Published:Updated:

``பரதத்துக்குப் பதிலா பேட்மின்டனைத் தேர்ந்தெடுத்தேன்!’’ - `ஜூனியர் சாம்பியன்’ மதுரை வர்ஷினி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``பரதத்துக்குப் பதிலா பேட்மின்டனைத் தேர்ந்தெடுத்தேன்!’’ - `ஜூனியர் சாம்பியன்’ மதுரை வர்ஷினி
``பரதத்துக்குப் பதிலா பேட்மின்டனைத் தேர்ந்தெடுத்தேன்!’’ - `ஜூனியர் சாம்பியன்’ மதுரை வர்ஷினி

``பரதத்துக்குப் பதிலா பேட்மின்டனைத் தேர்ந்தெடுத்தேன்!’’ - `ஜூனியர் சாம்பியன்’ மதுரை வர்ஷினி

ஜெர்மன் ஜூனியர் ஓபன் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் மகளிர் இரட்டையர் பிரிவில், இந்தியாவைச் சேர்ந்த வர்ஷினி விஸ்வநாத், தெரேசா ஜாலி ஜோடி வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ளது. சப் ஜூனியர் இந்தியன் டீம் சார்பாக விளையாடி வரும் வர்ஷினி, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். பாட்மிண்டன் விளையாட்டில் உச்சங்களை தொட்டு வரும் இந்த இளம் வீராங்கனையைச் சந்தித்து பேசினோம். 

"ஹாய், நான் வர்ஷினி...ஸ்போர்ட்ஸ் லவ்வர்... ஆர்வங்களின் காதலி! யெஸ்...புதுசு புதுசா விஷயங்களை கத்துக்கிறதுல எனக்கு ஆர்வம் அதிகம். சின்ன வயசுல இருந்து படிப்பு, டான்ஸ்ன்னு மட்டுமில்லாம நேஷனல் லெவல்ல ஸ்போர்ட்ஸ்ல சாதிச்சது வரைக்கும் இதே ஆர்வம் தான் காரணம்..." - அசத்தல் அறிமுகம் கொடுக்கிறார் இறகு பந்து விளையாட்டின் இளைய நட்சத்திரம், வி.எஸ்.வர்ஷினி. 

மதுரையை சேர்ந்த வர்ஷினி, 11ம் வகுப்பே படித்து வரும் போதே தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டியில் 15 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் சாதனைகள் பல படைத்து வெற்றி வாகை சூடிய 'முதல் தமிழச்சி' என்ற பெருமைக்குரியவர். விரைவில் சர்வதேச அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று எட்டும் தூரத்தில் வானவில்லை கைப்பற்றவிருக்கும் வர்ஷினிக்கு இந்த சாதனை அவ்வளவு எளிதில் கிட்டவிடவில்லை.

மதுரை அழகப்பன் நகரிலுள்ள இவரது வீட்டை நூற்றுக்கும் மேற்பட்ட பரிசுக்கோப்பைகள், சான்றிதழ்கள் , மெடல்கள் என அலங்கரித்து வைத்திருக்கும் வர்ஷினியின் பதக்க வேட்டை 2ம் வகுப்பிலேயே தொடங்கி விட்டது. சிறுவயதிலேயே படிப்பு, பரதம், விளையாட்டு என ஆல் ரவுண்டராய் கலக்கிக் கொண்டிருந்தவருக்கு , ஒரு கட்டத்தில் வந்ததே செக் மேட்! 

'பரதமா..? பாட்மின்டனா?'  - என்பதே அது. பெற்றோர்களின் ஆதரவுடன், தெளிவான சிந்தனையோடு தடைகளை தகர்த்தெறிந்து, அன்று பாட்மின்டனுக்கு 'ஒகே' சொல்லியவர் தான்....இன்று, இறகுப் பந்து விளையாட்டில் தேசிய அளவிலான சாதனைப் படைத்து தமிழகத்திலேயே முதல் பெண்ணாக மிளிரும் வி.எஸ்.வர்ஷினி! இதுவரை பிற மாநிலங்களை சேர்ந்த பெண்களே வெற்றி பெற்று வந்த நிலையில், 'விடாமுயற்சியும் போதுமான பயிற்சியும் இருந்தால், எங்கிருந்தும் யாரும் சாதிக்கலாம்!' என்றார்.

"என்னோட சின்ன வயசுல எங்க அப்பா அவுங்க ஃப்ரண்ட்ஸ் கூட வாரவாரம் பாட்மின்டன் விளையாடுவாங்க. அத பார்த்துதான் எனக்கு ஆர்வம் வந்துச்சு. என் ஆர்வத்தை புரிஞ்சுகிட்டு எங்க அப்பாவும் எனக்கு முறையான பயிற்சி கொடுக்கிறதுக்காக கோச்சிங் கிளாஸ் சேர்த்துவிட்டு ஊக்கப்படுத்தினாங்க. கொஞ்ச கொஞ்சமா கத்துகிட்டு நானும் ஸ்கூல் லெவல்ல நடந்த போட்டியில எல்லாம் கலந்துகிட்டு ஜெயிச்சேன். பரதநாட்டியத்துலயும் அரங்கேற்றம் வரைக்கும் போயிருக்கேன். ஆனால் பரதநாட்டியத்தை விட எனக்கு ஸ்போர்ட்ஸ்ல நிறைய ஆர்வம் இருந்தது தெரிஞ்சுகிட்டு முழு ஈடுபாடோட இறங்கிட்டேன். நானும் இதுவரைக்கும் டான்ஸ்ஸ மிஸ் பண்ணிட்டோமேன்னு ஃபீல் பண்ணதே இல்ல. ஒவ்வொரு தடவையும் நெக் டூ நெக் ஜெயிக்கிறப்போலாம் செம்ம திரில்லிங்கா இருக்கும். நான் ஒரு ஸ்போர்ட்ஸ் லவ்வர்!  வெற்றியோ தோல்வியோ...எது கிடைச்சாலும் சந்தோஷமா ஏத்துப்பேன்" என்று கண்களில் உற்சாகம் பொங்க பேசுகிறார் இந்த நம்பிக்கை நட்சத்திரம்.

மகளிருக்கான ஒற்றையர் பிரிவு, இரட்டையர் பிரிவு போட்டிகளில் இவரது கைகள் பாட்மின்டன் ராக்கெட்டை சுழற்றும் போதெல்லாம் பதக்கங்களை அள்ளிக் குவித்து வருகிறார் இந்த தங்கத்தாரகை. அப்படிச் சேர்த்தது தான் அகில இந்திய அளவில் இவர் பெற்ற 11 தங்கம், 4 வெள்ளி மற்றும் 8 வெண்கலங்கள். 2016 இல் 15 வயதுக்குட்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவில் அகில இந்திய அளவிலான தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்ற வர்ஷினியே தான் தற்போது இரட்டையர் பிரிவுக்கான தரவரிசை பட்டியலிலும் அகில இந்திய அளவில் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். 

இறகுப் பந்து விளையாட்டின் ஒலிம்பிக் நாயகி பி.வி.சிந்துவை முன்மாதிரியாக கொண்டு களம் கண்டுவரும் வர்ஷினியிடம் அவரது லட்சியப் பயணம் குறித்து கேட்ட பொழுது மேலும் நம்மை சிலிர்க்க வைக்கிறார்.

" ஆர்வமிருந்தா மட்டும் பத்தாது. அதுக்கான கடுமையான உழைப்பு வேணும்ன்னு எனக்கு புரிய வச்சதே என்னோட கோச்சிங்க் மாஸ்டர் சரவணன் சார் தான். தினமும் காலையில 2 மணிநேரமும் , ஈவினிங் 3 மணி நேரமும் தொடர்ச்சியா பயிற்சியில் ஈடுபடுவேன். இந்த பயிற்சி தான் என்னை மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெற செய்துள்ளது. மாநில சாம்பியன்ஷிப் கோப்பைகளை 15 முறை வென்றிருக்கிறேன். அதே போல முதல்வர் கோப்பைக்கான ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையை 3 முறை பெற்றிருக்கிறேன். இப்போது அகில இந்திய சப் ஜூனியர் போட்டிகளிலும் தேசிய அளவில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றிருப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. பொதுவா எல்லா பெற்றோர்கள் மாதிரியும் படிப்பு மட்டுமே வாழ்க்கைன்னு இல்லாம, எனக்கு முழு சப்போர்ட் கொடுத்த என் அப்பா அம்மாவுக்கு தான் என்னோட வெற்றியை சமர்ப்பிப்பேன். அப்பாவும் சரவணன் சாரும் தான் எனக்கு எனர்ஜி டானிக்! என்னைவிட எங்கப்பா நிறைய சொல்லுவார் பாஸ்..." என்று தன் தந்தை விஸ்வநாத்திடம் திருப்பி விட அந்த இடமே கலகலப்பாகியது.

`

"வர்ஷினி  படிப்பிலும் செம்ம சுட்டி. ஆனா அவளோட திறமையும் லட்சியமும் அவளுக்கு வேற ரூட்ட காட்டுச்சு. அதை நாங்க புரிஞ்சுகிட்டோம். டென்த் பப்ளிக் எக்ஸாமுக்கு ரெண்டு வாரம் முன்னாடி வரைக்கும் கூட வர்ஷினிக்கு டோர்னமெண்ட்ஸ் இருந்துச்சு. எப்படியோ கஷ்டப்பட்டு பயிற்சி, படிப்பு இரண்டையும் சமாளிச்சு பப்ளிக் எக்ஸாம்ல 427 வாங்கிட்டா. அவளோட எல்லா சாதனைகளுக்கும் அவுங்க கோச்சிங் மாஸ்டர் தான் காரணம். அவர் என்ன சொல்றாரோ அதை முழு நம்பிக்கையோட அப்டியே கேட்டு நடந்து பெற்றது தான் இந்த வெற்றிகள் எல்லாமே. 'தேசிய அளவில் வெற்றி பெற்ற முதல் தமிழ்ப் பெண்' ங்கிறத பாராட்டி டூவீலர் கூட பரிசு கொடுத்தாங்க. அவளோட முயற்சிக்கு என்னிக்குமே தடையா நாங்க இருக்கமாட்டோம்." என்று பெருமையுடன் பேசுகிறார் தந்தை விஸ்வநாத்.

"ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்து அக்கா மாதிரி நானும் பதக்கம் வெல்வேன். சர்வதேச அளவுல சாம்பியன்ஷிப் பெற்று இந்தியா சார்பா விளையாடி ஜெயிக்கணும். இதான் என் வாழ்நாள் லட்சியம்" என்று புன்னகையுடன் விடைகொடுத்தார் வர்ஷினி.

வாழ்த்துக்கள் வர்ஷினி! 

நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்....

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு