கட்டுரைகள்
Published:Updated:

பிரேக் டான்ஸ் இனி ஒலிம்பிக் விளையாட்டு!

பிரேக் டான்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
பிரேக் டான்ஸ்

வித்தியாச விளையாட்டுகள்

விளையாட்டுக்கென்று ஏதேனும் வரைமுறை இருக்கிறதா? இதுதான் இப்படித்தான் என விளையாட்டுகளின் உருவாக்கத்திற்கென ஏதேனும் கட்டமைப்பு இருக்கிறதா? நம்மைப் பொறுத்தவரைக்கும் ஆலமரத்தின் கிளையைப் பிடித்துத் தொங்கி ஊஞ்சலாடுவதும் விளையாட்டுதான். அதே ஆலமரத்தின் கீழ் உட்கார்ந்து கட்டம் கீச்சி கல் சேர்ப்பதும் விளையாட்டுதான். ஆக, நம்முடைய மதிப்பீட்டின்படி பொழுதுபோக்குக்காக ஆடப்படும் அத்தனையுமே விளையாட்டுகள்தான். ஆனால், உலக மதிப்பீடு அப்படியாக இல்லை.

குறிப்பாக, விளையாட்டுகளை அங்கீகரித்து அவற்றை நெறிமுறைப்படுத்தும் அமைப்புகள் சகட்டுமேனிக்கு எல்லாவற்றையும் விளையாட்டாக ஏற்றுக்கொள்வதே இல்லை. சதுரங்கம் ஒரு விளையாட்டா? அதில் ஆடுபவர்களை விளையாட்டு வீரர்களாக அங்கீகரிக்கலாமா என ஏதோ ஒரு விநாடி வினா நிகழ்ச்சியில் உங்களிடம் கேள்வி கேட்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். பெரிதாக எந்த அலட்டலும் இல்லாமல் நீங்கள் ‘ஆம்' என பதிலளித்துவிடுவதற்கான அத்தனை சாத்தியங்களும் இருக்கின்றன. ஏனெனில், ‘செஸ்' என்பது ஒரு விளையாட்டென்றுதான் நாம் காலம்காலமாக நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், சர்வதேச ஒலிம்பிக்ஸ் அமைப்பு, செஸ்ஸை ஒரு விளையாட்டாகவே அங்கீகரிக்கவில்லை. அதனால்தான் இன்றளவும் ஒலிம்பிக்ஸில் செஸ்ஸிற்கு இடமே இல்லை. உடலுழைப்பு சார்ந்தவை மட்டுமே ஒலிம்பிக்ஸால் விளையாட்டென்று அங்கீகரிக்கப்படுகின்றன. ‘செஸ்' புத்திக்கூர்மை சார்ந்த ஆட்டமென்பதால் அதற்கு விளையாட்டுகளின் பட்டியலில் இடம் இல்லையாம்! சரி, அப்படி உடலுழைப்பு சார்ந்து ஒலிம்பிக்ஸ் எவற்றையெல்லாம் விளையாட்டு என அங்கீகரித்து வைத்திருக்கிறது என ஒரு பார்வை பார்த்தோமெனில் ஆச்சர்யம் உண்டாவதைத் தவிர்க்கவே முடியாது.

பிரேக் டான்ஸ் இனி ஒலிம்பிக் விளையாட்டு!

நாம் வெறுமென ‘கேளிக்கை'யாக நினைத்து வந்த நடனத்திற்கு, ஒலிம்பிக்ஸ் விளையாட்டு என்ற அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறது. உடலுழைப்பு சார்ந்த விஷயம் என்பதால் நடனமும் விளையாட்டு என்ற இடத்தை நோக்கி நகர்ந்திருக்

கிறது. 2024 ஒலிம்பிக்ஸ் பாரிஸில் நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடரில் புதிதாக சில விளையாட்டுகள் அறிமுகமாக இருக்கின்றன. அவற்றில், ‘பிரேக் டான்ஸும்' ஒன்று. பிரேக் டான்ஸை ஒலிம்பிக்ஸில் சேர்ப்பதற்கான முயற்சி பல ஆண்டுகளாகவே முன்னெடுக்கப்பட்டது. குளிர்கால ஒலிம்பிக்ஸ் தொடர்களில் நடத்தப்படுவதைப் போல நடன நிகழ்வுகள், மிக முக்கியமானதாகக் கருதப்படும் கோடைக்கால ஒலிம்பிக்ஸிலும் நடத்தப்பட வேண்டும் என விருப்பம் தெரிவிக்கப்பட்டது. அதன் விளைவாக, 2018-ல் அர்ஜெண்டினாவில் நடந்த இளையோருக்கான ‘ஒலிம்பிக்ஸ்' தொடரில் பிரேக் டான்ஸும் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக்ஸ் நெருங்கிய தறுவாயில் ‘கோடைக்கால ஒலிம்பிக்ஸ்’ தொடரில் பிரேக் டான்ஸ் போட்டியும் அறிமுகப்படுத்தப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

பிரேக் டான்ஸ் இனி ஒலிம்பிக் விளையாட்டு!

‘நடனம்' என்பது கேளிக்கை சார்ந்த விஷயமாகக் கருதப்பட்டாலும், நடனத்தின் எல்லா வகைகளையுமே கேளிக்கை என்கிற குறுகிய வட்டத்திற்குள் அடக்கிவிட முடியாது. இந்த இடத்தில்தான் பிரேக் டான்ஸும் முக்கியத்துவம் பெறுகிறது. பிரேக் டான்ஸ் என்பது அமெரிக்காவில் வாழும் ஆப்ரோ அமெரிக்க இளைஞர்கள் மூலம் தோன்றி, பல இடங்களுக்கும் பரவிய ஆட்டமாகும். நியூயார்க் நகர வீதிகளில் செய்வதற்கரிய வகையில் உடலை வளைத்து நெளித்து தலைக்குப்புற உருண்டு புரண்டு ஆடப்படும் இந்த ஆட்டத்தைத் திரைப்படங்களில் கூட பார்த்திருப்போம். இந்த வகை ஆட்டத்தைத் தன்னுடைய நிகழ்ச்சிகளிலும் கலந்து அவற்றை உலகறியச் செய்தவர், காலம் சென்ற மைக்கேல் ஜாக்சன். வித்தியாசமான இசைக்கோப்புகளுடன் வெட்டி வெட்டி ஆடும் அந்தத் துடிப்பான ஆட்டம்தான், 2024 முதல் ஒலிம்பிக்ஸ் எனும் உலக மேடையில் அரங்கேறவிருக்கிறது.

இந்த ஆட்டத்தில் வெற்றியாளர்கள் எப்படித் தீர்மானிக்கப்படுவார்கள் எனும் குழப்பம் எழக்கூடும். நியாயமான குழப்பம்தான். ஓய்வுபெற்ற நடிகையர் குழாமை வைத்துக்கொண்டு இஷ்டத்திற்கு வெற்றியாளர்களைத் தீர்மானித்துக் கொள்ள இது ஒன்றும் டி.வி ரியாலிட்டி ஷோ இல்லையே. உலக அரங்கில் இந்த ஆட்டத்தில் வெற்றியாளரைத் தீர்மானிக்க ஒலிம்பிக்ஸ் அமைப்பே சில விதிமுறைகளையும் காரணிகளையும் வெளியிட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் இரு பிரிவினருக்கும் தனித்தனியாகவே இந்தப் போட்டி நடைபெறும். இரு பிரிவிலும் உலகளவில் டாப் 16-ஆக இருக்கும் டான்ஸர்கள் இதில் பங்கேற்பார்கள். இந்த பிரேக் டான்ஸில் ‘Top Rock, Freeze, Down Rock, Power Moves, Flair' என சில குறிப்பிட்ட வகையிலான அசைவுகளை டான்ஸர்கள் செய்து காட்டியாக வேண்டும். டௌன் ராக் என்பது தலைகீழாக நின்று நடன அசைவுகளை நிகழ்த்திக்காட்டக்கூடிய வகை. Power Moves என்பது இதிலேயே இன்னொரு வகை. இதில் அப்படியே தலைகீழாக நின்றுகொண்டு ஒட்டுமொத்த உடலையும் அப்படியே பம்பரம் போலச் சுற்ற வேண்டும். அதேமாதிரி, ஃப்ளேர் என்பது கைப்பிடிகள் பொருத்தப்பட்ட பலகையில் நின்று சாகசங்கள் செய்வது.

பிரேக் டான்ஸ் இனி ஒலிம்பிக் விளையாட்டு!

வெற்றியாளர்களைத் தீர்மானிக்க குறைந்தபட்சமாக 5 பேரை உள்ளடக்கிய நடுவர் குழு இருக்கும். 6 காரணிகளின் அடிப்படையில் போட்டியாளர்களுக்கு இந்தக் குழு புள்ளிகளை வழங்கும். அதன்படி, வீரர் வீராங்கனைகள் நடன அசைவுகளை நிகழ்த்தும்போது அவர்களின் ‘கற்பனைத் திறன், ஆளுமை, தொழில்நுட்பம், தனித்தன்மை, இசைச்சேர்வு, ஒட்டுமொத்தச் செயல்பாடு' என இந்தக் காரணிகளின் அடிப்படையில் ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் புள்ளிகள் வழங்கப்பட்டு இறுதியில் ஒட்டுமொத்தமாக வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவார்கள்.

நவீன இளைஞர்களின் மனதைக் கொள்ளைகொண்ட இசைக் கலாசாரத்தையும் நடன முறையையும் பிரேக் டான்ஸ் தன்னகத்தே கொண்டிருந்தாலும், ஒரு காலத்தில் இந்த ஆட்டம் ஏழைகளின் திறன் வெளிப்பாடாகவே பார்க்கப்பட்டிருக்கிறது. ஆப்ரோ அமெரிக்கர்கள் எதிர்கொண்ட வறுமையும் புறக்கணிப்புமே இந்த பிரேக் டான்ஸ் ஆட்டத்தின் தோற்றத்திற்கான அடிநாதமாக அமைந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் பிரேக் டான்ஸ் உலகளவில் பெரும் கௌரவமிக்க ஒரு மேடையில் ஏறவிருப்பது வரவேற்கக்கூடியதே! அப்படியே அந்த செஸ்ஸையும் ஒலிம்பிக்ஸில் இணைத்தால் தனியாக ஒலிம்பியாட் என ஒன்று நடத்துவதற்கான தேவை இருக்காது. செஸ் புத்திக்கூர்மைமிக்க ஆட்டம்தான் என்றாலும், அதற்கு உடல்ரீதியான கட்டுப்பாடுகளும் அவசியமே!