கடந்த ஞாயிற்றுக்கிழமை ருமேனியாவில் நடந்த செஸ் போட்டியில் வெற்றி பெற்று கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றிருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பிரணவ் வெங்கடேஷ். இதன் மூலம் கிராண்ட் மாஸ்டர்களான விஸ்வநாத் ஆனந்த், பிரக்ஞானந்தா, டி குகேஷ் ஆகியோர் வரிசையில் இணைந்துள்ளார் பிரணவ்.
சென்னை வேலம்மாள் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் பிரணவ், இளம் வயதிலிருந்தே பல்வேறு செஸ் தொடர்களில் பங்கேற்று பதக்கங்கள் பல வென்றிருக்கிறார். மேலும் மாநில அளவிலான செஸ் போட்டியில் மூன்று சாம்பியன்ஷிப் பட்டமும், 2021-ம் ஆண்டில் உலக அளவிலான அதிவேக செஸ் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்.

2021-ம் ஆண்டு நடைபெற்ற முதல் சுற்றான செர்பியா ஓப்பனில் வெற்றி பெற்று ஹங்கேரியின் பூடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற இரண்டாம் சுற்றுக்கு தேர்வாகினார் பிரணவ். இறுதியாக ரோமானியாவில் நடந்த இறுதி ஆட்டத்தில் 9 சுற்றுகளில் 7 புள்ளிகள் பெற்று கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை தட்டிச் சென்று அலங்கரித்திருக்கிறார். இது குறித்து கூறும் பிரணவ் "இந்த வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இது என்னை மேலும் முன்னேற ஒரு ஊன்றுகோலாய் அமையும்" என்றார்.
இது குறித்து பிரணவின் பயிற்சியாளர் விஸ்வேஸ்வரன் பேசுகையில் " பிரணவ் எப்போதும் வேகமாக விளையாடக்கூடியவர். அதே நேரத்தில் பக்குவமாகவும் பார்த்து விளையாடக்கூடிய திறனும் அவருக்கு இருக்கிறது. இப்போது தான் பத்தாம் வகுப்பு முடித்துள்ளார். அவர் திறமைக்கு இனி வரும் காலங்களில் மேலும் பல உலக சாதனைகளை நிகழ்த்துவார் " என்றார். இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் 75வது கிராண்ட் மாஸ்டராகவும் தமிழகத்தின் 27வது கிராண்ட் மாஸ்டராகவும் பிரணவ் தன் கால்தடத்தை பதித்துள்ளார்.
பிரணவுக்கு ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த விஸ்வநாத் ஆனந்த் " எங்கள் அணியில் இடம்பெறும் புதிய இளம் வீரரான பிரணவ் வெங்கடேஷுக்கு வாழ்த்துகள். இந்திய நாடு தன் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், இந்தியாவிற்கு 75வது கிராண்ட் மாஸ்டர் கிடைத்திருப்பது மிகவும் பெருமையான விஷயம்" என்றார்.