கிரிக்கெட்டிற்கு எப்படி உலகக்கோப்பையோ, அதுபோல் செஸ் விளையாட்டின் மிக முக்கிய தொடர் ஒலிம்பியாட். 1924-ம் ஆண்டு லண்டனில் முதல்முறை நடத்தப்பட்ட இத்தொடர் பின்பு ஒவ்வொரு முறை ஒவ்வொரு நாட்டில் நடப்பது வழக்கம். தற்போது இத்தொடர் முதல் முறையாக இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் நடக்க இருக்கிறது.
மாஸ்கோவில் நடக்கவிருந்த இவ்வருடத்திற்கான செஸ் ஒலிம்பியாட், ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக மாஸ்கோவில் நடத்த இயலாது என்ற அறிவிப்பை வெளியிட்டது உலக செஸ் கூட்டமைப்பு (FIDE). சுமார் 2000 பேர் வரை பங்குபெறும் இத்தொடர் எந்த நாட்டில் நடைபெறும் என 4 ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைனில் நடைபெற்ற இத்தொடரை கடைசி நேரத்தில் இடம் மாற்றவேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வெறும் ஐந்து மாத காலத்திற்குள் செய்வது கடினம் என்பதே அனைவரின் கனிப்பாகவும் இருந்தது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதற்கிடையில் இந்த செஸ் தொடரை இந்தியாவில் நடத்த ஒரு சிறிய வாய்ப்பு இருப்பதை உணர்ந்தார் அனைத்து இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளர் பரத்சிங் சவுஹன். உடனே உலக செஸ் கூட்டமைப்பிடம் (FIDE) ஏலத்தில் பங்குபெற விருப்பத்தை பிப்ரவரி 25ம் தேதி தெரிவித்தார். ஆனால் ஏலத்தில் பங்குபெறும்போதே தொடரை நடத்துவதற்கான பணமும் அதற்கான கட்டமைப்பு வசதிகளையும் காட்டவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இத்தொடரை நடத்தும் முனைப்பில் டெல்லி, குஜராத், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் களமிறங்க கடைசியில் இவ்வாய்ப்பு தமிழ்நாட்டிற்குக் கிட்டியது. இரண்டே நாட்களில் பரத்சிங் தனக்கிருந்த தொடர்புகள் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்க அதற்காக 10 மில்லியன் டாலர்கள் (75 கோடி) பணத்திற்கும் உறுதியளித்து அரசாணையை வெளியிட்டார் முதல்வர். இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஹோட்டல்களில் சுமார் 1200 அறைகள் ஏலத்திற்கு முன்பாகவே பிளாக் செய்யப்பட்டு இதற்கான வேலைகளைத் தொடங்கியது தமிழக அரசு. அடுத்த பத்து நாட்களில் வேறு எந்த நாடும் செஸ் ஒலிம்பியாடை நடத்த இந்த அளவுக்கு விருப்பம் காட்டாததால் செஸ் ஒலிம்பியாட் ஏலத்தை இந்தியா வென்றதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. வெறும் 20 நாளில் இவ்வளவு பெரிய விஷயத்தை தமிழக அரசின் உதவியுடன் நடத்திக் காட்டினார் பரத் சிங்.
செஸ் ஒலிம்பியாட் இங்குதான் நடைபெறப் போகிறது என்று முடிவான நிலையில் பரத் சிங் சில IAS அதிகாரிகளுடன் சென்று ஒரே நாளில் 23 ஹோட்டல்களில் 2000 ரூம்களை பதிவு செய்தனர். ஆனால் உலக செஸ் கூட்டமைப்போ (FIDE) இத்தொடரை தலைநகர் டெல்லியில் நடத்தாமல் சென்னையில் நடத்துவது ஏன் எனக் கேட்டது. பின்னர் இங்கிருந்த ஹோட்டல் அறைகள் முதல் போட்டி நடக்க போகும் இடம் வரை எல்லாவற்றையும் வீடியோ எடுத்து அனுப்பியதும்தான் FIDE-விற்கு நம்பிக்கை ஏற்பட்டது.

செஸ் ஒலிம்பியாடை நடத்தும் நாட்டிற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இத்தொடரில் பங்கேற்கும் நாடுகள் தங்களின் அணியில் அதிகபட்சமாக ஐந்து வீரர்களை அனுப்பலாம். ஆனால் தொடரை நடத்தும் நாடு மட்டும் இரண்டு அணிகளாக அதாவது 10 பேரை பங்குபெறச் செய்யலாம். மேலும் மொத்தமாக பங்குபெறும் நாடுகளின் எண்ணிக்கை ஒற்றைப்படை எண்ணில் இருந்தால் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொள்ள ஒரு அணி குறையும். அதனால் மூன்றாவது அணியாக மொத்தம் 15 பேர் பங்குபெறலாம். இந்த முறை எப்போதும் இல்லாத அளவுக்கு 187 நாடுகள் பதிவு செய்துள்ள நிலையில், இந்தியாவிற்கு மூன்றாவது அணி வாய்ப்பும் கிடைத்துள்ளது.
ஓபன் பிரிவில் இந்தியாவின் மூன்று அணிகள்:
அணி 1:
விடிட் குஜ்ராட்டி, ஹரிகிரிஷ்ணா, அர்ஜுன் எரிகைசி, S.L. நாராயணன், K. சசிகிரண்.
அணி 2:
நிஹால் சரின், D. குகேஷ், B. ஆதிபன், R. ப்ரகானந்தா, ராணக் சத்வானி.
அணி 3:
சூர்ய சேகர் கங்குலி, கார்த்திகேயன் முரளி, SP சேதுராமன், அபிஜீத் குப்தா, அபிமன்யூ புராணிக்.
பெண்கள் பிரிவில் பங்கேற்க போகும் இரண்டு அணிகள்:
அணி 1:
K ஹம்பி, D ஹரிக்கா, R வைஷாலி, தானியா சச்தேவ், பக்தி குல்கர்னி
அணி 2:
வந்திக்கா அகர்வால், சௌம்யா ஸ்வாமிநாதன், மேரி அன் கோம்ஸ், பத்மினி ரௌட், திவ்யா தேஷ்முக்
செஸ் ஒலிம்பியாட் நடத்துவது தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமையாக இருப்பது ஒரு பக்கம் இருந்தாலும் செஸ் வீரர்களுக்கு இது மனதுக்கு நெருக்கமான விஷயம். மேலும் இந்தியாவின் செஸ் தலைநகரம் தமிழ்நாடுதான் என்பது நம்மில் பலருக்கும் தெரியாத விஷயம்.
காரணம் இந்தியாவின் மொத்த கிராண்ட் மாஸ்டர்களான 73 பேரில் 25 கிராண்ட் மாஸ்டர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அதாவது சுமார் 35% வீரர்கள்!
இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாத் ஆனந்த் சென்னையை சேர்ந்தவர். வடஇந்தியாவில் ஒரு கிராண்ட் மாஸ்டர்கூட இல்லாத பல மாநிலங்கள் இன்றும் உண்டு. ஆனால் தென்னிந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் குறைந்தது மூன்று கிராண்ட் மாஸ்டர்கள் இருக்கிறார்கள். செஸ் உருவானது வடஇந்தியாவில் என்று சொல்லப்பட்டாலும் இந்தியாவில் செஸ் சிறப்பாக விளங்கிவருவது தமிழகத்திலும் தென் மாநிலங்கிலும்தான். அந்த வரிசையில் தமிழகத்தில் இப்போது நடக்கவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் இவ்வளவு சிறப்புகளுக்குக் கிடைக்கும் ஒரு மற்றுமொரு அடையாளம். இந்த அடையாளம் நாளை பல பேருக்குச் செஸ் விளையாட ஊக்குவிக்கும் ஒரு விஷயமாக நிச்சயமாக இருக்கும்!