Published:Updated:

சாம்பியன்ஷிப்புக்கு விதைபோட்ட தோல்விகள்... வாட் நெக்ஸ்ட் சிந்து?!

கடந்த ஆண்டின் most consistent பேட்மின்டன் ப்ளேயரான சிந்து, ஓராண்டு காலத்தில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. ஏனென்றால், உலக சாம்பியன்ஷிப் பட்டத்துக்கு விதைபோட்டது சிந்துவின் தோல்விகள்தான்.

P.V Sindhu
P.V Sindhu ( AP )

நேற்றிரவிலிருந்து சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆவது `பேட்மின்டன் உலக சாம்பியன் சிந்து'. தங்கப்பதக்கம் வென்றால் கொண்டாடப்படும் விளையாட்டு வீரர் வீராங்கனைகளை தோல்வியின்போது வசைபாடுவதும் வழக்கம்தான். தங்கப்பதக்கமும், கோப்பைகளும் மட்டுமே ஓர் விளையாட்டின் வெற்றி என நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, சிந்து விதிவிலக்கு. கடந்த ஆண்டு இதே நேரம், "ஃபைனலை எதிர்கொள்ளும் பக்குவம் சிந்துவுக்கு இல்லை", "தங்கப்பதக்கம் வென்றால்தான் சாம்பியன். சிந்து எப்படி சாம்பியனாக முடியும்?" போன்ற கேள்விகளால் சாடப்பட்டார்.

அன்று, கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் பக்குவமாய் பதிலளித்த சிந்து, தன்னுடைய விளையாட்டை மெருகேற்றுவதில் கவனம் செலுத்தினார். இன்று, பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார்.

2018-ம் ஆண்டில், வெற்றி தோல்வி என பெஸ்டாக அமையவில்லை என்றாலும், ஒவ்வொரு தொடரிலும் சிந்துவின் விளையாட்டு அடுத்த கட்டத்துக்குச் சென்றது. ஒவ்வொரு ஃபைனலிலும் சிந்து எதிர்கொள்ளும் வீராங்கனைகள் வெவ்வேறாக இருந்தாலும், 6 ஃபைனலிஸ்டுகளுக்குமே சிந்து மட்டும்தான் எதிராளி! கடந்த ஆண்டின், most consistent பேட்மின்டன் ப்ளேயரான சிந்து, ஓராண்டு காலத்தில் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. ஏனென்றால், உலக சாம்பியன்ஷிப் பட்டத்துக்கு விதைபோட்டது சிந்துவின் தோல்விகள்தான்.

சிந்துவின் பலம் - அனுபவம்

கடந்த நான்கு ஆண்டுகளில், பல்வேறு பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர்களில் விளையாடியுள்ள சிந்து, உலகின் முன்னணி வீராங்கனைகளை எதிர்கொண்டுள்ளார். தா சு யிங், அகானா யமகுச்சி, நொஸோமி ஓக்குஹாரா, கரோலினா மரின் போன்ற டாப் வீராங்கனைகளை நாக்-அவுட் சுற்றுகளில் எதிர்கொண்ட அனுபவம் சிந்துவுக்கு பலம்.

P.V Sindhu
P.V Sindhu
AP
தங்கப்பதக்கம் கிடைக்கவில்லையே என்று வருத்தப்படுவதற்கு பதிலாக, வெள்ளிப்பதக்கம் வென்றேன் என்ற மனநிறைவு எனக்கு எப்போதுமே இருக்கும். ஒவ்வொரு போட்டியிலும் என்னுடைய பெஸ்டை கொடுப்பேன். சாம்பியன் பட்டம் வென்றாலுமே, அடுத்தடுத்த போட்டிகளில் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.
பி.வி. சிந்து

கோப்பைகள் வெல்வதும், பதக்கங்களை குவிப்பதும் ஒரு பக்கம் இருக்கட்டும். சிந்து விளையாடுவது அனுபவதிற்காக, பிழைகளை திருத்திக் கொள்வதற்காக. ஒவ்வொரு முறை ஃபைனலில் தோற்கும் போதும், முன்பைவிட இன்னும் வலிமையாக, தைரியமாக, தெளிவான இலக்குடன் அடுத்த போட்டிக்குத் தயாராகிறார் சிந்து.

சிந்து vs நமி ஓக்குஹாரா

2017 உலக சாம்பியன்ஷிப்: 19-21, 22-20, 20-22
2019 உலக சாம்பியன்ஷிப்: 21-7, 21-7

2017 பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மூன்று செட்கள் வரை சென்றது. இரு வீராங்கனைகளும் மாறி மாறி டஃப் கொடுக்க, ஒரு சில புள்ளிகள் வித்தியாசத்தில் நொசோமி போட்டியை வென்றார். இதே போன்ற ஓர் இறுதிப்போட்டியை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் சிந்து.

Vikatan
Nozomi Okuhara
Nozomi Okuhara
AP

2017, 2018 ஆண்டுகளைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த சிந்து, இந்த முறை விட்டுவிடுவதாக இல்லை. இறுதிப்போட்டியின் தொடக்கம் முதலே சிந்துவின் ஆதிக்கம்தான். நொஸோமியின் திட்டங்கள் ஏதும் எடுப்படவில்லை. சிந்துவின் ஆட்டத்தில் இடைவெளியில்லாமல் அதிரடி தொடர்ந்தது. இறுதிப்போட்டிகளில் சிந்து பதற்றம் அடைவார் என்ற விமர்சனத்தை தகர்த்தெறியும் வகையில் விளையாடினார் சிந்து. அவரது ஆட்டத்தில் இருந்த தெளிவும், நம்பிக்கையும் நொஸோமியை நடுங்க வைத்தது. தொடக்கம் முதல் இறுதி வரை one-sided போட்டியாகவே இருந்தது.

37 நிமிடங்கள் நடந்த இறுதிப்போட்டியில், 21-7, 21-7 செட் கணக்கில் போட்டியை வென்றார் சிந்து. இந்த வெற்றி எளிதில் கிடைக்கவில்லை. இரண்டு முறை வெண்கலம், இரண்டு முறை வெள்ளிப்பதக்கங்களை வென்று ஐந்தாவது முயற்சியில் சாம்பியன்ஷிப்பை உச்சி முகிர்ந்தார் சிந்து. படிப்படியாக உச்சத்தை எட்டிவரும் சிந்துவுக்கு இது போதாது. இன்னும் பல கோப்பைகளையும், பதக்கங்களையும் வென்று குவிப்பார்.

P.V Sindhu
P.V Sindhu
AP
காத்திருந்து கிடைத்த இந்தத் தருணம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்த வெற்றியை என்னுடைய அம்மாவுக்கு டெடிகேட் செய்கிறேன். ஏனென்றால், இன்று அவருக்குப் பிறந்தநாள். பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா.
பி.வி சிந்து

இந்த வெற்றியின் மூலம், பல சாதனைகளை தன்வசப்படுத்தியுள்ளார் சிந்து. இந்தப் பட்டியல் கொஞ்சம் நீளம்.

6 முறை உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றுள்ள சிந்து, 5 முறை பதக்கம் வென்றுள்ளார். வேறு எந்த பேட்மின்டன் வீராங்கனையும் செய்யாத சாதனை இது. கூடுதலாக, பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்ற நான்காவது வீரரானார் சிந்து.

பெண்களுக்கான தனிநபர் பேட்மின்டன் போட்டியில் ஒலிம்பிக்ஸ், உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டுகளில் பதக்கம் வென்ற ஒரே வீராங்கனை என்ற சாதனைக்கும் சொந்தக்காரர்.

தங்கமோ, வெள்ளியோ, வெற்றியோ, தோல்வியோ, சிந்துவின் ஆட்டம் எப்போதுமே சாம்பியன் ஆட்டம்தான். ``வாட் நெக்ஸ்ட் சிந்து?!"