2021 உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் ஸ்பெயின் நாட்டின் ஊல்வா எனும் நகரில் நடந்து வருகிறது. இதன் வரலாற்றில், அரையிறுதியில் இரண்டு இந்திய வீரர்கள் மோதிக்கொண்ட ருசிகர சம்பவம் அரங்கேறியது. இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரரான லக்சயா சென், நட்சத்திர வீரர் ஶ்ரீகாந்த் கிடம்பி ஆகிய இருவருக்கும் இடையே மிக கடுமையான போட்டி நிலவியதால் இப்போட்டி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்ததோடு, எதிர்பார்ப்பையும் அதிகமாக்கியது.
தொடக்கம் முதலே ஒருவருக்கொருவர் சளைத்திடாமல் அதிரடி காட்டினர். இளம் வீரரான லக்சயா மூத்த வீரரான ஶ்ரீகாந்தை பின்னுக்குத்தள்ளி முதல் செட்டை வசப்படுத்தினார். லட்சயாவின் ஆட்டதைப் புரிந்து கொண்டு பின்னர் தனது அட்டத்தின் போக்கை மாற்றிய ஶ்ரீகாந்த் சிறப்பான கம்பேக் கொடுத்து அடுத்த 2 செட்களையும் வசப்படுத்தினார். விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லாமல் நடந்த இப்போட்டி சுமார் 69 நிமிடங்கள் நீடித்தது. இதில் 17-21, 21-14, 21க்-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவில் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ஶ்ரீகாந்த் பெற்றார்.
இறுதிப் போட்டியிலும் கடுமையாகப் போராடிய ஶ்ரீகாந்த், சிங்கப்பூர் வீரர் லோ கியான் யேவிடம் வீழ்ந்தார். உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வெல்லும் மூன்றாவது இந்தியர் ஶ்ரீகாந்த். இதற்கு முன் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் வெள்ளி வென்றிருக்கின்றனர். சிந்து 2019-ம் ஆண்டு தங்கமே வென்று அசத்தியிருந்தார்!

மற்றொரு பக்கம் லக்சயா சென் தான் அரையிறுதியில் தோற்றாலும் வெண்கலப் பதக்கத்தைப் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் பி. வி.சிந்துவிற்குப் பிறகு அறிமுகத் தொடரில் பதக்கம் வென்ற இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் லக்சயா சென்.
அல்மோரா எனும் நகரில் பிறந்தவர் லக்சயா சென். பேட்மின்டன் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை டி. கே.சென் இந்தியாவில் பயிற்சியாளராகவும் அவரது சகோதரர் சிராக் சென் சர்வதேச பேட்மின்டன் வீரராகவும் உள்ளார். பிரகாஷ் படுகோன் பேட்மின்டன் அகாடமியில் பயிற்சி பெற்ற சென் மிக இளம் வயதிலேயே பேட்மின்டன் வீரரகத் தனது திறமையைக் காண்பித்துள்ளார்.

இந்த வெற்றி பற்றி பேசிய லக்சயா சென், "வெண்கலப் பதக்கத்துடன் நான் திருப்தி அடையவில்லை. அடுத்த முறை நிச்சயம் தங்கம் வெல்வேன். ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் மற்றும் 2022 காமன்வெல்த் கேம்ஸிலும் எனது திறமையைக் காட்டுவேன்" என்று உறுதியளித்துள்ளார்.