
நெஞ்சம் மறப்பதில்லை-4
தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக்காரர்கள் சங்கம் சார்பில் ஒரு புகைப்படக் கண்காட்சி சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த வாரம் முழுவதும் நடந்த அந்தக் கண்காட்சியில், காலத்தைக் கடந்தும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் புகைப்படங்கள் பலவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அரசியல், சமூகம், பேரிடர்கள் மட்டுமல்லாமல் விளையாட்டுகள் சார்ந்த புகைப்படங்களும் பல நினைவுகளைக் கிளறிவிடுவதாக இருந்தன. ஒரு புகைப்படத்தில், கிரிக்கெட் வீரர் ஒருவர் தனது ஜெர்சியைக் கழற்றித் தலையில் சுற்றிக்கொண்டு வெயில் தாங்க முடியாமல் வியர்த்துக் கொட்டியபடி பிட்ச்சிலேயே சோர்ந்துபோய் அமர்ந்திருந்த காட்சி அதிகம் ஈர்த்தது. வியர்வை சொட்டச் சொட்ட அமர்ந்திருந்த அந்த கிரிக்கெட் வீரரின் பெயர் டீன் ஜோன்ஸ், ஆஸ்திரேலியர். இந்தியாவிற்கு எதிராக நமது சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில், சென்னை வெயில்தான் டீன் ஜோன்ஸைப் போட்டுப் புரட்டியெடுத் திருக்கிறது.
சென்னை வெயிலும் டீன் ஜோன்ஸின் வியர்வையும் இங்கே பேசுபொருள் அல்ல. அதைத் தாண்டியும் அந்த டெஸ்ட் போட்டியைப் பற்றிப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

சேப்பாக்கம் மைதானம் இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே கொஞ்சம் ஸ்பெஷலான மைதானம். காலம் கடந்தும் பேசப்படும் பல வரலாற்றுத் தருணங்கள் இங்கேதான் அரங்கேறியிருக்கும். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு முதல் வெற்றியே சேப்பாக்கத்தில்தான் கிடைத்திருந்தது. சச்சின், தோனி உட்பட பல வீரர்களுக்கு அவர்களின் கரியர் பெஸ்ட் இன்னிங்ஸ் இங்கேதான் வெளிப்பட்டிருக்கும். அவர்களுக்குப் பிடித்த மைதானமுமே சென்னைதான். இந்த வரிசையில் டீன் ஜோன்ஸ் வியர்வை சொட்டச் சொட்ட ஆடிய அந்தச் சேப்பாக்கம் டெஸ்ட்டுக்குமே ஒரு வரலாற்றுச் சிறப்பு இருக்கிறது. டெஸ்ட் வரலாற்றிலேயே இரண்டே இரண்டு டெஸ்ட் போட்டிகள்தான் ‘டை' ஆகியிருக்கின்றன. ‘டை' ஆன இரண்டு டெஸ்ட்களில் நாம் பேசிக்கொண்டிருக்கும் அந்தச் சேப்பாக்கம் டெஸ்ட்டும் ஒன்று!
1960-ம் ஆண்டில் பிரிஸ்பேனில் வெஸ்ட் இண்டீஸுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெற்ற போட்டி ‘டை’யில் முடிந்திருந்தது. கிரிக்கெட் வரலாற்றில் ‘டை' ஆன முதல் டெஸ்ட் போட்டி அதுவே.
1986-ல் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் பூன், டீன் ஜோன்ஸ், கிரெக் மேத்யூ, ஸ்டீவ் வாக், ரே பிரைட் போன்ற வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். கபில்தேவ் தலைமையிலான இந்திய அணியில் கவாஸ்கர், ஸ்ரீகாந்த், மொஹிந்தர் அமர்நாத், அசாருதீன், ரவிசாஸ்திரி போன்ற ஜாம்பவான்கள் இடம்பிடித்திருந்தனர்.

1984-ல் கிரெக் சேப்பல் ஓய்வு பெற்ற பிறகு மூன்று ஆண்டுகளாக எந்த சீரிஸையும் ஆஸ்திரேலியா அணி வென்றிருக்கவில்லை. ஆஸ்திரேலிய கிரிக்கெட்டே மங்கத் தொடங்கிவிடுமோ என்கிற பயம் அனைவருக்குமே உண்டாகியிருந்தது. இந்நிலையில்தான் இந்தியாவுக்கு ஆலன் பார்டர் தலைமையில் ஆஸ்திரேலிய அணி வந்திருந்தது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய இறங்கியது. டேவிட் பூனும் மார்ஷும் ஓப்பனர்களாகக் களமிறங்கியிருந்தனர். மார்ஷ் சீக்கிரமே அவுட் ஆனாலும் நம்பர் 3-ல் வந்த டீன் ஜோன்ஸ் டேவிட் பூனுடன் நின்று நிதானமாக கூட்டணி போட்டார். நம்பர் 5-ல் கேப்டன் ஆலன் பார்டர் களமிறங்கினார். இங்கேதான் ஆட்டமே விறுவிறுப்பாகத் தொடங்கியது. சதத்தைத் தாண்டியிருந்த டீன் ஜோன்ஸ் தொடர்ந்து சிறப்பாக ஆட, ஆலன் பார்டரும் இந்தியாவின் பௌலிங்கைச் சிதறடித்தார். சென்னை வெயிலைச் சமாளிக்க முடியாமல் டீன் ஜோன்ஸ் கடுமையாகத் திணறியிருந்தார். ஒரு கட்டத்தில் வாந்தியெடுத்து டீஹைட்ரேஷனின் உச்சத்துக்குச் சென்றார். ‘‘இனிமேலும் என்னால் பேட்டிங் செய்ய இயலாது. டிரஸ்ஸிங் ரூமுக்கு அழைத்துச் செல்லுங்கள்'’ என டீன் ஜோன்ஸ் கூற, கேப்டன் ஆலன் பார்டர் இதற்கு அனுமதி கொடுக்கவில்லை. ‘‘நன்றாக ஆடியிருக்கிறாய். இன்னும் பெரிய இன்னிங்ஸ் ஆடியாக வேண்டும். உனக்கு தொடர்ந்து நம்பர் 3-ல் ஆடுவதற்கு வாய்ப்பு காத்திருக்கிறது'’ என ஒரு மாதிரியாக உத்வேகம் அளித்து டீன் ஜோன்ஸைத் தொடர்ந்து ஆட வைத்தார்.
ஆலன் பார்டர் எதிர்பார்த்ததைப் போலவே டீன் ஜோன்ஸ் இரட்டை சதத்தைக் கடந்தார். 210 ரன்களில் டீன் ஜோன்ஸ் அவுட் ஆனவுடன் நேராக ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டு டீஹைட்ரேஷனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. அன்று ஒரே நாளில் மட்டும் சென்னை வெயிலால் 7 கிலோ குறைந்திருக்கிறார் டீன் ஜோன்ஸ். ‘‘ஜோன்ஸுக்கு ஏதாவது ஆகியிருந்தால் அதற்கான முழுப்பொறுப்பு நானாக மட்டுமே இருந்திருப்பேன். நல்லவேளை, ஒன்றும் ஆகவில்லை'' என அன்றைய நாள் குறித்து ஆலன் பார்டர் கொஞ்சம் நகைச்சுவையாக பின்னாளில் பேசியிருந்தார். டீன் ஜோன்ஸ் அவுட் ஆனவுடன் ஆலன் பார்டர் சதத்தைக் கடந்து அவரும் அவுட் ஆனார். கிட்டத்தட்ட மூன்றாம் நாளின் முதல் செஷன் வரை ஆடிய ஆஸ்திரேலிய அணி 574 ரன்களைச் சேர்த்து டிக்ளேர் செய்தது. கபில்தேவின் சதத்தால் பதிலுக்கு இந்திய அணி 397 ரன்களை எட்டியது.

இந்தப் போட்டியை வென்றே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஆலன் பார்டர், இரண்டாம் இன்னிங்ஸில் வேகமாக ரன்கள் சேர்க்கக் கட்டளையிட்டார். ஆஸ்திரேலியா 170-5 என்ற நிலையில் ஆலன் பார்டர் டிக்ளேர் செய்தார். இந்தியாவுக்கு 348 ரன்கள் டார்கெட். 87 ஓவர்கள் மட்டுமே மிச்சமிருக்கின்றன.
கவாஸ்கரும் ஸ்ரீகாந்த்தும் ஓப்பனர்களாக இறங்க, ஸ்ரீகாந்த் வழக்கம்போல அதிரடியாக 39 ரன்களை அடித்து சேஸுக்கு பாசிட்டிவ் ரூட் போட்டுக் கொடுத்தார். கவாஸ்கர் நின்று ஆட அவரைச் சுற்றி அமர்நாத், அசாருதின் போன்றோர் கணிசமான பங்களிப்பைக் கொடுத்தனர். டீ பிரேக்கின்போது இந்திய அணி 193-2. கடைசி ஒரு செஷனில் 155 ரன்கள் அடிக்க வேண்டும். விக்கெட்டுகள் இருப்பதால் அடித்துவிடலாம் என நினைக்கையில் ரே பிரைட்டும், கிரெக் மேத்யூஸும் சிறப்பாக வீசி வரிசையாக விக்கெட்டுகளை வீழ்த்தினர். கவாஸ்கர் 90 ரன்களில் வெளியேற, கபில்தேவ் 1 ரன்னில் வெளியேறினார். கபில்தேவ் அவுட் ஆன உடனேயே இந்திய அணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் தகர்ந்தது. அணியின் துணை கேப்டனான ரவி சாஸ்திரி உள்ளே வந்தார். க்ரீஸுக்குள் வந்த முதல் பந்தே இறங்கி வந்து கவர்ஸில் பவுண்டரி. மேட்ச் இன்னும் கையை விட்டுச் செல்லவில்லை, முடிந்தவரை போராடுவோம் என்கிற மனநிலையோடு அடித்து ஆடுகிறார்.

ரவிசாஸ்திரியின் ஸ்ட்ரைக் ரேட் 100-க்கும் மேல் இருந்தது. அவரின் அதிரடியால் ஒரு வழியாக கடைசி 4 ஓவர்களில் 17 ரன்கள் என்ற நிலைக்கு இந்தியாவின் பக்கம் மொத்தமாகப் போட்டி திரும்பியது. முடிந்த அளவுக்கு நேரத்தைக் கடத்துவது, இந்திய பேட்ஸ்மேன் களை ஸ்லெட்ஜ் செய்து வெறுப் பேற்றுவது, அம்பயருடன் வாக்குவாதம் செய்வது என ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களுடைய க்ளீஷேவான ஸ்டைலைக் கையிலெடுத்தனர். ஆஸ்திரேலியா தோல்வியை ஒப்புக்கொள்ளத் தொடங்கிவிட்டது என்பதை உணர்த்தும் வகையில் இந்த நிகழ்வுகள் அமைய, ஆஸி வீரர்களே எதிர்பாராத வகையில் ரே பிரைட் அடுத்தடுத்த ஓவர்களில் 3 விக்கெட்டை வீழ்த்தி இந்தியாவுக்குக் கடும் நெருக்கடி கொடுத்தார். இப்போது கையில் ஒரு விக்கெட்தான் இருக்கிறது. கடைசி ஓவரில் இந்திய அணிக்கு நான்கு ரன்கள் மட்டுமே தேவை. மூன்று ரன்கள் எடுத்து, கடைசி ஒரு பந்து மீதமிருக்கையில் நம்பர் 11 வீரர் மணீந்தர் சிங் lbw ஆகவே போட்டி ‘டை' யில் முடிந்தது. டெஸ்ட் வரலாற்றில் ‘டை’யில் முடிந்த இரண்டே போட்டிகளில் இதுவும் ஒன்று என்ற பெருமையையும் பெற்றது.
டீன் ஜோன்ஸ் வியர்வை சொட்டச் சொட்ட அமர்ந்திருந்தது வெறும் புகைப்படம் மட்டுமல்ல, அதன் பின்னால் இத்தனை கதைகளும் வரலாறும் ஒளிந்திருக்கின்றன.
அந்த டெஸ்ட்டை இன்றைக்கும் நினைவு வைத்திருப்பதற்கான தருணங்களை அருளிய டீன் ஜோன்ஸ், இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் ஐ.பி.எல் போட்டிகளுக்கான கமெண்ட்ரி பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீர் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.