ட் என்ற தினத்தை இங்கிலாந்து அவ்வளவு எளிதில் மறந்து விடாது. ஏன் என்ற கேள்விக்கு பதில் தேட நீங்கள் 135 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். அப்போது 1882-ம் ஆண்டு. ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட அந்தத் தொடரில் இங்கிலாந்து வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது வெறும் 85 ரன்கள். அதைக் கூட எடுக்க  முடியாமல் 77 ரன்களில் சுருண்டது. ஏழு ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்ததால் 'தி ஸ்போர்ட்டிங் டைம்ஸ்' என்ற இங்கிலாந்து பத்திரிகை 'இங்கிலாந்து இறந்துவிட்டது. எரிக்கப்பட்ட அதன் சாம்பல் ஆஸ்திரேலியாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டது' என எழுதியது. அங்கேதான்  சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆஷஸ் தொடருக்கான விதை போடப்பட்டது. 

சரி விஷயத்துக்கு வருவோம். நேற்றைய தினம் #OnThisDay ஹாஷ்டேகில் வேறு அந்த வரலாறு நினைவுக்கு வந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் ஜெயிக்க வேண்டும் என நம்பிக்கையோடு ஆடியது இங்கிலாந்து. விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற மனநிலையுடன் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் போராடினார்கள். இந்த இன்னிங்சிலும் பிராத்வெயிட்டும் ஹோப்பும் கூட்டணி போட்டனர். இங்கிலாந்தை அவர்கள் பதட்டத்திலேயே வைத்திருந்தார்கள். டிராவுக்காக ஆடாமல் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றிக்காக ஆடியதை இங்கிலாந்து தாமதமாகவே உணர்ந்தது. 

180 பந்தில் 95 ரன்களில் பிராத்வெயிட் அவுட் ஆனபோது இங்கிலாந்து சற்றே நிம்மதியடைந்தது. கடைசி நாள் என்பதால் எளிதில் விக்கெட் கிடைக்கும் என நம்பியது. ஆனால், அந்தக் கனவுகளை சிதறடித்தார் ஹோப். ராஸ்டன் சேஸ் பந்தையும் அதிகளவில் வீணாக்காமல் நேரத்தையும் வீணாக்காமல் 30 ரன்களை எடுத்துவிட்டுக் கிளம்பினார். அடுத்தது வந்த பிளாக்வுட்டும் அதிரடியாக ஆடினார். ஒரு முனையில் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் ஹோப் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நம்பிக்கையளித்தார். கடைசி 15 ஓவர்கள் திக் திக் ஆட்டமாகவே இருந்தது. எனினும் பதற்றப்படாத ஹோப் சதம் அடித்தார். கடைசிவரை ஆட்டமிழக்காமல் 118 ரன்கள் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சரித்திரம் படைத்தது. இந்த மேட்ச் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டெஸ்ட் வரலாற்றில் மறுபிறப்பாக இருக்கக்கூடும். இருக்க வேண்டும் என்பதே நமது ஆசையும்! 

வெஸ்ட் இண்டீஸ் டரியல் தொடரட்டும். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு