
சோகத்தில் காமன்வெல்த் வீரர்... துயர்துடைப்பாரா உதயநிதி?
“தங்க மெடல் ஜெயிச்சு என்ன பிரயோஜனம்... யாருடைய ஆதரவும் இல்லை” என்று விரக்தியாகப் பேசுகிறார் 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த காமன்வெல்த் போட்டியில் பாரா ஜூடோ பிரிவில் தங்கம் வென்ற மனோகரன்.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தைச் சேர்ந்த ஜானகிராமன் - அம்சா தம்பதியின் மகன் மனோகரன். 15% மட்டுமே பார்வைத்திறன்கொண்ட, விழிச்சவால் மாற்றுத்திறனாளியான மனோகரன் மாநில, தேசிய மற்றும் காமென்வெல்த் போட்டிகளில் விளையாடி தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் குவித்துக்கொண்டிருப்பவர். ‘உலக பாரா ஜூடோ’ தரவரிசைப் பட்டியலில் 34-வது இடத்திலும், இந்திய அளவில் முதலிடத்திலும் இருக்கும் மனோகரன், உரிய அங்கீகாரம் கிடைக்காததால் வறுமையில் உழல்கிறார். அவரை நேரில் சந்தித்தோம்.
“சின்ன வயசுல இருந்தே எனக்குப் பார்வைத்திறன் குறைபாடு இருந்திருக்கு. ஆரம்பத்துலயே கண்டுபிடிக்காததால, கொஞ்சம் கொஞ்சமா பார்வை பறிபோய், பத்தாம் வகுப்புல கடுமையா பாதிக்கப்பட்டேன். பப்ளிக் எக்ஸாம்கூட சரியா எழுத முடியாமப் போயி, கடைசியில ஃபெயில் ஆகிட்டேன். குடும்பக் கஷ்டம் தாங்க முடியாம, ஒரு கம்பெனிக்கு மூட்டை தூக்கும் வேலைக்குப் போனேன். சரியா மூட்டை தூக்க முடியாம தடுமாறி விழுந்துட்டேன். ‘எனக்கு உழைச்சு வாழத் தகுதியில்லையா... பிச்சைதான் எடுக்கணுமா?’ன்னு நான் அழுததைப் பார்த்துட்டு, என்னை மறுபடியும் ஐ ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போனாங்க. ‘மரபார்ந்த விழித்திரை பாதிப்பு இருக்கிறதால, பார்வையை மீட்கிறதுக்கு வழியே இல்லை’ன்னு டாக்டர்கள் கைவிரிச்சுட்டாங்க.

என்ன நடந்தாலும் பரவாயில்லை... குடும்பத்தைக் காப்பாத்தணும்னு மூட்டை தூக்குற வேலைக்கே மறுபடியும் போனேன். முதலாளி வேலை கொடுத்தாலும், ‘உன்னால ஒண்ணும் முடியாது... ஓரமா போய் உட்காரு’னு மத்தவங்க கேலி செஞ்சாங்க. அந்த நேரத்துல எனக்கு வழிகாட்டியது ஜூடோ மாஸ்டர் சிவகுமார்தான். சின்ன வயசுலயே எனக்கு கராத்தே மேல ஆர்வம் இருந்ததால, மாற்றுத்திறனாளிகளுக்கான ஜூடோ விளையாடலாம்னு சிவகுமார் மாஸ்டர் ஊக்கப்படுத்தினார். கண்ணுக்கு அரை அடி தூரத்துல இருக்குற பொருளைத்தான் என்னால தெளிவா பார்க்க முடியும். எதிர்ல நிக்கிறவங்க ஒரு வானவில் மாதிரிதான் தெரிவாங்க. ஆனாலும், உள்ளுணர்வு, செவித்திறனை வெச்சே எதிராளிகளோட சண்டை போடுவேன்.
2010-ல என்னோட பயிற்சியை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுபோக ஆசைப்பட்டு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை (SDAT) அணுகினேன். ஆனா, ‘தமிழ்நாட்டுல பாரா ஜூடோ விளையாட்டு இன்னும் வரலை. எங்களால பயிற்சி கொடுக்க முடியாது’ன்னு சொன்னாங்க. எனக்குப் பெரிய ஏமாற்றமாகிடுச்சு. 2012-லதான், தமிழ்நாட்டுல ‘பாரா ஜூடோ’ விளையாட்ட முதன்முதலா கொண்டுவந்தாங்க. அப்போ... தமிழ்நாட்டுக்காக பாரா ஜூடோ விளையாடுற முதல் வீரராக நான்தான் இருந்தேன். முதல் வருஷமே, லக்னோவுல நடந்த ‘நேஷனல் பாரா ஜூடோ’-வில் கலந்துக்கிட்டு சில்வர் மெடல் அடிச்சேன். 2014-ல தென்கொரியாவுல நடந்த ‘ஆசிய பாரா கேம் செலக்ஷன்’ல தங்கம் ஜெயிச்சேன். இப்படிக் கடந்த 10 வருஷத்துல தேசிய அளவுல 8 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை ஜெயிச்சிருக்கேன்.


2019-ல் இங்கிலாந்துல நடந்த காமன்வெல்த் போட்டியில, இந்தியா சார்பா கலந்துக்கிட்டு தங்கம் ஜெயிச்சேன். காமன்வெல்த் போட்டியில தங்கம் ஜெயிச்சதுக்கு அப்புறமாவது, ‘அரசோட பார்வை என்மீது படும். வாழ்க்கை மாறும்’னு நினைச்சேன். ஆனா... இதுவரைக்கும் எதுவும் மாறலை. 3% ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் விளையாட்டுத்துறையில் ஜூடோ பயிற்சியாளரா வேலை கொடுங்கனு எத்தனையோ முறை அரசாங்கத்துகிட்ட கேட்டுப் பார்த்துட்டேன். ஆனா, ‘10-வது ஃபெயில் ஆகிட்டீங்க. உங்களுக்கு வேலை கொடுக்க முடியாது’னு சொல்றாங்க. கல்யாணமாகி 4 வயசுல ஒரு மகளும், ஆறு மாசக் கைக்குழந்தையும் இருக்குறதால கிடைக்கிற வேலைக்கு போய்க்கிட்டு இருக்கேன். எதுக்குடா விளையாட்டுத்துறையைத் தேர்ந்தெடுத்தேன்னு இப்ப ஒவ்வொரு நாளும் நொந்துக்கிட்டு இருக்கேன் சார்” என்றபோது கண்கலங்கிவிட்டார்.

“அப்படியெல்லாம் சொல்லாதீங்க சார். உங்ககிட்ட ஜூடோ கத்துக்கிட்ட எத்தனை பேர், மாவட்ட, மாநில அளவுல சாதிச்சுக்கிட்டு இருக்காங்க. நீங்க மட்டும் இலவசமா சொல்லித் தராட்டி அரசுப் பள்ளி மாணவர்கள் இதைக் கத்துக்கிட்டிருக்க முடியுமா?” என்று அருகிலிருந்த மாணவன் தேற்ற, தொடர்ந்து பேசினார் மனோகரன்.
“நமக்கு ஆயிரம் திறமைகள் இருக்கலாம். ஆனா, குடும்பத்தை நடத்துற அளவுக்குக்கூட சம்பாதிக்க முடியலைன்னா நடைப்பிணம்தான். நாங்க கஷ்டப்பட்டுப் போராடி, காமென்வெல்த் வரைக்கும் போய் தங்கம் ஜெயிச்சுட்டு வந்தா, அதை அரசாங்கம் ஒரு சாதனையாவே பார்க்கறது இல்லை. என்னை மாதிரி நேஷனல், இன்டர்நேஷனல் அளவுல தங்கமும் வெள்ளியும் ஜெயிச்ச இன்னும் எத்தனையோ மாற்றுத்திறனாளி வீரர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்காங்க. உதாரணமா, 2019-ல் பாரா ஜூடோ பெண்கள் பிரிவுல தங்கம் ஜெயிச்ச சேலம் சுபாஷினி இப்போ கூலி வேலைக்குப் போறாங்க.

ஹரியானா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள்ல பாரா விளையாட்டுப் போட்டிகளுக்கு கொடுக்குற முக்கியத்துவத்தை தமிழ்நாட்டுல கொடுக்குறது இல்லை. புதுசா போட்டியில பங்கேற்கிறதுக்குக்கூட பணமில்லை. ஒவ்வொரு தடவையும் யாராவது உதவ மாட்டாங்களான்னு கையேந்த வேண்டியிருக்கு. வயசு ஏறுது... தினம் தினம் பார்வைத்திறன் வேற குறைஞ்சுக்கிட்டே போகுது. உடம்புலயும் மனசுலயும் வலு குறையுறதுக்குள்ள பாரா ஒலிம்பிக் போட்டியில விளையாடி இந்தியாவுக்குத் தங்கம் ஜெயிச்சுக் கொடுக்குறதுதான் என்னோட லட்சியம். தமிழ்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அண்ணாதான் எங்களை மாதிரி ஆளுங்களுக்கு உதவணும்” என்றார் கெஞ்சும் குரலில்.
பாரா ஒலிம்பிக்கில் சாதிப்பதற்கு முறையான பயிற்சியும், பொருளாதார உதவியும் கோரும் மனோகரனின் கோரிக்கையை நிறைவேற்றித் தருவாரா இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்?