மேக்னஸ் கார்ல்சனின் அறிக்கையால் செஸ் உலகமே பரபரப்பாகியிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயதேயான ஹான்ஸ் நீமன் எனும் வீரர் போட்டிகளில் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வெல்வதால் அவருக்கு எதிராக இனி செஸ் ஆடவே மாட்டேன் என ஆவேசமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன். கார்ல்சனின் கடுமையான அறிக்கையின் பின்னணி என்ன? செஸ் உலகில் என்னதான் நடக்கிறது?
அமெரிக்காவை ச்சேர்ந்த 19 வயதேயான இளம் செஸ் வீரர் ஹான்ஸ் நீமன். வெகு சீக்கிரமாகவே குறுகிய காலத்திலேயே வெற்றிகளைக் குவித்து தரவரிசையில் எங்கோ ஒரு மூலையிலிருந்து இப்போது டாப் 50க்குள் நுழைந்துவிட்டார். க்ளாஸிக் போட்டிகளில் 2688 ரேட்டிங் வைத்திருக்கிறார். இந்த மாதத் தொடக்கத்தில் 'Sinquefield Cup' எனும் தொடரில் இந்த நீமனும் மேக்னஸ் கார்லசனும் ஒரு போட்டியில் மோதியிருந்தனர். இது ஆன்லைன் தொடர் அல்ல. நேருக்கு நேர் அமர்ந்து ஆடும் 'over the board' தொடர். இதில் கறுப்பு காய்களுடன் நீமன் கார்ல்சனை எதிர்த்து களமிறங்கியிருந்தார். யாரும் எதிர்பார்த்திடாத வகையில் இந்தப் போட்டியை நீமன் மிகச்சிறப்பாக ஆடி வென்றார். இதுவரை எந்த பிரச்னையுமே இல்லை. இதன்பிறகுதான் கார்ல்சன் களேபரத்தைத் தொடங்கினார். நீமனுக்கு எதிரான போட்டியோடு 'Sinquefield Cup' தொடரிலிருந்து விலகுவதாக கார்ல்சன் அறிவித்தார்.

இந்த விலகலுக்கான காரணத்தை வெளிப்படையாக கூறாவிட்டாலும் ஏமாற்று வேலைகளை செய்து நீமன் வென்றதாக கார்ல்சன் சந்தேகிப்பதாலேயே தொடரிலிருந்து விலகினார் எனும் செய்தி வெளியாகியது.
கார்ல்சனின் அடுத்தடுத்த பேட்டிகளும் நடவடிக்கைகளும் இதையே உறுதி செய்தன. கடந்த வாரத்தில் 'Julius Baer Generation Cup' எனும் ஆன்லைன் தொடரின் ஒரு சுற்றில் கார்ல்சன் மீண்டும் நீமனுடன் மோத வேண்டியிருந்தது. கார்ல்சன் போட்டிக்கு வந்தார். நீமன் முதலில் காயை நகர்த்த கார்ல்சனும் தனது முதல் நகர்வை செய்தார். நீமன் இரண்டாவது நகர்த்தலை முடிக்க, பதிலுக்கு எந்த மூவும் செய்யாமல் அப்படியே போட்டியிலிருந்து கார்ல்சன் வெளியேறிவிட்டார். நீமனுக்கு எதிராக தன்னுடைய எதிர்ப்பை காட்டவே கார்ல்சன் இப்படிச் செய்ததாகக் கூறப்பட்டது. கார்ல்சனின் இந்தச் செயல் செஸ் உலகில் பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் கிளப்பியிருக்கிறது.
இந்நிலையில் கார்ல்சன் ஒரு நீண்ட விளக்க அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையின்படி நீமன் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார் என கார்ல்சன் உறுதியாக நம்புகிறார் எனத் தெரிகிறது.
ஏமாற்றுத்தனங்களில் ஈடுபட்டு வெல்வது இந்த செஸ் ஆட்டத்திற்கே ஊறு விளைவிக்கக்கூடியது. 'Over the board' செஸ் போட்டிகளில் இன்னும் அதிக பாதுகாப்பையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உறுதி செய்ய வேண்டும். 'Over the board' ஆட்டங்களில் நீமனின் வளர்ச்சி இயல்பானதாக இல்லை. நீமன் சமீபகாலமாக அதிகமாகவே ஏமாற்றியிருக்கிறார். இப்படியான ஏமாற்றுக்காரர்களுடன் விளையாட எனக்கு விருப்பமில்லை.மேக்னஸ் கார்ல்சன்

என அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார்
நீமன் இதற்கு முன்பே சில வலைதளங்கள் நடத்திய போட்டிகளில் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டதாக அவரே ஒத்துக்கொண்டிருக்கிறார். அதேநேரத்தில், "சமீபத்தில் அதுவும் கார்ல்சனுக்கு எதிரான Over the board போட்டியில் நேர்மையாகவே ஆடியிருந்தேன். வேண்டுமானால், நிர்வாணமாக அமர்ந்து கூட போட்டிகளில் ஆடி என்னுடைய திறனை நிரூபிக்க தயாராக இருக்கிறேன்" என நீமன் கூறியிருக்கிறார்.
19 வயது இளைஞருக்கு எதிராக ஆதாரமே இல்லாமல் அபாண்டமாகக் குற்றம்சாட்டுகிறார் என கார்ல்சனுக்கு எதிராகவும், செஸ் போட்டிகளில் இந்த மாதிரியான ஏமாற்று வேலைகளையும் ஏமாற்றுக்காரர்களையும் ஒழிக்க வேண்டுமென கார்ல்சனுக்கு ஆதரவாகவும் இருதரப்பிலிருந்து விவாதங்கள் அனல் பறந்து கொண்டிருக்கின்றன.
ஏமாற்றுபவர் யார்? ஏமாளி யார்?