Published:Updated:

`தூங்கி எழுந்தா ஏ.கே 47 துப்பாக்கியோடு 2 பேரு.. எப்படி இருக்கும்?’- கங்குலி பகிரும் பாக்., அனுபவம்

2003-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்றது முதல் அங்கிருந்த நாள்கள் குறித்து கங்குலி தன் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

கங்குலி
கங்குலி

`பெங்கால் டைகர்’ சவுரவ் கங்குலிக்கு பாகிஸ்தானின் டைகர்களைப் பார்க்கப் பிடிக்கவில்லையாம். பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின்போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கங்குலி இப்போது கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி 2003-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டிகள், மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இந்திய வீரர்கள் சுமார் 48 நாள்கள் பாகிஸ்தானில் தங்கியிருந்தனர். பாகிஸ்தான் சென்றது முதல் அங்கிருந்த நாள்கள் குறித்தும் கங்குலி தன் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

கங்குலி
கங்குலி

``எனக்கு நன்றாக நினைவிருக்கிறது கராச்சி விமான நிலையத்திலிருந்து நாங்கள் தங்கும் விடுதி சுமார் 10 கி.மீ இருக்கும். அந்தப் பயணம் நன்றாக இருந்தது. பிரதான சாலைக்கு வரும் அனைத்து துணை சாலைகளும் மூடப்பட்டிருந்தன. சாலைகளின் ஒவ்வொரு மூலை முடுங்கிலும் பாதுகாப்பு படை வீரர்கள், ராணுவத்தினர், புலிகள் (சிறப்பு பாதுகாப்புப் படை வீரர்கள்) என நிறைந்திருந்தனர்.

கராச்சியில் இருந்த அந்த விடுதியின் மூன்றாவது மாடியில் நாங்கள் தங்கியிருந்தோம். 2 மற்றும் 4-வது தளங்களில் யாரும் இல்லை. விருந்தினர்கள் தங்குவதற்கு அங்கு அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய அந்தக் கட்டடம் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது என்றுதான் கூற வேண்டும்.

கங்குலி
கங்குலி
‘ஓர்க் ஹார்ஸ்’ முத்திரை.. தோனி - கோலி கேப்டன்சி.. மனம் திறந்த இஷாந்த் சர்மா!

நான் பாதுகாப்பு அதிகாரிகளிடம் எதுவும் தெரிவிக்காமல் உணவு உண்பதற்காக வெளியில் வந்து பிடிபட்டுக்கொண்டேன். நான் தலையில் தொப்பி அணிந்துகொண்டு வெளியில் சென்றேன். தெருக்களில் உணவுகளைச் சுவைத்துக்கொண்டிருந்தேன். என்னுடைய நல்ல நண்பர் ராஜ்தீப் பார்த்துவிட்டார். இந்திய கேப்டன் சாலையில் உணவு அருந்துகிறார் என்றார். என்னுடைய டின்னர் முழுவதுமாக முடிந்தது.

முதல்நாள் விடுதி அறையிலிருந்து வெளியே வந்தேன். இரண்டு செக்யூரிட்டிகள் ஏ.கே.47 துப்பாக்கிகளுடன் நின்றிருந்தனர். அவர்களை டைகர்ஸ் என அங்கே அழைப்பார்கள். ஒருவர் கதவு வழியே என்னுடைய அறையைக் கண்காணித்தவாறே இருப்பார். மற்றொருவர் அந்த அறையின் எதிர்புறத்தைப் பார்த்துக்கொண்டிருப்பார்.

சவுரவ் கங்குலி
சவுரவ் கங்குலி

பாகிஸ்தானில் எங்களுக்குப் பணிகளை மேற்கொண்ட நபரை அழைத்துப் பேசினேன். நாங்கள் இங்கு 45 நாள்கள் இருக்கப்போகிறோம். செக்யூரிட்டிகளை இங்கிருந்து அப்புறப்படுத்துங்கள் அவர்களை கீழே இருக்கச்சொல்லுங்கள் என்றேன். தினமும் காலையில் எழுந்தவுடன் ஏ.கே.47 துப்பாக்கியுடன் இருக்கும் இரண்டு நபர்களின் முன் கண்விழித்தால் எப்படி இருக்கும். அவர்கள் தவறுதலாக சுட்டால் என்னவாகும்” என சிரித்தபடி கூறினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.