அமெரிக்காவைச் சேர்ந்த இளம் செஸ் வீரரான ஹான்ஸ் நீமன் போட்டிகளை ஏமாற்றி வெல்வதாக உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சென் கூறியிருக்கும் புகார்தான் இப்போது செஸ் உலகின் பரபரப்பான பேசுபொருள். செஸ் ஆட்டம் அதனுள் பல நுணுக்கங்களை கொண்ட ஆட்டமாக இருந்தாலும் ஏமாற்றுவதற்கான வெளி அதில் இருக்கிறதா என்பது பலருடைய கேள்வியாகவும் இருக்கும்.
எதிராளிகள் இருவரும் நேருக்கு நேராக அமர்ந்து மோதுகையில் எப்படி ஏமாற்று வேலைகளில் ஈடுபட முடியும் என்கிற கேள்வி வரும். ஆனால், இங்கே அதற்கும் சாத்தியம் இருக்கவே செய்கிறது. கார்ல்சன் புகார் கூறிருப்பதை போலவே வேறு சில ஜாம்பவான் வீரர்களும் இதே போன்ற புகார்களை கூறியிருக்கின்றனர். அவற்றைப் பற்றி இங்கே..

Bobby Fischer Vs Boris Spassky - Match Of the Century
1972 இல் பாபி ஃபிஸ்சருக்கும் போரிஸ் ஸ்பார்ஸ்கிக்கும் இடையில் நடந்த அந்தப் போட்டி... இல்லை அது ஒரு யுத்தம். பனிப்போரை 64 கட்டங்களுக்குள் அடக்கிய போட்டி அது. அந்தப் போட்டியை பாபி ஃபிஸ்சர் வென்று செஸ் உலகில் ரஷ்யாவின் தொடர் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.
'Match Of the Century' என்றழைக்கப்பட்ட இந்தப் போட்டியில் தன்னைத் தோற்கடிக்க எதிர்தரப்பு குறுக்கு வழிகளைப் பின்பற்றுவதாக பாபி ஃபிஸ்சர் புகார் கூறிக்கொண்டே இருந்தார். செஸ் போர்டு வைக்கப்பட்டிருந்த மேசை, அமர்ந்திருந்த நாற்காலி, சுற்றியிருந்த மின் விசிறி என அத்தனையின் மீதும் பாபி ஃபிஸ்சர் சந்தேகப்பட்டார். எதோ ஒரு அதிர்வு தன்னை தொந்தரவு செய்வதற்காகவே செயற்கையாக உருவாக்கப்படுவதாக எண்ணினார். ஃபிஸ்சரின் புகாரைத் தொடர்ந்து சோதனையிட்டதில் மின்விசிறியின் உட்பக்கத்தில் ஈக்கள் இருந்ததால் ஏற்பட்ட வித்தியாசமான சத்தமே ஃபிஸ்சரை தொந்தரவு செய்தது எனத் தெரியவந்தது.
அந்தப் போட்டியை ஆடி முடிப்பதற்குள் இதேபோன்று எக்கச்சக்கமான புகார்களை பாபி ஃபிஸ்சர் கூறிக்கொண்டே இருப்பார். பாபி ஃபிஸ்சரின் கூற்றுப்படி தன்னைத் தொந்தரவு செய்து குறுக்கு வழியில் தோற்கடிக்க முயன்ற போதும் அவர் வென்றுவிட்டார். 'Bobby Fischer Vs Boris Spassky' இந்தப் போட்டியை மையமாக வைத்தே பல திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.
Edward Zwick இயக்கத்தில் வெளியான `Pawn Sacrifice' போன்ற படங்களை காணும் வாய்ப்பு கிடைத்தால் அந்தப் போட்டியை பற்றியும் பாபி ஃபிஸ்சரின் புகார்களைப் பற்றியும் விரிவாக தெரிந்துகொள்ள முடியும்.
குளிர்பானமும் ஹிப்னாட்டிஸமும்!
1978 உலக சாம்பியன்ஷிப் சேலஞ்சர் போட்டியில் சோவியத்தை சேர்ந்த ஜாம்பவான்களான அனதோலி கார்போவ்வும் விக்டர் கோர்ச்னோயும் மோதியிருந்தனர். இந்தப் போட்டியில் அனதோலி கார்போவ் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டதாக விக்டர் புகார் கூறியிருந்தார். அதாவது, அனதோலி கார்போவ் குறிப்பிட்ட இடைவெளியில் விதவிதமான நிறங்களில் குளிர்பானத்தை அருந்துகிறார். அந்தக் குளிர்பானங்களின் நிறத்தை வைத்து வெளியிலிருந்து அடுத்து என்ன மூவ் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்கிறார்.
மேலும், ஹிப்னாட்டிஸம் செய்பவர்களை பார்வையாளர்களுடன் அமர வைத்து சதி வேலைகளில் ஈடுபாடுகிறார் எனவும் கார்போவ் மீது விக்டர் புகார் கூறினார். ஹிப்னாட்டிஸம் செய்பவரை பார்த்து கவனச்சிதறல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக விக்டர் அடர் கறுப்பு நிற கண்ணாடியை அணிந்து கொண்டு போட்டியை ஆடியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

கழிவறையில் பெற்ற டிப்ஸும் செஸ் இன்ஜின்களும்!
போட்டியின் நடுநடுவே அடிக்கடி கழிவறைக்குச் சென்று அங்கே ஒளித்து வைத்திருக்கும் தொலைபேசி மூலம் தகவல்களைப் பெற்று ஏமாற்று வேலைகளில் ஈடுபட்ட சம்பவமும் அரங்கேறியிருக்கிறது. 2015-ல் ஜார்ஜியாவைச் சேர்ந்த ஒரு வீரர் இந்த முறையில் ஏமாற்று வேலையில் ஈடுபட்டதால் FIDE அமைப்பால் தடை செய்யப்பட்டிருக்கிறார். 'விவேகம்' படத்தில் காண்பித்திருப்பார்களே 'மோர்ஸ் கோட்' அந்த யுக்தியும் செஸ்ஸில் ஏமாற்று வேலைகளுக்குப் பயன்பட்டிருக்கிறது.
கணினி அறிமுகமாகி வளர்ச்சியடைந்து ஆன்லைன் போட்டிகள் பெருகத் தொடங்கிய சமயத்தில் ஏமாற்று வேலைகள் இன்னும் அதிகமாகின. இணையதளங்களில் சுலபமாக கிடைக்கும் 'Stock Fish', 'Leela Chess Zero', 'Komodo Chess' போன்ற செஸ் இன்ஜின்கள் மூலம் நொடிப்பொழுதில் எதிராளியின் நகர்வுக்குப் பதில் நகர்வை அறிந்து கொண்டு செயல்படும் தில்லாலங்கடி வேலைகளும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. கார்ல்சன் புகார் கூறியிருக்கும் நீமன் கூட தான் சிறு வயதில் ஆன்லைன் போட்டிகளில் செஸ் இன்ஜின்களைப் பயன்படுத்தி ஏமாற்றி வென்றிருப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
'வசூல் ராஜா' பாணியில் ப்ளூடூத்
இந்தியாவிலுமே 2006-ல் உமாகாந்த் சர்மா என்பவர் செஸ் போட்டிகளில் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டது தெரிய வந்தது. குறுகிய காலத்தில் அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் ரேட்டிங்கில் ராக்கெட் வேகத்தில் முன்னேறியதால் சந்தேகப்பட்டு சோதித்ததில், `வசூல் ராஜா' பாணியில் ப்ளூடூத் உதவியுடன் வெளியிலிருந்து உதவியைப் பெற்று வென்றது தெரிய வந்திருக்கிறது. இதன்பிறகு, செஸ் போட்டிகளில் ஆட அவருக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது.
விஸ்வநாதன் ஆனந்த் சந்தித்த மோசடி
கொரோனா காலத்தில் ஒரு தொண்டு நிறுவனத்திற்காக நிதி திரட்ட விஸ்வநாதன் ஆனந்த் ஆன்லைனில் ஆடிய போட்டி ஒன்றில் நிகில் கமத் என்பவர் விஸ்வநாதன் ஆனந்த்தைத் தோற்கடித்தார். இது ஆச்சர்யமான விஷயமாகப் பார்க்கப்பட்டது. கடைசியில் நிகில் வெளியிலிருந்து உதவிகளை பெற்றுதான் வென்றேன் எனத் தாமாக முன் வந்து ஒப்புக்கொண்டார். "எனக்கு முன்பிருக்கும் போர்டில் செய்யப்பட்ட நகர்வுகளுக்கு மட்டுமே நான் ஆடினேன். அதையேத்தான் எல்லாரிடமும் எதிர்பார்க்கிறேன்" என விஸ்வநாதன் ஆனந்த் தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்தார்.

நீமன், கார்ல்சனை எப்படி ஏமாற்றினார்?
நேரடியாக ஆடும் 'Over the board' போட்டிகளில் போட்டி நடைபெறும் அரங்குக்குள்ளேயே வீரர்கள் பலகட்ட சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். எந்தவிதமான மின்சாதன கருவிகளையும் வீரர்கள் பயன்படுத்த முடியாது. ஆனால், இதைத் தாண்டியும் ஏமாற்று வேலைகளில் சிலர் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. செக்ஸ் டாய் அல்லது லேசர் கருவி ஆகியவற்றை வைத்து அவற்றின் அதிர்வு மூலம் ஹான்ஸ் நீமன் ஏமாற்று வேலையில் ஈடுபட்டிருக்கலாம் என ஏகப்பட்ட கான்ஸ்பிரசி தியரிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. நீமனுக்கு எதிராக எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. கார்ல்சனுமே கூட வெறுமென புகார்தான் கூறியிருக்கிறாரே தவிர ஆதாரமாக எதையும் குறிப்பிடவில்லை. கார்ல்சன் மற்றும் நீமன் இருவரும் ஆடிய தொடர் உலக செஸ் கூட்டமைப்பால் (FIDE) நடத்தப்பட்ட தொடர் அல்ல. ஆனாலும், இது குறித்து விசாரிப்போம் என FIDE கூறியிருக்கிறது.
உண்மை வெல்லட்டும்!