
2013-ல் எனக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது எனக்கு பயங்கரமான தலைவலி இருந்தது. நோயிலிருந்து பெரும் போராட்டத்திற்குப் பிறகு 2016-ம் ஆண்டு முழுவதுமாக மீண்டுவிட்டேன்.
சென்னையில் தேசிய பேஸ்கெட்பால் சாம்பியன்ஷிப் சமீபத்தில் நடந்து முடிந்தது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்தத் தொடரில் மொத்தம் 372 வீரர்கள் பங்கேற்றனர். ஆனால், வந்திருந்த அனைவரும் பார்த்து வியந்த ஒருவர் என்றால் அவர் பூனம் சதுர்வேதிதான். இந்தியாவிலேயே பூனம்தான் மிக உயரமான பேஸ்கெட்பால் வீராங்கனை. உயரம், 6 அடி 11 அங்குலம். வெறும் உயரம் மட்டும்தான் இவர் அடையாளமா? நிச்சயம் இல்லை. பத்தாவது படிக்கும்போது பேஸ்கெட்பாலை முதல்முறை கையிலெடுத்த பூனம் 2011-ல் இந்திய பேஸ்கெட்பால் அணியில் இடம்பெற்றார். அந்த நேரத்தில் மூளையில் ஏற்பட்ட கட்டியால் முடங்கிப்போகாமல், அதிலிருந்து தன்னம்பிக்கையுடன் மீண்டு இன்னும் விளையாட்டுக்களத்திலும் போராட்டங்கள் நிறைந்த வாழ்விலும் அண்ணாந்து பார்க்க வைக்கிறார்.

``நான் சிறுமியாக இருக்கும்போதே மற்றவர்களைவிட உயரமாக இருப்பேன். இதைப் பார்த்த என் தந்தையின் நண்பர் ஒருவர் எனக்கு பேஸ்கெட்பால் பொருத்தமாக இருக்கும் என்று ஆலோசனை கூறினார். அருகிலிருந்த பேஸ்கெட்பால் பயிற்சி மையத்தில் சேர்ந்தேன். அங்கு விளையாடுவதைப் பார்த்த படேல் சார் (முதல் பயிற்சியாளர்) என்னை சத்தீஸ்கர் அணிக்காக விளையாட அழைத்தார். அந்த அணிக்காகச் சிறப்பாக ஆடியதால், இந்திய அணிக்கு 2011-ல் முதல்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கைந்து ஆண்டுகள் இந்தியாவுக்காக ஆடினேன். நாட்டுக்காக ஆடியது என்றும் நான் பெருமைப்படும் விஷயம்!''
``மூளையில் ஏற்பட்ட கட்டியில் இருந்து மீண்டு வந்தது எப்படி?''
``2013-ல் எனக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது எனக்கு பயங்கரமான தலைவலி இருந்தது. நோயிலிருந்து பெரும் போராட்டத்திற்குப் பிறகு 2016-ம் ஆண்டு முழுவதுமாக மீண்டுவிட்டேன். பிறகு மீண்டும் 2019-ல் ரயில்வே அணிக்காக நடந்த தகுதிச்சுற்றுகளில் பங்குபெற அழைப்பு வந்தது. கடந்த ஆண்டு முதல் இந்திய ரயில்வே அணிக்காக விளையாடி வருகிறேன். எனக்கு சத்தீஸ்கர் அரசாங்கம் ராஜிவ் பாண்டே விருது கொடுத்தது. எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக அதைக் கருதுகிறேன்.''

``நீங்கள் களத்திலிருந்தாலும் சரி, களத்திற்கு வெளியே இருந்தாலும் சரி மக்கள் உங்களைத்தான் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள். இது அசௌகரியமாக இருக்கிறதா, இல்லை பழகிவிட்டதா?''
``உயரமாக இருப்பது எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு. ஆனால், சில நேரங்களில் மக்கள் என்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தால் ஒரு வித எரிச்சல் உண்டாவது உண்மைதான். உயரம் கடவுள் எனக்குக் கொடுத்த பரிசு. அதைப் புரிந்துகொள்ளுங்கள்.
உயரமாக இருப்பதால் பெரிதாக அனுகூலம் ஒன்றுமில்லை. உண்மையில் சிரமங்களே அதிகம். நீண்ட கால்களை வைத்துக்கொண்டு பொதுப் போக்குவரத்தில் செல்வதே மிகக் கடினம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதவைக் கடக்கும்போதும் குனிந்து குனிந்து தலையை இடித்துக்கொள்ளாமல் செல்வதே பெரும்பாடாக இருக்கிறது!''

``இந்தியாவில் கிரிக்கெட்டுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அங்கீகாரமோ, வரவேற்போ இல்லாமல் பேஸ்கெட்பால் ஆடுவதை சங்கடமாக உணர்கிறீர்களா?''
``எல்லா விளையாட்டுமே அதற்கென்று ஒரு தனித்தன்மையைக் கொண்டது. அனைத்து விளையாட்டுகளுமே சமம் என்ற எண்ணம் மக்களுக்கு வரவேண்டும். அப்போதுதான் மற்ற விளையாட்டுகளுக்கும் கிரிக்கெட் வீரர்கள் போல் அங்கீகாரம் கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்கு இன்னும் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் நிறைய ஆதரவு கிடைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. குறிப்பாக தங்கள் குழந்தை எதில் ஆர்வம் காட்டினாலும் பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும். எல்லா விளையாட்டிலும் இந்தியா சாதிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்!''