
சக வீரர்கள் விளையாடுவதை மற்றவர்கள் பார்ப்பது வழக்கம். அப்படித்தான் அவர் பார்த்தார். ஆனால், அந்தப் போட்டோவை வைரல் ஆக்கிவிட்டார்கள்
டெல்லியில் நடைபெற்ற ஆசிய கான்டினென்டல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருக்கிறார் பிரக்ஞானந்தா. இதன்மூலம் அடுத்த ஃபிடே உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ள அவரிடம் பேசினேன்.
‘‘மூணு வயசிலிருந்து விளையாடிட்டு வர்றேன். சின்ன வயசுல எல்லோரும் டாக்டர் ஆகணும், சயின்டிஸ்ட் ஆகணும்னு சொல்வாங்க. நான் செஸ்ஸைத் தாண்டி எதையும் யோசிச்சது கிடையாது. பல போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்குப் போயிருக்கேன். ஆனா, எங்கப்பா நான் விளையாடின ஒரு போட்டியைக்கூட நேரில் பார்த்தது கிடையாது. உடல்நலமில்லாத அவரால், சரியாக நடக்கக்கூட முடியாது. நான் ஜெயித்துவிட்டு போன் செய்து சொல்வேன். அதைக் கேட்டு அவ்வளவு சந்தோஷப்படுவார். சமீபத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் அப்பா நேரில் வந்து என் ஆட்டத்தைப் பார்த்தது எல்லையில்லா மகிழ்ச்சி. எங்கம்மா இல்லைன்னா நானும் அக்காவும் இந்த அளவுக்கு வந்திருக்கவே முடியாது. அப்பாவால எங்கேயுமே வரமுடியாது. எங்க வீடு சென்னை பாடியில இருக்கு. என்னோட கோச்சிங் சென்டர் தி.நகரில் இருக்கு. தினமும் ஷேர் ஆட்டோ, பஸ்ஸில் கூட்டிக்கிட்டு வந்து விடுறது அம்மாதான். வீட்டையும் பார்த்துக்கணும் எங்களையும் பார்த்துக்கணும். அவங்களுக்கு ரெண்டு வேலை. 2019-ம் ஆண்டு லண்டன்ல நடந்த போட்டிக்கு வரும்போது அவங்களுக்கு இடுப்பு வலி வந்துடுச்சு. வலியைப் பொருட்படுத்தாம எனக்காக வந்தாங்க. என்னோட அஞ்சு வயசிலேர்ந்து எல்லாத்துக்கும் அம்மா கூட வர்றாங்க’’ - நெகிழ்ச்சியாகவும் நிதானத்துடனும் பேசத் தொடங்குகிறார் பிரக்ஞானந்தா.

‘‘உங்க அக்காகிட்டே இருந்துதான் செஸ் கத்துக்கிட்டீங்க. இருவரும் செஸ் விளையாடுவது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது. படிப்பையும் விளையாட்டையும் எவ்வாறு பேலன்ஸ் பண்ணுகிறீர்கள்?”
‘‘அக்கா வைஷாலி ஆக்ரோஷமா விளையாடுறது ரொம்பப் பிடிக்கும். நிறைய சொல்லிக் கொடுப்பாங்க. சின்ன வயசிலிருந்தே செஸ் விளையாடுவது, போட்டிகளுக்குச் செல்வது என அதிக நேரத்தைச் செலவிட்டதால், படிப்பில் சரியா கவனம் செலுத்த முடியல. ஆனாலும், என்னோட வேலம்மாள் பள்ளி நிர்வாகம் போட்டிகளுக்குச் செல்ல முழு அனுமதி கொடுத்து ஊக்கப்படுத்துகிறது. எக்ஸாம் நடப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, என் ஆசிரியர்கள் சிறப்புக் கவனம் எடுத்து பாடங்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். ஹோம் டியூஷனிலும் படிக்கிறேன். எனக்கு பாஸ் பண்ணினா போதும். பெரிசா எதிர்பார்ப்பு இல்ல.”
‘‘செஸ் ஒலிம்பியாட்டின்போது நீங்கள் விளையாடுவதை கார்ல்சன் நின்று பார்த்த புகைப்படம் வைரலானதே?”
‘‘சக வீரர்கள் விளையாடுவதை மற்றவர்கள் பார்ப்பது வழக்கம். அப்படித்தான் அவர் பார்த்தார். ஆனால், அந்தப் போட்டோவை வைரல் ஆக்கிவிட்டார்கள். கார்ல்சன் உலகமே பார்க்கிற ஒரு பெரிய வீரர். அவருடன் விளையாடும்போது முதல் தடவை வித்தியாசமா இருந்தது. அடுத்தடுத்த தடவை பயமில்ல. அவரிடம் தோற்றாலும் எனக்குப் பெரிய தோல்வி இல்ல. ஆனா, ஜெயிச்சது பெரிய வெற்றி. அவர், ஜெயிக்கிறதுக்காகக் கடைசி நொடிவரைக்கும் நம்பிக்கையோடு போராடுவார். அவரிடம் அந்த விஷயம் ரொம்பப் பிடிக்கும்.”
‘‘மறக்கமுடியாத பாராட்டு எது?”
‘‘2016-ம் ஆண்டு வேர்ல்டு யூத் போட்டியில் ஜெயிச்சப்ப, விஸ்வநாதன் ஆனந்த் சார் என்னை வீட்டிற்கு அழைத்துப் பாராட்டினார். அவரது அகாடமியிலும் நான் இருக்கேன். செஸ் சம்பந்தமான எந்தச் சந்தேகம் என்றாலும் அவரிடம் கேட்டுத் தெரிஞ்சுக்குவேன். எப்போ மெசேஜ் போட்டாலும், உடனே ரிப்ளை பண்ணுவாரு. அதேமாதிரி, கிரிக்கெட்டில் இந்தியாவே வியக்கக்கூடிய ஹீரோ சச்சின். அவர் என்னைப் பாராட்டி ட்வீட் போட்டிருந்தார். ஒரு கிரிக்கெட் வீரர், செஸ் விளையாடுற என்னை கவனித்துப் பாராட்டியது மறக்கமுடியாதது.”
‘‘கிரிக்கெட் அளவுக்கு செஸ் விளையாட்டிற்கு ரசிகர்கள் இல்லை என்கிற வருத்தம் இருக்கிறதா?”
‘‘இப்போ அந்த நிலை மாறியிருக்கு. கொரோனா லாக்டௌன்ல பலரும் வீட்டுக்குள்ள இருந்த போது செஸ் தான் விளையாடிக்கிட்டிருந்தாங்க. நிறைய பேர் செஸ் பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. குறிப்பா, செஸ் ஒலிம்பியாட் மூலம் உலக மக்களின் பார்வை குவிஞ்சிருக்கு. செஸ்ஸுக்கு அற்புதமான எதிர்காலம் இருக்கு.”
‘‘வளரும் செஸ் வீரர்களுக்கு உங்களது ஆலோசனை?”
‘‘செஸ்ஸை ஒரு போட்டியா நினைச்சு விளையாடாம ரசிச்சு விளையாடணும். அப்படிச் செய்தால் பதற்றமும் டென்ஷனும் இருக்காது. பயிற்சிகளுக்கு நிறைய முயற்சியைக் கொடுக்கணும். நிறையப் போட்டிகளில் கலந்துக்கிட்டே இருக்கணும். அப்போதான், பத்து வருடத்திலாவது கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற முடியும்.”

‘‘வெளியூர்கள், வெளிநாடுகளுக்குச் செல்வது எனப் போட்டிகளுக்கான செலவுகளை எப்படிச் சமாளிக்கிறீங்க?”
‘‘வேலம்மாள் ஸ்கூலில் எனக்கும் எங்க அக்காவுக்கும் ஃபீஸ் வாங்காம கல்வி கொடுத்து ஊக்கப்படுத்துறாங்க. ராம்கோ நிறுவனம்தான் எங்களுக்கு ஸ்பான்சரா இருந்து, எல்லாச் செலவுகளையும் பார்த்துக்கிறாங்க. இந்த நேரத்துல அந்த நிறுவனத்துக்கு மிகப்பெரிய நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன். தமிழ்நாடு அரசும் சப்போர்ட்டிவ்வா இருக்கு.”
‘‘செஸ் விளையாட்டில் கவனம் செலுத்துவதால், குழந்தைப் பருவத்துக்கான மகிழ்ச்சிகளை இழந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?”
‘‘எப்போவாவது கொஞ்சமா அப்படி நினைக்கத்தோணும். ஆனா, செஸ் மட்டுமே என் உலகம். அது, விளையாடுறதுதான் சந்தோஷம் தருது. நேரம் கிடைக்கும்போது எனக்கான விஷயங்களைச் செய்துகிட்டுதான் இருக்கேன். டேபிள் டென்னிஸ், கிரிக்கெட் விளையாடுவேன். சமீபத்தில்கூட ‘பொன்னியின் செல்வன்’ படம் பார்த்தேன். பிடிச்சிருந்தது.”
‘‘உங்களுடைய லட்சியம்?”
‘‘உலகச் சாம்பியன் ஆகணும், தரவரிசையில் முன்னாடி வரணும்.”