சினிமா
Published:Updated:

சிந்து தமிழ்ப் பொண்ணு!

சிந்து தமிழ்ப் பொண்ணு!
பிரீமியம் ஸ்டோரி
News
சிந்து தமிழ்ப் பொண்ணு!

ஸ்போர்ட்ஸ்மு.பிரதீப் கிருஷ்ணா

‘சிந்து மாதிரி ஆகணும்’ என்று இந்தியா முழுதும் இவரைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. எத்தனையோ வெற்றிகளுக்குப் பிறகும் இந்த 23 வயதுப் பெண்ணிடம் வெற்றிக்கான தாகம் கொஞ்சம்கூடக் குறையவில்லை. சர்வீஸுக்குக் காத்திருப்பதுபோல் பொறுமையாக, கேள்விகளை எதிர்கொள்கிறார். பதில்கள் எல்லாம் ஸ்மேஷ்களைவிட வேகமாகப் பறக்கின்றன...

“ ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள ‘tycoons of tomorrow’ பட்டியலில் நீங்கள் மட்டுமே விளையாட்டு வீரர். எப்படி உணர்கிறீர்கள்?”

“மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகப்பெரிய ஜாம்பவான்களோடு ஒப்பிடுவதை, அவர்களுள் ஒருவராக நான் இருப்பதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. இந்த வயதில் இந்த உயரம் அடைந்திருப்பது பெருமையான விஷயம்தானே!”

சிந்து தமிழ்ப் பொண்ணு!

“தொடர்ச்சியாகப் போட்டிகளில் பங்கேற்றுக்கொண்டிருக்கிறீர்கள். போதுமான ஓய்வு கிடைக்கிறதா?”

“ஆம், நிறைய தொடர்களில் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறேன். காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டி, இப்போது சீன ஓப்பன் என்று மிகப்பெரிய தொடர்களைத் தொடர்ச்சியாக விளையாடவேண்டியுள்ளது. இனி தொடர்களைத் தேர்ந்தெடுத்து விளையாட வேண்டும். ஓய்வு மிகவும் அவசியம். பெரிய போட்டிகளுக்கு முன்பு பயிற்சியும் எடுக்க வேண்டுமல்லவா!”

“சமீபத்தில், சிறுவர்களுக்கு விளையாட்டின் தேவை பற்றிப் பேசியிருந்தீர்கள்...”

“ஆம். இப்போது இந்தியாவில் விளையாட்டு வசதிகள் சிறப்பாக உள்ளன. சிறுவர்களை ஊக்குவிக்க நிறைய போட்டிகள் நடந்துகொண்டிருக்கின்றன. அனைத்துக் குழந்தைகளும் ஒரு விளையாட்டிலாவது பங்கேற்க வேண்டும். அவர்களது உடல்நலனைப் பாதுகாக்க விளை யாட்டைவிட நல்ல வாய்ப்பு கிடையாது.”

“உங்கள் அம்மா சென்னையில் பிறந்தவர். பேட்மின்டன் லீகில் நீங்கள் சென்னை அணியின் கேப்டன். சென்னைக்கும் உங்களுக்குமான உறவு எப்படிப்பட்டது?”

“மூன்று ஆண்டுகளாக சென்னை அணியோடு இணைந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.  என் அம்மா சென்னையில் பிறந்தவர் என்பதால் சென்னைப் பெண்ணாகவே பார்க்கிறார்கள். ‘சிந்து தமிழ்ப் பொண்ணு’ என்று பேசுவார்கள். சென்னையையும், சென்னை மக்களையும் ரொம்பவே பிடித்திருக்கிறது. எனக்குத் தமிழ் அவ்வளவாகப் பேச வராது, ஆனால் புரிந்துகொள்வேன்.”

“ஒலிம்பிக் அனுபவம்...”

“ரியோ ஒலிம்பிக் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்று. நான் அதுவரை பார்த்திராத அனுபவம்; என்னுடைய முதல் ஒலிம்பிக் தொடர் வேறு. வெற்றி பெறவேண்டும் என்ற வேட்கை, மொத்த உலகமும் பார்க்கும் என்ற பதற்றம், நூற்றுக்கணக்கான ஜாம்பவான்கள் என இப்போது நினைத்தாலும் அது என்னை பிரமிக்க வைக்கிறது. கவனமாக விளையாட வழக்கத்தைவிடப் பல மடங்கு உழைக்கவேண்டியிருந்தது. அவ்வளவு கடினமான தொடரும்கூட. மிகச் சிறந்த அனுபவம்.”

“ரியோவுக்குப் பிறகான வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது?”

“மீடியா வெளிச்சம், விருதுகள், பாராட்டுகள், விழாக்கள் என வாழ்க்கை புதிதாக இருக்கிறது. அந்த வெற்றிக்குப் பிறகு நிறைய பேரைச் சந்தித்தேன். அந்தத் தருணங்கள் மறக்க முடியாதவை. நிறைய பேர் என்னை ரோல் மாடலாக நினைக்கிறார்கள். அதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. அதனால் எனக்குப் பொறுப்புகளும் அதிகமாகியிருக்கிறது. சொல்லப்போனால் ரியோவுக்குப் பிறகான வாழ்க்கையை நான் கொண்டாடுகிறேன்.”

சிந்து தமிழ்ப் பொண்ணு!

“உங்கள் பேட்மின்டன் வாழ்வில் நீங்கள் பெரிதாக நினைக்கும் வெற்றி எது?”

“ஒவ்வொரு வெற்றியுமே முக்கியமானது. சந்தோஷமானது. என்னால் எல்லா வெற்றிகளையும் வேறுபடுத்திப்பார்க்கவோ, ஒப்பிடவோ முடியாது. ஏசியன் கேம்ஸ், ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் என எல்லா வெற்றிகளுமே எனக்கு ஒன்றுதான்.”

“பேட்மின்டன் தவிர்த்து வேறு விளையாட்டுகள் பார்ப்பதுண்டா, சினிமா பார்ப்பீர்களா?”

“அதற்கெல்லாம் நேரம் அதிகமாகக் கிடைப்பதில்லை. எப்போதாவது பார்ப்பேன். ரன்வீர் சிங், தீபிகா படுகோன் மிகவும் பிடிக்கும். தெலுங்கில் அனுஷ்கா, மகேஷ்பாபு, பிரபாஸ் ஆகியோரைப் பிடிக்கும். சூப்பர் ஹீரோக்களில் வொண்டர் வுமன் என்னுடைய ஃபேவரிட். மற்ற விளையாட்டுகளில் எப்போதாவது டென்னிஸ் பார்ப்பேன். செரீனா வில்லியம்ஸ், வாவ்... மீண்டும் பட்டையைக் கிளப்புகிறார். நடால், ஃபெடரர் அந்த இரண்டு லெஜண்ட்களையும் பிடிக்கும்.”

“உங்கள் வளர்ச்சியில் கோபிசந்தின் பங்கு எவ்வளவு முக்கியமானது?”

“கோபி சாருக்கு எப்போதுமே நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். என்னைச் செதுக்கியது அவர்தான். இப்போது மட்டுமல்ல எப்போதுமே என் வளர்ச்சிக்குத் துணையாக இருக்கிறார். நாங்கள் மட்டுமல்லாமல், பல வீரர்கள் இப்போது வளர்ச்சியடைந்து வருகின்றனர். தேசிய அளவில், சர்வதேச அளவில் சிறப்பாகச் செயல்படுகின்றனர். அனைவரையும் மிகச்சிறப்பாக உருவாக்கிக்கொண்டிருக்கிறார். இன்னும் நிறைய சாம்பியன்களை உருவாக்கப் போகிறார்.”
 
“சிந்துவின் கனவு என்ன?”

“உலகின் நம்பர் 1 வீராங்கனையாக வேண்டும். கடந்தமுறை தவறவிட்ட ஒலிம்பிக் தங்கத்தை வெல்ல வேண்டும்.”

சிந்து தமிழ்ப் பொண்ணு!

உங்களின் பலம்?

குடும்பம்தான் என் மிகப்பெரிய பலம். சிறு வயதிலிருந்து என்னை அனைத்து விதத்திலும் ஊக்கப்படுத்துவது, உறுதுணையாக நிற்பது அவர்கள்தாம். இப்போதெல்லாம் அதிகமாகப் பயணித்துக்கொண்டே இருக்கிறேன். பெரும்பாலும் பயிற்சியிலேயே மூழ்கியிருக்கிறேன். அதனால், அவர்களோடு அதிக நேரம் செலவிட முடிவதில்லை.

சிந்து தமிழ்ப் பொண்ணு!

சாய்னாவுடனான உங்கள் நட்பு பற்றி

இருவரும் வேறு வேறு அகாடெமியிலிருந்து வந்திருந்தாலும் நன்றாகவே பழகுகிறோம். அதுமட்டுமல்லாமல் ஒரே அணிக்காக, ஒன்றாக விளையாடுகிறோம். களத்துக்கு வெளியேயும் நாங்கள் நல்ல தோழிகள்.