சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி மே 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 9:30 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
போட்டிக்கான டிக்கெட்டுகளை பெற இதுவரை இல்லாத வகையில் கூட்டம் கூடியிருப்பதால் போலீஸார் தடியடி நடத்தும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது.
2000 மற்றும் 2500 ரூபாய்க்கான டிக்கெட்டுகள் வாலாஜா ரோட்டில் உள்ள பட்டாபிராமன் கேட்டின் முன்பு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில போட்டிகளில் பெண்களுக்கென தனி வரிசை எதுவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை. இதனால் கடும் விமர்சனம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த போட்டியிலிருந்து பெண்களுக்கென தனி வரிசையும் உருவாக்கப்பட்டது. பஞ்சாபுக்கு எதிரான அந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க பெண்கள் வரிசையில் அவ்வளவு கூட்டம் இல்லை. ஆனால், மும்பைக்கு எதிரான இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகளை பெற பெண்களும் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்திருந்தனர். சிறுமிகள் முதல் வயதான முதியோர் வரை பலரும் வரிசையில் நிற்பதை பார்க்க முடிந்தது.

பட்டாபிராமன் கேட்டின் முன்பு ஆரம்பிக்கும் இந்த 2000 ரூபாய் டிக்கெட்டுக்கான இந்த வரிசையே வளைந்து சேப்பாக்கம் இரயில் நிலையம் வரை நிற்கிறது. இடையிடையே கூட்டத்தை ப்ளாக் ப்ளாக்காக பிரித்து நெரிசலை தவிர்க்கவும் போலீசார் முயன்று வருகின்றனர். வரிசையை தாண்டி சாலையிலும் நிறைய பேர் டிக்கெட் கிடைக்குமா என காத்திருந்தனர். இதனால் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்களும் எழுந்தது. ஒரு கட்டத்தில் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடியிலும் இறங்கினர். ஆங்காங்கே லேசான தடியடிகளை நடத்தி கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். இதனால், அந்த இடமே சில சமயங்களில் பதற்றத்துடன் காட்சியளித்தது.
1500 ரூபாய்க்கான டிக்கெட் விக்டோரியா ஹாஸ்டல் ரோடில் உள்ள கவுண்டரில் வழங்கப்பட்டது. இந்த கவுண்டரில் பெண்களுக்கென எந்த தனி வரிசையும் அமைக்கப்படவில்லை. இதனால் பெண்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினார்.
'எவ்ளோ நேரம் நின்னாலும் டிக்கெட் கிடைக்காது போல.. நாங்கெல்லாம் மேட்ச்சே பார்க்கக்கூடாதா. ஏன் எங்களுக்கு தனி வரிசை இல்ல?' என பெண்கள் கடும் அதிருப்தியை வெளிக்காட்டியதையும் பார்க்க முடிந்தது. 'லேடீஸ்க்குலாம் தனிவரிசை கிடையாதும்மா...பின்னாடி போங்க..' என மைக்கிலேயே அறிவிப்பும் செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை அமைக்கப்படவில்லை. ஆனால், போலீசார் மாற்றுத்திறனாளிகளை தனியாக கவுன்ட்டர் அருகே அனுமதித்து டிக்கெட் பெற்றுக்கொடுத்ததையும் பார்க்க முடிந்தது. ஆனால், இதை இன்னும் முறைப்படுத்த வேண்டும். சிலரை அனுமதிக்கிறார்கள். சிலரை அனுமதிப்பதில்லை. எனவே, நெரிசலற்ற தனி வரிசை மாற்றுத்திறனாளிகளுக்கும் அமைக்கப்பட வேண்டும் என அவர்களும் கோரிக்கை வைத்தனர்.

இந்த 1500 ரூபாய் வரிசை விக்டோரியா ஹாஸ்டல் ரோடு வரை நீண்டது. வரிசையின் சில பகுதிகளில் ஆபத்தான வகையில் மின் வயர்கள் ரசிகர்களின் தலைக்கு நெருக்கமாக தொங்கிக் கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது. சில ரசிகர்கள் விளையாட்டாக வயரை பிடித்து ஆடவும் முயன்றனர். ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து டிக்கெட் வாங்க நிற்கும் ரசிகர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யாமல் இருப்பது ஏமாற்றமளிப்பதாக இருந்தது.
கூட்டம் அதிகரித்ததால் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு வழியாக தங்களின் வீடுகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் செல்வோரையும் போலீசார் தடுத்து வேறு வழியாக செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனால் பொது மக்களும் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

டிக்கெட்டுகளை வாங்க தனி வரிசை அமைக்கப்படாததால் ஒருகட்டத்தில் மாறுத்திறனாளிகள் சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர். 'எங்களுக்கெல்லாம் டிக்கெட் கொடுக்கமாட்டாங்களா...இப்ப விடுறோம்..அப்ப விடுறோம்னு பல மணி நேரம் காக்க வைக்கிறாங்க. என்னன்னு கேட்டா ஒழுங்கா கலைஞ்சு போயிருங்க இல்லன்னா வண்டிய புடுங்கிட்டு கேஸ் போடுவோம்னு மிரட்டுறாங்க' என தங்களது மனக்குமுறலை வேதனையோடு வெளிப்படுத்தினர். சில நிமிட மறியலுக்குப் பிறகு போலீசார் மாற்றுத்திறனாளிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக வைத்தனர்.