
நெஞ்சம் மறப்பதில்லை-2
`மூன்றாம் உலகப்போர்' - உலக அரசியலை உலுக்கிப்பார்க்கும் அத்தனை சமயங்களிலும் அதிகம் உபயோகிக்கப்படும் வார்த்தை இது. ரஷ்யா-உக்ரைன் போர் சமயத்தில்கூட ‘இது மூன்றாம் உலகப்போராக மாறும்’ என்று பேசப்பட்டது. ஆனால், அது அப்படியாக மாறவில்லை. இதுமட்டுமல்ல, ஒவ்வொரு முறையுமே மூன்றாம் உலகப்போர் என பில்டப் ஏற்றப்பட்டு கடைசியில் ஒன்றுமில்லாமல் புஸ்வாணமாகிவிடும். அப்படியானால், மூன்றாம் உலகப்போர் என ஒன்று ஏற்கெனவே நிகழ்ந்துவிட்டதா என்ன? ஆமாம், ‘மூன்றாம் உலகப்போர்' நிகழ்ந்துவிட்டதாகவே வரலாறு கூறுகிறது.
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே பனிப்போர் நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டம் அது. ஸ்புட்னிக் ராக்கெட்டும் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் சந்திர விஜயமும் இந்தப் பனிப்போரின் பலன்களே. ஒருவரின் வளர்ச்சியை, முன்னேற்றத்தை, இன்னொருவரால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. சீறிப்பாய்ந்து கொண்டிருந்த இந்த வல்லாதிக்க ரேஸ் 1972-ம் ஆண்டில் 64 கட்டங்களுக்குள் அடைபட்டுபோனது. ராக்கெட்டுகளை ஏவி அணு ஆயுதங்களை விதைத்து சண்டையிட்ட மேற்குலகமும் சோவியத்தும் சதுரங்கக் கட்டத்திற்குள் தங்கள் போரை நிகழ்த்தத் தொடங்கியது.
சதுரங்கம், சோவியத் ரஷ்யாவில் பாரம்பரியமாக ஆடப்படும் விளையாட்டு. சதுரங்கம் ஆடுவதை ரஷ்யர்கள் பெருமையாகக் கருதினர். அறிவுசார்ந்து சோவியத் யூனியனின் மேன்மையை உலகுக்கு எடுத்துக்காட்டும் ஆட்டமாக சதுரங்கம் இருப்பதை நினைத்துப் பெருமிதம் கொண்டனர். உலக அளவிலான போட்டிகளில் ரஷ்ய வீரர்களின் வெற்றியும் ஆதிக்கமும் சதுரங்கத்தை ரஷ்யர்களின் ஆட்டமாகவே மாற்றிவிட்டது. மற்ற நாட்டு வீரர்களின் ஆட்டமெல்லாம் எடுபடவே இல்லை. சதுரங்க ஆட்டத்தில் அமெரிக்காவால்கூட சோவியத் வல்லாதிக்கத்தை உடைக்கவே முடியவில்லை.
1948-லிருந்து 1972 வரை 24 ஆண்டுகளாக உலக செஸ் சாம்பியன்கள் அத்தனை பேரும் ரஷ்யர்களே. சாம்பியன்கள் மட்டுமல்ல, அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டு இரண்டாமிடம் பிடித்தவர்கள் அத்தனை பேருமேகூட ரஷ்யர்கள்தான். அமெரிக்கர்களால் இறுதிப்போட்டிக்குக்கூட முன்னேற முடியவில்லை. ஆனால், இதெல்லாம் 1972 வரைக்கும்தான். 1969-ல் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் முதன்முதலாகக் காலடி எடுத்து வைத்த மூன்றே ஆண்டுகளில் சதுரங்கத்திலும் சோவியத்தின் வல்லாதிக்கத்தை முறியடித்து அமெரிக்கா தனது தடத்தைப் பதித்தது. சதுரங்கத்தில் அமெரிக்காவிற்காகக் கொடியை நட்டவர் பாபி ஃபிஸ்சர்.
அமெரிக்கரான பாபி ஃபிஸ்சர் இளம் வயதிலேயே சதுரங்கத்தில் வல்லவராகத் திகழ்ந்தார். 12-13 வயதிலேயே அமெரிக்காவின் மிகப்பெரிய வீரர்களைத் தோற்கடிக்கும் அளவுக்குத் திறனைப் பெற்றிருந்தார். சதுரங்க வரலாற்றில் மிக முக்கிய வீரராக உயர்வார் என அப்போதே அனுமானிக்கப்பட்டார். ஆனால், பாபி ஃபிஸ்சர் சதுரங்க வரலாற்றில் மட்டுமல்ல, அமெரிக்க-சோவியத் யூனியன் பனிப்போர் வரலாற்றிலேயே மிக முக்கிய நபராக உயர்ந்தார். அமெரிக்காவின் ஹீரோவாகக் கொண்டாடப்பட்டார். காரணம், ஃபிஸ்சர் ஒரு ரஷ்ய வீரரைத் தோற்கடித்து உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.
1969-ம் ஆண்டில் ரஷ்யாவைச் சேர்ந்த போரிஸ் ஸ்பாஸ்க்கி உலக சாம்பியன் ஆகியிருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறும். அதன்படி, 1972-ம் ஆண்டு நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் போரிஸ் ஸ்பாஸ்க்கியை எதிர்த்துப் போட்டியிட்டவர் பாபி ஃபிஸ்சர். ஐஸ்லாந்தின் தலைநகரமான ரேக்கவிக்கில் இந்தப் போட்டி நடந்திருந்தது.
இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. அமெரிக்காவும் சோவியத் யூனியனும் நேருக்கு நேர் நின்று தங்கள் படைகளோடு போரிடுவதைப் போன்று இந்தப் போட்டியை பாவித்தன. எப்படியும் ரஷ்ய வீரரே வெல்வார் என்பதே பலரின் கணிப்பாக இருந்தது. பாபி ஃபிஸ்சரை ஒரு பொடியனாகத்தான் சோவியத் யூனியன் பார்த்தது. ஆனால், பாபியோ சோவியத் யூனியனும் ஸ்பாஸ்க்கியும் தன்னைக் கண்டு அஞ்சுவதாகவும், தான்தான் வெல்லப்போவதாகவும் வெளிப்படையாக அறிவித்தார்.
இவ்வளவு ஆர்வமாகப் பேசிய இந்த பாபி ஃபிஸ்சர், ஸ்பாஸ்க்கிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பாகப் பல குட்டி கலாட்டாக்களை அரங்கேற்றி அதகளப்படுத்தினார். ‘அறிவிக்கப்பட்டுள்ள பரிசுத்தொகை எனக்குப் போதாது. அதை இரட்டிப்பாக்க வேண்டும்’ என்றும், ‘ஊடகங்கள் என்னைப் புகைப்படம் எடுக்கக்கூடாது’ என்றும் எக்கச்சக்க கட்டுப்பாடுகளை விதித்தார். அடம்பிடித்த ஃபிஸ்சர் போட்டியின் தொடக்கவிழாவில்கூடப் பங்கேற்கவில்லை. ரஷ்ய வீரரை வீழ்த்தும் அளவுக்குத் திறன்படைத்தவர் என அறியப்பட்டவர் இப்படி வினோதமாக நடந்துகொள்வதேன்? இத்தனைக்கும் ஒட்டுமொத்த அமெரிக்காவும் பாபியைக் கொண்டாடத் தயாராக இருந்ததே?
ஃபிஸ்சர் அப்படித்தான். சிறுவயதிலிருந்தே ஒருவித மனக்குழப்பம் மன இறுக்கம் கொண்ட நபராகவே அவர் இருந்தார். ஸ்பாஸ்க்கிக்கு எதிரான போட்டிக்கு முன்பான தயாரிப்பு நாள்களில் ரஷ்யா தன்னை உளவுபார்ப்பதாக எண்ணி மன உளைச்சலுக்குள்ளானர். CIA, KGB போன்றவற்றால் தன் உயிருக்கே பாதிப்பு வரும் என தேவையின்றி அச்சமுற்றார். மனக்குழப்பத்திற்கு சரியான சிகிச்சைகள் எடுத்துக்கொள்ளாததால் பின்னாள்களில் ஃபிஸ்சர் பெரும் துன்பங்களைச் சந்தித்தார்.
முரண்டு பிடித்துக்கொண்டிருந்த ஃபிஸ்சருக்கு வெள்ளை மாளிகையிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போதைய அமெரிக்க அதிபரான நிக்சனின் வெளியுறவுத்துறை ஆலோசகரான ஹென்றி கிஸ்ஸன்ஜர் ஃபிஸ்சரிடம் பேசினார். நிக்சன் இந்தப் போட்டியைக் காண ஆவலாக இருப்பதாகவும், அமெரிக்காவிற்கு இந்தப் போட்டி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றெல்லாமும் எடுத்துக் கூறினார். ஒருவழியாக போட்டியில் ஆட ஃபிஸ்சர் ஒப்புக்கொண்டார். கிஸ்ஸன்ஜர் பேசியதாலோ, அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை நிரூபிக்க இந்தப் போட்டி முக்கியம் என்பதாலோ அல்ல, தான் விதித்த கட்டுப்பாடுகளுக்கு செஸ் கூட்டமைப்பு ஒத்துக்கொண்டதால் மட்டுமே.
20-ம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த சதுரங்க ஆட்டம் எனக் கூறப்பட்ட ரஷ்யாவைச் சேர்ந்த போரிஸ் ஸ்பாஸ்க்கி Vs அமெரிக்காவைச் சேர்ந்த பாபி ஃபிஸ்சர் போட்டி தொடங்கியது. மொத்தம் 24 சுற்றுகள். முதலில் 12.5 புள்ளிகளை எடுக்கும் வீரர் உலக சாம்பியன் ஆவார். 12-12 எனப் போட்டி டை ஆனால், ஏற்கெனவே உலக சாம்பியனாக இருக்கும் ஸ்பாஸ்க்கியே சாம்பியனாகத் தொடர்வார்.
நிக்சன் Vs ப்ரெஸ்னேவ், அமெரிக்கா Vs சோவியத் யூனியன் பனிப்போர் இந்த முறை 64 கட்டங்களுக்குள்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த போட்டி தொடங்கிய பிறகும் பாபி ஃபிஸ்சரின் அலட்டல் குறையவில்லை. முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து கொண்டிருந்த சமயத்தில், கறுப்புக் காய்களோடு ஆடிக்கொண்டிருந்த ஃபிஸ்சர் நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்த தொலைக்காட்சி கேமராக்களும் பார்வையாளர்களும் தன்னுடைய கவனத்தைச் சிதறச் செய்வதாக பிரச்னையைக் கிளப்பினார். இந்த கலாட்டாவில் முதல் சுற்றை ஸ்பாஸ்க்கி எளிதில் வென்றார்.
ஒட்டுமொத்த அமெரிக்காவும் நம்மை நம்பிக் காத்திருக்கிறதே எனும் கவலை ஃபிஸ்சருக்குத் துளியும் இல்லை. வேறு சதுரங்கப் பலகை, புதிய தொந்தரவுகளற்ற போட்டி அறை, சத்தம் எழுப்பாத நேரடி ஒளிபரப்பு கேமராக்கள் இவையெல்லாம் இருந்தால்தான் போட்டியில் பங்கேற்பேன் எனக் கூறி இரண்டாம் சுற்றைப் புறக்கணித்தார். இதனால் ஸ்பாஸ்க்கி இரண்டாம் சுற்றையும் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
ஃபிஸ்சர் பிடிவாதமாக இருக்க, ஸ்பாஸ்க்கி இறங்கி வந்தார். ஃபிஸ்சரின் நிபந்தனைகளுக்கு நானும் ஒப்புக்கொள்கிறேன் என ஸ்பாஸ்க்கி பெரிய மனுஷனாக நடந்துகொண்டார். ஒருவழியாக ஃபிஸ்சர் மூன்றாவது சுற்றுக்கு வந்தார். இரண்டு சுற்றுகளின் வெற்றியோடு முன்னிலையில் ஸ்பாஸ்க்கி இருக்க மூன்றாவது சுற்று தொடங்கியது. ஃபிஸ்சரின் ஓப்பனிங் மூவ்களே ஸ்பாஸ்க்கியைத் திணறடித்தன. தொடக்கத் தடுமாற்றத்திலிருந்து மீளாத ஸ்பாஸ்க்கி மூன்றாவது சுற்றை இழந்தார். நான்காவது சுற்று டிரா ஆனது. ஐந்தாவது சுற்றையும் ஃபிஸ்சரே வென்றார்.
இருவரும் 2.5 புள்ளிகளோடு சமநிலைக்கு வந்தனர். ஆறாவது போட்டி தொடங்கியது. நூற்றாண்டின் மிகச்சிறந்த ஆட்டமாகக் கூறப்பட்ட இந்த ஆட்டத்தின் மிகச்சிறந்த கேமாக இந்த ஆறாவது கேமே கருதப்படுகிறது. இங்கேயும் ஃபிஸ்சரின் தொடக்க மூவ்களே திணறடிக்க ஸ்பாஸ்க்கி இந்தச் சுற்றையும் இழந்தார். 21-வது சுற்று வரை நீண்ட இந்த சாம்ம்பியன்ஷிப் போட்டியில் முதல் நபராக 12.5 புள்ளிகளை எடுத்து ஃபிஸ்சர் வெற்றியைப் பெற்றார். புதிய உலக சாம்பியன் ஆனார்.
மிக்கேல் புட்வினிக், ஸ்மிஸ்லோவ், பெட்ரோசியன், ஸ்பாஸ்க்கி என ரஷ்யப் பெயர்களாலேயே நிரம்பியிருந்த உலக செஸ் சாம்பியன்களின் பட்டியலில் முதல் முறையாக ஓர்அமெரிக்கரின் பெயர் இணைந்தது. சதுரங்கப் போரில் சோவியத் யூனியனின் வல்லாதிக்கத்தை முறித்து பாபி ஃபிஸ்சர் அமெரிக்காவின் ஹீரோவானார்.
இவரின் வாழ்வை, இவரின் குணாதிசயத்தை, இவரின் ஆட்ட நுணுக்கங்களை மையப்படுத்திப் பல புத்தகங்களும் சினிமாக்களும் சீரிஸ்களும் வெளியாகியிருக்கின்றன. சமீபத்தில் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்ற Queen's Gambit இணையத்தொடரின் மையக் கதாபாத்திரத்திலும் இவருடைய தாக்கம் உண்டு.