73 ஆண்டுகளாக நடைபெற்று வரும் தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரை இந்திய அணி முதல் முறையாக வென்றிருக்கிறது. அதுவும், 14 முறை சாம்பியனான இந்தோனேஷியாவை வீழ்த்தி இந்திய அணி இந்தச் சாதனையை செய்திருக்கிறது.

தாமஸ் கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை இறுதிப்போட்டிக்கே முன்னேறியதில்லை. இந்த முறைதான் முதன் முதலாக இறுதிப்போட்டிக்கே வந்திருந்தனர். லீக் சுற்றில் ஜெர்மனி மற்றும் கனடா ஆகிய அணிகளை 5-0 என முழுமையாக இந்திய அணி வென்றிருந்தது. சீன தைபேக்கு எதிராக மட்டும் 2-3 எனத் தோற்றிருந்தது. லீக் சுற்றின் முடிவில் இந்திய அணி அங்கம் வகித்த க்ரூப் C-ல் இரண்டாம் இடம்பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. காலிறுதியில் 5 முறை சாம்பியனான மலேசியாவை 3-2 என இந்தியா வீழ்த்தியிருந்தது. பரபரப்பான அரையிறுதியில் வலுவான டென்மார்க் அணியையும் 3-2 என வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
14 முறை சாம்பியனும், தற்போதைய நடப்பு சாம்பியனுமான இந்தோனேஷியா அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் முழுமையாகத் தங்களின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது.
லக்சயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரனாய், சாத்விக் சாய்ராஜ் - சிராக், அர்ஜூன் - துருவ் கபிலா ஆகியோர் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தனர்.

முதல் மூவரும் ஒற்றையர்களுக்கான போட்டியில் களமிறங்குவர். அடுத்த நான்கு பேரும் இணையாக இரட்டையர்களுக்கான போட்டியில் களமிறங்குவர். 5 ஆட்டங்களில் எந்த அணி அதிக ஆட்டங்களில் வெல்கிறதோ அந்த அணியே போட்டியை வென்றதாக அறிவிக்கப்படும். இதுதான் போட்டி முறை.
இந்திய அணி முதல் 3 ஆட்டங்களையுமே வென்று 3-0 என போட்டியை கைப்பற்றி முதல் முறையாக தொடரையும் வென்றுவிட்டது.
முதல் போட்டியே இந்தியாவை சேர்ந்த இளம் வீரரான லக்சயா சென்னுக்கும் இந்தோனேஷியாவை சேர்ந்த கிந்திங்குக்கும் நடந்தது. கிந்திங் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்றவர்.
இந்திய பேட்மிண்டனின் வருங்காலமாக ராக்கெட் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருந்த லக்சயா சென் இந்தத் தொடரில் கொஞ்சம் தடுமாறித்தான் போயிருந்தார். சீன தைபே, மலேசியா, டென்மார்க் என தொடர்ச்சியாக மூன்று அணிகளுக்கு எதிராக தோல்வியை தழுவித்தான் இறுதிப்போட்டிக்கே வந்திருந்தார்.

லக்சயா சென்னின் தோல்விகள் தொடருமா, இல்லை எல்லாருக்கும் சர்ப்ரைஸ் கொடுப்பாரா என்பதே பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. முதல் கால் மணி நேரமும் இந்திய அணியிடம் எந்த உற்சாகமுமே இல்லை. காரணம், லக்சயா சென் கடந்த மூன்று போட்டிகளில் எப்படி ஆடினாரோ அப்படித்தான் இங்கேயும் ஆடினார். மோசமாகத் தோற்றார். 8-21 என முதல் செட்டை பெரிய வித்தியாசத்தில் இழந்தார். ஆனால், இரண்டாவது செட்டில் மீண்டெழுந்தார். தனது துடிப்பான ஆட்டத்தின் மூலம் இந்த செட்டை 21-17 என வென்றார். ஆட்டம் மூன்றாவது செட்டுக்குச் சென்றது. இந்த செட்டிலும் தொடக்கத்தில் கொஞ்சம் பின்னடைவையே சந்தித்தார். 7-11 என சறுக்கியிருந்தார். சில நொடிகள் இடைவேளைக்கு பிறகு மீண்டு வந்து மிரட்டினார். கிந்திங் ஒரு புள்ளியை எடுப்பதற்குள் சென் தொடர்ச்சியாக 5 புள்ளிகளை எடுத்து அசத்தினார். 12-12 என ஆட்டம் சமநிலைக்கு வந்தது.
இதன்பிறகு, எல்லாம் லக்சயா சென்னின் ராஜ்ஜியம்தான். தனது வலுவான ஸ்மாஷ்கள் மூலம் கிந்திங்கைத் திணறடித்து 16-21 என மூன்றாவது செட்டை வென்று ஆட்டத்தையும் வென்றார். இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.

அடுத்ததாக இரட்டையர்களுக்கான போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் - சிராக் இணையும் இந்தோனேஷியாவின் அசான் - கெஃபின் சஞ்சய்யா இணையும் மோதின. இந்த ஆட்டம்தான் ரொம்பவே பரபரப்பாக அமைந்திருந்தது. முதல் ஆட்டத்தை போன்றே இந்த ஆட்டத்திலும் இந்திய அணி முதல் செட்டை இழந்தது. 21-18 என இந்தோனேஷிய இணை முதல் செட்டை வென்றது. இரண்டாவது செட்டில்தான் அது இந்தியாவின் ஆட்டமாக மாறியிருந்தது. தொடக்கத்திலேயே சாத்விக்கும் சிராக்கும் இரண்டு லாங் ரேலிக்களை அடுத்தடுத்து வென்றனர். இதுவே இருவருக்கும் ஒரு பாசிட்டிவிட்டியை கொடுத்தது. 11-6 என இந்திய இணை நன்றாகவே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தது. கேமுக்கு இடையிலான அந்தச் சிறிய இடைவேளைக்குப் பிறகு இந்தோனேஷிய இணை கம்பேக் கொடுத்தது. 11-6 லிருந்து 14-19 என அசான் - கெஃபின் கூட்டணி ஆட்டத்தை மொத்தமாக தங்கள் பக்கமாகத் திருப்பிவிட்டது. இந்த செட் அவ்வளவுதான் இந்த ஆட்டமும் அவ்வளவுதான் என்ற சூழலில் இந்திய இணையும் ஓர் அட்டகாசமான கம்பேக்கை கொடுத்தது.
ஒரு In & out க்கு சேலஞ்ச் செய்து இந்தோனேஷிய இணை தோல்வியடைய இந்தியாவிற்கு ஒரு புள்ளி கிடைத்தது. தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்த இந்திய இணை இந்த ஒரு புள்ளியை பற்றிக்கொண்டு முன்னேறியது. ஒரு லாங் ரேலியில் அடுத்து ஒரு புள்ளியை வியர்வை வடிய வாங்கினர். அடுத்து வெறித்தனமான ஸ்மாஷில் இன்னொரு புள்ளி. அடுத்து Unforced error-கள் மூலம் ஒன்றிரண்டு புள்ளிகள் கிடைக்க ஆட்டம் 21-21 என சமநிலைக்கு வந்தது.
ரோலர்கோஸ்டராக சென்ற இந்த ஆட்டத்தின் கேம் பாயிண்ட்டை இந்திய இணையே எடுத்து 23-21 என வென்றது. மூன்றாவது செட்டும் இதே போன்றே பரபரப்பாகச் சென்றது. அதுவும் இதே போன்றே இந்தியாவிற்குச் சாதகமாகவே முடிந்தது.

2-0 என இப்போது இந்திய அணி முன்னிலை வகித்தது. இன்னும் ஒரு ஆட்டத்தை வென்றுவிட்டால் புது வரலாறே படைத்துவிடலாம் என்பதால் மூன்றாவது ஆட்டத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பு கூடியது. இந்த ஆட்டத்தில் இந்தியா சார்பில் கிடாம்பி ஸ்ரீகாந்த்தும் இந்தோனேஷியா சார்பில் கிறிஸ்ட்டியும் மோதியிருந்தனர். தோனியின் வின்னிங் ஷாட்டை போல இந்த ஆட்டத்தை ஸ்ரீகாந்த் எந்த பிசிறும் இல்லாமல் வெற்றிகரமாக முடித்து வைத்தார். முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா முதல் செட்டை இழந்திருந்தது. ஆனால், இங்கே முதல் செட்டையே ஸ்ரீகாந்த் வென்றார். 8-2 என தொடக்கத்திலேயே மளமளவென புள்ளிகளை அள்ளினார். 21-15 என வென்றார்.
அடுத்த செட், இதை மட்டும் வென்றால் இந்தியா சாம்பியன். இதை மட்டும் தோற்றால் இந்தோனேஷியா சாம்பியன்ஷிப்பை இழக்க வேண்டியிருக்கும். இதனால் கிறிஸ்டி இந்த செட்டில் கொஞ்சம் கூடுதலாகவே போராடினார். அவரின் போராட்டம் போட்டியை இன்னும் பரபரப்பாக்கியது. ஆனால், வெற்றியைக் கொடுக்கவில்லை. 23-21 என கடைசி வரை சென்று ஸ்ரீகாந்த் வென்று கொடுத்தார். இந்தத் தொடரில் ஸ்ரீகாந்த் மட்டும்தான் எந்தப் போட்டியிலுமே தோற்கவில்லை. ஆடிய 6 போட்டிகளிலுமே வெற்றிதான். இறுதிப்போட்டியில் அவரை மட்டுமல்ல, இந்தியாவையே சேர்த்தும் வெல்ல வைத்தார். பேட்மிண்டனில் ஓர் அணியாக இந்தியா வெல்லும் மிகப்பெரிய தொடர் இது. அதுவும், நாக் அவுட் சுற்றில் முன்னாள் சாம்பியன்கள் அத்தனை பேரையும் சிதறவிட்டு வென்றிருப்பது, இந்திய விளையாட்டுத்துறைக்கே பெரும் பெருமையைச் சேர்த்திருக்கிறது.

கிட்டத்தட்ட கிரிக்கெட்டில் உலகக்கோப்பையை வெல்வதை போன்றதுதான் இந்தச் சம்பவமும். ஏற்கெனவே, இந்தியாவில் பேட்மிண்டன் நல்ல வளர்ச்சியை எட்டிக்கொண்டிருக்கும் சூழலில் இந்த வெற்றி இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இன்னும் பெரிய சாதனைகளுக்கான கதவுகளைத் திறந்துவிடும். வாழ்த்துகள் பாய்ஸ்!